Wednesday, May 11, 2011

இந்திய பெண்களுக்கு இங்கிலாந்தில் கன்னித்தன்மை பரிசோதனை - அதிர்ச்சித் தகவல்.


லண்டன், 1970- களில் திருமண விசாவில் இங்கிலாந்துக்கு வந்த இந்தியாவைச் சேர்ந்த பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆஸ்திரேலியாவின் ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட ஆராய்ச்சியாளர்களான மரிநெல்லா மார்மோ மற்றும் இவான் ஸ்மித் ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.

பிரிட்டனுக்கு திருமண விசாவில் வந்த பெண்களிடம் அவர்களின் கன்னித்தன்மை குறித்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1970-களின் பிற்பகுதியில் இந்த சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தாலும், எப்போது வரை இந்த சோதனை அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

ஹீத்ரு விமானநிலையத்தில் 2 விவகாரங்களில் மட்டும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதை பிரிட்டிஷ் அரசு முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தது.

ஒரு சம்பவம் மட்டும் அல்ல இதுபோன்று ஏராளமானவர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் என மார்மோ தெரிவித்தார்.

அந்த ஆவணங்கள் செல்லத்தக்கவைதான் என ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ் அரசு, எனினும் மார்மோவும், ஸ்மித்தும் கூறுவது போல நிறைய பேருக்கு இந்த சோதனைகள் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தது.

30 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அது முற்றிலும் தவறானது என இங்கிலாந்து பார்டர் ஏஜன்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

பெயரை வெளியிட விரும்பாத அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிரிட்டனின் கொள்கைகள் இப்போது பாதுகாப்பளிக்கின்றன என்றார்.

மார்மோவும், ஸ்மித்தும் தங்கள் ஆராய்ச்சியை 2008-ம் ஆண்டில் தொடங்கினர். அவர்களின் ஆய்வில் வெளியான தகவல்கள் கார்டியன் பத்திரிகையில் நேற்று முதலில் வெளியானது.

1976-79க்கு இடைப்பட்ட காலங்களில் தில்லியில் 73 பெண்களும், மும்பையில் 9 பெண்களும் பிரிட்டிஷ் தூதரகங்களில் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். மோசடி செய்து இங்கிலாந்தில் குடியேறுவதைத் தடுக்கவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: