Monday, May 2, 2011

ஒசாமா பின்லேடன் உடலை கடலில் வீசியது அமெரிக்கா...


ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் பின்லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.

பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல், அமெரிக்க ராணுவம் கடலில் வீசியுள்ளதாக தெரிகிறது.

கடலில் எந்த இடத்தில் உடல் வீசப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

ஒசாமாவை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தது எப்படி?


ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிஐஏ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிஐஏவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி ஒசாமைவைக் கொல்ல கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா கையெழுத்து போட்டு அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்க வில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இந்த முழு ஆபரேசனையும் அமெரிக்காவிலிருந்து ஒருங்கிணைத்த சிஐஏ குழுவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் முழு அளவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

thatstamil.oneindia.in

நடிகர் கார்த்தியின் திருமண நிச்சயதார்த்த படங்கள்.

நடிகர் கார்த்திக்கு ஜூலை 3-ந்தேதி    கோவையில் திருமணம்;    ஈரோடு அருகே மணமகள்    வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான, நடிகர் கார்த்தி, விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி, ஜோதி மீனாட்சி ஆகியோரது மகள் ரஞ்சனியை திருமணம் செய்யவிருக்கிறார்.

வருகிற ஜூலை 3-ந்தேதி கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் இத் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கான நிச்சயதார்த்த விழா ஈரோடு, கிளாம்பாடி கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டில் நடைபெற்றது.

இதில் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது சகோதாரி பிருந்தா, பிருந்தாவின் கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா உள்பட உறவினர்கள் பங்கேற்றனர்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா எங்கே? என்று ரசிகர்கள் சூர்யாவை பார்த்து கேட்டதற்கு. அவர் சிரித்தவாறு அங்கிருந்து சென்று விட்டார்.

மணப்பெண் ரஞ்சனியின் வீட்டு முன்பாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

மிக எளிமையாக இந்து முறைப்படி நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இத் திருமண நிச்சயதார்த்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு...


Photos : Karthik Karthi - Anand Babu.

அமெரிக்கர்கள் உஷாராக இருக்குமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்.


பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டுள்ள, வசித்து வருகிற அமெரிக்க குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கைச் செய்தியில், பின்லேடன் கொலையைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

தற்போதைய சூழ்நிலை மிகவும் பதட்டமாக இருப்பதால், உலகெங்கும் வசிக்கும், சுற்றுலாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முடிந்தவரை வெளியில் சுற்றாமல் தங்களது வீடுகள், ஹோட்டல்களுக்குள்ளேயே அவர்கள் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மொத்தமாக கூடுவது போன்றவற்றை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல உலகெங்கும் உள்ள தனது தூதரகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தூதரக தொடர்புகள் உள்ள நாடுகளை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்கப் படையினருடன் நேரடியாக சண்டை போட்ட பின்லேடன் : கொண்டாட்டமும் - அமைதியும்.


அமெரிக்கப் படையினருடன் நேரடியாக சண்டை போட்ட பின்லேடன்.

இந்த மோதல் குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அது தன்னை சரமாரியாக தாக்கிய அமெரிக்கப் படையினருடன் துப்பாக்கி ஏந்தி பின்லேடனே நேரடியாக சண்டை போட்டார் என்பதுதான்.

பின்லேடன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நடமாடவே முடியாத நிலை. சர்க்கரை வியாதி அதிகரித்து விட்டது என்றெல்லாம் சில காலத்திற்கு முன்பு வரை செய்திகள் வந்து கொண்டிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் அமெரிக்கப் படையினர் பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கியபோது படு துணிச்சலாக துப்பாக்கி ஏந்தி நேரடியாக சண்டை போட்டுள்ளார் பின்லேடன். அப்போதுதான் அவர் துப்பாக்கியால் சல்லடை போல துளைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

பக்ராம் விமான தளத்தில் லேடன் உடல்:

கொல்லப்பட்ட பின்லேடன் உள்ளிட்டோரின் உடல்கள் பக்ராம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து அமெரிக்கா யோசித்து வருகிறது. விரைவில் பத்திரிக்கையாளர்களை அனுப்பி பின்லேடன் உடலைப் பார்வையிட அமெரிக்க ராணுவம் அனுமதிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, கொல்லப்பட்ட பின்லேடனின் முகம் மட்டும் புகைப்படமாக அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. அதில் முகம் சல்லடையாக துளைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.


அமெரிக்காவின் கொண்டாட்டமும் - பாகிஸ்தானின் அமைதியும்.

பின்லேடனின் மரணம் குறித்த செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தவுடன் அமெரிக்காவில் பெருத்த கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. ஆனால் அதற்கு நேர் மாறாக பாகிஸ்தானில் பெருத்த அமைதி நிலவுகிறது. குறிப்பாக அரசுத் தரப்பும், ஊடகங்களும் இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை.

பாகிஸ்தான் அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலோ, கருத்தோ வெளியாகவில்லை. பாகிஸ்தான் மீடியாக்களும் இந்த சம்பவம் குறித்து முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிடவில்லை.

பாகிஸ்தானின் புகழ் பெற்ற தி டான் செய்தித்தாளின் இணையம் செயல்படவே இல்லை. தொழில்நுட்பக் கோளாறு என்று அதற்கு காரணம் கூறியுள்ளது டான். அதேபோல தி நேஷன்.காம், தி டெய்லி டைம்ஸ் இணையதள்களும் கூட பின்லேடன் குறித்த செய்திகளை விரிவாகத் தரவில்லை.

பின்லேடன் குறித்த செய்தியை இவர்கள் நம்பவில்லையா அல்லது பாகிஸ்தானின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டதே என்ற தர்மசங்கடம் காரணமாக அமைதி காக்கிறார்களா என்பது புரியவில்லை.

பின்லேடன் தங்கிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்ததே ஐஎஸ்ஐதான்? - மனைவிகள், பிள்ளைகள், நண்பர்கள் கைது.


பின்லேடன் தங்கிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்ததே ஐஎஸ்ஐதான்?

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த கட்டடத்தை கட்டிக் கொடுத்து அவரை பத்திரமாக பாதுகாத்து வந்ததே பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ என்று ஒரு தகவல் கூறுகிறது.

பின்லேடன் பதுங்குமிடம் குறித்து பலப்பல தகவல்கள் வெளியாகின. ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் தங்கியிருக்கிறார் என்று முன்புத கவல்கள் கூறின. பின்னர் அவர் பாகிஸ்தானுக்குள் போய் விட்டார் என்றனர். கராச்சியில் இருக்கிறார், காபூலில் இருக்கிறார், வசிரிஸ்தானில் இருக்கிறார் என்று பல தகவல்கள்.

ஆனால் தற்போது பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர்தான் அவர் இத்தனை காலம் பாகிஸ்தானிலேயே, அதுவும் தலைநகருக்கு பக்கத்திலேயே படு பாதுகாப்புடன் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

பின்லேடன் தங்கியிருந்த இடத்தின் பெயர் பிலால் டவுன் ஆகும். இது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அப்போதாபாத் நகரில் உள்ளது.

இந்த இடத்திற்கு அருகில்தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி அகாடமி உள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் பிலால்டவுனில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்துள்ளார் பின்லேடன். இந்த கட்டடமே, பின் லேடன் தங்குவதற்காக அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டதாகும் என்கிறார்கள்.

இந்தக் கட்டடத்தில் பல அறைகள் உள்ளன. இங்குதான் தனது மனைவியர், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர், முக்கியத் தளபதிகளுடன் தங்கியிருந்தார் பின்லேடன்.

இந்த கட்டடம் 12 முதல் 16 அடி உயர சுற்றுச் சுவரால் பாதுகாப்புடன் விளங்குகிறது. இங்கு தொலைபேசி மற்றும் இன்டர்நெட் வசதி எதுவும் கிடையாது. இங்கிருந்து யாரும் வெளியேறுவது இல்லையாம். அதேபோல யாரும் இங்கே செல்லவும் மாட்டார்களாம்.

இந்தக் கட்டடத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டியுள்ளனர். பின்லேடனுக்காக இந்தக் கட்டத்தைக் கட்டிக் கொடுத்து பாதுகாத்து வந்தது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் என்று ஒரு கருத்து வெளியாகியுள்ளது.

ஆனால் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஹமீத் குல் இதை மறுத்துள்ளார். பின்லேடன் இங்கு நிரந்தரமாக தங்கியிருக்க வாய்ப்பில்லை. சிகிச்சைக்காக அவர் சமீபத்தில் வந்திருக்கலாம். வந்த இடத்தில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

மற்றபடி ஐஎஸ்ஐயோ அல்லது பாகிஸ்தான் அரசோ பின்லேடனைக் காக்கவில்லை, காக்க முயற்சித்ததும் இல்லை என்றார்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகில் பின்லேடன் தங்கியிருந்தபோதும் அது ராணுவத்திற்கோ அல்லது உளவுப் பிரிவுக்கோ தெரியாது என்று பாகிஸ்தான் தரப்பில் கூறுவது நம்பும்படியாகவே இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.


ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள், 4 நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானில் கைது.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் மற்றும் 4 நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் வைத்து அவர்களை பாகிஸ்தானியப் படைகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம். - அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ.


ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம்.

ஒசாமா பாகிஸ்தானில் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில் அவர் இஸ்லாமாபாத்தில் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானின் சாயம் வெளுத்துவிட்டது.

செம்டம்பர் 11 தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நியாயம் கிடைத்துள்ளது. தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தெரிவித்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அமெரிக்கர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஒபாமாவின் இந்த இனிய அறிவிப்பைக் கேட்ட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றன.

ஒசாமாவின் மரணம் ஒபாமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. அதே சமயம் பாகிஸ்தானின் முகத்திரை கிழிந்துள்ளது. இத்தனை நாட்களாக ஒசாமா பாகிஸ்தானில் இல்லை, இருப்பது தெரிய வந்தால் நாங்களே உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அந்நாடு கூறி வந்தது. தற்போது அமெரிக்கப்படை ஒசாமாவை பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 150 கிமீ தொலைவில் உள்ள அபோத்தாபாதில் வைத்து கொன்றுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகில்தான் பின்லேடன் தங்கியிருந்த கட்டடம் உள்ளது. இப்படி தங்களுக்குப் பக்கத்திலேயே பின்லேடனை வைத்துக் கொண்டு அவர் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் நாடகமாடி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பாகிஸ்தானில் பின்லேடன் இல்லை, அவர் இறந்து போய் விட்டார் என்று பாகிஸ்தான் இத்தனை காலம் கூறி வந்ததும் பொய்யே என்பதும் நிரூபணமாகியுள்ளது.

அதை விட முக்கியமாக முஷாரப் அதிபராக இருந்தபோது பின்லேடன் இறந்து போய் விட்டார் என்று திட்டவட்டமாக கூறி வந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இத்தனை காலமாக பின்லேடனை கட்டிக் காத்து வந்தது பாகிஸ்தான் அரசும், அதன் ஐ.எஸ்.ஐயும்தான் என்று திட்டவட்டமாக நம்பப்படுகிறது.


பின்லேடனை வேட்டையாட அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ

பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை வேட்டையாட அமெரிக்க சிறப்புப் படையினருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சரியாக 2 வாரத்திற்கு முன்புதான் விக்கிலீக்ஸ் ஒரு தகவலை வெளியிட்டது. அமெரிக்காவின் குவான்டானாமோ முகத்தை அம்பலப்படுத்திய அந்த தகவலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ குறித்த அமெரிக்காவின் கருத்து வெளிப்பட்டது.

தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐயை அமெரிக்கா கருதி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பாகிஸ்தானுக்கும், ஐஎஸ்ஐக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. உலக அரங்கில் ஐஎஸ்ஐயின் பெயர் மகா மோசமாக கெட்டுப் போனது.

இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தகவல் வெளியான அதே காலகட்டத்தில்தான் பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து வேட்டையாடி வீழ்த்தியுள்ளது அமெரிக்கப் படை.

இந்த இரு சம்பவங்களுக்கும் நேரடியாக தொடர்பு ஏதும் இல்லை என்ற போதிலும், பின்லேடனை வேட்டையாட பாகிஸ்தான் அரசும், ஐஎஸ்ஐயும் உதவியாக இருந்தன என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரையும், அமெரிக்காவின் கிடுக்கிப் பிடி அதிகரிக்க ஆரம்பித்துள்ளதையும், தன்னை அது எப்படி கருதுகிறது என்பதை அறிந்து கொண்டதைத் தொடர்ந்தும், பின்லேடனை காட்டிக் கொடுத்து தான் தப்பிக்க ஐஎஸ்ஐ நினைத்ததாக கூறப்படுகிறது.

எனவேதான் இதுவரை தங்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே இருந்து வந்த பின்லேடனை, வீழ்த்த அமெரிக்காவுக்கு உதவியுள்ளது ஐஎஸ்ஐ.

அமெரிக்காவின் கோரப் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளும் வகையிலேயே பின்லேடனை பகடைக் காயாக வைத்து பாகிஸ்தானும், ஐஎஸ்ஐயும் தப்பித்துக் கொண்டதாக கருதப்படுகிறது.

பின்லேடன் வேட்டை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அரசின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் பின்லேடனை வேட்டையாட முடிந்தது. பாகிஸ்தான் முழுமையாக எங்களுக்கு உதவியதைத் தொடர்ந்தே லேடனை வீழ்த்தினோம் என்றார்.

ஒசாமா பின்லேடன் ? - ஒரு பார்வை.


பெரும் கோடீஸ்வரக் குடும்பம் ஒன்றில், சவூதி அரேபியாவில் மகனாகப் பிறந்தார் ஒசாமா பின்லேடன். அவரது தந்தைக்கு மொத்தம் 52 குழந்தைகள். அதில் 17வது குழந்தைதான், அமெரிக்காவை நடுநடுங்க வைத்த பின்லேடன்.

கடந்த 1988-ம் ஆண்டு அவர் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார் ஒசாமா.

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் உலகத்தையே உலுக்கினார். அன்று முதல் அமெரிக்கர்கள் உலகின் மிக மோசமான தீவிரவாதியாக பார்க்கத் துவங்கினர். அவர் அமெரிக்காவின் எதிரிஆனார். அனைத்து செய்தித்தாள்களிலும், வீடியோக்களிலும் ஒசாமா பின் லேடனின் வான்டட் போஸ்டர்ஸ் தான்.

இரட்டைத் தாக்குதல்கள் நடந்த 6-வது நாள் ஒரு நிருபர் அதிபர் புஷ்ஷிடம் நீங்கள் ஒசாமா இறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு புஷ் எனக்கு அவர் வேண்டும், நீதி வேண்டும் என்றார்.

ஒசாமாவைக் கொல்ல அமெரிக்கப் படைகளுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இறுதியாக பாகிஸ்தானில் வைத்து லேடன் கொல்லப்பட்டார். பின் லேடனும், அவரது கூட்டாளிகளும் இத்தனை நாட்களாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள டோரா-போரா மலையில் பதுங்கியிருந்தனர். அமெரிக்கப் படைகள் அந்த மலையில் குண்டு மழை பொழிந்தும் லேடன் தப்பித்து விட்டார். கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பின் லேடன் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்து புதிய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இஸ்லாமிய உலகத்தில் மாபெரும் ஹீரோவாக பார்க்கப்பட்ட போதிலும், இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின் லேடன் சம்பாதிக்கத் தவறவில்லை. உலக தீவிரவாதத்தின் வட நட்சத்திரம் என்று அவரை அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்தது. ஆங்காங்கே இருந்த தீவிவாத அமைப்புகளை எல்லாம் அல் கொய்தாவுடன் இணைத்தார் ஒசாமா. எகிப்து-செசன்யா, ஏமன்-பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத அமைப்புகளை அல் கொய்தா அமைப்பின் கீழ் கொண்டு வந்தார்.

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களையும், அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டவர்களையும் பாதுகாக்க பின்லேடன் பணம் கொடுத்தார். அல் கொய்தா மூலம் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பரப்ப எண்ணினார்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சில ஆண்டுகள் அல் கொய்தா மற்றும் அதன் தலைவர் பின் லேடனின் புகழ் உலகமெல்லாம் காட்டுத் தீ போன்று பரவியது. சில அமைப்புகள் தங்களை அல் கொய்தா என்று கூறிக் கொண்டு ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைகளை தாக்கியது, பாலியில் உள்ள சுற்றுலாத் தலங்களை குண்டு வைத்து தகர்த்தது, ஸ்பெயினில் பயணிகள் ரயில்களுக்கு குண்டு வைத்தது.

பின் லேடனின் உண்மையான அதிகாரம் எவ்வளவு என்றே தெரியவில்லை. அல் கொய்தாவில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை நாடுகளில் அது ஊடுருவி யிருக்கிறது, பின் லேடன் கூறியதுபோல அவர்களிடம் ரசாயண, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை.

லேடன் புது முறையில் போர் நடத்தினார். அவர் பேக்ஸ் மூலம் பத்வா அனுப்பினார். அவரிடம் அமெரிக்காவை விட அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் இருந்தது என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரியே தெரிவித்தார்.

கோடீஸ்வரருக்கு மகனாக பிறந்த அவர் ராஜ வாழ்க்கை வாழாமல் அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க அழிப்பு என்ற கொள்கையுடன் தீவிரவாத களத்தில் குதித்தார். அவர் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுவதாக தெரிவித்தாலும், அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிப்பதன் மூலம் அவர் மார்க்கத்திற்கு எதிராக செயல்படுவதாக சில அறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் அல் கொய்தாவின் தாக்குதல்களில் இஸ்லாமியர்களும் பெருமளவில் பலியாகியுள்ளனர். எனவே இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின்லேடன் சம்பாதித்தார்.

இஸ்லாம் எங்கு, எதற்காக புனிதப் போர் துவங்கலாம் என்று வரையறை வகுத்துள்ளது. ஆனால் அதை லேடன் கண்டுகொள்ளவில்லை. ஒசாமாவின் முக்கிய குறியாக அமெரிக்கா இருந்து வந்தது.

லேடன் கடந்த 1997-ம் ஆண்டு சிஎன்என்-க்கு கொடுத்த பேட்டின்போது கூறுகையில்,

அமெரிக்கா நம் நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள நினைக்கிறது, நமது வளங்களை கொள்ளையடிக்க நினைக்கிறது, அதன் ஏஜெண்டுகள் தான் நம்மை ஆள வேண்டும் என்று திட்டமிடுகிறது. இத்தனைக்கும் நம்மை சம்மதிக்க வைக்கப் பார்க்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், உடனே நம்மை தீவிரவாதிகள் என்று கூறுகிறது.

பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேல் குடியிருப்பு பகுதியில் கல் எறிந்தால் அவர்களை அமெரிக்கா தீவிரவாதிகள் என்கிறது. லெபனானில் உள்ள ஐ.நா கட்டிடத்தில் குழந்தைகளும், பெண்களும் இருக்கையில் இஸ்ரேல் அதை குண்டு வைத்து தகர்த்தால் அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே சமயம் உரிமைக்காக குரல் கொடுக்கும் எந்த முஸ்லீமிற்கும் கண்டனம் தெரிவிக்கிறது. எங்கு பார்த்தாலும் அமெரிக்கா தான் தீவரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக இருக்கிறது என்றார்.

எப்படியோ, உலகையே ஆட்டிப் படைத்த மிகப் பெரிய நபராக மாறிப் போய் விட்டார் பின்லேடன். அவரது சகாப்தமும் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

40 நிமிடங்களில் பின்லேடனை வீழ்த்தியது அமெரிக்கா - அல்கொய்தா அணு குண்டு வீசுமா?


கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவை நடு நடுங்க வைத்து வந்த அல் கொய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனை வெறும் 40 நிமிடங்களில் வேட்டையாடி வீழ்த்தியுள்ளது அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு.

உலகத் தீவிரவாதத்தின் மிகப் பிரபலமான முகமாக கடந்த 10 வருடங்களாக உலக நாடுகளைக் குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளை பயமுறுத்தி வந்தவர் பின்லேடன். இவரைத் தேடி ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து வருடமாக வேட்டையாடி வந்தது அமெரிக்கா.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் கண்ணாமூச்சி ஆடி வந்த பின்லேடன் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவர் இறந்து விட்டதாக கூட தகவல்கள் கூறின.

நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் லேடன் தலைமறைவாகி விட்டார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 30 வீடியோ மற்றும் ஆடியோ செய்திகள் அவரிடமிருந்து வந்தன. அவற்றில் பல உண்மையானவையா என்ற சந்தேகமும் இருந்து வந்தது. இருப்பினும் தற்போது பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இதுவரை வெளியான அனைத்துமே பின்லேடன் அல்லது அவரது அங்கீகாரத்துடன் வந்தவைதான் என்பது உறுதியாகியுள்ளது.

பின்லேடன் பதுங்கியிருந்த இடம் குறித்து உறுதியான தகவல் அமெரிக்காவுக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து அவரை இந்த முறை விட்டு விடக் கூடாது என்று அமெரிக்கா சுறுசுறுப்புடன் களம் இறங்கியது.

மிகவும் சிறந்த வீரர்கள் அடங்கிய படைக் குழுவை தயார் செய்த அமெரிக்க ராணுவம், அந்தப் படையை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பியது. மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தக் கூடிய திறமை படைத்த இந்த சிறப்புப் படையினர் பின்லேடன் தங்கியிருந்த கட்டடத்தை முற்றுகையிட்டு அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதை சற்றும் எதிர்பாராத அல் கொய்தா தீவிரவாதிகள் பின்லேடனைக் காப்பதற்காக கடும் சண்டையில் குதித்தனர். ஆனால் அமெரிக்கப் படைக் குழுவின் அதி நவீன தாக்குதலுக்கு முன்பு அவர்களால் நிற்க முடியவில்லை.

இந்த தாக்குதல் 40 நிமிடங்களில் முடிந்து விட்டது. பின்லேடனுடன் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. அவரது மகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.


அல்கொய்தா அணு குண்டு வீசுமா?

அல்கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது உயிருடன் பிடிபட்டாலோ ஐரோப்பிய நாடுகள் மீது அணுகுண்டு வீசுவோம் என்று அல் கொய்தா ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் சொன்னபடி அவர்கள் செய்வார்களா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒரு விடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் மூலம் வெளியான அமெரிக்க தூதரக கடிதப் பரிமாற்றத்தில் தெரியவந்தது.

அதில் அந்த அல்கொய்தா தலைவர் கூறுகையில், பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியாது. ஒரு வேளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ, அணு குண்டு வீசி தாக்குதல் நடத்துவோம். இதற்காக ஒரு அணுகுண்டை ஐரோபப்ிய நாடு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

தற்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால், அல்கொய்தா அடுத்து பயங்கர தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளை குறி வைத்து அது தாக்குதலில் இறங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் ஏற்கனவே எச்சரித்தபடி அது அணுகுண்டு வீச்சில் இறங்குமா என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அணுகுண்டு என்பது ஏதோ பொறி உருண்டை போல சாதாரணமாக பாதுகாத்து வைத்திருக்க முடியாத ஒன்று என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அல்கொய்தா ஆதரவு நாடு ஏதாவது அவர்களுக்கு இதுதொடர்பாக உதவினால் நிலைமை விபரீதமாகக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

பின்லேடனை கொன்ற சிஐஏ - சில குறிப்புகள்.


அல்கொய்தா தீவரவாதிகளின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை சிஐஏ அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

சிஐஏ பற்றிய சில குறிப்புகள்:

மத்திய புலனாய்வு நிறுவனம் (சிஐஏ ) என்பது மூத்த அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்கு தேசிய பாதுகாப்புப் புலனாய்வை வழங்குவதற்காக செயல்பட்டு வரும் அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை புலனாய்வு நிறுவனமாகும். சிஐஏ அமெரிக்க அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இது இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க இராணுவப் பிரிவுகளுக்கு இடையேயான நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட வியூக சேவைகள் அலுவலகத்தின் (ஓஎஸ்எஸ்) ஒரு பிரிவாகும்.

1947 ஆம் ஆண்டு, தேசிய பாதுகாப்புச் சட்டம் சிஐஏவை நிறுவியதுடன், உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ “காவல் துறை அல்லது சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது” என்று சிஐஏவிற்கு உத்தரவிட்டது.

“நாசவேலை, நாசவேலைக்கு எதிராக ஈடுபடுவது, தகர்ப்பு மற்றும் பின்வாங்கும் நடவடிக்கைகள்...சூழ்ச்சி மற்றும் தடை செய்யப்பட்ட இரகசிய நடவடிக்கைகளுக்கு உதவுவது, கொரில்லா மற்றும் அகதிகள் விடுவிப்பு இயக்கங்கள்,

சுதந்திர உலகின் அச்சுறுத்தப்பட்ட நாடுகளில் காணப்படும் பொதுவுடமைக் கொள்கைக்கு எதிராகப் பிரிவினையை ஏற்படுத்துவது” போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அதற்கு அடுத்த வருடம் சிஐஏவிற்கு மேலும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஆட்சி முறைகள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனித்தன்மைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை சேகரிப்பது, மற்றும் பொதுவுடமை கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது ஆகியவை சிஐஏவின் முதன்மைப் பணிகளாகும். அந்த நிறுவனம் இரகசிய நடவடிக்கைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதுடன், தனது சிறப்பான செயல்பாட்டு ஒழுங்குமுறையின் காரணமாக வெளிநாட்டு அரசாங்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறது.

2004 ஆம் ஆண்டு, சிஐஏ மற்றும் அதன் பொறுப்புகள் குறிப்பிடும்படியாக மாற்றியமைக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்பாக, சிஐஏ அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய புலனாய்வு அமைப்பாக இருந்தது; அது தனது சொந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து கண்காணித்து வந்ததுடன், அமெரிக்கப் புலனாய்வு சமூகத்தின் (ஐசி) மொத்த நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தது.

புலனாய்வு சீரமைப்பு மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் 2004 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு இயக்குனரக (டிஎன்ஐ) அலுவலகத்தைத் தோற்றுவித்தது. அந்த அலுவலகம் அரசாங்க மற்றும் ஐசி இன் பெருமளவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றது. டிஎன்ஐ ஐசியை நிர்வகித்து வருவதுடன், புலனாய்வு நடவடிக்கைகளையும் நிர்வகித்து வருகிறது.

16 ஐசி நிறுவனங்களின் கருத்துக்களை ஒன்றிணைக்கும் மதிப்பீடுகளை உருவாக்குவது, மற்றும் அமெரிக்க அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கான ஆவணங்களை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் டிஎன்ஐக்கு மாற்றப்பட்டன.

இன்று சிஐஏ மற்ற நாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் பொதுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது; வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்கள் உடனான உறவுமுறையைப் பார்க்கவும். பொட்டாமிக் ஆற்றைச் சுற்றியுள்ள வாஷிங்டன் டிசிக்கு சில மைல்கள் மேற்கே உள்ள ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டி, விர்ஜினியாவின் இணைத்துக் கொள்ளப்பட்டாத பகுதியில் இருக்கும் மெக்லினில் உள்ள லாங்லேயில் சிஐஏவின் தலைமையகம் அமைந்திருக்கிறது.

குறிப்பிட்ட இடங்களில் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சிஐஏவும் மற்ற அரசு நிறுவனங்களைப் (ஓஜிஏ ) போன்று, அரசாங்கம் மற்றும் இராணுவத்தினால் சிறப்பான முறையில் குறிப்பிடப்படுகிறது.

பின்லேடன் மரணம் : பாகிஸ்தான் உறுதி - அமெரிக்கர்கள் மகிழ்ச்சி.


பாகிஸ்தான் உறுதி

அல்கொய்தா தீவரவாதிகளின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

இதை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி அளித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 150 கி.மீ., தூரத்தில் இருக்கும் அட்டோபாபாத்தில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் ஒசாமாவின் மறைவை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,யும் உறுதி செய்துள்ளது.


அமெரிக்கர்கள் மகிழ்ச்சி

அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவுப்படை அமெரிக்க உளவுத்துறை சிஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதால் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் மரணம் அடைந்தான்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அமெரிக்கர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.

வெள்ளை மாளிகை முன்பு திரண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி பரிமாற்றம் செய்துகொண்டனர்.


பாகிஸ்தானில் அதிர்ச்சி:


உலகையே குலுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருப்பதாக பலமுறை அமெரிக்கா சொல்லி வந்தது. இதை பாகிஸ்தான் அரசுத் தரப்பும், ராணுவத் தரப்பும் தொடர்ந்து மறுத்து வந்தன.

ஆனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேடன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழக தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை ப. சிதம்பரம்.


மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார். சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரசார் பக்குவமாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றார் சிதம்பரம். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் பல புகார்களைத் தெரிவித்தனர்.

மானாமதுரை தொகுதியில் திமுகவினர் தங்களை அரவணைத்துச் செயல்பட வில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஒசாமா பின்லேடன் மரணம் - அமெரிக்கா.


ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப் படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான்.

அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாபா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான்.

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள்.

அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒபாமா கூறி வந்தான்.

கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்க இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர்.

ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்று ஒசாமா அமெரிக்க படையின் ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை ஒசாமா பலி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிறர் மீது சேறு வாரி இறைப்பதில் ஜெ. கை தேர்ந்தவர் - கருணாநிதி.


எந்த பிரச்சினையை பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதைப்போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப்போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப்போலவும் கற்பனை செய்து கொண்டு; பிறர் மீது சேறு வாரி இறைப்பத்தில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதை தமிழக மக்கள் நன்கறிவர். ஆனால் இதையெல்லாம் தாண்டி 2ஜி பிரச்சினையிலிருந்து திமுக வெற்றிகரமாக வெளி வரும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: 2ஜி அலைக்கற்றை பிரச்சினை சம்பந்தமாக கழகத்தின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஜெயலலிதா மனம் போன போக்கில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?.

பதில்: எந்த பிரச்சினையை பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதைப்போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப்போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப்போலவும் கற்பனை செய்து கொண்டு; பிறர் மீது சேறு வாரி இறைப்பத்தில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதை தமிழக மக்கள் நன்கறிவர்.

27-4-2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைப்பற்றி, கடைந்தெடுத்த தனது தீய எண்ணத்தின் வெளிப்பாடாக அறிக்கை ஒன்றை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்-``பூதத்தை பூனைக்குட்டி விழுங்கிவிட்டதாக கூறுவதுபோல, அனுமானமாக பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமை கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்'' என்றும்; ``தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஓர் அரசியல் பிரச்சினையாக்கி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையை பெரிதுபடுத்தி, மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன'' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை திரித்தும், திசை திருப்பும் வகையிலும் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எவ்வளவு என்பதை அறுதியிட்டு உறுதியாக இதுவரை யாராலும் அளவிட்டுக்கூற இயலவில்லை. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று தனது அறிக்கையிலே சொன்ன தலைமைக் கணக்காயர், பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரானபோது, ஆதாரம் ஏதுமின்றி அனுமானத்தின் அடிப்படையிலேதான் இந்த இழப்பைச் சொல்லியிருப்பதாக உறுதிப் படுத்தினார்; வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்று கணக்கிட்டுப் பார்த்ததாகவும், அதிலே ஒரு கோணத்தில், வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது என்றும் கூறியிருக்கிறார்.

மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்த பா.ஜ.க.வை சேர்ந்த அருண் ஷோரி வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லியிருக்கிறார். புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ., 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு என்று குறிப்பிட்டிருக்கிறது.

பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பா.ஜ.க.வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியோ ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு வரும் தங்கள் அறிவுக்கும், கற்பனைக்கும் ஏற்ப இழப்பின் அளவை சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி ``கருத்தியலான'' ஒன்றை வைத்துக் கொண்டு, ஊதி ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில்- கழகத்தின் மீது தூசி விழுந்தாலும், அதைத்தூணாக்கும் நடவடிக்கையில்-இன்றைக்கு ஜெயலலிதாவைப் போலவே ஒருசில அரசியல்வாதிகளும், நாளேடுகளும், ஊடகங்களும் எத்தனிக்கின்றன என்பதற்கு நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை.

ஒருசில நாளேடுகளையும், ஊடகங்களையும் தொடர்ந்து படித்தாலும், பார்த்தாலும், இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம். அவர்களது நோக்கமெல்லாம் எப்படியாவது இந்த பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தி, அழித்துவிட வேண்டும் என்பதுதான்.

நாளேடுகள் எப்படிப்பட்ட எல்லை வரைக்கும் சென்றுவிட்டன என்பதை உணர்த்திட, இன்றைய நாளேடு ஒன்றில் இருந்து உதாரணம் ஒன்றை காட்டட்டுமா?. இன்றைய ``தி நிï இன்டியன் எக்ஸ்பிரஸ்'' ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், ``பெரியதொரு குடும்பம் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்வதைப்போன்று கோபாலபுரம் கோட்டை தோற்றமளிக்கிறது'' என்று எழுதியிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் எந்த அளவுக்கு கீழ்த்தரமானது, இழிவானது, விபரீதமானது என்பதை நான் விளக்கிட தேவையில்லை. இப்படியெல்லாம் நாளேடுகளும், ஊடகங்களும் வேலிகளை தாண்டும்போது, அரசியல் சதுரங்கம்-ஆதிக்க வட்டாரம் என்று விமர்சிப்பதில் என்ன குறை சொல்ல முடியும்?. மனசாட்சியை தொட்டுப்பார்த்தால், அப்படிப்பட்டவர்களது உள்நோக்கமும், நச்சு எண்ணமும் நன்றாக புரியுமே.

கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். ``சன் டி.வி.''யில் என் மனைவி தயாளு அம்மாள் பெற்றிருந்த 20 சதவீத உரிமையை முழுவதுமாக விட்டு கொடுத்ததன் மூலம் 100 கோடி ரூபாய் கிடைத்தது என்ற விவரங்களை எல்லாம் 2008-ம் ஆண்டிலேயே நான் வெளியிட்டிருந்தேன்; அதை என் குடும்பத்தாருக்கு பிரித்துக்கொடுத்ததையும் விவரமாக குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறிஞராக கற்பனை செய்து கொண்டு, நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதால், அவைகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1-7-1991 அன்று அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு, 30-4-1996-ல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய். ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கு, 1997-ம் ஆண்டில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதைப்போலவே, பிறந்தநாள் நன்கொடையாக வந்த 2 லட்சம் டாலர்களை, தனது சொந்த கணக்கில் வரவு வைத்துக்கொண்டதால், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு, 1997-ம் ஆண்டில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் ஜெயலலிதா ஆஜராகாமல், ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையான காரணங்களின் அடிப்படையில் வாய்தாவுக்கு மேல் வாய்தா பெற்று, வழக்குகள் முடிவு பெற்று தீர்ப்புகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 14 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார்.

வழக்குகளை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்துக்காட்டுவேன் என்று அடிக்கடி சண்டமாருதம் செய்யும் ஜெயலலிதா, இந்த வழக்குகளை தொடர்ந்து 14 ஆண்டுகளாக இழுத்தடித்து கொண்டிருப்பதேன்? என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிறைவுப்பகுதி முக்கியமானது. ``இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக்குழு தீர்மானித்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக்கிறது'' என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. கழகம், ஜெயலலிதாவைப்போல் அல்லாது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, இந்த வழக்கு வளையத்தில் இருந்தும் நிச்சயமாக வெளியே வரும்.

கேள்வி: தமிழ்நாட்டில் மின்வெட்டை பற்றி தொடர்ந்து ஏடுகள் எழுதுகின்றனவே?.

பதில்: மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மாத்திரம் நிலவக்கூடிய ஒன்றல்ல. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதே நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது. கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை அதிகச் செலவானாலும் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சி செய்தாலும்கூட, அந்த முயற்சியில் முழு அளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணம் வேறு மாநிலங்களிலும் உபரி மின்சாரம் இல்லை என்பதுதான்.

நேற்று முன்தினம்கூட நாளேடுகளில் செய்தி ஒன்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் நிர்வாகம் நடைபெற்று வருவதாக சொல்லப்படும் பீகார் மாநிலத்தில்கூட, மின்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் பனிரெண்டுக்கும் மேலான நகரங்களில் மின்தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து குழப்பமான நிலைமை ஏற்பட்டு வருகிறது. ``பல நாட்களாக மின்சார விநியோகமே இல்லை; எங்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என்று பொதுமக்கள் கூக்குரல் எழுப்பும் அளவுக்கு பீகாரில் மின்தட்டுப்பாடு.

தமிழகத்தை பொறுத்தவரை இனி வருங்காலத்தில் மின்சார நிலைமை நிச்சயமாக சீராகும். தமிழகத்தில், 2011-2012-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 224 மெகாவாட்டும், 2012-2013-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 517 மெகாவாட்டும், 2013-2014-ம் ஆண்டில் 16 ஆயிரத்து 927 மெகாவாட்டும் மின் தேவை இருக்குமென மத்திய மின்துறை ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இப்படி வளரும் மின் தேவையை கருத்திலே கொண்டு, மின்உற்பத்தி திறனை கூட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் இன்றைய அரசு உறுதியளித்துள்ளது.

கேள்வி: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறாரே?.

பதில்: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் சம்பந்தமாக 2010-ம் ஆண்டிலேயே என்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறேன். 25-1-2010 அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் `பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தலைவர் ஆர்.செல்வம், நிர்வாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் நடிகை ரோகிணி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு தலைவர் ஷீலு, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் சங்கீதா, ராம் ஆகியோர் சந்தித்து, மரபணு மாற்று கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.

அவர்களின் மனுவினை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் கலைஞர் அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், வேளாண்மைத் துறை அமைச்சர் இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கமாக கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியதுடன்-எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரையில் இதனை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஊழலை ஒழிக்க சபதம் : மெரீனாவில் திரண்ட இளைஞர் பட்டாளம்.

அன்னா ஹசாரேக்கு ஆதரவாக மெரீனாவில் திரண்ட இளைஞர் பட்டாளம்: ஊழலை ஒழிக்க சபதம்

ஊழல்... ஊழல்... எங்கும் ஊழல்... எதிலும் ஊழல்... இதை கேட்டு கேட்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.

தொற்றுநோய் போல் நம் நாட்டில் புரையோடிவிட்ட ஊழல் வியாதியை முற்றிலும் ஒழிக்க முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்பட எல்லா தரப்பினரையும் ஊழல் பேய் பிடித்து ஆட்டுகிறது. இந்த மாய பிடியில் இருந்து அவர்களை மீட்டு நாட்டை காப்பாற்றவேண்டும் என்று பலர் புலம்பி வந்தனர். ஆனால் அதற்கு மீண்டும் ஒரு காந்திதான் பிறக்க வேண்டும் என்று எள்ளி நகையாடியவர்கள் உண்டு.

இதோ மீண்டும் ஒரு காந்தி வந்து விட்டார். ஊழலை ஒழிக்கும் விடிவெள்ளியாக அன்னா ஹசாரே வடிவில்... குல்லாவும் கதர் சட்டையும் அணிந்து சுத்தமான காந்தியவாதி என்ற அக்மார்க் அடையாளத்துடன் தள்ளாத வயதிலும் ஊழலை ஒழிக்க ஹசாரே தொடுத்துள்ள தர்மயுத்தம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நெஞ்சுரம் மிக்க ராணுவ வீரராக இருந்த ஹசாரே முதலில் தனது சொந்த கிராமத்தை தலைநிமிர வைத்தார். இப்போது ஊழலுக்கு எதிராக அவர் எழுப்பிய கர்ஜனை நாட்டையே அதிர வைத்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் முதல் கடை கோடி பாமரன் வரை அத்தனை பேரும் இந்த கலியுக காந்தியின் கரத்தை வலுப்படுத்த தயாராகி விட்டார்கள். ஊழலை ஒழிக்க முடியாது என்று சோர்ந்து போனவர்கள் மத்தியில் லேசான நம்பிக்கை துளிர்த்துள்ளது.

அன்னா ஹசாரே என்பது ஊழலுக்கு எதிரான இயக்கமாக நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கானவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து அகிம்சை புரட்சியை அசுர வேகத்தில் தொடங்கி விட்டார்கள்.

சென்னையில் இன்று அன்னா ஹசாரே கரத்தை வலுப்படுத்த மனித சங்கலியாக கை கோர்ப்போம் என்று அறிவித்து இருந்தனர். காலை 6 மணிக்கு மெரீனா கடற்கரைக்கு திரண்டு வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களே ஆச்சரியம் அடைந்தனர்.

ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வத்துடன் வந்தது அவர்கள் மனதில் இருந்த ஆதங்கத்தை வெளிக்காட்டியது. காந்தி சிலை முன்பு தொடங்கிய மனித சங்கிலி கண்ணகி சிலையையும் தாண்டி நீண்டு சென்றது. சுமார் 6 ஆயிரம் பேர் கை கோர்த்து நின்றனர்.

தேசிய கொடி பேட்ஜீகளை அணிந்தபடி லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அன்னா ஹசாரேவுக்கு துணை நிற்போம் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் பிடித்து இருந்தனர்.

88 வயது சுதந்திரப் போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதியும் மனித சங்கலியில் இணைந்து நின்றார். உள்ளத்தில் கொந்தளித்த ஆதங்கத்தில் உணர்ச்சி பிழம்பாய் ஊழலுக்கு எதிரான கோஷங்களை முழங்கினார்கள்.

இதில் கலந்து கொண்ட இளைஞர்களிடம் கேட்டபோது, ஊழலை ஒரேநாளில் ஒழித்து விட முடியாது. நாம் நினைத்தால் விரட்ட முடியும். ஊழல் செய்பவர்களுக்கு பயத்தை கொடுக்க முடியும். இதனால் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கி நடை போடுவோம் என்றனர்.

இளைஞர்களுக்கு நம்பிக்கை ஒளி கொடுத்த அன்னா ஹசாரே.

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம்: “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் முறையற்ற தண்ணீர் பயன்பட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாகும் அபாயம் உள்ளதாக “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகமும், குமரி அறிவியல் பேரவையும் இணைந்து இளம் விஞ்ஞானிகளுக்கான “நீரும் வாழ்வும்“ என்ற ஒரு நாள் கருத்தரங்கை காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடத்தியது.

கடந்த ஜீன் மாதம் முதல் டிசம்பர் வரை பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஆயிரம் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற 53 மாணவ, மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்து பச்சை, மெரூன், புளு, மஞ்சள், சிகப்பு என 5 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரு விஞ்ஞானியை நியமித்து பூமியும் தண்ணீரும், தண்ணீரும் மாசும், நீரும் வாழ்வும், தண்ணீரும் எதிர்காலமும், தண்ணீர் பிரச்சனைகள் ஆகிய 5 தலைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு இளம் விஞ்ஞானி குழுவிற்கும் ஒரு தலைப்பை கொடுத்து அந்த தலைப்பிற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்து ஆய்வு பணிகளை செய்தனர்.

ஆராய்ச்சி செய்த ஆய்வறிக்கையை நீரும் வாழ்வும் என்ற தலைப்பில் 355 பக்க அளவில் புத்தகமாக வெளியிட்டனர். இந்த புத்தக வெளியீட்டு விழாவும், 53 இளம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த ஆய்வறிக்கையை சமர்பிக்கும் விழாவும் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் சோம.ராமசாமி வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேந்திரபுரியில் உள்ள “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது:-

உலகளவில் உள்ள தண்ணீரில் 3 சதவீதம்தான் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் 0.26 சதவீதம் மட்டுமே சுத்தமான தண்ணீர் இதை வைத்துதான் விவசாயம், குடிநீர் தேவை, கால்நடைகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிவற்றிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

உணவு பாதுகாப்பு, உயிர் சூழல், தண்ணீர் ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளவை, பூமியில் தண்ணீர் அளவு 1.4 பில்லியன் கிலோ மீட்டர் கியூப் ஆக உள்ளது. இவற்றில் 70 சதவீதம் பணிக்கட்டியாக உள்ளது. 30 சதவீத தண்ணீர் பூமிக்கு அடியில் உள்ளது. மொத்த 30 சதவீத தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்திற்கும், 22 சதவீதம் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், 8 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம்.

இந்த தண்ணீரை மாசு அல்லது பற்றாகுறை ஏற்படுவதற்கு காரணமாக மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல், பருவநிலை மாற்றம், மனித இனம் தண்ணீரை அதிக அளவு பயன்படுத்துவது, மாசுபடுத்துவது ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவதால் பற்றாகுறை ஏற்பட வாய்ப்பாக உள்ளது. 2025-ம் ஆண்டில் 1800 மில்லியன் மக்கள் அதிகரிக்கபட வாய்ப்பு உள்ளது. அப்போது தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் நிலை உருவாகும். தற்போது 894 மில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது இல்லை. இரண்டரை மில்லியன் மக்களுக்கு சுகாதாரமற்ற நிலையில் உள்ளனர்.

தினசரி 2 மில்லியன் மக்கள் தங்களது மனித கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுகின்றனர். வளரும் நாடுகள் 70 சதவீத தண்ணீர் சுத்திகரிக்காமல் வீனாக போய்கிறது. அதிகளவு வீட்டு உபயோகத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவது, தொடர்ச்சியாக மணல் அள்ளுவது, வளர்ந்து வரும் தொழிற்சாலை, மின் உற்பத்தி, இவைகள் தண்ணீரின் தன்மையை மாற்றி விடுகிறது.

இதனால் உயிர் சூழல் பாதிப்படைந்து மனித சுகாதாரம் கேள்விகுறியாகிறது. உலகளவில் தண்ணீர் வளம் உள்ள நாடு இந்தியாதான். ஆனால் மேற்கண்ட தண்ணீர் தேவைகள் மற்றும் முறையற்ற தண்ணீர் பயன்பாட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாக மாறும் அபாயம் உள்ளது.

இதனை மாற்ற மழைநீர் சேகரிப்பு, சிக்கனமான உபயோகம், தண்ணீரை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.

நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் நாராயணசாமி, இஸ்ரோ அமைப்பின் மருத்துவ அலுவலர் திரவியம், குமரி அறிவியல் பேரவை ஒருங்கிணைப்பாளர் வேலயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் இளம் விஞ்ஞானிகள் 53 பேர் கலந்து கொண்டு தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தனர்.

ஈரோடு - கோவைக்கு கூடுதல் பாசஞ்சர் ரெயில்.

ஈரோடு-கோவைக்கு கூடுதல் பாசஞ்சர் ரெயில்

ஈரோட்டில் இருந்து கோவைக்கு தினமும் காலை 7 மணிக்கு மட்டும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதுதவிர சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஈரோட்டில் இருந்து கோவைக்கு செல்கின்றன.

இந்த நிலையில் கூடுதலாக ஈரோடு-கோவைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து கோவைக்கு மாலை 3 மணிக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடைகிறது. பின்னர் கோவையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 8.45 மணிக்கு ஈரோடு வருகிறது.

இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மட்டும் ஈரோட்டில் இருந்து கோவைக்கு இயக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம்- ஈரோடு, திருப்பூர் கோவை தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் புதிய பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படவேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை.


சீனாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் புகை பிடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சீனாவில் உள்ளனர்.

இங்கு புகை பிடிப்பதால் ஏற்படும் வியாதிகளால் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் இறக்கின்றனர்.

ஆனால் சீனாவில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அந்த தடையை மீறுபவர்களுக்கு சட்டத்தில் எவ்வித தண்டனையும் இல்லை என்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ரயில் நிலையங்கள், காட்சியரங்கங்கள் போன்ற இடங்களில் புகை பிடிக்க தடை விதிப்பட்டிருந்தாலும், அலுவலகங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படவில்லை.

தங்களுடைய பணியாளர்களுக்கு புகை பிடிப்பதால் ஏற்படும் பாதகங்கள் குறித்து எடுத்து கூற வேண்டிய கட்டாயம் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு உள்ளது. ஆனால் பணியாளர்கள் அலுவலகத்தில் புகை பிடிப்பதை தடுக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை.

இதே போன்ற சட்டத்தை கடந்தாண்டு ஷாங்காய் அமல்படுத்தியது. ஆனால் ஒருவரும் அதை சட்டை செய்வதாக தெரியவில்லை. பெரும்பாலும் நீங்கள் எங்காவது விடுதியில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, யாராவது அருகில் வளையம் வளையமாக புகை விடுவது ஒன்றும் நின்றபாடில்லை.

ஏனென்றால் சட்டத்தில், புகை பிடிக்கும் சட்டத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்று கூறப்படவில்லை.

இதனால் பெரும்பாலான வியாபார உரிமையாளர்கள் புகை பிடித்தலை தடுக்க அதிகாரிகள் எடுக்கும் முயற்சியை வரவேற்பதில்லை. ஏனென்றால் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் இந்த தடையை விரும்பால், உரிமையாளர்களிடம் புகார் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான சீனர்களுக்கு புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தெரியவில்லை. நான்கில் ஒருவருக்கே புகை பிடித்தல் அல்லது சுவாசித்தலால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெரிகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

புகை பிடித்தலை தடுக்கவும், அதனால் ஏற்படும் மரணங்களை தடுக்கவும் தாங்கள் முயற்சிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், அரசாங்க நிறுவனமே சீனாவில் சிகரெட் தயாரித்து விற்பனை செய்து வருவதில் பெரும் லாபம் பார்த்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.