Wednesday, May 11, 2011

திருப்பதி கோவில் டி.வி. தமிழில் ஒளிபரப்பு.

திருப்பதி கோவில் டி.வி.  தமிழில் ஒளிபரப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீவெங்கடேஷ்வரா பக்தி சேனல் என்ற பெயரில் டெலிவிஷன் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தெலுங்கு மொழியில் பாட்டுக் கச்சேரி மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் 35 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்கள் என்பதால் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிகழ்ச்சியை தமிழிலும் ஒளிபரப்ப தேவஸ்தானம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி முதல் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி கோவில் பற்றி தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், இந்து தர்மம் பற்றி தங்கள் மொழில் தெரிந்து கொள்வதற்கு வசதியாகவும் நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாங்கேக்கு சிட்னி அமைதி விருது.

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாங்கேக்கு சிட்னி அமைதி விருது

மனித உரிமைகள் பாதுகாப்பு, உலக அமைதியை பல்வேறு வழிகளில் செயல்படுத்துதல் என அசாங்கே பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரது மன உறுதியை கௌரவிக்கும் வகையில் இந்த அமைதி விருதினை சிட்னி அமைதி அறக்கட்டளை அளித்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் தகவல்களையும், அமெரிக்க ராணுவத் தலைமையகம் தகவல்களையும் வெளியிட்டு உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாங்கே அவரது சேவையை பாராட்டி சிட்னி அமைதி விருதுக்கான தங்கப்பதக்கதுடன் கூடிய விருது அளிக்கப்பட்டுள்ளது.கடந்த 14 ஆண்டுகளில் சிட்னி அமைதி அறக்கட்டளை மூன்று முறை மட்டுமே இந்த விருதினை அளித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா, திபெத் தலைவர் தலாய் லாமா, ஜப்பானிய புத்த தலைவர் டாய்சகு இகேடா ஆகியோரைத் தொடர்ந்து இந்த விருது அசாங்கேவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அரசுகளின் கடந்த கால ரகசிய நடைமுறைகளை உடைத்து எறியும் வகையில் அசாங்கே துணிச்சலாக தகவல்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என சிட்னி அமைதி அறக்கட்டளை பாராட்டி உள்ளது.

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் : தமிழக மாணவி முதலிடம்.



ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது .

இதில் முதல் 10 இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) 2010 தேர்வில் தமிழக மாணவி முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது ரேங்குகளையும் தமிழகம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

முதல் இடத்தில் திவ்ய தர்ஷினி,

3ம் இடத்தில் வருண்குமார்,

4ம் இடத்தில் அபிராம் சங்கரன்,

8ம் இடத்தில் அரவிந்த்

ஆகியோர் இடம் பிடித்தனர். நேர்முகத் தேர்வுக்கு 2400 பேர் கலந்து கொண்டனர் அதில் 920 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.

2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்திலிருந்து 22 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 847 பேர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 240 பேர்.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திவ்யதர்ஷிணி என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.



இதுபோல் 3-வது ரேங்க்கை தமிழகத்தைச் சேர்ந்த வருண்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் ஒரு பல் மருத்துவர் ஆவார். சென்னை உத்தண்டியில் உள்ள ராகாஸ் பல் மருத்துவ கல்லூரியில் பயின்றவர்

அபிராமசங்கர் என்ற மாணவர் 4-வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சி யிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதோடு, மிகக் குறைந்த 22 வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திருநெல்வேலி யைச் சேர்ந்த இவர், இப்போது குடும்பத்துடன் கேரளத்தில் வசித்து வருகிறார்.

இதுபோல் 8-வது ரேங்க்கை அரவிந்த் என்ற தமிழக மாணவர் பெற்றுள்ளார். முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறை.

கடந்த 2005-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மாணவர் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஊழலுக்கு எதிராக போராடுவேன் ; ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த திவ்யதர்ஷினி.

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியியாகியது. அதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைச்சேர்ந்த திவ்யதர்ஷினி முதலிடத்தை பிடித்தார்.

இதுவரை தமிழகத்தைச்சேர்ந்த எவரும் முதலிடத்தை பிடிக்கவில்லை. முதல் நபர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார் திவ்யதர்ஷினி.

திவ்யதர்ஷினி, டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரானவர்.

அவரை தொடர்புகொண்டபோது, ‘’எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை எனது பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த பிரபாகரன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் திரு. பிரபாகரன் அவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.

என் பெற்றோர்கள் எனக்கு அதிக சுதந்திரமும் கொடுத்து, என் வெற்றிக்கு பெரிதும் ஆதரவாக இருந்தனர்.

நான் நிச்சயமாக ஐஏஎஸ் பணியின் மூலம் இந்த சமுதயாத்திற்கு சிறந்த சேவை ஆற்றுவேன். மேலும் ஊழலுக்கு எதிராக போராடுவேன்’’ என்று தெரிவித்தார்.

பாட்டியாலா கோர்ட்டில் ராசா - கனிமொழி சந்திப்பு?


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கடந்த 83 நாளாக திகார் சிறையில் இருந்து வருகிறார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்திருந்த கனிமொழியை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் ராசா அமைதியாகவே காணப்பட்டார். அவர் மாலை 4.30 மணி வரை நீதிமன்றத்தில் இருந்தார். பின்னர் அவரை சிறைச்சாலைக்கு அழைத்து வந்தனர்.

கடந்த ஆண்டுகளில் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டிய ராசாவுக்கு இந்த பிறந்தநாளை சிறையிலும், நீதிமன்றத்திலும் கழிக்க வேண்டியதாயிற்று.

ஆ.ராசா 48-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால் அவர் சிறையில் பிறந்தநாளை கொண்டாடவில்லை.


1,136 மதிப்பெண்கள் எடுத்தும் மேற்படிப்புக்கு வசதியில்லாத நிலையில் ஏழை மாணவி.


பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1,136 மதிப்பெண் பெற்றிருந்தபோதிலும் படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் மாணவி ரேமகாவதி.

மாணவி ரேமகாவதி

திருப்பூரைச் சேர்ந்தவர் மாணவி ரேமகாவதி. பிளஸ் டூ தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்தார். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அவரது தந்தை அகால மரணமடைந்தார். பிளஸ் ஒன் படிக்கும் தம்பி, சொற்ப சம்பளத்தில் கூலி வேலை பார்க்கும் தாய் என வறுமை வாட்டியதால் பனியன் கம்பெனி வேலைக்கு செல்லத் துவங்கினார் ரேமகாவதி.

1,136 மதிப்பெண்கள்

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் ரேமகாவதி 1,200க்கு 1,136 மதிப்பெண்கள் பெற்று தேர்வானது தெரிய வந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களெல்லாம் தத்தம் பெற்றோருடன் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மதிப்பெண்கள் குறித்த தகவலை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டு தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் ரேமகாவதி.

உதவி தேவை

நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தொடர்ந்து படிக்க முடியாத நிலையில் உள்ள இந்த மாணவியை பத்திரிகையாளர் சந்தித்தனர். அவர்களிடம் ‘தந்தை இறந்த பின் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக எனது தாயின் சகோதரர் ஜோதிராமன் உள்ளார். அவர் வீட்டில்தான் தற்போது வசித்து வருகிறோம். அப்பாவும் இறந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்ற நான் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். தமிழ் பாடத்தில் 189, ஆங்கிலத்தில் 179, இயற்பியலில் 199, வேதியியலில் 196, கம்ப்யூட்டர் சயின்ஸில் 192, கணித பாடத்தில் 181 என 1,136 மதிப்பெண் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனால் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள என் அருமை தந்தை எங்களோடு இல்லை, தொடர்ந்து படிக்க வசதியும் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினியராக வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. தற்போதைய சூழலில் அது நிகழ வாய்ப்பில்லை. யாராவது உதவும் பட்சத்தில் நன்றாக படித்து சிறந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவேன் என்றார் அவர்.

உதவ விரும்புவோர் கவனத்திற்கு

உதவும் எண்ணம் உள்ள இதயங்கள் 93442 - 00281 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

thatstamil.oneindia.in

புலிகள் சரணடைவதையும், செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிப்பதையும் இலங்கை விரும்பவில்லை : விக்கிலீக்ஸ் தகவல்.


இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகள் சரணடைவதை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தலையீட்டின் கீழ் இந்த சரணடைதலை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா அழுத்தம் கொடுத்தபோதும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேநேரம் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிக்க அமைச்சர் பசில் ராஜபக்சே அனுமதி மறுத்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

நார்வேக்கான இலங்கை தூதர், இலங்கையில் உள்ள அமெரிக்காவின் இலங்கைக்கான தூதருக்கு தகவல் ஒன்றை அனுப்பினார்.

அதில் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் செல்வராஜா பத்மநாதன், தம்முடன் தொடர்புக் கொண்டு எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலைப்புலிகள் சரணடைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாக நார்வே தூதர் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான தலைமையாளர் போல் கெஸ்டேலா புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவிடம் தகவல் அனுப்பினார். அதற்கு கோத்தபாயவும் இணக்கம் வெளியிட்டார்.

சரணடைவதற்கு முன்னர் குறித்த புலித்தலைவர்களின் பெயர்களை தருமாறு அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கேட்டிருந்தார். எனினும் குறித்த பெயர் பட்டியலை நார்வே தரப்புக்கு புலிகளின் தரப்பு வழங்கவில்லை.

இதேவேளை காயமடைந்த பொதுமக்களை காப்பாற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை போர் இடம்பெறும் பகுதிகளுக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்சே மூன்று நாட்களாக அனுமதி வழங்கவில்லை என்று அமெரிக்க தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 4500 ராணுவ வீரர்கள் : ஓட்டு எண்ணிக்கை வீடியோவில் பதிவு ; தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி.

பாதுகாப்பு பணியில் 4500 ராணுவ வீரர்கள்:    ஓட்டு எண்ணிக்கை    வீடியோவில் பதிவு;    தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக தேர்தல் பணி நடந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளோம். 234 தொகுதிகளுக்கும் தனித்தனி அறையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 91 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. ஒருசில அறைகளில் 4, 5 தொகுதி அறை அடிப்படையில் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. சென்னை லயோலா கல்லூரியில் 7 தொகுதிகளுக்கும், ராணிமேரி கல்லூரியில் 4 தொகுதிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஓட்டு எண்ணும் பணியில் 16,966 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவம் ஈடுபடுத்தப்படுகிறது. ஒரு கம்பெனிக்கு 100 பேர் வீதம் 4,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே 27 கம்பெனி துணை ராணுவம் வந்து விட்டது. மேலும் 18 கம்பெனி துணை ராணுவம் வருகிறது. இன்று மதியம் முதல் துணை ராணுவத்தினர் வருகிறார்கள். இதில் 9 கம்பெனி சென்னை நகருக்கும், 5 கம்பெனி திருச் சிக்கும், 4 கம்பெனி மதுரைக்கும் அனுப்பப்படுகிறது. ஓட்டு எண்ணப்படும் ஒவ்வொரு மையத்துக்கும் 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 3 அதிகாரிகள், 9 போலீஸ்காரர்கள் இதில் அடங்குவார்கள்.

ஓட்டு எண்ணும் மையத்துக்கு 100 மீட்டருக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வாகனத்தில் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டை இல்லாமல் யார் வந்தாலும் அனுமதி இல்லை. ஓட்டு எண்ணும் மையத்துக்குள் மை பேனா, தண்ணீர் பாட்டில், சிகரெட், பீடி, தீப்பெட்டி போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்போனையும் எடுத்துச் செல்லக் கூடாது. பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே வளாகத்துக்குள் செல்போன் கொண்டு செல்லலாம். இவர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. ஓட்டு எண்ணப்படும் வளாகத்தில் இஷ்டத்துக்கு ஆங்காங்கே நின்று கொண்டு செல்போன் பேசக்கூடாது. வேட்பாளர், ஏஜெண்டுகளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் செல்போனில் பேசலாம்.

தேர்தல் பார்வையாளர் ஒருவருக்கு மட்டுமே ஓட்டு எண்ணும் அறையில் செல்போன் வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது. பத்திரிகையாளர்களுக்கு தனி அறை ஒதுக்கப்படுகிறது. அங்கு இண்டர் நெட், டெலிபோன், பேக்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு 8 முதல் 14 டேபிள்கள் ஒதுக்கப்படுகிறது. ஓட்டுக்கள் அதிகமாக இருந்தால் 16 டேபிள்கள் போடப்படும். ஒவ்வொரு சுற்றும் முடிந்து கையெழுத்து வாங்கிய பிறகுதான் அந்த சுற்றின் முடிவு அறிவிக்கப்படும். அதாவது முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான் 2-வது சுற்று எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். 8 மணி முதல் 8.30 மணி வரை தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிகாலை 5 மணிக்கே வரவேண்டும். தேர்தல் பார்வையாளருக்கு தனி அறை எதுவும் கிடையாது. அவர் ஓட்டு எண்ண தொடங்கியது முதல் முடியும் வரை அங்கேயே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடிவுகள் திரை மூலமாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும், கரும்பலகை மூலமாகவும் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்று முடிவும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அதன் நகல் வேட்பாளருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படும். கடைசி 2 சுற்று முடிவு அறிவிப்பதற்கு முன்னதாக தபால் ஓட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ஓட்டு எண்ணும் பணி முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மேஜை வாரியாக கண்காணிக்கப்படும். இதில் யார் தவறு செய்திருந்தாலும் தெரிந்து விடும். ஓட்டு எண்ணும் இடத்தில் 4 கட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணப்படும் அறை, அதற்கு முன்புள்ள பகுதி, வளாகம் மற்றும் வளாகத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மத்திய தேர்தல் கமிஷனுக்கு ஓட்டு எண்ணிக்கையின்போது டேட்டா என்ட்ரி செய்வதில் முறைகேடு வாய்ப்பு உள்ளதாக புகார் அளித்திருக்கிறாரே?

பதில்:- இந்த முறை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. எந்தவித தவறோ முறைகேடோ நடைபெறாது. தேர்தல் அதிகாரி அருகிலேயே டேட்டா என்ட்ரி அலுவலர் மூலமாகவும், கம்ப்யூட்டர் மூலமாகவும் நடைபெறும். இதை தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி பார்வையிடுவார்கள். இதை வேட்பாளரும் பார்க்கலாம். இதில் தவறு நடைபெறாது.

கேள்வி:- இந்த தேர்தல் அனுபவம் எப்படி இருக்கிறது?

பதில்:- எனக்கு கொடுக்கப்பட்ட பணியை நான் செய்கிறேன். மீடியாக்கள், அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் ஆகியோர் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் செயல் பட்டேன். இந்த பணி திருப்தியாக உள்ளது.

கேள்வி:- தமிழக முதல்- அமைச்சர் நீங்கள் பாரபட்சமாக செயல்பட்டதாக குற்றச் சாட்டு கூறுகிறாரே?

பதில்:- தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் உள்பட்டுத்தான் நான் செயல்பட்டேன். அரசியல் கட்சிகளிடையே பாகுபாடு பார்த்து நான் செயல்படவில்லை.

கேள்வி:- தேர்தல் முடிவு எப்போதிருந்து தெரிய வரும்.

பதில்:- நான் ஜோதிடர் அல்ல.

கேள்வி:- தேர்தல் விதி முறையை மீறியதாக எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- 6,818 பெரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5,935 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4,557 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 389 வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். 386 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திரன், அமுதா உடன் இருந்தனர்.

அடுத்த வாரம் சமையல் “கியாஸ்” விலை ரூ.20 உயரும்.

அடுத்த வாரம் சமையல் “கியாஸ்” விலை ரூ.20 உயரும்

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்த போதிலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாடு, புதுவை, கேரளா உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டம் தள்ளிவைப்பு நேற்று பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது தொடர்பான மத்திய மந்திரி குழு கூட்டம் நடப்பதாக இருந்தது.

ஆனால் சில மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இன்று மத்திய மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாளை நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்த முடிவு செய்யப்படும் என்று பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் டீசல், கியாஸ் விலை அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரையும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்தப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.

கடலில் உடலை வீசியுள்ளனர் : அமெரிக்காவிற்கு பின்லேடன் மகன் கண்டனம்.


கடலில் உடல் அடக்கம்: பின்லேடன் மகன் கண்டனம்;    எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர்

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு பின்லேடனின் 4-வது மகன் ஒமர் பின்லேடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக வளைகுடா நாட்டில் தங்கியுள்ள அவர் ஒரு இணையதளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு. மேலும் அவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவுபடுத்த வேண்டும். பின்லேடன் கொல்லப் பட்டதற்கு அமெரிக்கா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு.

அவரது உடலை கடலில் வீசியுள்ளனர். மனிதாபிமான ரீதியாகவும், மதரீதியாகவும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் எங்கள் குடும்பத்தையும், அவரது ஆதரவாளர்களையும் அமெரிக்கா அவமதித்து விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முறைகேடு - ப.சிதம்பரத்தை உதாரணம் காட்டி தேர்தல் ஆணையருக்கு ஜெயலலிதா கடிதம்.


தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, படிவம் 20ல் வாக்குகள் பதிவு செய்யப்படும் தகவலை கட்சி முகவர்கள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சிவங்கங்கை தொகுதியில் வாக்குகளின் எண்ணிக்கை, படிவம் 20ல் பதிவு செய்யும்போது முறைகேடுகள் நடந்துள்ளன.

அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரத்துக்கும், ப. சிதம்பரம் பெற்ற வாக்குகள் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெயரிலும் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகள் மற்றும் முகவர்களால் எழுத்தால் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை தகவல்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் 31வது பிரிவில் வாக்கு எண்ணிக்கை மாற்றி பதிவு செய்யப்பட்ட விவரத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.

ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு ஆதரவாக இவ்வாறு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கையும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கை விவரங்களும் ஒன்றாக உள்ளதா என்பதை சரிபார்க்க தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு சரிபார்த்த பின்னரே இறுதி தேர்தல் முடிவை வெளியிட வேண்டும்.

மேலும், படிவம் 20ல் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கை தகவல்களை கண்காணிக்க தலா ஒரு முகவரை அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்க மறுப்பு : சிபிஐ மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்.


15 ஆண்டுகளுக்கு முன், போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷவாயு அதிக அளவில் கசிந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். ஆயிரக்கணக்கானவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கில் தொழிற்சாலையின் தலைவர் கேசுப் மகிந்திரா உள்பட 7 பேருக்கு ஏற்கனவே 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை போதாது. குற்றவாளிகளுக்கு கொலை குற்றத்துக்கான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கிராமவாசி போல பைக்கில் சென்ற ராகுல் !

உத்தரபிரதேச மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்காக அதிக நஷ்டஈடு கேட்டு போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று அதிகாலை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

காவலர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒரு சாதாரண மனிதர் போல மோட்டார் சைக்கிளில் பிரச்சனைக்குரிய கிராமத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளை ராகுல் சந்தித்து பேசினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகே அமைந்துள்ள பட்டா பர்சால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் யமுனா எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் நஷ்டஈடு கேட்டு போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனையடுத்து கிராம பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்த கிராமத்துக்கு திடீரென சென்றார். கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாவலர்களிடமிருந்து விலகி மோட்டார் சைக்கிளில் அவர் பயணம் மேற்கொண்டார்.

அதிகாலை 6 மணி அளவில் சாதாரண கிராமவாசி போல மோட்டார் சைக்கிளில் வந்த அவரை கிராமத்தில் இருந்த காவலர்கள் அடையாளம் காண முடியவில்லை. கிராமத்திற்கு சென்று அங்கிருந்த விவசாயிகளை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சனை மற்றும் போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயிகளை நேரில் பலமுறை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவர் போராடி வரும் விவசாயிகளை இன்று அதிகாலை நேரில் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரலாறு காணாத நிதி நெருக்கடியில் நியூஸிலாந்து !!


ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக நிதி நெருக்கடி, கடன் என சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. முதல் முறையாக இந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடான நியூஸிலாந்து.

அந்நாட்டின் வரலாற்றில் இதுவரை பார்த்தறியாத கடன் சுமையும் நிதி நெருக்கடியும் வாட்டத் தொடங்கியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டை உலுக்கியெடுத்த பெரும் பூகம்பம். க்ரைஸ்ட்சர்ச் உள்ளிட்ட நகரங்களை பாதித்த இந்த பூகம்பத்தால், நியூஸிலாந்தின் பொருளாதாரமே சீர்குலைந்து போனது.

இதனால் கடன் மேல் கடன் வாங்கிக் குவிக்க, இப்போது அந்த கடனே நியூஸிலாந்தை மூழ்கடித்துவிடும் அபாயம். இந்த நெருக்கடியை முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நியூஸிலாந்து.

அந்நாட்டின் நிதியமைச்சர் பில் இங்லீஷ் இதுபற்றிக் கூறுகையில், "பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்பை விட அதிக பாதிப்பு நியூஸிலாந்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த 12 மாதங்களுக்கான நிதிப் பற்றாக்குறை அளவு 17 பில்லியன் நியூஸிலாந்து டாலர்கள் (13.5 அமெரிக்க டாலர்கள்). இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

4.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூஸிலாந்து, வாரம் 300 மில்லியன் டால் அளவுக்கு ஐஎம்எப்பிலிருந்து கடன் பெறுகிறது. இதனால் அதன் நிதிச் சுமை எக்கச்சக்கமாகியுள்ளது.

"கடன்களை தன் நாட்டு வளங்களிலிருந்தே பெறும் அளவுக்கு ஒரு நாடு இருக்க வேண்டும். கடனுக்கு பிற நாடுகளைச் சார்ந்திருக்கும்போது, நிதிச் சுமை கழுத்தை நெறிக்க ஆரம்பித்துவிடும். எனவே நியூஸிலாந்து இனி உள்நாட்டு சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும்," என்றார் பில் இங்லீஷ.

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே ! - நியூஸி. உச்ச நீதிமன்றம் அதிரடி !


இறைமை உள்ள ஒரு இனத்துக்காகப் போராடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு அரசியல் அமைப்பே. அதன் உறுப்பினர்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது என நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1992-ல் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படை இடைமறித்து சென்னை நோக்கி செலுத்தி வந்தது. இதில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு இருந்தார்.

சென்னைக்கு அருகில் இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதும் கப்பல், அதிலிருந்த ஆயுதங்கள் மற்றும் புலிகள் அமைப்பின் தலைவர்களை சிறைப்படுத்த இந்திய கப்பல் படையினர் முயன்றபோது, கப்பலை வெடி வைத்துத் தகர்த்தனர் புலிகள். இதில் கிட்டு உள்ளிட்டோர் இறந்தனர். மூவர் மட்டும் கடலில் குதித்துத் தப்பினர்.

அவர்களை இந்தியா கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2001-ல் தண்டனை முடிந்ததும், அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியது இந்தியா. பின்னர் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்றனர். 2002-ல் அகதி உரிமை கோரி அங்கு விண்ணப்பித்தனர்.

ஆனால் இதனை நிராகரித்த நியூஸிலாந்து அரசு அவர்களில் இருவரை நாடு கடத்தியது. மூன்றாமவர் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நியூஸிலாந்து நீதிமன்றம் மேற்கண்ட முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், தனது செயலை அதை ஒப்புக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு இந்திய அரசு வழங்கிய தண்டனை மற்றும் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அகதி உரிமையை மறுத்தது நியூஸிலாந்து அரசு.

இதனை விசாரித்த நீதிபதி, இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை படைத்தவர்களே என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் இந்த விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டார்.

குறிப்பிட்ட அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்றது உண்மையாகவே இருந்தாலும், புலிகள் தங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு அத்தியாவசியமான பொருள்களைத்தானே அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது? இதில் தவறு காண வேண்டியதில்லை. அந்தக் கப்பல் புலிகளுக்குப் போய்ச் சோராத நிலையில் அவர்களாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியல் குற்றமோ, பொதுமக்களுக்கு ஊறு விளைவித்த குற்றமோ இல்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அரசியல் அமைப்பு :

மேலும் தமது தீர்ப்பில், "இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினர். புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கி வருகிறது" என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக ஆஸ்திரேலியா பட்டியலிட்டபோது, நியூசிலாந்தும் அதற்கான முயற்சியில் இறங்கியது.

அப்போது நியூசிலாந்து தமிழர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இன்று புலிகளுக்கு தடை விதிக்காத முக்கிய நாடுகளுள் நியூஸிலாந்தும் ஒன்று.

உலகில் தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் புலிகள் மீது தடைகள் உள்ளன. உலகத் தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது.

தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்கிட முயற்சிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கருதுகின்றன.

இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தவறானது என்பதை கிட்டத்தட்ட வெளிப்படையாகவே உரைத்திருக்கிறது நியூஸிலாந்து உச்ச நீதிமன்றம். எனவே இதை மேற்கோள் காட்டி, புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து இந்தியாவிலும் வாதாட தமிழ் அமைப்புகள் முயலலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும் புலிகள் தங்கள் ஆயுதக் கப்பலை மூழ்கடித்தது, அரசியல் குற்றமோ, பொது நலனுக்கு எதிரான குற்றமோ அல்ல என தெள்ளத் தெளிவாக நியூஸிலாந்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் வல்வெட்டித் துறைக்கு கொண்டு சென்ற கப்பலை இடைமறித்தது இந்திய கப்பல் படைதான். தங்களுக்குச் சொந்தமான பொருளை புலிகள் மூழ்கடித்ததில் என்ன குற்றம் காண முடியும்? அந்த ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை அவர்கள் தாக்க முயலவில்லையே என்றும் நீதிபதிகள் கருத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும் - நக்கீரன் எக்ஸிட் போல்.


நக்கீரன் வார இதழ் நடத்தியுள்ள வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊடகமும் ஒரு விதமான கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நக்கீரன் வார இதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

நக்கீரன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

பெண்களின் ஓட்டு திமுகவுக்கே

திமுக கூட்டணியே இந்த முறை வெற்றி பெறும்.

தி.மு.க. கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற முக்கிய காரணங்கள் இரண்டு. வாக்களித்த பெண்களில் அதிகம் பேர் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்து உள்ளனர். தி.மு.க. அரசின் நல்வாழ்வுத் திட்டங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் இவர்கள்.

பணத்துக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்

இரண்டாவது காரணம்... பணம். ஓட்டுக்குப் பணம் என்பது மிகவும் ஆரோக்கியமற்ற, ஜனநாயகத்திற்கே ஆபத்தான விஷயம். அதனை இம்முறை அனைத்து கட்சிகளும் செய்துள்ளன. செய்யாத கட்சி யென்று இல்லை. பணம் வாங்கியவர்களில் பாதிபேர் "தர்மம்' கருதி யார் அதிக பணம் தந்தார்களோ அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.

வீணாய்ப் போன காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளுக்கு அடம் பிடிக்காமல் நாற்பது தொகுதிகளை சரியாகத் தேர்வு செய்து தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் 35 தொகுதிகளை வென்றிருக்கும் -தி.மு.க. கூட்டணி இன்னும் தன்னம்பிக்கையோடு நின்றிருக்கும். காங்கிரசின் செயல் கூட்டணியின் கணுக்காலை கூடஇருந்து வெட்டியமைக்குச் சமம். அக்கட்சி 63 தொகுதிகளில் 23 தொகுதிகளை வென்றாலே மிகப்பெரிய விஷயம்.

வடிவேலுவின் பங்கு அதிகம்

ஜெயலலிதா, வைகோவை நடத்திய விதம் உட்பட தன் ஆணவத்தால் தி.மு.க. கூட்டணிக்கு உதவியிருக்கிறாரென்றால், விஜயகாந்த்தை "பஞ்சர்' செய்து முடக்கிப் போட்டதில் வடிவேலுவின் பங்கு முக்கியமானது. தே.மு.தி.க. பத்து தொகுதிகளை வென்றால் அது பெரிய அதிசயம்.

நல்வாழ்வுத் திட்டங்களே தி.மு.க.-வை கரை சேர்க்கிறது

திமுக கூட்டணிக்கு 137

நக்கீரன் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின்படி திமுக கூட்டணிக்கு 137 இடங்கள் கிடைக்கலாம்.

அதிமுக கூட்டணிக்கு 89

அதிமுக கூட்டணிக்கு 89 இடங்கள் கிடைக்கலாம்.

திமுகவுக்கு மட்டும் இத்தேர்தலில் 84 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 24, பாமக 19, விடுதலைச் சிறுத்தைகள் 6, முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் ழகம் 1 என மொத்தம் 137 இடங்களை திமுக பிடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு மட்டும் 73 இடங்கள் கிடைக்கும். தேமுதிகவுக்கு 7, கொங்கு இளைஞர் பேரவைக்கு 1, சிபிஎம்முக்கு 5, சிபிஐக்கு 2, மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் என மொத்தம் 89 இடங்கள் கிடைக்கும்.

விஜயகாந்த்துக்கு கஷ்டம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வெற்றி பெறும் இழுபறியாக காணபப் படுகிறதாம். ரிஷிவந்தியம் தொகுதியில் அவருக்கும், காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதனால் விஜயகாந்த் வெற்றி பெறுவார் என உறுதியாக கூற முடியவில்லை என்கிறது நக்கீரன்.

அதேபோல திருவள்ளூர், ஆர்.கே.நகர், தளி, சூலுர், மடத்துக்குளம், அரியலூர் சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளிலும் இழுபறி காணப்படுகிறது.

திமுக வெல்லக் கூடிய தொகுதிகள்

அம்பத்தூர், திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், உத்திரமேரூர், காட்பாடி, ராணிப்பேட்டை, கே.வி.குப்பம், குடியாத்தம், திருப்பத்தூர், வேப்பணஹள்ளி, பென்னாகரம், பாப்பிரெட்டிபப்பட்டி, திருவண்ணாமலை, கீழ்ப்பென்னாத்தூர், ஆரணி, வந்தவாசி, வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கெங்கவல்லி, ஏற்காடு, சங்ககிரி, சேலம் மேற்கு, ராசிபுரம், சேந்தமங்கலம், ஈரோடு கிழக்கு, அந்தியூர், கூடலூர், குன்னூர், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், குன்னம், பண்ருட்டி,குறிஞ்சிப்பாடி, தாராபுரம், கவுண்டம்பாளையம், கீழ்வேளூர், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், திருவிடைமருதூர், கும்பகோணம், தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மத்தி, உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, திருவாடானை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம், பாளையங்கோட்டை.

காங்கிரஸ் வெல்லும் தொகுதிகள்


திருத்தணி, சோளிங்கர், வேலூர், ஓசூர், செங்கம், செய்யார்,திருச்செங்கோடு, ஊட்டி, வால்பாறை, நிலக்கோட்டை, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மதுரை வடக்கு, ராமநாதபுரம், விளாத்திகுளம், கடையநல்லூர், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர்.

விடுதலைச் சிறுத்தைகள்

செய்யூர், அரக்கோணம், ஊத்தங்கரை, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சீர்காழி.

பாமக வெல்லக் கூடிய தொகுதிகள்

கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், செங்கல்பட்டு, திருப்போரூர், காஞ்சிபுரம், ஆற்காடு, அணைக்கட்டு, ஜோலார்ப்பேட்டை, தர்மபுரி, போளூர், செஞ்சி, ஓமலூர், மேட்டூர், பவானி, ஜெயங்கொண்டம், நெய்வேலி, புவனகிரி, மயிலம், ஆலங்குடி.

அதிமுக வெற்றி பெறக் கூடிய தொகுதிகள்

பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், திரு.வி.க.நகர், ராயபுரம், அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், பர்கூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, கலசப்பாக்கம், திண்டிவனம், உளுந்தூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், எடப்பாடி, வீரபாண்டி, நாமக்கல், குமாரபாளையம், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், பெருந்துறை, கோபி, மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, நத்தம், வேடசந்தூர், கரூர், குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, முசிறி, கடலூர், பூம்புகார், வேதாரன்யம், பாபநாசம், திருவையாறு, ஓரத்தநாடு, விராலிமலை, திருமயம், திருப்பத்தூர், சோழவந்தான், மதுரை மேற்கு, திருமங்கலம், ஆண்டிப்பட்டி, போடி, ராஜபாளையம், சிவகாசி, பரமக்குடி, முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, வாசுதேவநல்லூர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில்.

தேமுதிக தொகுதிகள்

ஆலந்தூர், சேலம் வடக்கு, விருத்தாச்சலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், ராதாபுரம், பத்மநாபபுரம்

கொங்கு இளைஞர் பேரவை


பரமத்தி வேலூர்

சிபிஎம்

பெரம்பூர், அரூர், திருப்பூர் தெற்கு,, திண்டுக்கல், மதுரை தெற்கு.

சிபிஐ

திருத்துறைப்பூண்டி, பவானிசாகர்

மனித நேய மக்கள் கட்சி

ஆம்பூர்.

' மீண்டும் திமுக ஆட்சி ' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ் கணிப்பு.


தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.

நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் நக்கீரன் சர்வே தவிர, பிற கருத்துக் கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு செய்திச் சேனல்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. நேற்று மாலை வரை தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன.

கருணாநிதிக்கு ஆதரவு:

யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.

தமிழகத்தில் 70 தொகுதிகளில் 4167 வாக்காளர்களைச் சந்தித்து இந்த எக்ஸிட் போலை நடத்தியுள்ளது சிஎன்என் ஐபிஎன் - திவீக் குழு.

இவர்களில் 68 சதவீதம் வாக்காளர்கள் திமுக ஆட்சி திருப்தியாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் அதிருப்தி என கூறியுள்ளனர்.

திமுக ஆட்சியில் சாலை வசதி மேம்பட்டிருந்ததாக 82 சதவீதத்தினரும், குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டதாக 76 சதவீதத்தினரும், கல்வி விஷயத்தில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 77 சதவீதத்தினரும், அரசு மருத்துவமனை செயல்பாடு திருப்தியாக இருந்ததாக 70 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

மின்சார வசதி நன்றாக உள்ளது என 52 சதவீதத்தினர் கருத்து கூறியிருந்தனர். 48 சதவீதத்தினர் மோசம் என்று கூறியிருந்தனர்.

அதேபோல சட்டம் ஒழுங்கு குறித்தும் 60 சதவீதத்திற்கு உட்பட்டவர்கள்தான் திருப்தி தெரிவித்திருந்தனர்

ஹெட்லைன்ஸ் டுடே:

திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:

ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.

' அதிமுக ஆட்சி ' - சிஎன்என் - ஐபிஎன் கணிப்பு.


தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.

நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது. தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன.

2 ஜி விவகாரம்...


2 ஜி முறைகேட்டை இந்த தேர்தலை பாதிக்கும் விஷயமாக 6 சதவீதத்தினர்தான் எடுத்துக் கொண்டதாக இந்த கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 2ஜி காரணமாக தனது வாக்கை அதிமுக அணிக்கு போட்டதாக 7 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர்.

இந்த ஊழலுக்கு யார் முக்கிய காரணம் என்ற கேள்விக்கு 53 சதவீதத்தினர் ஏ ராஜா என்றும், 48 சதவீதத்தினர் கனிமொழி என்றும் கூறியிருந்தனர். 34 சதவீதத்தினர் கருணாநிதியையும் 32 சதவீதத்தினர் தயாளு அம்மாளையும் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிஎன்என் - ஐபிஎன்:

முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் - தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்:

நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்ட இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது.

இந்திய பெண்களுக்கு இங்கிலாந்தில் கன்னித்தன்மை பரிசோதனை - அதிர்ச்சித் தகவல்.


லண்டன், 1970- களில் திருமண விசாவில் இங்கிலாந்துக்கு வந்த இந்தியாவைச் சேர்ந்த பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆஸ்திரேலியாவின் ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட ஆராய்ச்சியாளர்களான மரிநெல்லா மார்மோ மற்றும் இவான் ஸ்மித் ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.

பிரிட்டனுக்கு திருமண விசாவில் வந்த பெண்களிடம் அவர்களின் கன்னித்தன்மை குறித்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1970-களின் பிற்பகுதியில் இந்த சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தாலும், எப்போது வரை இந்த சோதனை அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

ஹீத்ரு விமானநிலையத்தில் 2 விவகாரங்களில் மட்டும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதை பிரிட்டிஷ் அரசு முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தது.

ஒரு சம்பவம் மட்டும் அல்ல இதுபோன்று ஏராளமானவர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் என மார்மோ தெரிவித்தார்.

அந்த ஆவணங்கள் செல்லத்தக்கவைதான் என ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ் அரசு, எனினும் மார்மோவும், ஸ்மித்தும் கூறுவது போல நிறைய பேருக்கு இந்த சோதனைகள் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தது.

30 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அது முற்றிலும் தவறானது என இங்கிலாந்து பார்டர் ஏஜன்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

பெயரை வெளியிட விரும்பாத அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிரிட்டனின் கொள்கைகள் இப்போது பாதுகாப்பளிக்கின்றன என்றார்.

மார்மோவும், ஸ்மித்தும் தங்கள் ஆராய்ச்சியை 2008-ம் ஆண்டில் தொடங்கினர். அவர்களின் ஆய்வில் வெளியான தகவல்கள் கார்டியன் பத்திரிகையில் நேற்று முதலில் வெளியானது.

1976-79க்கு இடைப்பட்ட காலங்களில் தில்லியில் 73 பெண்களும், மும்பையில் 9 பெண்களும் பிரிட்டிஷ் தூதரகங்களில் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். மோசடி செய்து இங்கிலாந்தில் குடியேறுவதைத் தடுக்கவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லா ஓமரைத் தேடி அமெரிக்காவின் அடுத்தகட்ட வேட்டை தொடங்கியது.


பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அல் காய்தா தலைவர் பின்லேடனை வீழ்த்திய அமெரிக்க படைகள் தற்போது ஆப்கன் தலிபான் தலைவர் முல்லா ஓமரைத் தேடி வேட்டையைத் தொடங்கியுள்ளன.

ஓமரின் மறைவிடம் என சந்தேகிக்கப்படும் இடங்களில் அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கூட்டுப் படைகள் சோதனைகளை நடத்தி வருகின்றன.

சமீபத்திய நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்தகட்ட வேட்டையை அமெரிக்கப் படைகள் தொடங்கியுள்ளன.

ஆப்கன் எல்லை அருகே பாகிஸ்தானின் மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஓமர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பின்லேடன் கொல்லப்பட காரணமான அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையால் அவமானம் அடைந்துள்ள பாகிஸ்தான் உளவுத்துறை, ஓமரை முதலில் கண்டுபிடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அபோட்டாபாதில் பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து தகவல்களை சேகரித்தபின்னர் ஓமரின் மறைவிடத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் திட்டம் தீட்டி வருகின்றன.

எனினும் அமெரிக்கப் படைகள் தன்னைக் கொன்றுவிடும் என்ற அச்சத்தில் கனரக ஆயுதங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஓமருக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதிகள் மீது ஊழல் புகார்: சுப்ரீம் கோர்ட் ஆவேசம்.


டெல்லி கூடுதல் மாவட்ட பெண் நீதிபதி அர்ச்சனா சின்கா, சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறியது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜபு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி அர்ச்சனா, சூப்பர் சுப்ரீம் கோர்ட்டாக செயல்படுவதாக கூறிய நீதிபதிகள், அவரை ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம், சஸ்பெண்டு செய்து விடுவோம்' என்று எச்சரித்தனர். நீதிபதி அர்ச்சனா மன்னிப்பு கேட்டதால், அந்நடவடிக்கையை கைவிட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கீழ்கோர்ட் நீதிபதிகள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன. அவர்களால் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நீதிபதிகளை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். 80 சதவீத நீதிபதிகள், ஊழல்வாதிகள் என்று பேசப்படுகிறது. இது வெட்கக்கேடானது. இத்தகைய ஊழல் நீதிபதிகளை நீதித்துறையில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது: ராஜபக்சே.


இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா., குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது என, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்றத்தின் மூலம், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா., பொது செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட மூவர் குழு சமீபத்தில் அறிக்கை சமர்பித்தது.

இறுதி கட்டப் போரின் போது அத்துமீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜ பட்ச மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்தப்பட்டால்,அவருக்கு மரண தண்டனைக் கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

இந்த குழு அளித்த அறிக்கை குறித்து, இலங்கையிடம் விசாரிப்பதற்காக, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கை செல்ல உள்ளனர்.

இது குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே குறிப்பிடுகையில்,

இந்தியா எல்லா காலங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைத்து வருகிறது. எனவே, இந்தியாவுடனான எங்களது உறவு எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ஐ.நா., குழு அளித்துள்ள அறிக்கையை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதற்கு தக்க முறையில் பான் கி மூனிடம் எடுத்து சொல்வோம். இதனால், ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட வாக்குக் கணிப்பு .


தமிழகத்தில் அதிமுக முன்னிலை:

சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஊழல் விவகாரங்களால் திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப் பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120- 130 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102- 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஆட்சி மாற்றம்:

கேரளத்தில் ஆட்சி மாற்றம்: 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக்கூடும் சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா:

மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம்: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222-234 தொகுதிகளைக் கைப்பற்றி பெற்று அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அசாமில் இழுபறி:

அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அசாம் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸýக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அசாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும். இதனால், ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரஸýக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் 41- 47 இடங்களிலும், பாஜக 16- 18 இடங்களிலும், அசாம் கணபரிஷத் 13- 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.