Wednesday, August 10, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்உற்பத்தி தொடங்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்உற்பத்தி தொடங்கும்- வளாக இயக்குனர் தகவல்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்ததில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணி ரஷிய நாட்டு உதவியுடன் நடைபெற்று வருகிறது. முதல் அணு உலை செயல்படுவதற்காக இறுதிக் கட்டபணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலையில் வெப்ப நன்னீர் சோதனைஓட்டம் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இதுவரை நடந்த சோதனைகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளன. இந்த சோதனை குறித்த அறிக்கை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு விரை வில் அனுப்பப்படும். ஆணையத் திடமிருந்து அனுமதி கிடைத் ததும் 2மாதத்தில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்படும்.

பின்னர் பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு 3 மாதத்திற்குள் இறுதிக்கட்ட சோதனை நடத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் அணுஉலை மூலம் மின்உற்பத்தியை தொடங்கு வதற்கான அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. முதல் அணுஉலை செயல்படத்தொடங்கிய 7 அல்லது 8 மாதத்திற்குள் இரண்டாவது அணுஉலை மின்உற்பத்தியை தொடங்கும்.

இதே வளாகத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகள் தொடங்க போதிய இடவசதி உள்ளது. இந்த அணு உலைகளை தொடங்குவதை அரசு கொள்கைரீதியாக ஏற்றுக்கொண்டு உள்ளது. அதற்கு தேவையான விஞ்ஞானிகள், ஊழியர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தமாத இறுதியில் அணுஉலையை சுற்றி உள்ள கிராமமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட கலெக்டருடன் கலந்துபேசி அதற்கான தேதி அறிவிக்கப்படும். முதல் அணுஉலையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை நாங்கள் கூறஇயலாது.

எனினும் முதல் இரண்டு அணு உலைகள் செயல் படத்தொடங்கும் போது தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரமும், தென்மாநிலங்களுக்கு ஏனைய மின்சாரமும் பகிர்ந்து அளிக்கப்படலாம். அணு மின்நிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மின்னணு கருவிகள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையை முற்றுகையிட அமெரிக்கா முயற்சி போர் விமானங்கள் மூலம் உளவு.இலங்கையை முற்றுகையிட அமெரிக்கா உளவு பார்த்து வருவதாக இலங்கையின் 'தேசப்பற்றுள்ள தேசிய பாதுகாப்பு இயக்கம்' தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் இலங்கை வான் பகுதிக்குள் அதிரடியாகப் பறந்தன அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 10 போர் விமானங்கள்.

அமெரிக்க கடற்படையின் 7வது பிரிவைச் சேர்ந்த இந்த விமானங்கள் பிதுருதலகலா என்ற இடத்தின் மீது பறந்தன. இதுகுறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் நிமலசிறி கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. இது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் புகார் தரப்படும் என்றார்.

ஆனால் இந்த ஊடுருவலை அமெரிக்கா உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.

இந் நிலையில் இலங்கை அரசு தனது படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், யுத்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் மிகவும் தீவிரமாகவே காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை விஷயத்தில் அமெரிக்கா மிகவும் தீவிரமாகவே செயற்படுகிறது. அது மட்டுமன்றி அனுமதியின்றி ஏனைய நாடுகளில் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்துதல், சிறு நாடுகளை ஆக்கிரமித்தல் என்று பல்வேறு நடவடிக்கைகளிலும் அமெரிக்கா அண்மைக்காலமாக தீவிரமாக செயற்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியப் பயணத்தின்போதும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்திருந்தார். தற்போது ஆசிய பசிபிக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் 7வது சிறப்புக் கூட்டுப்படையின் 10 போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பில் ஊருவிச் சென்றுள்ளன. இந்த ஊருவல் முதல் தடவையாக நடந்ததாகக் கூறமுடியாது. ஏனெனில் தற்போது வெளிப்படுகின்ற தகவல்களைப் பார்த்தால் பல தடவை மிகவும் ரகசியமான முறையில் அமெரிக்க விமானங்கள் வேவுப்பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் உஷார் நிலையில் இருக்க வேண்டும். அமெரிக்காவினால் எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கை போர் குற்றம்-விசாரி்க்க அமெரிக்கா ஆதரவு:

இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில், இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை மேற்கொள்ளும் எந்த விசாரணையையும் அமெரிக்கா ஆதரிக்கும் என்றார்.

அமெரிக்காவுக்கான இந்தியா டுடே-ஹெட்லைன்ஸ் டுடே குழுமத்தின் நிருபர் தேஜிந்தர் சிங் இது தொடர்பாக டோனரிடம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் நடந்த இசை வாணவேடிக்கை போட்டியில் “ஸ்டாண்டர்டு” பயர் ஒர்க் முதலிடம்.

உலக அளவில் நடந்த இசை வாணவேடிக்கை போட்டியில் “ஸ்டாண்டர்டு” பயர் ஒர்க் முதலிடம்: சிவகாசி நிறுவன தொழிற்நுட்ப இயக்குனர் தகவல்

உலக அளவில் நடந்த இசை வாணவேடிக்கை போட்டியில் ஸ்டாண்டர்டு பயர் ஒர்க் முதலிடம் பெற்றதாக தொழிற்நுட்ப பிரிவு இயக்குனர் தெரிவித்தார்.

உலக அளவில் கண்டங்களுக்கு இடையேயான இசை வாணவேடிக்கை போட்டி 3 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய கண்டம் சார்பில் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. பின்னர் இசையுடன் வாணத்தில் வர்ணஜாலம் காட்டும் பல்வேறு டிசைன்களில் வாணவேடிக்கைக்கான போட்டி அங்கு நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் இத்தாலி, இந்தியா, ஐப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டது. போட்டிக்கு தேவையான வெடிபொருட்களை சீனாவில் உள்ள எங்களது நிறுவனத்தில் இருந்து எடுத்து சென்றிருந்தோம். இந்த இசை வாணவேடிக்கைக்கான பின்னணி இசையை இசையமைப்பாளர் பால்ஜேக்கப் செய்திருந்தார். போட்டி விதிப்படி இந்த இசை 12 நிமிடத்திற்கு கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த போட்டியில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதாவது இசையுடன் கூடிய வாண வேடிக்கை சரியாக 12 நிமிட நேரமாக இருக்க வேண்டும் கூடுதலான நேரத்திலோ, குறைவான நேரத்திலோ வெடிக்கக்கூடாது. விபத்துக்கள் ஏற்படக்கூடாது என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தன. விதிமுறையின்படி சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் நிறுவனம் சரியான படி வாணவேடிக்கை நடத்தி காட்டியது. அபாரமாக செயல்பட்டதை தொடர்ந்து இந்தியா சார்பில் நடத்தப்பட்ட எங்கள் நிறுவனத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.

இதுபோன்ற போட்டிகள் நடத்த மத்திய - மாநில அரசுகள் ஊக்கமளித்தால் தேசிய விழாக்களில் நடத்தி காட்ட தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு கருப்பைகளில் தனித்தனியாக குழந்தைகளை பெற்ற பெண்.


பீகார் மாநிலத்தில், பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரிங்கு தேவி, வயது 28. சமீபத்தில் சிசேரியன் முறையில் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருக்கு இயற்கையிலேயே இரு கருப்பைகள் உள்ளன. ஒவ்வொரு கருப்பையிலும் ஒரு சிசு வளர்ந்துள்ளது. இது மருத்துவ உலகில் 50 மில்லியன் பேருக்கு ஒருவர் என்ற வகையில் நிகழும் அதிசயமாகும்.

இந்த பிரசவத்தில் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஆபத்து, குறைப்பிரசவம், கருச்சிதைவு ஏற்படுதல் மற்றும் எடை குறைந்த குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஆகிய சிக்கல்கள் உள்ளன.

தற்போது குழந்தைகள் ஒவ்வொன்றும் முறையே 1.5 மற்றும் 2 கி.கிராம் எடையுடன் நலமாக உள்ளனர். தாயும் நல்ல நிலையில் உள்ளார். ரின்குவிற்கு இது முதல் பிரசவம் அல்ல. 4 வருடங்களுக்கு முன்பே சுக பிரசவத்தில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழல் ஒழிப்பை வீட்டில் இருந்தே தொடங்குங்கள் மாணவ - மாணவிகளுக்கு அப்துல் கலாம் யோசனை.

ஊழல் ஒழிப்பை வீட்டில் இருந்தே தொடங்குங்கள்; மாணவ-மாணவிகளுக்கு அப்துல் கலாம் யோசனை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி ஆகியவற்றில் முதல் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கான கல்லூரி அறிமுக கூட்டம் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் நேற்று மாலை நடந்தது.

இதில் முன்னாள் ஜனாதிபதியும், இக்கல்லூரியின் பழைய மாணவருமான அப்துல் கலாம் கலந்துகொண்டு மாணவ - மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

இந்த கல்லூரியில் 1954-57-ம் ஆண்டில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தேன். இறுதி ஆண்டு படிக்கும்போது எங்கள் பேராசிரியர் சீனிவாசன், ஏர்கிராப்ட் ஒன்றை டிசைனிங் செய்து தருமாறு ஒரு புராஜெக்டை கொடுத்தார். மிகவும் கஷ்டப்பட்டு அதை வெற்றிகரமாக வடிவமைத்தோம். அதை எங்கள் பேராசிரியர் பெரிதும் பாராட்டினார். ஆகாய உச்சிதான் நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

பறந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் அது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதை நமக்கு எப்போதும் வலியுறுத்திக் கொண்டே இருக்கும். கல்லூரியில் முதலாண்டு அடியெடுத்து வைத்துள்ள மாணவ - மாணவிகளாகிய நீங்கள் முதல் ஆண்டில் இருந்தே நன்றாக படிக்க தொடங்குங்கள். கடினமாக உழையுங்கள். விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். தோல்விகள் உங்களை தோற்கடிக்கக்கூடாது. தோல்வியை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்.

இதற்கு தேவையான சூழ்நிலையை அண்ணா பல்கலைக்கழகம் உங்களுக்கு நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்கும். கடந்த பல ஆண்டுகளாக மாணவ - மாணவிகளை சந்தித்து வருகிறேன். இந்தியா 2020-ம் ஆண்டு வளர்ந்த நாடாக உயரும் என்று என்று சொல்லி வருகிறேன். இன்னும் 9 ஆண்டுகள் உள்ளன.

2020-ம் ஆண்டு, கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைவெளி இல்லாத இந்தியாவாக, நதிநீர் இணைப்பு பெற்ற இந்தியாவாக, சமூக பாகுபாடு காரணமாக எந்த மாணவருக்கும் கல்வி மறுக்கப்படாத இந்தியாவாக, வறுமை இல்லாத இந்தியாவாக, நேர்மையான தலைவர்கள் உள்ள நாடு என்று ஒவ்வொருவரும் போற்றக்கூடிய இந்தியாவாக இருக்கும். விவசாயம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதி ஆகிய அனைத்து வசதிகளும் நம் நாட்டில் மேம்பட்டு இருக்கும். வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை உருவாக்கி கொள்ளுங்கள். அதை நோக்கி விடாமுயற்சியோடு வேர்வை சிந்தி மேலும் மேலும் கடினமாக உழையுங்கள்.

வெற்றி அடைவீர்கள். இவ்வாறு அப்துல் கலாம் கூறினார். ? இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதில் அளித்தார். அப்போது ஹரிபிரியா என்ற மாணவி, ``நம் நாட்டில் ஊழலை ஒழிக்க முடியுமா?'' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கலாம், ஊழல் ஒழிப்பு பணியை முதலில் வீட்டில் இருந்து தொடங்குங்கள். ஊழல் செய்யாதீர்கள் என்று உங்கள் தந்தையிடம் கூறுங்கள். ஆனால், எத்தனை பேர் அவ்வாறு தந்தையிடம் போய் தைரியமாக சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

இப்போதைய இளைஞர்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றவே விரும்புகிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒரு மாணவர் கேள்வி கேட்டார். அதற்கு அப்துல் கலாம், திரைகடலோடியும் திரவியம் தேடு என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால், அங்கு அறிவை வளர்த்துக்கொண்டு அந்த அறிவை நம் நாட்டு முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என்று 4 விதமான பள்ளிகளிலும் வேறு வேறு பாடத்திட்டங்கள் இருந்தன. ஆனால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று கருதி அனைவருக்கும் ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வி திட்டம் கடந்த அரசால் கொண்டுவரப்பட்டது.

ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமாக இல்லை என்று கூறி இத்திட்டத்தை நிறுத்தி வைக்க சட்டம் கொண்டு வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறுகையில், உடனடியாக சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். அவருடைய உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு குடோன்களில் இருந்த சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியது. கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் குடோன்களில் தயாராக உள்ளன. அவற்றில் இருந்து புத்தகங்கள் பள்ளிகளுக்கு இன்று (புதன்கிழமை) முழுமையாக விநியோகிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து இன்று வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்த சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு நேற்று மினி லாரிகளில் விநியோகிக்கப்பட்டன. நேற்று இரவு வரை இந்த விநியோகம் நடந்தது. புத்தகங்களை பெற்றுக்கொண்ட பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூறுகையில், இன்று வகுப்புகளில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு புத்தகங்களை கொடுத்துவிடுவோம் என்றனர்.