Saturday, October 8, 2011

சென்னை பெண் அதிகாரியை, பெங்களூரில் “லிப்டுக்குள்” படுகொலை செய்த காவலாளி.பெங்களூர் குமார கிருபா மேற்கு பகுதியில் போலோ கார்டன் எனும் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு 3-வது மாடியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிருஷ்ணன் வசித்து வருகிறார். இவரது மனைவி எஸ். அனுசுயா (43). சென்னையைச் சேர்ந்த இவர், பெங்களூரில் சர்பைன்டைன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அதிதீ (12), ஆர்த்தி (6) என்று 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று கிருஷ்ணன் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு மைசூருக்கு சென்றிருந்தார். வீட்டில் அனுசுயா மட்டும் தனியாக இருந்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் அனுசுயா வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். கீழ் தளத்தில் இருந்து 3-வது மாடிக்கு செல்ல அவர் லிப்டில் ஏறினார். கூடவே அந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அஸ்ரப் அகமது (22)வும் ஏறினான். லிப்ட் 2-வது மாடியை நெருங்கியபோது நடுவழியில் நின்றது. திடீரென லிப்டுக்குள் இருந்து அனுசுயா அலறும் சத்தம் கேட்டது.

பிறகு லிப்ட் 2-வது மாடியில் நின்றது. அனுசுயா அலறல் கேட்டு அருகில் வீடுகளில் இருந்தவர்கள் வெளியில் ஓடிவந்தனர். லிப்டில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட கத்தியுடன் வந்த அஸ்ரப்பை கண்டதும் எல்லோரும் பயந்து ஓடி வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர்.

லிப்டுக்குள் அனுசுயா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தப்படி கிடந்தார். குடியிருப்புவாசிகள் பயந்து ஓடியதால், அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அஸ்ரப், நிதானமாக கீழ் தளத்துக்கு வந்தான். ரத்தக்கறை படிந்த தனது உடையை மாற்றி வேறு சட்டை அணிந்தான். பிறகு 10 நிமிடம் கழித்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டான். அதன் பிறகு வெளியில் வந்த குடியிருப்புவாசிகள் சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

போலீசார் வந்தபோது அனுசுயா லிப்டுக்குள் பிணமாகி கிடந்தார். அவரது கழுத்தை அறுக்க பயன்படுத்தப்பட்ட கத்தி லிப்ட் அருகில் வீசப்பட்டு கிடந்தது.

லிப்டுக்குள் இருந்த கண்ணாடியில் கொலையாளி அஸ்ரப் கை தடயங்கள் பதிவாகி இருந்தன. தடயவியல் நிபுணர்கள் அவற்றை பதிவு செய்தனர். அனுசுயாவை அஸ்ரப், எதற்காக கொலை செய்தான் என்பது தெரியவில்லை. செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் அஸ்ரப் அகமது அந்த குடியிருப்புக்கு சில மாதங்களுக்கு முன்புதான் காவலாளியாக வேலைக்கு சேர்ந்திருந்தான்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அவன் அனைவரிடமும் நம்பிக்கையுடையவனாகவும், கடின உழைப்பாளியாகவும் இருந்ததால் அவனுக்காகவே கீழ் தளத்தில் தனி அறை ஒன்றை குடியிருப்பு சங்கத்தினர் கட்டி கொடுத்திருந்தனர். திடீரென அவன் பெண் அதிகாரியை கழுத்தை அறுத்து கொலை செய்தது, அந்த குடியிருப்பு பெண்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றம்.சென்னை : எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களின் தேர்வு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆனாடமி, பயோகெமிஸ்ட்ரி, பிசியாலஜி என மூன்று பாடங்கள் உள்ளன.

இந்த மூன்று பாடத்திலும் இரண்டிரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 100 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி அடைந்ததாக கருதப்படுவார்கள்.

இந்த முறையை முற்றிலுமாக மாற்றி, புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஒரு பிரிவில் 44ம், ஒரு பிரிவில் 90ம் எடுத்தால் கூட அந்த மாணவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதிய பல மாணவர்கள் இந்த புதிய முறையால் தோல்வி அடைந்ததாக பதிவு செய்யப்பட்டு இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை.

பழைய தேர்வு முறையையே பின்பற்ற வேண்டும் என்றும், புதிய விதிமுறையை ரத்து செய்து எங்களை இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ கவுன்சில் 14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி
தினமலர், 8-10-2011

எரிகல் பொழிவால் கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம் : ஆய்வில் நிரூபணம்.சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவாகும் பொழுது அதன் மையத்தில் உருகிய இரும்பு கூழ்கள் அதிகளவில் இணைந்து புவி மையத்தை தோற்றுவித்தன. இரும்புடன் தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்பட பல விலைமதிப்பற்ற தனிமங்களும் மையத்தில் சேர்ந்தன.

தற்பொழுது நமக்கு கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை எவ்வாறு கிடைக்கின்றன என்றால் பூமி தோன்றி பல வருடங்களுக்கு பின்பு 20 பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட எடை கொண்ட எரிகல் ஒன்று பூமியின் மீது மழை போன்று பொழிந்துள்ளது.

அதிலிருந்து தான் இன்றளவும் கிடைத்து கொண்டிருக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல தனிமங்கள் வந்துள்ளன என்ற புவியியலாளர்களின் கூற்றை நிரூபிக்கும் விதமாக பிரிஸ்டல் பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்களான வில்போல்ட் மற்றும் எலியட் ஆகியோர் பூமியைப்பற்றி ஆய்வொன்று மேற்கொண்டனர்.

இதற்கு ஆதாரமாக கிரீன்லாந்தில் கிடைத்த 4 பில்லியன் வருடத்திற்கு முந்தைய பாறை படிவங்களை ஆராய்ந்தனர். அதில், மிக அரிதான தனிமமான டங்ஸ்டனின் பல ஐசோடோப்புகள் கண்டறியப்பட்டன.

அவை தற்பொழுதுள்ள பாறைகளில் கிடைத்த ஐசோடோப்புகளுடன் மிக சிறிய அளவில் அதாவது ஒரு மில்லியனுக்கு 15 பங்கு என்ற அளவில் மட்டுமே வேறுபாட்டை கொண்டிருந்தன. எனவே இந்த ஆய்வானது, புவியியலாளர் களின் கருத்தின்படி, பூமியின் மீது எரிகல் மழையாக பொழிந்த பின்பு தான் தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருள்கள் கிடைக்கின்றன என்பதற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.


தயார் நிலையில் பிஎஸ்எல்வி - சி 18 ராக்கெட் - இஸ்ரோ.

தயார் நிலையில் பிஎஸ்எல்வி-சி 18 ராக்கெட்- இஸ்ரோ

நீர், நில ஆராய்ச்சிக்கான செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி-சி 18 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாராகி வருகிறது. வருகிற அக்டோபர் 12-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படும்.

இறுதிகட்ட சோதனைகள், ஏற்பாடுகள் முடிந்து அக்டோபர் 10 -ந்தேதி ஏவுவதற் கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்குகிறது. இந்த மெகா டிராபிக் செயற்கைகோள் இந்தியா- பிரான்ஸ் நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.

சந்திரனில் கொட்டிக் கிடக்கும் டைட்டேனியம் உலோகம் : பூமியை விட 10 மடங்கு அதிகம் உள்ளது.

சந்திரனில் கொட்டிக் கிடக்கும் டைட்டேனியம் உலோகம் : பூமியை விட 10 மடங்கு அதிகம் உள்ளது

சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா ஒரு விண்கலம் அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் சந்திரனின் மேற்பரப்பை போட்டோக்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

7 விதமாக எடுத்து அனுப்பப்பட்ட அவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏற்கனவே கடந்த 1972-ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வெட்டி எடுத்து வந்த பாறைகளில் பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில் டைட்டேனியம் டி என்ற உலோக தாதுக்கள் இருப்பது தெரியவந்தது. டைட்டேனியம் என்பது உருக்கு உலோகத்தை விட மிகவும் உறுதியானது. இந்த உலோகம் பூமியில் ஒரு சதவீதம்தான். அதாவது மிக குறைவாக உள்ளது. ஆனால் சந்திரனில் அவை கொட்டிக் கிடக்கின்றன. அதாவது 10 மடங்கு அதிகம் இருக்கிறது. இவை பாறைகளில் மறைந்து கிடக்கின்றன. டைட்டேனியம் தவிர இரும்பு தாதுக்களும் மறைந்துள்ளன.

இந்த தகவலை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்தார். பிரான்சில் உள்ள நான்டெஸ் என்ற நகரில் நடந்த மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்து இந்த தகவலை வெளியிட்டார்.

உயர்கல்வியில் 48,00,000 கோடி வியாபாரம் உள்ளதைக் கண்ட கார்ப்பரேட் முதலாளிகள்.100 கோடி மாணவர்களும், 5 கோடி ஆசிரியர்களும், பல ஆயிரம் கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைந்திருக்கிற கல்வித்துறையில் உலகளவில் 48,00,000 கோடி பணப்புழக்கம் இருக்குமென உத்தேசமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கல்வியில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்துகிடப்பதை கண்டறிந்து விட்டனர் கார்ப்பரேட் முதலாளிகள்.

உலகளாவிய சந்தையைக்கொண்டிருக்கிற இத்தொழிலில், மாணவர்கள் நுகர் வோராகவும், ஆசிரியர்கள் சேவை வழங்குபவர்களாகவும், கல்வி நிறுவனங்கள் தொழில் நடத்தும் நிறுவனங்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். கற்பித்தலும் கற்றலும் தேசவளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டிராமல் இலாபமீட்டும் தொழிலாக மட்டுமே உருவாகிவருகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள்யாவும் உயர்கல்வியினை இலாபமீட்டும் நோக்கில் எப்போதும் குறிவைத்துக்கொண்டே இருக்கின்றன. கல்வி என்பது அரசின் கடமை யாக இருந்தபோதிலும், பெரும்பாலான அரசாங்கங்கள் புதிய தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக கல்வியளிக்கிற பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டிருக்கின்றன. தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல் மற்றும் கல்விநிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது போன்றவற்றின் மூலமாக இந்திய அரசாங்கமும் இதனை ஆதரித்தே வந்திருக்கிறது.

21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டிலேயே உயர்கல்வியினை தனியார் மயமாக்குவதையும் வியாபாரமாக்குவதையும், உயர்கல்வியை காட்ஸ் (GATS ) ஒப்பந்தந்தின் கீழும் உலக வர்த்தக மையத்தின் கீழும் கொண்டுவருவதையும் எதிர்த்து மிகப்பெரிய அளவிலான மாணவர்-ஆசிரியர்-மக்கள் போராட்டங்களை இவ்வுலகம் கண்டிருக்கிறது. காட் மற்றும் உலக வர்த்தக மையம் ஆகியவை கல்வி போன்ற சேவையினை உலக அளவிலான சந்தையில் விற்பனைப்பொருளாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்படுகின்றன.

பாஜக ஆட்சியில் உயர்கல்வியின் தனியாமயமாக்கல்:

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்கல்விக்கான தேவையோடுதான் நாம் இருபதாம் நூற்றாண்டிற்குள் காலடியெடுத்துவைத்தோம். அத்தேவையினை பூர்த்திசெய்து நாட்டின் வளர்ச்சியினை உறுதிசெய்வதைவிடுத்து, பா.ஜ.க. அரசும் யூ.ஜி.சீ.யும் உலக வங்கியின் கட்டளைகளுக்கு அடிபணிவதிலும், கல்வியை வியாபாரமாக்க வேண்டுமென்கிற உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தங்களை கண்மூடித்தனமாக கையெழுத்திடுவதிலுமே அக்கரையோடிருந்தது. உயர்கல்வி யினை தனியார்மயமாக்கும்/வியாபாராமாக்கும் பொருட்டு, கல்விக்கட்டண உயர்வு, கல்வி நிறுவனங்களுக்கு எவ்விதக்கட்டுப்பாடுகளுமற்ற தன்னாட்சி அதிகாரம், நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களாவதற்கான விதிமுறைகள் தளர்த்தல் போன்ற முடிவுகளை எடுக்கத்துவங்கியது பா.ஜ.க. அரசாங்கம்.

"உயர் கல்வி நிறுவனங்கள் யாவும் கல்விக்கட்டணத்தினை உயர்த்தியும், தனியார் நன்கொடைகளை ஏற்றும், இன்ன பிற வழிமுறைகளை கண்டறிந்தும் தங்களுடைய தேவைகளைப்பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். உயர்கல்வியில் தனியார் முதலீடுகள், அரசின் சுமையைக் குறைக்கும்." என்று அப்போதைய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி 1998 இல் பாரிசில் நடந்த உயர்கல்விக்கான யுனெஸ்கோ மாநாட்டில் தனியார்மயத்திற்கு ஆதரவாகப் பேசினார்.

அம்பானி-பிர்லா அறிக்கை:

கல்வியை இலாபம் நிறைந்த சந்தையாகக்கருதி, முகேஷ் அம்பானியும் குமார் மங்கலம் பிர்லாவும் இணைந்து "கல்விச்சீர்திருத்த கொள்கை வரைவு" ஒன்றை பிரதமரின் கீழியங்கிய வர்த்தக-தொழில் குழுமத்திற்கு 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சமர்ப்பித்தார்கள். மாணவர்களிடமிருந்தே கல்விக்கட்டணத்தை முழுமையாக வசூலிக்கவும், உயர்கல்வியை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கவும் வழிவகுப்பதாகத்தான் இருந்தது அவர்களது அறிக்கை. அவ்வறிக்கையினை மட்டும் நடைமுறைப்படுத்தியிருந்தால் காசிருப்பவன் மட்டுமே உயர்கல்வி பயிலமுடியுமென்ற சூழல் முழுமையாக ஏற்பட்டிருக்கும்.

அம்பானிக்கும் பிர்லாவுக்கும் கல்வியில் இருக்கும் சந்தையினை கார்ப்பரேட்டு களே கட்டியாள வேண்டுமென்பதே விருப்பம். அதனாலேயே கல்வி நிலையங் களில் எவ்வித அரசியல் செயல்பாடுகளும் இருக்கக்கூடாதென்றும், சங்கமமைக் கிற அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்கக்கூடாதென்று அறிக்கையில் கேட்டுக்கொண்டனர். இவ்வறிக்கையினை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மக்கள்யாவரும் பெரியளவில் விமர்சித்தனர்.

உலகவங்கியின் வழிகாட்டுதல்:

உயர்கல்வியினை தனியார்மயமாக்கும் நோக்கில் செயல்பட்ட உ.வ.மை.(உலக வர்த்த மையம்) மற்றும் காட்ஸ்(GATS ) ஆகியற்றுக்கு கிடைத்த கடும் எதிர்ப்பினால், உலக வங்கி வேறு வகையில் அதனை நிறைவேற்ற "அறிவார்ந்த சமூக உருவாக்கம்: புதிய சவால்கள்" என்றொரு அறிக்கையினை 2000 இல் வெளியிட்டது. கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டு, குறைந்தபட்ச தரத்துடன் புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் துவங்க அனுமதிக்கவேண்டுமென்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களும் கூட மாணவர்களிடம் இருந்தும் அவர்களின் பெற்றோரிடமிருந்தும் கட்டணமாக வசூலித்தும், வெளியிலிருந்து நன்கொடையாகப் பெற்றும், வருமானமீட்டிக் கொள்ளவேண்டு மென்று அறிவுறுத்துகிறது.

"உலக அளவிலான அறிவுசார் பொருளாதாரத்தின் தேவையை பூர்த்திசெய்யவும், மாறிவரும் தொழிலாளர் சந்தைக்காகவும், கல்விநிறுவனங்கள் புதுமையான வழிமுறைகளைக்கண்டறிய ஏதுவாகவும் ஒரு திட்ட வரைவினை உருவாக்க வேண்டும்" என்று வளரும் நாடுகளுக்கு உலக வங்கி அவ்வறிக்கையின் மூலமாக கேட்டுக்கொண்டது. உலக வங்கி தன் கட்டுப்பாட்டிலேயே அத்திட்டவரைவினை உருவாக்கி செயல்படுத்துவதனை உறுதி செய்யுமென நம்பிக்கை தெரிவித்தது. இதன்மூலம் உலக உயர்கல்வியை தனது காலடியின்கீழ் வைத்துக்கொள்ளும் திட்டம்தான் உலகவங்கிக்கு.

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான 'மாதிரிச்சட்டம்':

உலகமயத்தின் தேவைகளுக்கேற்ப உயர்கல்வித்துறையினை வடிவமைக்க வேண்டுமென வளரும் நாடுகளையெல்லாம் உலகவங்கி நெருக்கத்துவங்கியது. புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கேற்ப அவை அமையுமென்ற நம்பிக்கை யையும் அளித்திருப்பதால், பெரிய அளவிலான எதிர்ப்பும் தவிர்க்கப்படும் என்பது உலகவங்கியின் கணிப்பு.

இப்பின்னனியில்தான் உலகவங்கியின் நெருக்குதலுக்கிணங்க பா.ஜ.க. தலைமை யிலான அரசு யூ.ஜி.சி. மூலமாக அக்டோபர் 2003 இல் "பல்கலைக்கலைக் கழகங் களை சிறப்பான எதிர்காலத்திற்காக தயார்செய்யும் நோக்கில் " என்கிற பார்வை யில் "21 ஆம் நூற்றாண்டில் இந்தியப்பல்கலைக் கழங்களுக்கான முன் மாதிரிச் சட்டம் உருவாக்கும் பொருட்டு" என்னும் தலைப்பில் கருத்தாக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

"'நிதியுதவி பெற்று ஆய்வு நடத்துதல்', 'அறிவுசார் ஆலோசனை வழங்குதல்', 'புத்தகங்கள் / ஆய்வறிக்கைகள், தயாரித்தல் / வெளியிடுதல்' போன்றவற்றை உலகின் மற்ற பல்கலைக்கழங்கள் போலவே இந்தியா பல்கலைக்கழகங்களும் ஏற்கனவே செய்யத்துவங்கிவிட்டன. அதே போல இன்னபிற உலக அளவிலான முன்னேற்றங்களையும் (குறிப்பாக தகவல் தொடர்பு தொழிற்நுட்பங்கள்) பயன் படுத்திக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கலைக்கழங்களின் எண்ணிக்கை, அணுகுமுறை, தரம் மற்றும் நிதி ஆகியவற்றில் இருக்கும் பிரச்சனைகள் இன்னமும் தொடர்ந்து இந்தியப்பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை பாதித்துக்கொண்டே இருக்கின்றன.

பல்கலைக்கழகங்கள் சிக்கல்கள் நிறைந்த நிறுவனங்களாக மாறிக்கொண்டிருப் பதால், சூழ்நிலைக்கேற்ப நடைமுறைச்சிக்கலற்ற நிர்வகிக்க எளிமையான வழி முறைகளை உருவாக்குதல் அவசியமாகிறது. எனவே பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால்தான் உலகமயமாக்கலின் சவால்களை ஏற்றுக்கொண்டு உயர்தரத்திலான கல்வியை வழங்கமுடியும்."

புதிய பல்கலைக்கழக 'மாதிரிச் சட்டங்கள்' யாவும், தகவல் தொடர்பு தொழிற்நுட்பப் புரட்சியின் பலனைப்பெறுவதாகவும், தேசிய அளவிலும் உலக அளவிலும் உருவாகியிருக்கிற போட்டியினை சமாளிக்கும் விதமாகவும் இருக்குமென்றும், 2020 இல் இந்தியா ஒரு அறிவுசார் வல்லரசாக உதவுமென்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'மாதிரிச்சட்டங்கள்' வழியாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உயர்கல்வியில் நிகழும் உலக அளவிலான மாற்றங்களோடு ஒன்றிச்செல்லவும், சொந்தச் செலவிலேயே நிர்வாகத்தினை நடத்தவும், கல்வியினை ஒரு வியாபாரமாகவே நடத்தவும் தயார் செய்வதே யூ.ஜி.சி.யின் எண்ணம். மற்றுமொரு யூ.ஜி.சி.யின் ஆய்வறிக்கையில், "மானியமில்லாத பாடத்திட்டங்கள், தொழிற்கல்வி படிப்பு களுக்கு இரட்டைக்கட்டணமுறை என இந்தியாவில் உயர்கல்வியானது ஏற்கனவே ஓரளவிற்கு தனியார்மயமாகிவிட்டது." என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

'மாதிரிச்சட்டங்களின்' மூலமாக இந்தியாவிலிருக்கும் எல்லா உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும், இன்னபிற கல்வி நிறுவங்களுக்கும் மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தினை முழுவதுமாக நிறுத்தி, அவற்றை யெல்லாம் உலகமயத்தின் ஓர் அங்கமாக மாற்றி, GATS -இல் செர்த்துவிட்டதால் ஏற்படும் விளைவுகளையும் அனுபவித்து, இலாபமோன்றே குறிக்கோளாகக் கொண்ட உலக கல்வி முதலாளிகளிடம் நாட்டின் உயர்கல்வித்துறையினை அடகுவைத்து, கல்வியும் ஒரு வியாபாரம்தான் என்பதனை நிலைநாட்டுவதே அரசின் நோக்கமாக இருந்தது. இதன் காரணமாக, மிக அதிகமான கட்டணங்களை செலுத்த இயலாத நிலையிலிருக்கும் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்திருக்கிற பிரிவு மக்களும் கீழ்நடுத்தர மக்களும் உயர்கல்வியிலிருந்தே விலக்கப்பட்டுவிடுவார்கள்

இது போன்ற ஒரு சூழலை உருவாக்கவே, பாஜக அரசும் யூ.ஜி.சி.யும் இணைந்து உயர்கல்விக்கான நிதியினை குறித்தும், மாணவர்களின்மீது சுமையினை திணிக்க வலியுறுத்தியும், கல்விக்கடன்களை திணித்தும், கல்வி நிறுவனங்களின் கட்டாய தரமதிப்பீடு நடத்தியும், கல்லூரிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கியும், சுயநிதிக் கல்லூரிகள் துவங்க ஊக்கமளித்தும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களல்லாத ஊழியர்களின் வேலைப்பளுவினை அதிகரித்தும், ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பதை ஊக்குவித்தும் உயர்கல்வியில் தனியார்மயத்தையும் வியாபார நோக்கத்தினையும் புகுத்தினார்கள்.

'மாதிரிச்சட்டங்கள்' செயல்வடிவத்திற்கு வந்தால், இருபத்தோராம் நூற்றாண்டில் சமச்சீரான உயர்கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதனை நன்கு புரிந்துகொள்ளமுடியும்.

நாட்டின் உயர்கல்வியினை ஒட்டுமொத்தமாக வியாபாரமாக்கும் நோக்கிலேயே பா.ஜ.க. தலைமையிலான அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே இத்தகைய "மாதிரிச்சட்டத்தினை" உருவாக்கி முன்மொழிந்தது. இக்கடுமையான சட்டத்திற் கெதிராக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என நாடுமுழுவதிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

நன்றி

விஜயேந்தர் ஷர்மாவின் ( http://vijendersharma.wordpress.com/about ) கட்டுரைகளில் இதுகுறித்த ஏராளமான தகவல்கள் உள்ளது, www.chinthan.com அவற்றில் சிலவற்றை தமிழாக்கம் செய்யதது. அவை உங்கள் பார்வைக்கு....