Wednesday, August 10, 2011

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என்று 4 விதமான பள்ளிகளிலும் வேறு வேறு பாடத்திட்டங்கள் இருந்தன. ஆனால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று கருதி அனைவருக்கும் ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வி திட்டம் கடந்த அரசால் கொண்டுவரப்பட்டது.

ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமாக இல்லை என்று கூறி இத்திட்டத்தை நிறுத்தி வைக்க சட்டம் கொண்டு வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறுகையில், உடனடியாக சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். அவருடைய உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு குடோன்களில் இருந்த சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியது. கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் குடோன்களில் தயாராக உள்ளன. அவற்றில் இருந்து புத்தகங்கள் பள்ளிகளுக்கு இன்று (புதன்கிழமை) முழுமையாக விநியோகிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து இன்று வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்த சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு நேற்று மினி லாரிகளில் விநியோகிக்கப்பட்டன. நேற்று இரவு வரை இந்த விநியோகம் நடந்தது. புத்தகங்களை பெற்றுக்கொண்ட பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூறுகையில், இன்று வகுப்புகளில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு புத்தகங்களை கொடுத்துவிடுவோம் என்றனர்.

No comments: