Monday, May 2, 2011

ஒசாமா பின்லேடன் ? - ஒரு பார்வை.


பெரும் கோடீஸ்வரக் குடும்பம் ஒன்றில், சவூதி அரேபியாவில் மகனாகப் பிறந்தார் ஒசாமா பின்லேடன். அவரது தந்தைக்கு மொத்தம் 52 குழந்தைகள். அதில் 17வது குழந்தைதான், அமெரிக்காவை நடுநடுங்க வைத்த பின்லேடன்.

கடந்த 1988-ம் ஆண்டு அவர் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார் ஒசாமா.

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் உலகத்தையே உலுக்கினார். அன்று முதல் அமெரிக்கர்கள் உலகின் மிக மோசமான தீவிரவாதியாக பார்க்கத் துவங்கினர். அவர் அமெரிக்காவின் எதிரிஆனார். அனைத்து செய்தித்தாள்களிலும், வீடியோக்களிலும் ஒசாமா பின் லேடனின் வான்டட் போஸ்டர்ஸ் தான்.

இரட்டைத் தாக்குதல்கள் நடந்த 6-வது நாள் ஒரு நிருபர் அதிபர் புஷ்ஷிடம் நீங்கள் ஒசாமா இறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு புஷ் எனக்கு அவர் வேண்டும், நீதி வேண்டும் என்றார்.

ஒசாமாவைக் கொல்ல அமெரிக்கப் படைகளுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இறுதியாக பாகிஸ்தானில் வைத்து லேடன் கொல்லப்பட்டார். பின் லேடனும், அவரது கூட்டாளிகளும் இத்தனை நாட்களாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள டோரா-போரா மலையில் பதுங்கியிருந்தனர். அமெரிக்கப் படைகள் அந்த மலையில் குண்டு மழை பொழிந்தும் லேடன் தப்பித்து விட்டார். கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பின் லேடன் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்து புதிய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இஸ்லாமிய உலகத்தில் மாபெரும் ஹீரோவாக பார்க்கப்பட்ட போதிலும், இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின் லேடன் சம்பாதிக்கத் தவறவில்லை. உலக தீவிரவாதத்தின் வட நட்சத்திரம் என்று அவரை அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்தது. ஆங்காங்கே இருந்த தீவிவாத அமைப்புகளை எல்லாம் அல் கொய்தாவுடன் இணைத்தார் ஒசாமா. எகிப்து-செசன்யா, ஏமன்-பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத அமைப்புகளை அல் கொய்தா அமைப்பின் கீழ் கொண்டு வந்தார்.

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களையும், அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டவர்களையும் பாதுகாக்க பின்லேடன் பணம் கொடுத்தார். அல் கொய்தா மூலம் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பரப்ப எண்ணினார்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சில ஆண்டுகள் அல் கொய்தா மற்றும் அதன் தலைவர் பின் லேடனின் புகழ் உலகமெல்லாம் காட்டுத் தீ போன்று பரவியது. சில அமைப்புகள் தங்களை அல் கொய்தா என்று கூறிக் கொண்டு ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைகளை தாக்கியது, பாலியில் உள்ள சுற்றுலாத் தலங்களை குண்டு வைத்து தகர்த்தது, ஸ்பெயினில் பயணிகள் ரயில்களுக்கு குண்டு வைத்தது.

பின் லேடனின் உண்மையான அதிகாரம் எவ்வளவு என்றே தெரியவில்லை. அல் கொய்தாவில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை நாடுகளில் அது ஊடுருவி யிருக்கிறது, பின் லேடன் கூறியதுபோல அவர்களிடம் ரசாயண, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை.

லேடன் புது முறையில் போர் நடத்தினார். அவர் பேக்ஸ் மூலம் பத்வா அனுப்பினார். அவரிடம் அமெரிக்காவை விட அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் இருந்தது என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரியே தெரிவித்தார்.

கோடீஸ்வரருக்கு மகனாக பிறந்த அவர் ராஜ வாழ்க்கை வாழாமல் அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க அழிப்பு என்ற கொள்கையுடன் தீவிரவாத களத்தில் குதித்தார். அவர் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுவதாக தெரிவித்தாலும், அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிப்பதன் மூலம் அவர் மார்க்கத்திற்கு எதிராக செயல்படுவதாக சில அறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் அல் கொய்தாவின் தாக்குதல்களில் இஸ்லாமியர்களும் பெருமளவில் பலியாகியுள்ளனர். எனவே இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின்லேடன் சம்பாதித்தார்.

இஸ்லாம் எங்கு, எதற்காக புனிதப் போர் துவங்கலாம் என்று வரையறை வகுத்துள்ளது. ஆனால் அதை லேடன் கண்டுகொள்ளவில்லை. ஒசாமாவின் முக்கிய குறியாக அமெரிக்கா இருந்து வந்தது.

லேடன் கடந்த 1997-ம் ஆண்டு சிஎன்என்-க்கு கொடுத்த பேட்டின்போது கூறுகையில்,

அமெரிக்கா நம் நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள நினைக்கிறது, நமது வளங்களை கொள்ளையடிக்க நினைக்கிறது, அதன் ஏஜெண்டுகள் தான் நம்மை ஆள வேண்டும் என்று திட்டமிடுகிறது. இத்தனைக்கும் நம்மை சம்மதிக்க வைக்கப் பார்க்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், உடனே நம்மை தீவிரவாதிகள் என்று கூறுகிறது.

பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேல் குடியிருப்பு பகுதியில் கல் எறிந்தால் அவர்களை அமெரிக்கா தீவிரவாதிகள் என்கிறது. லெபனானில் உள்ள ஐ.நா கட்டிடத்தில் குழந்தைகளும், பெண்களும் இருக்கையில் இஸ்ரேல் அதை குண்டு வைத்து தகர்த்தால் அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே சமயம் உரிமைக்காக குரல் கொடுக்கும் எந்த முஸ்லீமிற்கும் கண்டனம் தெரிவிக்கிறது. எங்கு பார்த்தாலும் அமெரிக்கா தான் தீவரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக இருக்கிறது என்றார்.

எப்படியோ, உலகையே ஆட்டிப் படைத்த மிகப் பெரிய நபராக மாறிப் போய் விட்டார் பின்லேடன். அவரது சகாப்தமும் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

1 comment:

Anonymous said...

ஆயுதம் தூக்கியவன் ஆயுதத்தாலே சாவான் என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு சம்பவம் ... ஒசாமா மீது எனக்கு எந்த விதப் பரிவும் ஏற்படவில்லை.