Monday, May 16, 2011

பின்லேடன் ஆதரவாளர்கள் எந்நேரத்திலும் தாக்கலாம் ? அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு.


சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொன்றுவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.

பின்லேடன் வசித்து வந்த வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. பின்லேடனின் எதிர்காலத் திட்டம் குறித்த ஆவணங்களையும் அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் கைப்பற்றினர். அதன் மூலம் இரட்டை கோபுரத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான்று (செப்டம்பர் 11) அமெரிக்கா மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த அல்-காய்தா திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

அப்படி நடத்தவிருக்கும் தாக்குதல் அமெரிக்காவையே நிலைகுலைய வைப்பதாக இருக்கும் வகையில் பின்லேடன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்லேடன் இறந்தாலும் அவரது ஆசையை, திட்டத்தை அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

நாட்டின் மத்தியில் அமைந்துள்ள சிகாகோ நகரைத் தாக்குவதே அல்-காய்தாவின் நீண்டகாலத் திட்டமாக இருந்து வருகிறது. நகரில் உயரமான கட்டடங்கள் அமைந்துள்ளதால் தாக்குவதற்கு எளிது என்பதால் அவர்கள் இந்நகரை தேர்ந்து எடுத்து பலமுறை தாக்கமுயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.

இருப்பினும் சிகாகோவை தாக்க மீண்டும் முயற்சிக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அந்நகரின் மூலை முடுக்கெல்லாம் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

அல்-காய்தாவினரிடம் இருந்து சிகாகோ நகருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லை. இருப்பினும் நகரை யார் தாக்க நினைத்தாலும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுக்கப்படும். உள்ளூர் போலீஸôரும், எப்பிஐ அதிகாரிகளும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றனர்.

இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியமில்லை என்று சிகாகோ எப்பிஐ பிரிவின் செய்தித்தொடர்பாளர் ரோஸ் ரைஸ் தெரிவித்தார்.

பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்துள்ளார். நாங்கள் அவரை வலைவீசித் தேடியபோதெல்லாம் பாகிஸ்தான் வாயைத் திறக்கவில்லை. பின்லேடனுக்கு பாகிஸ்தான் உதவியதை அந்நாட்டு புலனாய்வுத் தகவல்கள் உறுதி செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

""அல்-காய்தாவிடம் இருந்து அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா உஷாராகவே உள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதியுமே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவுகளுடன் உளவு அமைப்பு தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறது. ஒருவேளை பயங்கரவாதிகள் தாக்க முயற்சித்தால் அவர்கள் தப்ப முடியாது'' என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் மாத்சாண்ட்லர் தெரிவித்தார்.

No comments: