Monday, May 2, 2011

40 நிமிடங்களில் பின்லேடனை வீழ்த்தியது அமெரிக்கா - அல்கொய்தா அணு குண்டு வீசுமா?


கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவை நடு நடுங்க வைத்து வந்த அல் கொய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனை வெறும் 40 நிமிடங்களில் வேட்டையாடி வீழ்த்தியுள்ளது அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு.

உலகத் தீவிரவாதத்தின் மிகப் பிரபலமான முகமாக கடந்த 10 வருடங்களாக உலக நாடுகளைக் குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளை பயமுறுத்தி வந்தவர் பின்லேடன். இவரைத் தேடி ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து வருடமாக வேட்டையாடி வந்தது அமெரிக்கா.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் கண்ணாமூச்சி ஆடி வந்த பின்லேடன் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவர் இறந்து விட்டதாக கூட தகவல்கள் கூறின.

நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் லேடன் தலைமறைவாகி விட்டார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 30 வீடியோ மற்றும் ஆடியோ செய்திகள் அவரிடமிருந்து வந்தன. அவற்றில் பல உண்மையானவையா என்ற சந்தேகமும் இருந்து வந்தது. இருப்பினும் தற்போது பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இதுவரை வெளியான அனைத்துமே பின்லேடன் அல்லது அவரது அங்கீகாரத்துடன் வந்தவைதான் என்பது உறுதியாகியுள்ளது.

பின்லேடன் பதுங்கியிருந்த இடம் குறித்து உறுதியான தகவல் அமெரிக்காவுக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து அவரை இந்த முறை விட்டு விடக் கூடாது என்று அமெரிக்கா சுறுசுறுப்புடன் களம் இறங்கியது.

மிகவும் சிறந்த வீரர்கள் அடங்கிய படைக் குழுவை தயார் செய்த அமெரிக்க ராணுவம், அந்தப் படையை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பியது. மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தக் கூடிய திறமை படைத்த இந்த சிறப்புப் படையினர் பின்லேடன் தங்கியிருந்த கட்டடத்தை முற்றுகையிட்டு அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதை சற்றும் எதிர்பாராத அல் கொய்தா தீவிரவாதிகள் பின்லேடனைக் காப்பதற்காக கடும் சண்டையில் குதித்தனர். ஆனால் அமெரிக்கப் படைக் குழுவின் அதி நவீன தாக்குதலுக்கு முன்பு அவர்களால் நிற்க முடியவில்லை.

இந்த தாக்குதல் 40 நிமிடங்களில் முடிந்து விட்டது. பின்லேடனுடன் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. அவரது மகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.


அல்கொய்தா அணு குண்டு வீசுமா?

அல்கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது உயிருடன் பிடிபட்டாலோ ஐரோப்பிய நாடுகள் மீது அணுகுண்டு வீசுவோம் என்று அல் கொய்தா ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் சொன்னபடி அவர்கள் செய்வார்களா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒரு விடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் மூலம் வெளியான அமெரிக்க தூதரக கடிதப் பரிமாற்றத்தில் தெரியவந்தது.

அதில் அந்த அல்கொய்தா தலைவர் கூறுகையில், பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியாது. ஒரு வேளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ, அணு குண்டு வீசி தாக்குதல் நடத்துவோம். இதற்காக ஒரு அணுகுண்டை ஐரோபப்ிய நாடு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

தற்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால், அல்கொய்தா அடுத்து பயங்கர தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளை குறி வைத்து அது தாக்குதலில் இறங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் ஏற்கனவே எச்சரித்தபடி அது அணுகுண்டு வீச்சில் இறங்குமா என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அணுகுண்டு என்பது ஏதோ பொறி உருண்டை போல சாதாரணமாக பாதுகாத்து வைத்திருக்க முடியாத ஒன்று என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அல்கொய்தா ஆதரவு நாடு ஏதாவது அவர்களுக்கு இதுதொடர்பாக உதவினால் நிலைமை விபரீதமாகக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

No comments: