Monday, May 2, 2011

பின்லேடன் தங்கிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்ததே ஐஎஸ்ஐதான்? - மனைவிகள், பிள்ளைகள், நண்பர்கள் கைது.


பின்லேடன் தங்கிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்ததே ஐஎஸ்ஐதான்?

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த கட்டடத்தை கட்டிக் கொடுத்து அவரை பத்திரமாக பாதுகாத்து வந்ததே பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ என்று ஒரு தகவல் கூறுகிறது.

பின்லேடன் பதுங்குமிடம் குறித்து பலப்பல தகவல்கள் வெளியாகின. ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் தங்கியிருக்கிறார் என்று முன்புத கவல்கள் கூறின. பின்னர் அவர் பாகிஸ்தானுக்குள் போய் விட்டார் என்றனர். கராச்சியில் இருக்கிறார், காபூலில் இருக்கிறார், வசிரிஸ்தானில் இருக்கிறார் என்று பல தகவல்கள்.

ஆனால் தற்போது பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர்தான் அவர் இத்தனை காலம் பாகிஸ்தானிலேயே, அதுவும் தலைநகருக்கு பக்கத்திலேயே படு பாதுகாப்புடன் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

பின்லேடன் தங்கியிருந்த இடத்தின் பெயர் பிலால் டவுன் ஆகும். இது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அப்போதாபாத் நகரில் உள்ளது.

இந்த இடத்திற்கு அருகில்தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி அகாடமி உள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் பிலால்டவுனில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்துள்ளார் பின்லேடன். இந்த கட்டடமே, பின் லேடன் தங்குவதற்காக அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டதாகும் என்கிறார்கள்.

இந்தக் கட்டடத்தில் பல அறைகள் உள்ளன. இங்குதான் தனது மனைவியர், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர், முக்கியத் தளபதிகளுடன் தங்கியிருந்தார் பின்லேடன்.

இந்த கட்டடம் 12 முதல் 16 அடி உயர சுற்றுச் சுவரால் பாதுகாப்புடன் விளங்குகிறது. இங்கு தொலைபேசி மற்றும் இன்டர்நெட் வசதி எதுவும் கிடையாது. இங்கிருந்து யாரும் வெளியேறுவது இல்லையாம். அதேபோல யாரும் இங்கே செல்லவும் மாட்டார்களாம்.

இந்தக் கட்டடத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டியுள்ளனர். பின்லேடனுக்காக இந்தக் கட்டத்தைக் கட்டிக் கொடுத்து பாதுகாத்து வந்தது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் என்று ஒரு கருத்து வெளியாகியுள்ளது.

ஆனால் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஹமீத் குல் இதை மறுத்துள்ளார். பின்லேடன் இங்கு நிரந்தரமாக தங்கியிருக்க வாய்ப்பில்லை. சிகிச்சைக்காக அவர் சமீபத்தில் வந்திருக்கலாம். வந்த இடத்தில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

மற்றபடி ஐஎஸ்ஐயோ அல்லது பாகிஸ்தான் அரசோ பின்லேடனைக் காக்கவில்லை, காக்க முயற்சித்ததும் இல்லை என்றார்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகில் பின்லேடன் தங்கியிருந்தபோதும் அது ராணுவத்திற்கோ அல்லது உளவுப் பிரிவுக்கோ தெரியாது என்று பாகிஸ்தான் தரப்பில் கூறுவது நம்பும்படியாகவே இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.


ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள், 4 நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானில் கைது.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் மற்றும் 4 நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் வைத்து அவர்களை பாகிஸ்தானியப் படைகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: