Monday, May 16, 2011

"இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஒத்திகை'.


மற்றுமொரு அபோடாபாத் சம்பவத்தைப் நிகழ்த்திப் பார்க்க இந்தியா முயற்சிக்குமானால், பாகிஸ்தான் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும். அதற்காக இந்தியாவில் சில இடங்களை குறித்து வைத்துள்ளோம். மேலும் அதற்கான ஒத்திகையையும் நடத்திப் பார்த்துள்ளோம் என்று அந்நாட்டின் ஐஎஸ்ஐ உயரதிகாரி அஹமத்சுஜா பாஷா எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் செனட், தேசிய சபை கூட்டுக் குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஷா இவ்வாறு இந்தியாவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அபோடாபாத் நகரில் பின்லேடன் வசித்து வந்தது, அவரை அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது என எதையுமே முன்கூட்டி கண்டுபிடிக்க தவறியதற்காக ஆட்சியாளர்களின் கடும் கோபத்திற்கு உள்ளானவர் தான் பாஷா.

பின்லேடன் ஆதரவாளர்கள் எந்நேரத்திலும் தாக்கலாம் ? அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு.


சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொன்றுவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.

பின்லேடன் வசித்து வந்த வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. பின்லேடனின் எதிர்காலத் திட்டம் குறித்த ஆவணங்களையும் அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் கைப்பற்றினர். அதன் மூலம் இரட்டை கோபுரத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான்று (செப்டம்பர் 11) அமெரிக்கா மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த அல்-காய்தா திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

அப்படி நடத்தவிருக்கும் தாக்குதல் அமெரிக்காவையே நிலைகுலைய வைப்பதாக இருக்கும் வகையில் பின்லேடன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்லேடன் இறந்தாலும் அவரது ஆசையை, திட்டத்தை அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

நாட்டின் மத்தியில் அமைந்துள்ள சிகாகோ நகரைத் தாக்குவதே அல்-காய்தாவின் நீண்டகாலத் திட்டமாக இருந்து வருகிறது. நகரில் உயரமான கட்டடங்கள் அமைந்துள்ளதால் தாக்குவதற்கு எளிது என்பதால் அவர்கள் இந்நகரை தேர்ந்து எடுத்து பலமுறை தாக்கமுயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.

இருப்பினும் சிகாகோவை தாக்க மீண்டும் முயற்சிக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அந்நகரின் மூலை முடுக்கெல்லாம் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

அல்-காய்தாவினரிடம் இருந்து சிகாகோ நகருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லை. இருப்பினும் நகரை யார் தாக்க நினைத்தாலும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுக்கப்படும். உள்ளூர் போலீஸôரும், எப்பிஐ அதிகாரிகளும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றனர்.

இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியமில்லை என்று சிகாகோ எப்பிஐ பிரிவின் செய்தித்தொடர்பாளர் ரோஸ் ரைஸ் தெரிவித்தார்.

பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்துள்ளார். நாங்கள் அவரை வலைவீசித் தேடியபோதெல்லாம் பாகிஸ்தான் வாயைத் திறக்கவில்லை. பின்லேடனுக்கு பாகிஸ்தான் உதவியதை அந்நாட்டு புலனாய்வுத் தகவல்கள் உறுதி செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

""அல்-காய்தாவிடம் இருந்து அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா உஷாராகவே உள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதியுமே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவுகளுடன் உளவு அமைப்பு தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறது. ஒருவேளை பயங்கரவாதிகள் தாக்க முயற்சித்தால் அவர்கள் தப்ப முடியாது'' என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் மாத்சாண்ட்லர் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தை மாற்றக் கூடாது : ராமதாஸ்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மாற்றக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராணுவத்துக்குச் சொந்தமான சென்னை ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகத்தை நடத்துவதற்கு இடம் போதாது என்பதால்தான் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்ற யோசனை எழுந்தது.

திமுக ஆட்சியில், தமிழக மக்களின் வரிப்பணம் ரூ. 1200 கோடி ரூபாயை செலவிட்டு புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் வடிவமைப்பு சரியில்லை என்று கூறி தற்போது மீண்டும் கோட்டைக்கே மாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

தமிழகத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக உள்ளன என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அத்தகைய பிரச்னைகளைத் தீர்க்கவும், தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி புதிய ஆட்சிப் பயணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் தொடங்க வேண்டும்.

அதற்கு மாறாக தலைமைச் செயலகத்தை மாற்றுவது, சட்டப்பேரவைச் செயலகத்தை மாற்றுவது போன்றவை மக்களின் மனதில் எதிர்மறையாக எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே, புதிய தலைமைச் செயலகத்தை மாற்றும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம் : பசில் ராஜபட்சே.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபட்சே கூறியுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

"இலங்கையின் உறுதி நிலையை சீர்குலைக்க மேற்கத்திய நாடுகள் சதி செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே, நார்வே நீதிமன்றத்தில் அதிபர் ராஜபட்சே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்சே ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகளின் எத்தகைய நெருக்கடிக்கும் அதிபர் ராஜபட்சே பணிய மாட்டார்." என்று அவரது சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபட்சே கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜெ.வுக்கு சோனியா அழைப்பு எதிரொலி-அமைச்சரவையிலிருந்து விலகுகிறது திமுக.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்தால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள திமுக, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித்தனம் உலகம் அறிந்த ஒன்றுதான்.
இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்டியே அந்தர்பல்டி அடித்தது காங்கிரஸ்.

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை வசதியாக மறந்து விட்ட அந்தக் கட்சி, அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ, ஜெயலலிதாவுடன் 2 முறை போனில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார்.

இதுகுறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இன்னும் திமுக எங்களது கூட்டணிக் கட்சிதான். ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்ததும், வாழ்த்து கூறியதும் ஜனநாயக நடைமுறைதான் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த செயலால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் இனிமேல் டெல்லிக்கு சென்று என்ன பயன் என்று கூறி வருவதாக தெரிகிறது.

இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுப்பது குறித்து திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், கூட்டணியை விட்டு வெளியேறாது திமுக என்று தெரிகிறது. குறிப்பாக கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங்கிரஸுடனான கூட்டணியை திமுக தானாக முறிக்காது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவால் சோர்ந்து போய் வீட்டோடு முடங்கியுள்ள கருணாநிதியை, திமுக முன்னணித் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்துப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் போக்கு குறித்து அவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வேண்டும் என்றே திமுகவை சீண்டுவது போல காங்கிரஸ் நடப்பதாக மூத்த தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.

இருப்பினும் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதி வீடு வரை வந்து விட்ட நிலையில் அவசரப்பட்டு முடிவெடுக்க திமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவிக்கலாமா என்பது குறித்து திமுக தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.

தற்போது மத்திய அமைச்சரவையில் அழகிரி உள்பட 6 அமைச்சர்கள் திமுகவுக்கு உள்ளனர்.

மேலும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை வாழ்த்துவது என்பது வேறு, சோனியா காந்தி வாழ்த்து கூறுவது என்பது வேறு. சோனியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் திமுகவின் பரம விரோதி அதிமுக என்பது சோனியா காந்திக்குகத் தெரியாததல்ல. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக தலைவரை அவர் வாழ்த்துவது என்பது சீரியஸான ஒரு விஷயம்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டதாகவே தலைவர் கருதுகிறார். அவரது கருத்தே எங்களது கருத்தும். 2014 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்க காங்கிரஸும், அதிமுகவும் முடிவு செய்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என்றனர்.

சென்னை போலீஸ் கமிஷ்னராக திரிபாதி நியமனம்.


சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுவரை இந்தப் பதவியில் இருந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

அவர் பதவியேற்றவுடன் செய்யப்பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும்.

இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநிலத்தில் பெரும்பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது.

தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் படத்துக்கு பாலாபிஷேகம்.

மதுரையில் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்    படத்துக்கு பாலாபிஷேகம்;    அமைதியாக தேர்தல் நடத்தியதற்கு பாராட்டு

மதுரையில் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் படத்துக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தில் ஜெயலலிதாவின் வெளிப்படையான பாராட்டுதலைத் தொடர்ந்து, ஒரு அரசு அதிகாரிக்கு இப்படி ஒரு விசுவாசம் காட்டப்பட்டிருக்கிறது.

பண பரிவர்த்தனை குறைதீர் விழிப்புணர்வு குழுமம் என்னும் பெயரில் அரசு அதிகாரி பிரவீன்குமாருக்கு நன்றி தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது.

அதில் விசுவாசமிக்க இளைஞர்கள் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

புற்றுநோய் தாக்கும் அபாயம் : வயர்லெஸ் - செல்போன்கள் மூளையை பாதிக்கும்.

புற்றுநோய் தாக்கும் அபாயம்: வயர்லெஸ் இண்டர்நெட்- செல்போன்கள் மூளையை பாதிக்கும்; பள்ளிகளில் தடை செய்ய ஐரோப்பிய நிபுணர்கள் சிபாரிசு

உலக நாடுகளில் இண்டர்நெட், செல்போன்களின் பயன்பாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவில் செல்போன்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரது கைகளிலும் செல்போன்கள் தவழ்கிறது. தற்போது வயல்லெஸ் இண்டர்நெட் இணைப்புகளும் வந்து விட்டது.

செல்போன்கள், வயர்லெஸ் இண்டர்நெட், கார்டுலெஸ் போன்கள் உடல்நலத்துக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக ஐரோப்பிய நிபுணர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றை பயன்படுத்தும்போது அதில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோமேக்னடிக் கதிர்வீச்சுக்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்றும் மூளையை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

எனவே அவற்றை பள்ளிகளில் பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடை செய்து மாணவர்களையும் சிறுவர்களையும் காப்பாற்றுங்கள் என்று ஐரோப்பிய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள், புகை பிடித்தல், பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதும் உடல்நலத்துக்கு கேடு என்று தெரிவித்துள்ளனர். இவற்றை யெல்லாம் விட வயர்லெஸ் இண்டர்நெட் இணைப்புகளும், செல்போன்களும்தான் ஆபத்தானவை என்றும் கூறி உள்ளனர்.

ஆனால் லண்டனைச் சேர்ந்த லேபெர்க்கிலி என்பவர் மொபைல் போன்களால் ஏற்படும் ஆபத்து குறித்து ஆராய்ச்சி நடத்தியபோது, அவற்றால் ஏற்படும் பாதிப்பு மிக மிக குறைவு என்று தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கியவர் ஐ.பெரியசாமி குறைந்த ஓட்டில் தோற்றவர் பரிதி இளம்வழுதி.

தி.மு.க. வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கியவர் ஐ.பெரியசாமி குறைந்த ஓட்டில் தோற்றவர் பரிதி இளம்வழுதி

சட்டசபை தேர்தலில் 2 தொகுதியில் மட்டுமே தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 5 தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் 20 தொகுதியில் 5 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் 4 தொகுதியில் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை தக்க வைத்துக் கொண்டனர்.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அ.தி.மு.க. வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனைவிட 50,224 ஓட்டு அதிகம் பெற்றுள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதி வாரிய அமைச்சர் ஐ.பெரியசாமி 53,932 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பெரியகருப்பன் ஆகியோர் 3 ஆயிரம் ஓட்டுக்கு குறைவாகவும், மைதீன்கான் சுப.தங்கவேலன் ஆகியோர் ஆயிரம் ஓட்டுக்கு குறைவாகவும் பெற்று வெற்றி பெற்று உள்ளனர்.

மைதீன்கான் 605 ஓட்டுகளும், சுப.தங்கவேலன் 921 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தி.மு.க.வில் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர்களாக உள்ளனர்.

பரிதி இளம் வழுதி 202 ஓட்டும், பூங்கோதை 299 ஓட்டும் மதிவாணன் 724 ஓட்டு வித்தியாசத்திலும் தோல்வி அடைந்து உள்ளனர்.

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் பொன்முடி விழுப்புரத்தில் 12,092 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவி உள்ளனர்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள் :

வீரபாண்டி ஆறுமுகம் 35,074 ஓட்டு வித்தியாசத்திலும்,

பொங்கலூர் பழனிசாமி 27,796 ஓட்டு வித்தியாசத்திலும்,

கே.பி.பி.சாமி 27,291 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்து உள்ளனர்.

உறவினர்களிடம் தோற்ற வீரபாண்டி ஆறுமுகம், மகன்


தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முக்கிய அமைச்சர்களில் ஒருவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 35,079 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வீரபாண்டி ஆறுமுகம் தனது சகோதரரின் மகளிடம் தான் தோற்றார். அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயலட்சுமி பழனிச்சாமி தான் அவரது அண்ணன் மகள் ஆவார்.

விஜயலட்சுமிக்கு 1,05,502 ஓட்டுகளும், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு 70,423 ஓட்டுகளும் கிடைத்தன. இந்த இரண்டு குடும்பத்துக்கும் இடையே 30 ஆண்டு காலமாக அரசியல் பகை இருந்து வருகிறது. விஜயலட்சுமி 3-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 3 முறை அமைச்சராக இருந்துள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒரு முறையும், ஜெயலலிதா அமைச்சரவையில் 2 முறையும் மந்திரியாக இருந்துள்ளார்.

இதே போல வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரனும் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட அவர் 26,498 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ராஜேந்திரன் சேலம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.கே. செல்வத்திடம் தோற்றார். இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மற்றொரு சகோதரரின் மகன் ஆவார்.


பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : டெல்லியில் பா.ஜனதா மறியல் போராட்டம்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: டெல்லியில் பா.ஜனதா    மறியல் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் பாரதீய ஜனதா மறியல் நடத்தியது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி டெல்லியில் அக்ஷர்தாம், மோதி நகர், கான்பூர், எம்.பி. ரோடு உள்பட பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஜய்கோயல், விஜேந்தர் குப்தா உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் நேற்று மாலை 5 இடங்களில் கண்டன பேரணி நடந்தது. பாரதீய ஜனதா மறியல் காரணமாக டெல்லியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக மீனவர்கள் படுகொலை ; இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கண்டனம்.

தமிழக மீனவர்கள் படுகொலை; இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கண்டனம்

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு, இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மாசுவராஜ் கண்டனம் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மாசுவராஜ், தமிழ்நாட்டுக்கு வந்திருந்து பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

இந்த நிலையில், இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாசம் நேற்று டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இலங்கையில் தமிழ் அகதிகளை மறுகுடியமர்த்தும் பிரச்சினை குறித்தும் அவருடன் சுஷ்மா பேச்சு நடத்தினார்.

இதுபற்றி `டுவிட்டர்' இணையதளத்தில் சுஷ்மாசுவராஜ் கூறி இருப்பதாவது-

"எனது வீட்டில் இலங்கை தூதர் கரியவாசத்தை சந்தித்தபோது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையை எழுப்பினேன். அதற்கு பதில் அளித்த கரியவாசம், இந்திய மீனவர்களை கொல்வதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் எனது கவலையை இலங்கை அரசின் மேல் மட்ட தலைவர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இந்த பிரச்சினையில் நான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்''.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை அன்று பூடானில் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி ஜி.எல்.பெரிஸ்சை மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசினார்.

30 நிமிட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மீனவர்கள் பிரச்சினையில் இரு தரப்பு பிரதிநிதி குழுவினரின் கூட்டத்தை விரைவில் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

நெய்வேலி தி.மு.க. நகர செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு.


இன்று காலை கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தேர்தல் முடிவைத் தொடர்ந்து விஷமிகள் யாரோ இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தி.மு.க. செயலாளர் புகழேந்தியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நெய்வேலி முழுவதும் பரவியது. தொண்டர்கள் புகழேந்தி யின் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் உருவானது.

மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர். மேலும் தொ.மு.ச. அலுவலகம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

“செக்ஸ்” தொல்லையால் காதலனை கொன்றேன் ; கள்ளக்காதலி வாக்குமூலம்.

“செக்ஸ்” தொல்லையால்  காதலனை கொன்றேன்; கள்ளக்காதலி வாக்குமூலம்

சென்னை தண்டையார் பேட்டை ரெட்டிசுழி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (26). எலக்ட்ரிஷியன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்யாவின் மனைவி இந்திராவுக்கும் (28) கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்திரா, சரவணனுடன் தொடர்வை துண்டித்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் நேற்று இந்திரா வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். இந்த மோதலில் சரவணனை கத்தியால் குத்தி இந்திரா கொலை செய்தார்.

தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்ய சரவணன் வந்ததாகவும் அப்போது மின்சாரம் தாக்கி அவர் இறந்து போனதாகவும் இந்திரா போலீசில் கூறினார். சந்தேகம் அடைந்த தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு விசாரணை நடத்தியதில் இந்திரா கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து போலீசில் இந்திரா அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனக்கும், சரவணனுக்கும் 2 1/2 வருடமாக தொடர்பு இருந்தது. எனது பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் நிலையில் இருந்ததால் சரவணனுடன் உள்ள தொடர்பை துண்டிக்க நினைத்தேன். ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சென்றேன்.

சரவணன் மீண்டும் அங்கு வந்து எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். கடந்த 10 நாட்களாக அவரது தொல்லையை தாங்க முடியவில்லை. நேற்று வீட்டுக்கு வந்து முன்புபோல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்தேன். நீ வேறு யாருடன் தொடர்பு வைத்து உள்ளாய் என்று கூறி தகராறு செய்தார்.

ஒரு கட்டத்தில் என்னை கத்தியால் குத்த முயன்றார். உடனே நான் அந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தினேன். அவரது வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. நான் ஒருமுறைதான் குத்தினேன். அதில் அவர் இறந்து விட்டார். காயம் தெரியாததால் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறி தப்ப முயன்றேன்.

இவ்வாறு இந்திரா கூறினார். கைதான இந்திரா ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குஷ்பு அரசியலில் அனுபவம் இல்லாதவர் : நான் ஜெயலலிதாவை மதிப்பவன் : எஸ்.வி.சேகர்.


தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான். அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. என்று நடிகை குஷ்பு கூறினார்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த மைலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எம்ஏ எஸ்.வி.சேகர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி: தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக் குத்தான் தோல்வி என்று கூறியுள்ளாரே?

பதில்: குஷ்பு அரசியலுக்கு புதுசு. அனுபவம் இல்லாதவர் மக்கள் தீர்ப்பை எப்போதும் கவுரவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் இப்போது அ.தி.மு.க.வில் இல்லையே என்ற வருத்தம் உள்ளதா?

பதில்: நான் எப்போதும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் மதிப்பவன். 2 பேருமே எனக்கு நண்பர்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள் அரசியல் பகையை மறந்து நண்பர்களாக இருப்பது போல, நானும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அ.தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன். தற்போது அதற்காக வருத்தப் படவில்லை என்றார்.

அடுத்த வாரம் டீஸல், எரிவாயு, கெரசின் விலை கடும் உயர்வு?


டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அடுத்த வாரம் உயரும் என்று தெரிகிறது.

எவ்வளவு விலை உயர்த்துவது என்பதை முடிவு செய்ய அடுத்த வாரம் மத்திய அமைச்சர்கள் குழு கூடுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, அதிக அளவில் மானியம் அளிக்க முடியாமல் கடந்த ஆண்டில் இருந்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதித்தது. அதன் பிறகு கடந்த 11 மாதங்களில் 11 முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

கடைசியாக நேற்று முன்தினம் லிட்டருக்கு ரூ.5.29 உயர்ந்தது. சென்னையில் லிட்டருக்கு ரூ.67.22 விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது.

மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, டீசல் போன்றவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்ந்ததால் டீசல் விலையும் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்காளத்தில் புதிதாக வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்க கொல்கத்தாவுக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்றார். பிரணாப்பிடம் டீசல் விலை உயர்வு குறித்து கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசு விடுவித்துக்கொண்டது. எனவே, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. எனினும் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற மற்ற பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்கிறது.

கடைசியாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 68 டாலராக இருந்தது. தற்போது, பீப்பாய்க்கு 110 டாலராக உயர்ந்து விட்டது. அடுத்த வாரம் நடைபெற உள்ள மத்திய மந்திகள் குழு கூட்டத்தில் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்துவது தொடர்பான முடிவு எடுக்கப்படும்," என்றார்.

எரிவாயு ரூ.25 வரை உயருகிறது

டீசல், சமையல் கியாஸ் விலை எவ்வளவு உயர்த்தப்படும் என்றும், விலை உயர்வு குறித்து முடிவு எடுக்கும் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவிக்கவில்லை.

ஆனால், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.25 வரையும் உயர்த்துமாறு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கும் சமையல் எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது, மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ.26-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.16-ம் சமையல் கியாசுக்கு சிலிண்டருக்கு ரூ.320-ம் மானியமாக வழங்கப்படுகிறது.

இன்று முதல் மருத்துவம், பி.இ. படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம்.


பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆப் மார்க் அதிகரித்துள்ளது. பி.இ. படிப்பில் கட் ஆப் மார்க் 198-க்கு மேல் எடுத்தவர்களுக்குத் தான் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இதேபோன்று எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு கட் ஆப் மார்க் 199.25-க இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பி.இ.படிப்பிற்கான விண்ணப்பங்கள் கிண்டிபொறியியல் கல்லூரி உள்பட 62 இடங் களில் கிடைக்கும். இதற்காக 2.20லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 500. இம்முறை சனி, ஞாயிறு விடுமுறையின்றி இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பத்தை மாணவர்கள் www.annauniv.edu/tnea 2011 என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர வேண்டும்.

ஜூன் மாத இறுதியில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் ஜூலை மாத முதல் வாரத்தில் பி.இ. கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் மாதம் 2-ம் தேதி பிற்பகல் 3 மணி வினியோகம் செய்யப்படும். சனி, ஞாயிறு விடுமுறையின்றி தினமும் காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.500. மாணவர்கள் www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்திலிருந்தும் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.

வரும் ஜூன் மாதம் 21-ம்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து ஜூன் மாதம் 30-ம் தேதி எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும்.

தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக தேர்தல் நடத்தப்படவில்லை.


புதிய தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து மீண்டும் கோட்டைக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு:

சென்னையில் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோட்டைதான் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இந்த கோட்டை, அரசு அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் முடிவு செய்தார்.

இது சம்பந்தமாக சட்டசபை விதி 110-ன் கீழ் சட்டசபையில் அறிவிப்பை அவர் வெளியிட்டார். 110-ம் விதியின் கீழ் வெளியிடப்பட்டதால் அந்த அறிவிப்பை பற்றி யாரும் விவாதிக்க முடியாது.

ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையை பராமரிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவிட வேண்டியது இருப்பதாலும், அங்கு போதிய இடவசதிகள் மற்றும் நவீன வசதிகள் இல்லை என்பதாலும் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக காரணம் கூறப்பட்டது.

கலைவாணர் அரங்கம் இடிப்பு:

இந்த நிலையில் 2006-ம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது. சரியான வசதிகளைக் கொண்ட தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக ஓமந்தூர் அரசினர் தோட்டத்தை முந்தைய அரசு தேர்வு செய்தது. இதற்காக அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டது.

ஆங்கிலேய கவர்னர் கன்னிமாரா பிரபு 1890-ம் ஆண்டு தொடங்கி வைத்த 118 ஆண்டுகள் பழைய கட்டிடத்தில் இயங்கும், சென்னையிலேயே முதல் போலீஸ் நிலையமான திருவல்லிக்கேணி போலீஸ் நிலையமும் அகற்றப்பட்டது.

மீண்டும் மாறுகிறது:

அந்த இடத்தில் ரூ.450 கோடிக்கு மதிப்பிடப்பட்டு, ரூ.1,100 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது. பிரமாண்டமான விழாவில் திறந்து வைக்கப்பட்ட அந்த கட்டிடத்தில் தலைமைச் செயலகம் மட்டுமல்ல, சட்டசபையும் இயங்குகிறது,

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இதற்காக கோட்டை புதுப்பிக்கப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள், படங்கள் வெளியாகி யுள்ளன.

ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கி வந்த இடத்தில், பழைய அரசால் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தையும் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புத்தகங்கள் பாழாகின்றன. செய்திகளைப் பார்க்கும்போது, புதிய தலைமைச் செயலகத்தை அப்படியே கைவிடுவதற்கு இந்த அரசு முடிவெடுத்திருப்பது தெரிகிறது.

இது சட்டவிரோதமான, அங்கீகாரமற்ற, பொதுமக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். பல கோடி பணத்தை போட்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது சரியான செயல்பாடு அல்ல.

தலைமைச் செயலகத்தை மாற்ற தேர்தல் நடக்கவில்லை

தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வதுபற்றி தமிழகஅரசு முடிவெடுக்க வில்லை. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்க வேண்டும்.

புதிய தலைமைச் செயலகத்தில் செயல்படுவது சரிதான் என்று அரசு எடுத்திருந்த முடிவு, திடீரென்று மாறுவதற்கு என்ன காரணம் என்பதற்கும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை, புதிய தலைமை செயலகத்தையும், சட்டசபையையும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈழப் பிரச்சினையில் - ஆரிய தந்திரம் ஆரம்பம்..


ஈழப் பிரச்சனையை கையிலெடுத்திருக்கும் அதிமுக...சும்மா இருக்குமா திமுக?

காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர்.

ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார்.

தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்!

ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில்,

இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக இந்த முயற்சிகளில் அவர் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவை காங்கிரஸ் கழற்றிவிட நெருக்கடி தருவதற்காகவே ஆட்சிக்கு வந்தவுடனேயே ஈழப் பிரச்சனையை ஜெயலலிதா கையில் எடுத்ததாகத் தெரிகிறது.

ஈழப் பிரச்சினையை ஜெயலலிதா முழுவீச்சில் கையிலெடுக்கும் போது, ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியையே இழந்தவன் என சொல்லி வரும் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் சும்மா இருக்க முடியுமா?.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி சும்மா இருக்குமா? கூட்டணிக்குள் இருந்து கொண்டே ஈழப் பிரச்சினையில் திமுக தீவிரம் காட்டுவதை அமைதியுடன் வேடிக்கைப் பார்க்குமா?.

திமுகவுக்கு சிபிஐ உள்ளிட்ட பல வகைகளில் நெருக்கடிகளை காங்கிரஸ் அதிகரிக்கும். இதைத் தான் எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா.

தான் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்தால் பதிலுக்கு திமுகவும் அதை கையில் எடுக்கும். இதன்மூலம் திமுக-காங்கிரஸ் உறவை காலி செய்யலாம் என்பது அவரது திட்டம். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

50 கோடி ரூபாய் செலவில் பழைய தலைமைச் செயலகம் புதுப்பிக்கும் பணி.

2011 பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. 3வது முறையாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல் அமைச்சராக திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார். இந்த நிலையில், பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை அமைக்கப்படுகிறது. அதற்காக சட்டப்பேரவை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.தி.மு.க. ஆட்சியில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 2010ம் ஆண்டு மார்ச் 13ந் தேதி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புதிய தலைமை செயலகம் திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து பழைய தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம், பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை 40 ஆயிரம் புத்தகங்களுடன் தொடங்கியது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில், எண்ணற்ற தமிழ் நூல்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தகட்டில் (சி.டி.) பதிவு செய்யப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத் தொகை போன்ற செவ்விலக்கியங்களும் உள்ளன.

இந்த இடத்தில், மீண்டும் சட்டப்பேரவை அரங்கம் அமைக்கப்பட இருப்பதால், நூலகத்தை காலி செய்யும்படி அதன் ஒருங்கிணைப்பாளர் சிவமணியிடம் அதிகாரிகள் கூறினார்கள். அவர் உடனே அதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவரும் காலி செய்வதற்கான ஏற்பாட்டை செய்யும்படி உத்தரவிட்டார். இதற்கிடையே, இந்த நூலகத்தை வேறு எங்கு கொண்டு செல்வது என்பது பற்றி தலைமை செயலர் எஸ்.மாலதி மற்றும் உயர் அதிகாரிகள் சென்னை கோட்டையில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நூலகம் அமைக்கும்போது, சட்டப்பேரவையில் இருந்து அகற்றப்பட்ட இருக்கைகள் மீண்டும் பொருத்தி பேரவை புதுப் பொலிவுடன் அமைக்கப்படுகிறது.

இதற்கிடையே, பழைய தலைமை செயலகத்தை சுத்தம் செய்து, வெள்ளையடிக்கும் பணி இரவு, பகலாக மின்னல் வேகத்தில் நடக்கிறது. முதல் அமைச்சர் அறையும், அமைச்சர்களின் அறைகளிலும் உள்ள திரைச்சீலைகள், இருக்கைகள், தரைவிரிப்புகள் மாற்றப்படுகின்றன. ஜெயலலிதாவை வரவேற்று சிறியதும், பெரியதுமாக தலைமை செயலகத்தில் ஆங்காங்கே கட் அவுட்டுகள் கட்டியிருக்கிறார்கள். அந்த கட் அவுட்டுகளில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று முதல் அமைச்சர் பொறுப்பேற்க வரும் முதல்வரே, வருக வருக என்ற வாசகங்கள் பளிச்சிடுகின்றன. பழைய தலைமைச் செயலகம் புதுப் பொலிவுப் பெற சுமார் 50 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பழைய தலைமை செயலகத்தில் சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதால், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா திங்கள்கிழமை பகல் 12.15 மணிக்கு நடைபெறும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

தமிழக புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு.

ஜெயலலிதா வுடன் 33 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்கிறார்கள். அவர்களது வாழ்க்கை குறிப்பு வருமாறு:-


ஓ.பன்னீர் செல்வம்

நிதிஅமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயது 60. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். பெரியகுளம் நகரசபை தலைவராகவும், நகர அ.தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார். 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 6 மாத காலம் முதல்-அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதாபானு என்ற மகளும் உள்ளனர்.


கே.ஏ.செங்கோட்டையன்

விவசாயஅமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்.

1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கதிர் என்ற மகனும் உள்ளனர்.


நத்தம் விசுவநாதன்

மின்சாரத்துறை அமைச்சரான நத்தம் விசுவநாதனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடி கிராமம். இவருக்கு அமர்நாத் என்ற மகனும், கவிதா, ரஞ்சிதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். 62 வயதான விசுவநாதன், பி.எஸ்சி. படித்துள்ளார்.

தற்போது, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக உள்ளார்.


கே.பி.முனுசாமி

உள்ளாட்சிதுறை அமைச்சரான கே.பி.முனுசாமிக்கு வயது 59. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர். பி.ஏ.பி.எல். படித்துள்ளார். தந்தை பூங்காவன கவுண்டர், தாயார் மங்கம்மாள், மனைவி மங்கையர்கரசி, இவருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.


சி.சண்முகவேலு

தொழில்துறை அமைச்சரான சி.சண்முகவேலு, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.ஏ. படித்துள்ள இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் சமராயபட்டியைச் சேர்ந்தவர். கொங்கு வேளாளக் கவுண்டர்.

இவருக்கு மனோன்மணி என்ற மனைவியும், ராஜ்குமார் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.


ஆர்.வைத்திலிங்கம்

வீட்டுவசதித்துறை அமைச்சரான ஆர்.வைத்திலிங்கத்தின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு. இவருக்கு தங்கம் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். பி.ஏ. பட்டதாரி. 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் இருந்தார்.


அக்ரி கிருஷ்ணமூர்த்தி

உணவுத்துறைஅமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 77-ல் கோவை வேளாண் கல்லூரியில் மாணவர் துணை செயலாளராகவும், 80-ல் மாணவர் செயலாளராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு விஜயா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.


சொ.கருப்பசாமி

கால்நடைதுறை அமைச்சரான சொ.கருப்பசாமி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பி.யூசி. படித்து உள்ளார்.

அவருடைய மனைவி முத்துமாரி. மாரிச்சாமி என்ற மகனும், கீதாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.


பி.பழனியப்பன்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.பழனியப்பன் (வயது 50). தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர். எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தந்தை பெருமாள்கவுண்டர், தாயார் பொன்னியம்மாள், மனைவி ரோஜா. இவருக்கு எழில் மறவன் என்ற மகனும், யாழினி என்ற மகளும் உள்ளனர்.


சி.வி. சண்முகம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு வயது 46. பி.ஏ.பி.எல். படித்துள்ளார். இவருடைய தந்தை வேணுகோபால் வந்த வாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார். சி.வி.சண்முகத்திற்கு கவுரி என்ற மனைவியும் ஜெயசிம்மன் என்ற ஒரு மகனும் வள்ளி என்ற ஒரு மகளும் உள்ளனர்.


செல்லூர் ராஜு

கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜு (வயது 57) மதுரை மேற்கு தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். காமாட்சி தேவரின் மகனான இவர் பி.எஸ்சி. பட்டதாரி. இவரது மனைவி ஜெயந்தி. 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.


கே.டி.பச்சைமால்

தமிழக வனத்துறை அமைச்சரான கே.டி.பச்சைமாலின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம். இவருடைய தந்தை பெயர் தங்கநாடார். தாயார் கோவில்பிள்ளை அம்மாள்.

1979-ம் ஆண்டு அ.தி.மு.க. வில் இவர் சேர்ந்தார். 2000-வது ஆண்டில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பச்சைமால் பதவி வகித்தார். இவருடைய மனைவி பெயர் பி.செல்வழகி (43). இவர்களுக்கு பி.அபிஜித் (16), பி.அனிஜித்குமார் (14) என்ற மகன்கள் உள்ளனர்.


இடைப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான இடைப்பாடி பழனிச்சாமி, சொந்த ஊர் இடைப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ.படித்துள்ளார்.


எஸ்.பி.சண்முகநாதன்

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரான எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் பண்டாரவிளையைச் சேர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று ஜவுளி மற்றும் கைத்தறி துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அவருடைய மனைவி ஆஷா. ராஜா என்ற மகனும், புவனேசுவரி, கலையரசி, பொன்னரசி, தமிழரசி, பொன்ரேகா ஆகிய 5 மகள்களும் உள்ளனர்.


கே.வி.ராமலிங்கம்

பொதுப்பணித்துறை அமைச்சரான கே.வி.ராமலிங்கம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கள்ளிவலசு பகுதியை சேர்ந்தவர். பி.ஏ. பட்டதாரி.

கே.வி.ராமலிங்கத்திற்கு அம்மணி என்ற மனைவியும் மீனா பிரீத்தி, ஆர்த்தி பிரியதர்ஷினி என்ற 2 மகள்களும், ரத்தன் பிருத்வி என்ற மகனும் உள்ளனர்.


எஸ்.பி.வேலுமணி

சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சரான எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.ஏ. எம்.பில் படித்துள்ள இவர் கோவையை அடுத்த குனியமுத்தூரை சேர்ந்தவர். கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தை சேர்ந்த இவர் குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர்.

எஸ்.பி.வேலுமணியின் மனைவி பெயர் வித்யா தேவி. இவர்களுக்கு விஷால் என்ற மகனும், வந்தனா என்ற மகளும் உள்ளனர்.


சின்னையா

பிற்படுத்தப்பட்டோர் அமைச்சரான தாம்பரம் சின்னையாவுக்கு வயது 48. பி.ஏ. பட்டதாரி. இவர் அ.தி.மு.க. நகரச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் பிறந்து வளர்ந்தது தாம்பரம்.

இவருக்கு சுமதி என்ற மனைவியும், ராகவேந்திரா என்ற மகனும் உள்ளனர். இவர் தாம்பரம் நகராட்சியில் கவுன்சிலராக இருந்து தேர்தலுக்காக அந்த பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.


எம்.சி. சம்பத்

ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது சொந்த ஊர் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமம் ஆகும். எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றிபெற்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றினார்.


பி.தங்கமணி

தமிழக வருவாய் துறை அமைச்சரான பி.தங்கமணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர். அவருக்கு வயது 51. பி.ஏ.பட்டம் பெற்றவர் ஆவார்.

இவரது தந்தை பெருமாள் கவுண்டர். தாயார் செல்லம்மாள். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், பரனிதரண்(22) என்ற மகனும், லதாஸ்ரீ(20) என்ற மகளும் உள்ளனர்.


ஜி.செந்தமிழன்

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான ஜி.செந்தமிழன், சென்னையைச் சேர்ந்தவர். வக்கீலான இவர், எம்.ஏ., எம்.எல். பட்டம் பெற்றவர். கட்சியில் தென் சென்னை மாணவர் அணி தலைவர், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தென் சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் செந்தமிழன், 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது மனைவி லட்சுமி. மகள் சரண்யா, மகன் ஜெயஆதித்யன்.


கோகுல இந்திரா

தமிழக வணிக வரித்துறை அமைச்சரான எஸ்.கோகுலஇந்திராவின் சொந்த ஊர் ராமநாதபுரம். இவரது தந்தை சுப்பிரமணியன். பி.ஏ.பி.எல். முடித்த கோகுலஇந்திரா ஆரம்பத்தில் சிவகங்கையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை டெல்லியில் ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார். அதன்பின்பு அ.தி.மு.க.வில் மாநில அமைப்பு செயலாளராக பணியாற்றினார். நடந்து முடிந்த தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கோகுலஇந்திரா-சந்திரசேகர் தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர்.


செல்வி ராமஜெயம்

சமூக நலத்துறை அமைச்சரான செல்வி ராமஜெயம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2 முறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார்.

இவரது சொந்த ஊர் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அகரம் கிராமம் ஆகும். கணவர் ராமஜெயம். சந்தர் என்கிற மகனும், ஜெயஸ்ரீ, ஜெயப்பிரதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.


பி.வி.ரமணா


கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான பி.வி.ரமணாவுக்கு வயது 44. இந்து கம்மவார் சமுதாயத்தை சேர்ந்த இவர் பி.எஸ்சி, பி.பார்ம் படித்தவர். இவரது தந்தை பக்தவச்சலம். தாய் பிரேமா.

இவருக்கு லதா என்ற மனைவியும், வருணிஷா என்ற மகளும் உள்ளனர்.


ஆர்.பி.உதயக்குமார்

தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஆர்.பி.உதயக் குமாரின் தந்தை பெயர் போஸ். ஆர்.பி. உதயக்குமார் பி.காம் பி.எல்., எம்.எஸ்.டபிள்ï. படித்துள்ளார். மனைவி தாமரைச்செல்வி. 2 மகள்கள் உள்ளனர். முதன் முதலில் மதுரை அரசு சட்டக்கல்லூரி அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளராக இருந்தார். அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். இப்போதுதான் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


ந.சுப்பிரமணியன்

கந்தர்வகோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ந.சுப்பிரமணியன். இவர் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியில் 10.07.1956-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் நல்லான். பட்டயப்படிப்பு (டி.இ.இ.) படித்துள்ள சுப்பிரமணியன், சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவருடைய மகன் ராம்குமார் என்ஜினீயரிங்கும், மகள் லாவண்யா எம்.எஸ். ஐ.டி.யும் படித்து வருகின்றனர்.


செந்தில் பாலாஜி

போக்குவரத்துத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவர் பி.காம். பட்டதாரி இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமேஸ்வரபட்டியாகும். இவரது தந்தை பெயர் பி.வேலுசாமி. தாய் பெயர் பழனியம்மாள்.

இவருக்கு மேகலா என்ற மனைவியும், நந்தினி என்ற (5) மகளும் உள்ளனர். இவர் 2000-ம் ஆண்டில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளராக பணியாற்றினார்.


மரியம்பிச்சை

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். இவர் பி.ஏ. வரலாறு படித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று மரியம்பிச்சை முதல் முதலாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி பெயர் பாத்திமாகனி. மரியம் பிச்சைக்கு ஆசிக் மீரா (வயது30), ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்கள் உள்ளனர்.


ஜெயபால்

மீன்வளத்துறை அமைச்சரான கே.ஏ.ஜெயபாலின் சொந்த ஊர் நாகப்பட்டினம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு தினேஷ், ரதீஷ், ரகுபாலன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர் பி.காம் வரை படித்துள்ளார். இவர் தற்போது நாகை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார்.


இசக்கி சுப்பையா

சட்டத்துறை அமைச்சரான இசக்கி சுப்பையா என்ற இ.சுப்பையா, அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஏ., எம்.எல். படித்துள்ள இவர் நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர். தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி சொந்த ஊர். அவருடைய மனைவி மீனாட்சி. சித்த மருத்துவர். மகள் சந்திர காந்திமதி. எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருகிறார். மகன் இசக்கித்துரை.


புத்திசந்திரன்

சுற்றுலா துறை அமைச்சரான எம்.புத்திசந்திரன், 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் கே.பி.மாதாகவுடர். படுகர் சமுதாயத்தை சேர்ந்த இவரது பூர்வீகம் மஞ்சூர் அருகே உள்ள கிண்ணக்கொரை. புத்திசந்திரன் பி.எஸ்.சி., பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், முகிலா, அனு ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.


சி.த.செல்லப்பாண்டியன்

தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஏ. பட்டதாரியான இவர் தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் தொழில் செய்து வருகிறார்.

அவருடைய மனைவி இந்திரா. ராஜாசிங், ஜெபசிங் ஆகிய 2 மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற மகளும் உள்ளனர்.


வி.எஸ்.விஜய்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர். இவருடைய மனைவி ஜெயந்தி. மகள் டாக்டர் அனிதா, மகன் அருண் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

டாக்டர் வி.எஸ்.விஜய் அரசு டாக்டர்கள் சங்க வேலூர் மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பணியாற்றியவர். கட்சியில் மருத்துவப்பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். முதன்முறையாக வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


எஸ்.ஆர்.சிவபதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆர்.சிவபதி 1963-ல் பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார். 1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார். இவரது தந்தை பெயர் ரங்கராஜன், தாயார் சரோஜா. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஜெயசாந்தி, லட்சுமிபிரியா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

பெட்ரோல் விலை அதிகரிப்பு : ஆட்டோ கட்டணம் உயர்வு.

பெட்ரோல் விலை அதிகரிப்பு: ஆட்டோ கட்டணம் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29 பைசா நேற்று முன்தினம் இரவு முதல் உயர்த்தப்பட்டது. இதையொட்டி லாரி வாடகை, ஆட்டோ கட்டணம், கால் டாக்சி போன்றவற்றின் கட்டணம் உடனடியாக உயர்ந்தது.

ஆட்டோ டிரைவர்கள் ரூ.20, ரூ.30 என கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள். சென்னையில் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது குறித்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தியாகராய நகர் வைத்தியநாதன் தெருவில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டிற்கு செல்ல இதுவரை ரூ.80 கட்டணம் கொடுத்து வந்ததாக பயணி ஒருவர் கூறினார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டவுடன் தற்போது ரூ.100 வசூலிப்பதாக அவர் தெரிவித்தார்.

சூளைமேட்டை சேர்ந்த சைனி என்பவர் தான் பணிபுரியும் சேத்துப்பட்டிற்கு தினமும் ஆட்டோவில் செல்வாராம். 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பயணத்திற்கு ரூ.50-60 கட்டணம் வசூலிக்கிறார்கள். சில நேரம் ரூ.70 கூட கேட்கிறார்கள். நான் பல நகரங்களில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளேன். ஆனால் சென்னையில்தான் ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக உள்ளது. மீட்டர் பயன்படுத்தாமல் அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இங்குதான் உள்ளது என்று அவர் கூறினார்.

கெல்லீஸ் ஜங்சனில் இருந்து ஸ்டெல்லாமேரி கல்லூரிக்கு செல்ல தற்போது கூடுதலாக ரூ.30 ஆட்டோ கட்டணம் வசூலிப்பதாக ஜெயா என்ற பெண் கூறினார்.

இதே போல சென்னையில் இயக்கப்படும் கால்டாக்சிகளும் கட்டணத்தை உயர்த்தி விட்டன. செய்கொடி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க பொதுச் செயலாளர் தமிழ்ச் செல்வம் கூறியதாவது:-

கடந்த 9 மாதத்தில் 10 முறை பெட்ரோல் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்த தொழிலை விட்டு விட வேண்டியதுதான். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், டிரைவர்களுக்கும் தகராறு ஏற்படுவதோடு மனக் கஷ்டமும் உண்டாகிறது. அடிக்கடி பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ தொழில் நலிவடைந்து வருகிறது. கட்டணத்தை உயர்த்தக்கூடிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இதுபற்றி பேச அனைத்து தொழிற்சங்கம் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதில் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்ய உள்ளோம். ஒரு சிலர் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் பொதுமக்களிடம் அதிருப்தி உண்டாகிறது.

கியாஸ் மூலம் ஆட்டோ ஓட்டினால் “மைலேஜ்” கிடைப்பது இல்லை. அதனால் பெட்ரோலை முழுமையாக நம்ப வேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.