Monday, May 2, 2011

ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம். - அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ.


ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம்.

ஒசாமா பாகிஸ்தானில் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில் அவர் இஸ்லாமாபாத்தில் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானின் சாயம் வெளுத்துவிட்டது.

செம்டம்பர் 11 தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நியாயம் கிடைத்துள்ளது. தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தெரிவித்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அமெரிக்கர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஒபாமாவின் இந்த இனிய அறிவிப்பைக் கேட்ட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றன.

ஒசாமாவின் மரணம் ஒபாமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. அதே சமயம் பாகிஸ்தானின் முகத்திரை கிழிந்துள்ளது. இத்தனை நாட்களாக ஒசாமா பாகிஸ்தானில் இல்லை, இருப்பது தெரிய வந்தால் நாங்களே உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அந்நாடு கூறி வந்தது. தற்போது அமெரிக்கப்படை ஒசாமாவை பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 150 கிமீ தொலைவில் உள்ள அபோத்தாபாதில் வைத்து கொன்றுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகில்தான் பின்லேடன் தங்கியிருந்த கட்டடம் உள்ளது. இப்படி தங்களுக்குப் பக்கத்திலேயே பின்லேடனை வைத்துக் கொண்டு அவர் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் நாடகமாடி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பாகிஸ்தானில் பின்லேடன் இல்லை, அவர் இறந்து போய் விட்டார் என்று பாகிஸ்தான் இத்தனை காலம் கூறி வந்ததும் பொய்யே என்பதும் நிரூபணமாகியுள்ளது.

அதை விட முக்கியமாக முஷாரப் அதிபராக இருந்தபோது பின்லேடன் இறந்து போய் விட்டார் என்று திட்டவட்டமாக கூறி வந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இத்தனை காலமாக பின்லேடனை கட்டிக் காத்து வந்தது பாகிஸ்தான் அரசும், அதன் ஐ.எஸ்.ஐயும்தான் என்று திட்டவட்டமாக நம்பப்படுகிறது.


பின்லேடனை வேட்டையாட அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ

பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை வேட்டையாட அமெரிக்க சிறப்புப் படையினருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சரியாக 2 வாரத்திற்கு முன்புதான் விக்கிலீக்ஸ் ஒரு தகவலை வெளியிட்டது. அமெரிக்காவின் குவான்டானாமோ முகத்தை அம்பலப்படுத்திய அந்த தகவலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ குறித்த அமெரிக்காவின் கருத்து வெளிப்பட்டது.

தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐயை அமெரிக்கா கருதி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பாகிஸ்தானுக்கும், ஐஎஸ்ஐக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. உலக அரங்கில் ஐஎஸ்ஐயின் பெயர் மகா மோசமாக கெட்டுப் போனது.

இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தகவல் வெளியான அதே காலகட்டத்தில்தான் பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து வேட்டையாடி வீழ்த்தியுள்ளது அமெரிக்கப் படை.

இந்த இரு சம்பவங்களுக்கும் நேரடியாக தொடர்பு ஏதும் இல்லை என்ற போதிலும், பின்லேடனை வேட்டையாட பாகிஸ்தான் அரசும், ஐஎஸ்ஐயும் உதவியாக இருந்தன என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரையும், அமெரிக்காவின் கிடுக்கிப் பிடி அதிகரிக்க ஆரம்பித்துள்ளதையும், தன்னை அது எப்படி கருதுகிறது என்பதை அறிந்து கொண்டதைத் தொடர்ந்தும், பின்லேடனை காட்டிக் கொடுத்து தான் தப்பிக்க ஐஎஸ்ஐ நினைத்ததாக கூறப்படுகிறது.

எனவேதான் இதுவரை தங்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே இருந்து வந்த பின்லேடனை, வீழ்த்த அமெரிக்காவுக்கு உதவியுள்ளது ஐஎஸ்ஐ.

அமெரிக்காவின் கோரப் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளும் வகையிலேயே பின்லேடனை பகடைக் காயாக வைத்து பாகிஸ்தானும், ஐஎஸ்ஐயும் தப்பித்துக் கொண்டதாக கருதப்படுகிறது.

பின்லேடன் வேட்டை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அரசின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் பின்லேடனை வேட்டையாட முடிந்தது. பாகிஸ்தான் முழுமையாக எங்களுக்கு உதவியதைத் தொடர்ந்தே லேடனை வீழ்த்தினோம் என்றார்.

No comments: