Thursday, June 16, 2011

2020-ம் ஆண்டிற்கு பின் சூரியனின் இயற்கை சுழற்சியால் பூமி குளிர்ந்து விடும்., ஆய்வில் தகவல்.

2020-ம் ஆண்டிற்கு பின் சூரியனின் இயற்கை சுழற்சியால் பூமி குளிர்ந்து விடும்: ஆய்வில் தகவல்

அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள நேசனல் சோலார் அப்சர்வேடரி அமைப்பின் ஆராய்ச்சியாளர் பிராங் ஹில் என்பவர் சூரியனை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வரும் 2020-ம் ஆண்டிற்கு பின் சன்ஸ்பாட்ஸ் எனப்படும் சூரியனின் கறுப்பு பகுதி படிப்படியாக மறைந்து போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.

சூரியனின் வெளி அடுக்கு பகுதியான கரோனாவில் இருந்து வெப்பநீரோடை வெளிப்படுவதாகவும் அதனால் அதன் காந்த புல வலிமை குறைய நேரிடும் என்றும் கூறியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து சூரியனின் இயற்கை சுழற்சியில் பல மாற்றங்கள் மற்றும் சூரிய புயல் போன்றவை ஏற்பட்டு அவ்வப்போது செயற்கைகோள்களின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

மேலும் சூரியனானது இந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் மிக பலம் குன்றி காணப்படுவதாகவும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. இதனால் 2020ம் ஆண்டிற்கு பின்பு உலக வெப்பமயமாதல் குறைந்து ஐஸ் ஏஜ் எனப்படும் குளிர்ந்த நிலைக்கு பூமி சென்று விடும் என்றும் கூறப்படுகிறது.

ஒரே வாரத்தில் 20 நகை பறிப்பு சம்பவம் : போலீசுக்கு சவால்விடும் கொள்ளையர் .


கோவை மாநகர போலீசுக்கு சவாலான நேரம் தொடங்கி உள்ளது!

இதுவரை இல்லாத அளவுக்கு நகரில் பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சாய்பாபா காலனி, குனியமுத்தூர், உக்கடம் என்று பாரபட்சமில்லாமல் எல்லா பகுதிகளிலும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிக்கும் சம்பவம் சங்கிலி தொடர் போல் நடந்து வருகிறது.

நேற்று இரவு 8.50 மணிக்கு ஆர்.எஸ்.புரத்தில் ஜனநெருக்கடி மிகுந்த டி.பி. ரோட்டில் 20-வது நகை பறிப்பு சம்பவத்தை மோட்டார் சைக்கிளில் வலம் வரும் ஹெல்மெட் கொள்ளையர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளனர். இது மாநகர போலீசாருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி என்றே கருதப்படுகிறது.

கோவையில் 20-வது நகை பறிப்பு சம்பவத்தில் நகையை பறி கொடுத்தவர் டாடாபாத்தை சேர்ந்த தேவகி (வயது 72). இவர் தனது பேத்தியுடன் ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஆடைகள் எடுக்க வந்திருந்தார். பேத்தி கடைக்கு சென்றதும் தேவகி மட்டும் கடைக்கு வெளியே நின்றிருந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் தேவகியின் கழுத்தில் கிடந்த 3 தங்க சங்கிலியை கொத்தாக பறித்தனர். இதில் ஒரு சங்கிலி கீழே விழுந்தது. 2 சங்கிலி கொள்ளையர்களின் கையில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று தப்பி விட்டனர்.

கொள்ளையர்களை அந்த பகுதிக்கு வந்த இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சத்தியநாராயணன் என்பவர் விரட்டினார். ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் உதவி போலீஸ் கமிஷனர் முருகசாமி, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

அங்கு ரோந்து பணியில் இருந்த வயதான சப்-இன்ஸ்பெக்டரை அழைத்து உதவி கமிஷனர் கடுமையாக திட்டினாரே தவிர தப்பி சென்ற கொள்ளையரை பிடிக்க எந்த உஷார் நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

ஒருவரை ஒருவர் குறை செல்வதை விடுத்து கொள்ளையனை கோட்டை விட்ட போலீசாருக்கு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் அட்வைஸ் இதோ...

ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் இருந்து தப்பிச் சென்ற கொள்ளையர்கள் புற நகருக்கு செல்ல மருதமலை சாலை, அல்லது தடாகம் சாலை பகுதியை தேர்ந்தெடுத் திருந்தால் கண்டிப்பாக லாலி ரோடு சிக்னல் வழியாகத்தான் கடந்து சென்றிருப்பார் கள். அங்கு நான்கு புறமும் காமிரா உள்ளது. கண்டிப்பாக கொள்ளை நடந்த சில நிமிடங்களில் சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிளை வீடியோ மூலம் ஆய்வு செய்தால் கொள்ளையன் சிக்கி கொள்வான். முயன்றால் முடியாதது இல்லை! தமிழ்நாடு போலீசால் முடியாதது என்பது எதுவுமே இல்லை! ஒன்று பட்டு செயல்பட்டால் கோவையில் குற்றங்கள் குறையும் என்றனர்.

கடலூரில் பயங்கர தீ விபத்து.

கடலூரில் பயங்கர தீ விபத்து

கடலூர் கடற்கரை ஓரங்களில் சுனாமி பாதுகாப்புக்காக சவுக்கு மர காடுகள் வளர்க்கபட்டு வருகின்றன. 100 ஏக்கருக்கும் மேல் இந்த காடுகள் அமைந்து உள்ளன.

இன்று அதில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஆனால் கடற்கரை பகுதியில் மணல் அதிகளவில் இருப்பதன் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்தின் வெளியே 10 கிரகங்கள் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

சூரிய மண்டலத்தின் வெளியே 10 கிரகங்கள்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்தில் தற்போது, பூமி, செவ்வாய், சந்திரன், வியாழன், புதன் சனி போன்ற 9 கிரகங்கள் உள்ளன. இவை சூரியனை சுற்றி வருகின்றன. இது தவிர ஏராளமான சிறிய கிரகங்களும் சூரியனைச்சுற்றி வருகின்றன. சூரிய மண்டலம் பற்றி சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர்.அப்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே 10 கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பல லட்சம் வருடங்கள் வயது கொண்டவை. இதில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூன் கிரகத்தைப் போல் இரு மடங்கு பெரிது.

சனி கிரகம் போன்ற மற்றொரு கிரகமும் சூரிய மண்டலத்தின் வெளியே உள்ளது. பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்பை பயன்படுத்தி இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 10 கிரகங்களில் 7 கிரகங்கள் வெப்பம் அதிகம் நிறைந்தவை.

வீட்டுகாவலில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே.

வீட்டுகாவலில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து நாட்டின் நார்போல்க் நகரில் எல்லிங்காம் ஹால் என்ற இடத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலமாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் தங்கி உள்ள வீட்டில் வாசல் உள்பட 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை பார்க்க வருவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது.

மேலும் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவரது ஆதரவாளர்களில் ஒருவரான டேனியல் ஹாமில்டன் என்பவர் கூறும்போது, அசாஞ்சே ஒன்றும் கிரிமினல் குற்றவாளியல்ல. ஒரு தனிபட்ட நபரின் அந்தரங்க விசயங்களில் அத்துமீறி நுழைவது அநாகரிகமானது. உடனடியாக கண்காணிப்பு கேமராவினை அகற்ற வேண்டும். காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம்.

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது. பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில். உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. காங்கோ குடியரசு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக் இந்தியா, சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.

பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். 2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக இருந்துவருகின்றது .

ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையில்    பயங்கர தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூரில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பல்வேறு பிரிவுகளுடன் செயல்படும் இந்த தொழிற் சாலையில் பெயிண்ட் பிரிவில் இன்று காலை 11 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கட்டிடத்தில் 3 ஆயிரம் லிட்டருக்கு மேல் பெயிண்ட் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததால் சிறிது நேரத் திற்குள் தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரு தீயணைப்பு வண்டியில் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. கட்டிடம் முழுக்க தீ பரவியது. சுமார் 30 அடி உயரத்துக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீகட்டுக்குள் வராததால் பூந்தமல்லி, காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையங் களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை முற்றிலும் அணைத்தால்தான் தொழிலாளர்கள் யாராவது அதில் சிக்கி உள்ளனரா? என்பது தெரியவரும். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் சரணடைய நீதிமன்றம் உத்தரவு .தேர்தல் பிரச்சார வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி 15 நாட்களுக்குள் அவரை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார்.

நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, மார்ச் 30 ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, பிரேமலதா வாகனத்தை பின்தொடர்ந்து அதிக வாகனங்கள் சென்றது, விதிகளை மீறி அதிக நேரம் பேசியது , நெரிசலுக்கு காரணமாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, தாடிக்கொம்பு, செம்பட்டி ஆகிய காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இவ் வழக்குகளில் ஏற்கனவே அவருக்கு நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கியது. ஆனால், அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால், தனக்கு மீண்டும் முன்ஜாமின் கோரி பிரேமலதா சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.

மனிதநேய அறக்கட்டளை நடத்தும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு.

மனிதநேய அறக்கட்டளை நடத்தும்  ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு;  12 இடங்களில் நுழைவுத்தேர்வு

சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் இயக்குனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை சி.ஐ.டி. நகரில் செயல்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதேநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம் 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ். முதல்நிலைத்தேர்வுக்கு 10 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட தலை நகரங்களில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்.

சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி நடத்தப்படும்.தேர்வுக்கான பாடத்திட்டத்தை மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான என்.சி.ஆர்.டி. பாடப்புத்தகங்கள், டாட்டா மெக்ரா ஹில், ஜெனரல் ஸ்டடீஸ் மேனுவல் புத்தகங்கள், பொது அறிவு, நடப்புகால நிகழ்ச்சிகள், (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) மற்றும் லாஜிக் ரீசனிங், குவான்டிடேட்டில் ஆப்டி டியூட் மற்றும் இங்கிலீஷ் காம்ப்ரிகென்ஷன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.

இந்த இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதள பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணபிக்க வேண்டும், விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 10-ந் தேதி. விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் ஜூலை 12-ந் தேதிக்கு பிறகு நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மேற்கண்ட இணையதளத்தில் டவுண்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம். அதில் தாங்கள் பாஸ்போர்ட் அளவு போட்டோவை ஒட்டி அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். இதுதான் ஹால்டிக்கெட்.

நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். கடந்த 12-ந் தேதி ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு எழுதிய மையத்தில் பயிற்சிபெற்ற மாணவர்களுக்கான மெயின் தேர்வு பயிற்சி வகுப்புகள் வருகின்ற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்க உள்ளது.

இந்த வகுப்பு செப்டம்பர் மாதம் இறுதி வாரம் வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு, மையத்தில், பிற புதிய மாணவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஹால்டிக்கெட், போட்டோ, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு கார்த்திகேயன் கூறி உள்ளார்.

நீரா ராடியாவுக்கு கொலை மிரட்டல் : வக்கீல் மீது சி.பி.ஐ.யிடம் புகார்.

ஸ்பெக்ட்ரம் சாட்சி நீராராடியாவுக்கு கொலை மிரட்டல்:    வக்கீல் மீது சி.பி.ஐ.யிடம் புகார்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தயாரித்துள்ள சாட்சிகள் பட்டியலில் 125 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 44-வது சாட்சியாக சேர்க்கப்பட்டிருப்பவர் நீராராடியா. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெட்ட வெளிச்சமானதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நீராராடியா தான் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரபல கார்ப்பரேட் இடைத் தரகரான இவர், முக்கியப் புள்ளிகளுடன் போனில் பேசியதை வருமான வரித்துறை பதிவு செய்ததால் ஸ்பெக்ட்ரம் முறைகேடு உறுதிபடுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விசாரணைகள் நடந்த பிறகே ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதம் கிளம்பியது.

நீரா ராடியா அரசு தரப்பு சாட்சியாக மாறியதைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரமில் பயன் அடைந்த தனியார், நிறுவனங்கள், பண பரிமாற்றங்களும் தெரிய வந்தது. ஏற்கனவே 2 தடவை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளது. இதில் ஒரு நிறுவனம் பற்றியும், மேலும் சிலரது பெயர்களும் இடம் பெறும் என்று தெரிய வந்துள்ளது.

அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிப்பதில் நீராராடியா முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறப்படுகிறது. இதை அறிந்ததும் டெல்லியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், கடந்த சில தினங்களாக நீரா ராடியாவை போனில் பேசி மிரட்டினார். கொலை மிரட்டலும் விடுத்தார். கடிதம் ஒன்று மூலமாகவும் நீராராடியாவுக்கு, அந்த வக்கீல் கொலை மிரட்டல் விடுத்தார்.

உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததால், நீராராடியா நேற்று சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங்கை சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தனக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தை சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி. சிங்கிடம், நீராராடியா கொடுத்தார். டெல்லி போலீசாரிடம் புகார் செய்யாமல், சி.பி.ஐ. யிடம் கொலை மிரட்டல் குறித்து கூறுவது ஏன் என்பதற்கான காரணத்தை நீராராடியா கைப்பட எழுதி கொடுத்தார்.

கொலை மிரட்டல் விடுத்த வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீராராடியா கேட்டுக் கொண்டார். இதை சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். டெல்லியை சேர்ந்த அந்த வக்கீல் யார்? எந்த நிறுவனத்துக்காக அந்த வக்கீல் கொலை மிரட்டல் விடுத்தார்? என்பன போன்ற தகவல்களை வெளியிட சி.பி.ஐ. மறுத்துவிட்டது.

காய்கறி விலைகள் “கிடுகிடு” உயர்வு.காய்கறிகளின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது. கூடவே கருணாநிதி தான் வீட்டுக்குப் போயாச்சே பின்னே ஏன் விலை ஏறுது? என்கிற நியாயமான கேள்வியும் எழத்தான் செய்கிறது.

இதோ விலை உயர்ந்த காய்கறிகளின் பட்டியலைப் பாருங்கள்.

பீன்ஸ்- ரூ. 50, அவரைக்காய்- ரூ. 40, கேரட்- ரூ. 30, வெண்டைக்காய்- ரூ. 30

கத்தரிக்காய்- ரூ. 24, தக்காளி- ரூ. 10, பீட்ரூட்- ரூ. 18, நூல்கோல்- ரூ. 28

சவ்சவ்- ரூ. 20, சேப்பங்கிழங்கு- ரூ. 26, சேனை கிழங்கு- ரூ. 32

பிடி கருணை- ரூ.32, மிளகாய்- ரூ. 24, பாகற்காய்- ரூ. 24, கீரை- ரூ. 5

புடலங்காய்- ரூ. 10, உருளைக்கிழங்கு- ரூ. 18, வாழைக்காய்- ரூ. 5

முருங்கைக்காய்-1 ரூ. 4, முட்டைக்கோஸ்- ரூ. 5 வெங்காயம்- ரூ. 15

இதில் வருகிற 16ந்தேதி முதல் டீசல் விலை ஏறப்போகிறது என்னும் அறிவிப்பு வேறு.

இந்த அறிவிப்பால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? விலைவாசி எங்கு போய்நிற்குமோ? தெரியவில்லை.

அண்மையில் டெல்லி சென்ற அம்மையார், பிரதமரிடமாகட்டும், பத்திரிகை, ஊடகத்தினரிடமாகட்டும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்தும், விலைவாசி ஏற்றம் குறித்தும் பேசாதது ஏன்?

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து திமுக ஆட்சிகாலத்தில் கருத்து தெரிவிக்கையில், மாநில அரசின் வரியினைக் குறைத்து விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைக்க யோசனை கூறிய ஜெயலலிதா, தமது ஆட்சியில் இன்னும் இதை நடைமுறைப் படுத்தாதது ஏன்?

மாமூல் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் .சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் உள்ள கடைக்காரர்களிடம், எங்கள் ஆட்சி வந்து விட்டது, இனி மாமூலாக தினமும் 150 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மாமூல் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு காவல்துறை யினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சேலம் அழகபுரத்தில், இருக்கும் அ.தி,மு.க ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு. இவர் ஒரு கொலை வழக்கில், நீதிமன்றத்தில் வாழ்நாள் தண்டனை பெற்று, பின்னர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து விடுதலை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த பொது தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியில் மனு கொடுத்திருந்தார். ஆனால், சேலம் மேற்கு தொகுதிக்கு வெங்கடாசலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவருக்கு தேர்தல் செலவுக்கு ஒரு பெரிய தொகையை கொடுத்து உதவி செய்துள்ளார் .வெங்கடாசலம் எம்.எல்.ஏ ஆனதும், ராஜூ மாமூல் வசூல் செய்யும் வேலைகளை தன்னுடன் இருக்கும் ஆட்களை வைத்து செய்ய ஆரம்பித்து விட்டார் என்று அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதியில் உள்ள மாமாங்கம், வெள்ளக்கல் பட்டி, டைட்டல் பார்க் போன்ற இடங்களில் சட்டவிரோதமக சுண்ணாம்பு கல் கடத்தும் கும்பலிடமும், ஓமலூர் செல்லும் வழியில் உள்ள மாக்னசைட் தாது வெட்டி எடுக்கும் குத்தகைதாரர்களிடமும், ஆவின் பால் பண்ணையில் பால் எடுத்து வெளியூர் கொண்டு செல்லும் லாரி குத்தகைதாரர்களிடமும் குறிப்பிட்ட தொகையை மாமூலாக கேடு மிரட்டியும் உள்ளர் . இன்னும் சேலம் அழகாபுரம், காவல் நிலையம் எதிரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான ஆறு கடைகளையும் வாடகைக்கு எடுத்துள்ள கடைக்காரகளிடம் சென்று மாமூல் கொடு, அல்லது கடையை காலி செய் என்பது போன்று இன்னும் பல இடங்களில் அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்..

இது குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் உழவர் சந்தையில் மாமூல் கேட்ட செய்தி வந்ததும், உழவர் சந்தைக்கு வந்த தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெங்கடாசலம் ரௌடிகளுக்கு யாரும் மாமூல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி தனது விசிடிங்கார்டுகளை வியாபாரிகளிடம் கொடுத்து யாராவது மாமூல் கேட்டல் எனக்கு போன் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தார். அதை தொடர்ந்து ஏ.வி.ராஜு, எம்.எல்.ஏ. வெங்கடசலத்தின் கூட்டு மிரட்டல் பற்றிய விவரங்களை சென்னைக்கு அனுப்பியது சேலம் உளவுத்துறை.

எங்கள் ஆட்சி வந்து விட்டது, இனி மாமூலாக தினமும் 150 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ஏ.வி.ராஜு மிரட்டியதாக, பேர்லேண்ட்சில் ஓட்டல் கடை நடத்தி வரும் சத்யா பேர்லேண்ட்ஸ் போலீசில் புகார் செய்தார். இது குறித்து 3பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல் சூரமங்கலம் உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் ஈஸ்வரி, மற்றும் சுரேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் காவல்துறையினர், 15.06.2011 அன்று அதிகாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்த ஏ.வி.ராஜுவை தூக்கி கொண்டு போய் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலத்துக்கு 15.06.2011 அன்று மாலை மூன்று மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு வரும்படி வந்த உத்தரவையடுத்து அலறியடித்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார்.