Monday, June 6, 2011

ஜூன் 8-ல் நாடு தழுவிய உண்ணாவிரதம் : அண்ணா ஹசாரே.


பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று அண்ணா ஹசாரே கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவதன் மூலம் அரசுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

போலீஸார் பகல் நேரத்தில் அவர்களை அணுகுவதை விட்டுவிட்டு நள்ளிரவுக்குப் பின் இப்படியொரு தாக்குதலை நடத்தியுள்ளதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றுதான் கூற வேண்டும்.

இந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து சமூகநல ஆர்வலர்கள், அமைப்புகள் என அனைவருடனும் ஆலோசித்து வருகிறோம். நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும். இது அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்கும். ஜனநாயக நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை' என்று ஹசாரே கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தில் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து ஜூன் 8-ல் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

"பாபா ராம்தேவின் போராட்டத்தில் ஒருசில தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் நள்ளிரவு நேரத்தில் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை போலீஸார் அடித்து விரட்டியுள்ளனர். ஜனநாயக நாட்டில் இது ஏற்புடைய விஷயமல்ல. அடித்து விரட்டும் அளவுக்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

தில்லியில் நடைபெற்ற தடியடி சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவில் ஜூன் 8-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். இதில் இருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லையெனில், அடுத்து தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும். அது இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக இருக்கும்.

ராம்தேவுடன் சில முக்கிய விஷயங்கள் குறித்து முன்பே பேசினேன். ஆனால் அவற்றை இங்கு கூற முடியாது. லோக்பால் மசோதா வரைவுக் கூட்டுக்குழு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் ஊழலுக்கு எதிரான சட்டம் உள்ளிட்ட விஷயத்தில் அரசின்நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டுமென கேட்டுள்ளேன். நாங்கள் எங்கள் நிலையைத் ஏற்கெனவே தெரிவித்து, அதில் உறுதியாக இருக்கிறோம்.

அடுத்து நடைபெறவுள்ள லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் அடுத்த கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ளது. இதனைப் புறக்கணிக்க மக்கள் பிரதிநிதிகள் குழு முடிவு செய்துள்ளது. அக்கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யும் வரை புறக்கணிப்பு தொடரும்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க வேண்டுமென்று மத்திய அரசு செயல்படுகிறது என்றார் அவர்.

இனப்படுகொலை ; ராணுவத்தளபதிக்கு 30 ஆண்டு சிறை : இலங்கை முன்னாள் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு.


ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதி்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994-ம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் துட்சி மற்றும் ஹுட்டு இனத்தைச் சேர்ந்தவர்கள். ருவாண்டா இனப்படுகொலையில் முக்கியப் பங்கு வகித்த அப்போதைய ராணுவத் தளபதி பிசிமுங்கு 2002-ம் ஆண்டு, அங்கோலா நாட்டில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிசிமுங்கு உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதில், 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை 395 நாட்கள் நடைபெற்ற நிலையில், 1994-ல் ராணுவத் தளபதியாக இருந்த அகஸ்டின் பிசிமுங்குவுக்கு 30 ஆண்டுக் சிறைத் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், இனப்படுகொலை குற்றச்சாட்டில் ருவாண்டா ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோனோ ரெயிலின் சிறப்பு அம்சங்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள மோனோ ரெயிலின் சிறப்பு அம்சங்கள்: குறுகலான இடத்திலும் செல்லும்; செலவு மிகக்குறைவு

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை 32 லட்சத்துக்கும் மேல் உள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கடந்த தி.மு.க. ஆட்சியில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.15 ஆயிரம் கோடி திட்டமதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த பணிகள் நடந்து வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வரை தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலமும் அமைக்கப்பட்டு விட்டது. அசோக்நகரில் இருந்து பரங்கிமலை வரையிலான பணிகள் நடந்து வருகிறது.

இதேபோல் சென்ட்ரல் முதல் திருமங்கலம் வரையிலான சுரங்கப்பாதை அமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் 2015-க்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு மோனோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியின்போது மோனோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா மோனோ ரெயில் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

முதல் கட்டமாக 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயிலை விட மோனோ ரெயிலுக்கான செலவும் குறைவு. கட்டுமான பணிகளையும் விரைவாக முடிக்க முடியும். மோனோ ரெயில் பஸ்சை போல்தான் இருக்கும். குறுகலான ரோடு பகுதியிலும் இயக்க முடியும். மெட்ரோ ரெயிலில் ஒரு மணி நேரத்துக்கு 30 ஆயிரம் பயணிகள் பயணம் செய்யலாம்.

ஆனால் மோனோ ரெயிலில் 10 ஆயிரம் பயணிகள் பயணம் செய்யலாம். மோனோ ரெயில் திட்டத்தை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு 45 முதல் 50 கோடி ரூபாய் செலவாகும். ஆனால் மெட்ரோ ரெயிலுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.300 கோடி வரை செலவாகும்.

மோனோ ரெயில் பெட்டி 6 முதல் 10 டன் எடை உள்ளது. மெட்ரோ ரெயில் பெட்டி 45 டன் எடை உள்ளது. மோனோ ரெயிலுக்கு பேட்டரி சூரிய ஒளி, ஜெனரேட்டர் போன்றவற்றை பயன்படுத்தி அதுவே மின்சாரத்தை தயாரித்து கொள்ளும். ஆனால் மெட்ரோ ரெயி லுக்கு 25 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும்.

மோனோ ரெயில் திட்டத்தை 24 மாதத்தில் நிறைவேற்றி இயக்க முடியும். சென்னை நகரில் பொது போக்குவரத்து 27 சதவீதமாக உள்ளது. இந்த 2026-ம் ஆண்டுக்குள் 46 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

அரசு டவுன் பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில், மெட்ரோ ரெயிலை தொடர்ந்து மோனோ ரெயில் திட்டமும் நிறைவேற்றப்பட்டால் பொது போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் நகர சாலைகளில் நெருக்கடி குறையும். பெருமளவு வாகன இயக்கம் கட்டுப்படுவதால் பெட்ரோல், டீசல் உபயோகமும் குறையும்.

உண்ணாவிரதத்தை கலைக்க மத்திய அரசு உத்தரவிட்டது ; போலீஸ் அதிகாரி தகவல் .

உண்ணாவிரதத்தை கலைக்க மத்திய அரசு உத்தரவிட்டது;    போலீஸ் அதிகாரி தகவல்

டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்களை கலைக்க மத்திய அரசு தான் உத்தரவிட்டது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேசிய அவர், ராம்லீலா மைதானம் யோகா முகாம் நடத்தவே 20 நாள் வாடகைக்கு எடுக்கப் பட்டது. அதில் போராட்டம் நடத்தப்பட்டாலும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்தியஅரசு உத்தரவிட்டதால் வேறு வழியின்றி உண்ணாவிரதம் இருந்தவர்களை தடியடி நடத்தி கலைக்க வேண்டியதாகி விட்டது என்றார். அவர் மேலும் கூறுகை யில், மக்கள் அமைதியாக கலைந்து சென்றிருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. கல் வீசியதால் நாங்கள் தடியடி நடத்தினோம் என்றார்.

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணை தாக்குதல் ; 14 தீவிரவாதிகள் பலி.

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணை    தாக்குதல்; 14 தீவிரவாதிகள் பலி

அமெரிக்கா வெளியுறவுதுறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கடந்த மாதம் பாகிஸ்தான் வந்தார். அப்போது தேடப்படும் 5 முக்கிய குற்றவாளிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டது. அதில் இலியாஸ் காஷ்மீரி, அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி மற்றும் ஆப்கானிஸ்தான், தலிபான் தலைவர் முல்லா ஓமர் ஆகியோர் பெயர் இருந்தது.

மேலும் தீவிரவாதிகள் பெருமளவில் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் பாகிஸ்தானுடன் சேர்ந்து அமெரிக்கா இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தெற்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதிகளாக இலியாஸ் காஷ்மீரி, அமீர் அம்சா ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தெற்கு வசிரிஸ்தானில் உள்ள மலைப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இன்று மீண்டும் ஏவுகணைகளை வீசின. வானா நகரம் அருகேயுள்ள ஷலாம் தானா என்ற இடத்தில் மதரசா மற்றும் வீடுகளில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டதில் அங்கு பதுங்கியிருந்த 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் வெளி நாடுகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளும் அடங்குவர். இப்பகுதி தலிபான் தீவிரவாதி முல்லா நசீர் பிரிவின் கமாண்டர் மலாங்கட்டுப்பாட்டில் உள்ளது.

இது இங்கு கடந்த 4 நாட்கள் நடந்த அமெரிக்காவின் 2-வது ஏவுகணை தாக்குதலாகும். இந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் இதுவரை 34 தடவை ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு மற்றும் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அதில் 250 தீவிரவாதிகள் மற்றும் பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பாபா ராம்தேவ் நம்பிக்கை மோசடி : மத்திய மந்திரி குற்றச்சாட்டு.

பாபா ராம்தேவ் நம்பிக்கை மோசடி: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத், டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ், அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் பற்றி அவருடன் பல முறை பேச்சு நடத்தினோம். அவரது கோரிக்கைகளை 100 சதவீதம் அளவில் நிறைவேற்ற முடியவில்லை.

என்றாலும் 90 சதவீதம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தோம். இதுபற்றி பிரதமரும், அவருக்கு தெளிவாக கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக முதலில் கூறினார். ஆனால், அவர் பின்னர் உண்ணாவிரதத்தை தொடருவதாக அறிவித்து விட்டார்.

அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை மீறி விட்டார். இது அவரது மிகப்பெரிய நம்பிக்கை மோசடி என்று கூறினார்.


என்னை கொல்ல சதி : ராம்தேவ் பரபரப்பு புகார்.


ஹரித்துவார் ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வரும் பாபா ராம்தேவ் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

என்னை கொன்று ஒழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதற்காக சதி திட்டம் தீட்டப்பட்டது. டெல்லி போலீசார் என்னை கொல்வதுடன் என் ஆதரவாளர்களையும் அதிக அளவில் கொன்று குவிக்க திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை முறியடிக்க, எனது சீடர்கள் மீது போலீசார் கண்மூடித் தனமாக தாக்கினார்கள். பெண்களை அடித்து துன்புறுத்தினார்கள். ஆனால் யார் மீதும் தடியடி நடத்தவில்லை என்று டெல்லி போலீசார் பொய் சொல்கிறார்கள்.

டெல்லி போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து தேசிய மனித உரிமை கழகத்தினர் விசாரணை நடத்த வேண்டும். போலீசார் ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்ததும் விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணீர் புகை குண்டுகளால் சுட்டனர். மின்சார ஜெனரேட்டர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பெரிய அளவில் மக்களை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டனர். இது பற்றி தேசிய மனித உரிமை கமிஷன் விசாரிக்க வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தான் நான் சுடிதார் அணிந்து தப்பிச் சென்றேன்.

சத்ரபதி சிவாஜி மாதிரி நான் நடந்து கொண்டேன். மீண்டும் போராட வந்துள்ளேன். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டுள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

ராம்தேவ் விமர்சனம் - காங். கூட்டத்தில் ஜனார்த்தனன் மீது செருப்பு வீச்சு : நிருபர் ஆத்திரம்.


டெல்லியில் காங்கிரஸ் செய்தியாளர் கூட்டம் நடந்தது.காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தனன் துவிவேதியை தாக்க முயற்சி நடந்தது.

ராம்தேவ் பற்றிய ஜனார்த்தனன் துவிவேதி விமர்சனத்துக்கு நவ்சஞ்சார்’ செய்தி நிருபர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த அவர் கையில் செருப்பை எடுத்துக்கொண்டு ஜனார்த்தனன் மீது பாய்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

ஜனார்த்தனன் மீது செருப்புடன் பாய்ந்த நிருபரை காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து இழுத்துச்சென்றனர்.

செருப்புடன் பாய்ந்த அந்த நிருபர் சுனில்குமார், ‘நவ்சஞ்சார்’ என்ற ராஜஸ்தான் பத்திரிகையில் பணிபுரிகின்றார்.

சுனில் குமாரை கைது செய்து டெல்லி போலீசார் விவாரணை செய்து வருகின்றனர்.

நடந்த இந்த சம்பவம் பற்றி ஜனார்த்தனன் துவிவேதி, ‘’நடந்த இந்த தாக்குதல் திட்டமிட்ட சதி’’ என்று கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஏர்செல் நிறுவனரிடம் சி.பி.ஐ. விசாரணை.


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தபோது, 2004 மார்ச் 5-ம் தேதி , 8 ஏரியாக்களுக்கு யுஏஎஸ்எல் எனப்படும் உரிமம் கோரி சிவா குரூப் நிறுவனத்தின் சிவசங்கரனின் டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) விண்ணப்பித்தது. அப்போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்தார். விண்ணப்பிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து, ஏழு ஏரியாக்களுக்கான உரிமங்களுக்கு கையெழுத்தானது. மத்தியபிரதேசம் மாநிலத்திற்குக் கோரப்பட்டிருந்த உரிமம் மட்டும் கையெழுத்தாகவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமைய, இந்த திட்டம், அமைச்சர் தயாநிதி மாறன் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், 2005 மார்ச் 1ஆம் நாள் ஹரியானா, கேரளா, கொல்கத்தா, பஞ்சாப் மாநிலங்களில் உரிமம் கேட்டு டிஷ்நெட் விண்ணப்பித்தது.

தொலைத் தொடர்புத்துறை செயலாளர், தொலைத்தொடர்பு அமைச்சருடன் (தயாநிதி) ஆலோசித்ததில், துறை சார்பிலான எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் டிஷ்நெட் நிறுவனத்தின் ஃபைல்கள்மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் அவை தொலைத் தொடர்புத்துறையின் பல பகுதிகளிலும் சுற்றியது.

அதே நேரத்தில், தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதத் திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 2005ஆம் ஆண்டில் மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட மேக்ஸிஸ் குரூப் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதாக கையெழுத்து ஆனது.

இதையடுத்து, ஏற்கனவே நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் தொலைத் தொடர்புத் துறையில் அவசரமாக பரிசீலிக்கப்பட்டன. அதன்பின் கர்நாடகா, ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, குஜராத், என எல்லா மாநிலங்களுக்கும் உரிமம் கோரியது ஏர்செல். 2ஆண்டகளாக நிலுவையில் இருந்த பீகார், ஹிமாச்சல்பிரதேசம் என 15மாநிலங்களுக்கான உரிமங்கள் 15 நாட்களில் ஏர்செல்லுக்கு வழங்கப்பட்டன.

இதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தொழில் அதிபர் சிவசங்கரனை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. அதை ஏற்று இன்று சிவசங்கரன் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார். 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அவரிடம் சி.பி.ஐ. பல்வேறு கேள்விகளை கேட்டது. சிவசங்கரன் அளித்த பதில்கள் அனைத்தையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

சிவசங்கரனின் வாக்குமூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தெஹல்கா எழுப்பிய கேள்வி

இந்த உரிமங்கள் வழங்கப்பட்ட நான்கே மாதங்களில், அதாவது 2007 பிப்ரவரி மாதத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் நிறுவனத்தின், துணை நிறுவனங்களில் ஒன்றான சவுத் ஏசியா என்டர்டெய்ன்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம், கலாநிதிமாறனின் சன் குரூப் நிறுவனத்தின் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் - சன் டி.டி.ஹெச்சில் சுமார் 600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. சன் எஃப்எம் ரேடியோ நெட்வொர்க்கில் சுமார் 100 கோடி ரூபாயை மேக்ஸிஸ் குரூப் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாயை சன் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது இயல்பாக நடந்தவையா என தெஹல்கா பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

பாபா ராம்தேவ்விடம் ரூ.1000 கோடி சொத்து.


ஊழலுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா ராம்தேவ்வுக்கு எதிராகவே சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.

10 வருடத்துக்கு முன்பு சாதாரண நிலையில் இருந்த அவருக்கு தற்போது பல கோடி ரூபாய் வந்தது எப்படி? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாபா ராம்தேவ் அரியானா மாநிலம் அலிசையத்பூர் கிராமத்தில் 1965ம் ஆண்டு பிறந்தார்.

இவருடைய தந்தை ராம்நிவாஷ்யாதவ், சாதாரண விவசாயி. ராம்தேவ் 9 வயதில் கான்பூர் என்ற கிராமத்துக்கு சென்று அங்குள்ள பள்ளியில் படித்தார். அவர் 9 வயதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

கான்பூர் பள்ளியில் சமஸ்கிருதம் மற்றும் யோகாசனம் படிப்புகளை படித்த அவர் யோகாசனத்தில் தீவிர ஆர்வம் காட்டி சாமியாராக மாறினார். 1995-ம் ஆண்டு திவய் யோகா மந்திர் என்ற அமைப்பை ஏற்படுத்தி யோகாசனங்களை கற்றுக்கொடுத்தார்.

2003-ம் ஆண்டு ஆஸ்தா டி.வி.யில் காலையில் யோகாசனம் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதன்மூலம் தான் அவர் பிரபலமானார். அதன்பிறகு அவருக்கு சொத்து குவியத் தொடங்கியது. தற்போது அவரிடம் ரூ.1000 கோடி சொத்துக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்டம் மாநிலம் ஹரித்துவாரில் அவர் அமைத்துள்ள பதஞ்சலி யோகாபீடம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு 300 படுக்கை கொண்ட ஆயுர்வேத ஆஸ்பத்திரி, யோகாசனம் ஆராய்ச்சி மையம், பல்கலைக்கழகம், உணவுக்கூடம், அழகு சாதன பொருட்கள் தொழிற்சாலை ஆகியவை உள்ளன.

பாபா ராம்தேவ் முன்பு யோகாசனம் நிகழ்ச்சி நடத்தி வந்த ஆஸ்தா டி.வி.யையே தற்போது வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இத்துடன் இங்கிலாந்து அருகே உள்ள ஒரு குட்டி தீவையே ராம்தேவ் விலைக்கு வாங்கியிருக்கிறார்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் தனி விமானம் மற்றும் தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார். இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்பது எல்லோருக்குமே ஆச்சரியத்தை கொடுக்கிறது.

ராம்தேவ் பற்றி அவருக்கு நன்கு தெரிந்தவர்கள் கூறும்போது, ராம்தேவ் 10 வருடத்திற்கு முன்பு ஒரு ஓட்டை சைக்கிளில் சுற்றி வந்தார். அந்த சைக்கிளை பழுது பார்க்ககூட அவருக்கு காசு கிடையாது. இப்போது இத்தனை கோடி சொத்து சேர்த்திருப்பது மர்மமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இதுபற்றி ராம்தேவ்விடம் கேட்டபோது, எனக்கு உலகம் முழுவதும் 5 கோடி சீடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்துதான் ஒவ்வொரு அமைப்பாக உருவாக்கி வருகிறேன். நான் எந்த முறைகேடும் செய்யவில்லை. மத்திய விசாரணை அமைப்புகளாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி எனது ஆசிரமத்தில் சோதனை போட்டு உண்மையை அறிந்து கொள்ளலாம் என்றார்.

மகாத்மா காந்தி மட்டும் இருந்திருந்தால் கதறி அழுதிருப்பார்-ராம்தேவ்.


மிக நெருக்கமான பந்தலுக்குக் கீழ் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விரட்டிய செயல் மிகவும் கொடூரமானது. இந்த தாக்குதலை மகாத்மா காந்தி மட்டும் உயிருடன் இருந்து பார்த்திருந்தால் கதறி அழுதிருப்பார். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் ஓயாது, தொடர்ந்து போராடுவேன் என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ்.

ஹரித்வாரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மீண்டும் தொடங்கியுள்ளார் ராம்தேவ். இன்று முற்பகல் அவர் தனது ஆசிரமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் இன்று ராம்லீலா மைதானத்தில் நடந்த அடக்குமுறை அராஜகத்தை தானாக முன்வந்து வழக்காக எடுத்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.

நான் ராம்லீலா மைதானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது எனக்குப் பாதுகாப்பு அளித்த பெண்களுக்கும், எனக்குத் துணை நின்ற ஆதரவாளர்களுக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

டெல்லி போலீஸார் அன்றைய தினம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர். அடக்குமுறைகளை, வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டனர்.

யாரையும் அடிக்கவில்லை என்று டெல்லி போலீஸார் பொய் சொல்கின்றனர். மக்களை அவர்கள் அடித்தார்கள். அவர்களின் தாக்குதலால் மக்கள் சிதறி ஓடினார்கள். அதில் பலர் காயமடைந்தனர். எங்களது ஆதரவாளர்கள் யாரும் வன்முறையைத் தூண்டவில்லை.

பெண்கள், குழந்தைகளை போலீஸார் அடித்ததை மகாத்மா காந்தி மட்டும் பார்த்திருந்தால் கதறி அழுதிருப்பார்.

மிகக் குறுகலான பந்தலுக்குக் கீழ் இருந்தவர்கள் மீது, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிய செயல் மிகவும் கொடூரமானது, கண்டனத்துக்குரியது, மனித உரிமையை மீறும் செயல்.

அப்பாவிப் பெண்களையும், குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியது போலீஸ். இதுதொடர்பாக டெல்லி போலீஸார் சொல்லும் விளக்கம் எல்லாம் பொய்யாகும்.

இந்த அரசை மக்கள் நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் மக்கள் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்.

ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் நிற்காது, ஓயாது. தொடர்ந்து போராடுவேன் என்றார் ராம்தேவ்.

ராஜீவ் கொலைச் சதி... லண்டனில் நடந்தது ! அதிர்ச்சியைக் கிளப்பும் அடுத்த புத்தகம் !

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ராஜீவ் கொலை வழக்கின் மர்மங்கள் விலகாது போலும்! ராஜீவ் சர்மா என்பவர் எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடுகள்’ என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகி பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது.

அதை ஆனந்தராஜ் என்பவர் தமிழ்ப்படுத்தி உள்ளார்.

''ராஜீவ் காந்தி படுகொலை என்பது நம்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரம் என்பது வெளிப்படை. இதில் புலிகள் வெறும் கைகள் மட்டுமே. தனுவும் சிவராஜனும் அதில் வெறும் விரல்களே. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள மூளை இதுவரை மறைந்தே உள்ளது.

ராஜீவ் படுகொலை, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கவும் வலுவிழக்கச் செய்யவுமான சர்வதேசச் சதி என்ற சக்கரத்தின் இன்னொரு கம்பியாகும்!'' என்ற பீடிகையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் ஒரு வாக்குமூலத்தைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு, ஷாஹீத் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவரான மகந்த் சேவா தாஸ் சிங் அளித்த வாக்குமூலம்தான் அது. அதை மட்டும் அப்படியே தருகிறோம்!

மகந்த் சேவா தாஸ் சிங் சொல்கிறார்...

நான் டிசம்பர் 26, 1990 அன்று லண்டன் சென்றேன். அடுத்த நாள் நான் அவர் (ஜக்ஜித் சிங் சௌகான்) வீடு இருந்த 64, வெஸ்டர்ன் கோர்ட், மத்திய லண்டன் முகவரிக்குச் சென்றேன். அங்கு காலிஸ்தானின் அலுவல கமும் இருந்தது. லண்டன் செல்வதற்கு முன்னதாக நான், பிரதம மந்திரி சந்திரசேகரைச் சந்தித்தேன். நான் லண்டனுக்குப் புறப்படுவதாக சந்திரசேகரிடம் தெரி வித்தேன். அவர், என்னிடம் என் நண்பரான ஜக்ஜித் சிங் சௌகானிடம் பேசுமாறு கூறினார். 'பஞ்சாபில் வன்முறையை நிறுத்திவிட்டு, பஞ்சாப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்’ என்று சௌகானிடம் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.

நான் லண்டனில் உள்ள சௌகானின்அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றேன். இருவரும் தேநீர் அருந்தி னோம். அந்த இடத்தில் ஏற்கெனவே 10 அல்லது 12 நபர்கள் இருந்தனர். சௌகான் என்னை கீழ்த்தளத்தில் இருந்த காலிஸ்தான் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு தொலைத் தொடர்புக்குத் தேவை யான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் தொலைத் தொடர்புகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாட்டினை அவர் விளக்கினார். சௌகானிடம், மேல்தளத்தில் கூடி இருக்கும் நபர்கள் யார் எனக் கேட்டேன். அவர்கள் பப்பர்கல்சா, காலிஸ்தான் கமண்டோ படை மற்றும் எல்.டி.டி.ஈ-யைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார். அதில் எல்.டி.டி.ஈ-யின் ஆர்.எம்.பிரதியும் இருந்தார். நான் பிற நபர்களின் பெயர்களைக் கேட்கவில்லை.

நான் சௌகானிடம், 'எப்படி சந்திரசேகர்ஜி ஐந்து வருடங்களுக்குப் பிரதம மந்திரியாக நீடிப்பார்?’ எனக் கேட்டேன். அதற்கு சௌகான், 'சந்திரசேகர், ராஜீவ் காந்தியை அழிப்பார்’ என என்னிடம் கூறினார். 'ராஜீவ் அழிவுக்குப் பிறகு காங்கிரஸில் முக்கியமான தலை வர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர், காங்கிரஸ், சந்திரசேகரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளும். எனவே சந்திரசேகர் ஐந்து வருடங்கள் பதவியில் இருப்பார்’ என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படு வார் எனக் கேட்டேன்... 'சீக்கியர்கள் மட்டும் அல்ல... தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்குத் தயாராக இருக்கலாம்’ என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்வீந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா’ (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறிய விரும்பினேன். ஆனால் அவர்கள், 'அதைக் கேட்கக் கூடாது’ எனக் கூறினர்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து, 'ராஜீவ் அழிக்கப்படுவார்’ என் பதை நான் சந்திரசேகரிடம் கூற வேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம், 'புது தில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவைக் கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது’ எனக் கூறினார். நான் அவரிடம், 'இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புது தில்லியில் வைத்து ராஜீவ் கொலை செய்யப்பட்டால், இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர்கூட உயிருடன் தப்ப முடியாது’ என்று சொன்னேன். 'நாங்கள் ஏற்கெனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்ட மிட்டுவிட்டதால், அந்தப் பாதையில் இருந்து விலக மாட்டேன்’ என்று அவர் சொன்னார்.

நான் சௌகானை கீழ்த் தளத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் விதமாக அவர் மனதை மாற்றினேன். 'ராஜீவ் டெல்லியில் வைத்து கொல்லப்படாமல் இருப்பதை தான் பார்த்துக்கொள்வதோடு, வேறு ஏதேனும் ஓர் இடத்தில் கொலையை நிகழ்த்தும்படி பார்த்துக் கொள்வேன்’ என்று அவர் கூறினார். 'எனக்கு சந்திராசாமியிடம் தொடர்பு உள்ளது’ என்றார். சந்திராசாமியிடம் போதுமான அளவு பணமும் திட்டங்களும் உள்ளது. அவரிடமும் இதைப்பற்றிக் கேட்டபோது, தாங்கள் டெல்லியில் வைத்து ராஜீவ்காந்தியைக் கொல்லப் போவது இல்லையென முடிவு செய்து இருப்பதாகத் தெரிவித்தார்.

நான் லண்டனில் இருந்து 1991 ஜனவரி 2 அன்று திரும்பினேன்... சௌகான் என்னிடம் மூன்று கடிதங்கள் கொடுத்தார். அதில் ஒன்று சந்திர சேகருக்கு... நான் அங்கிருந்து கிளம்பும்போது, இந்தியத் தலைவர்களான சரத்பவார், ஓம்பிரகாஷ் சவுதாலா, சந்திராசாமி மற்றும் இண்டியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுடன், சர்தார் பல்வீந்தர் சிங் வர்மா ஆகியோர் தன்னை வந்து சந்தித்ததாக சௌகான் என்னிடம் தெரிவித்தார். ஒரு சந்திப்பு பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்ள எக்ஸ்பிரஸ் டவரில் நடந்தது. அந்தக் கூட்டம் 'காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் அமைப்பது மற்றும் ராஜீவ்காந்தியை அழிப்பது’ ஆகிய விஷயங்கள் சம்பந்தப் பட்டது.

லண்டனில் பேசப்பட்ட விஷயங்களை நான் ராஜீவ் காந்தியிடம் (பிப்ரவரி 10, 1991 அன்று பாராளுமன்ற இல்லத்தில் வைத்து) விளக்கினேன். இந்த விஷயங்களை சந்திரசேகரிடமும் தெரிவித்துவிட்டதாகக் கூறினேன். சிறிது அதிர்ச்சியடைந்த ராஜீவ் காந்திக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. அவர் கோபமடைந்தது நன்றாகத் தெரிந்தது. நான் ராஜீவை மீண்டும் 1991, பிப்ரவரி 14 அல்லது 15-ல் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய இல்லத்தை வேவு பார்த்ததாக, இரண்டு ஹரியானா காவலர்கள் பிடிபட்டனர். ராஜீவே இதை என்னிடம் கூறினார். இதே அளவு ஆபத்தான விஷ யத்தை நான் அவரிடம் தெரிவித்ததாகவும் ராஜீவ் கூறி னார். சௌகானுக்கு சந்திராசாமி மற்றும் சரத்பவார் பணம் அளித்து இருந்தனர்... ராஜீவ்ஜியின் கொலைக்குப் பின்னால் சந்திராசாமி உள்ளார்!'' என்று விலாவாரியாக விவரிக்கிறது அந்த வாக்குமூலம்.

எஸ்.ஐ.டி. விசாரணைக்கு நேர்மாறான விஷயங்களாக இருக்கின்றன ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள். தமிழகத்திலும் இவை பலத்த சர்ச்சையைக் கிளப்பலாம்!

ஜூனியர் விகடன்

கலைஞர் பெயர் அழிப்பு ! திமுகவினர் கொந்தளிப்பால் சேலத்தில் பரபரப்பு !

சேலம் அம்மாபேட்டையில் உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தையின் முகப்பில் கலைஞர் கருணாநிதியால் அர்ப்பணிக்கப்பட்ட உழவர் சந்தை என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. 05.04.2011 அன்று காலையில் பார்த்தபோது கலைஞர் கருணாநிதி என்ற வாசகம் கருப்பு மையினால் அழிக்கப்பட்டிருந்தது.

இதை பார்த்த திமுகவினர் உழவர் சந்தை முன்னர் கூட்டமாக கூடினர். பின்னர் திமுக மாநகராட்சி உறுப்பினர் திருஞானம் தலைமையில் திமுகவினர் உழவர் சந்தை அதிகாரிகளிடம் கலைஞர் பெயரை அழித்தது யார் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கலைஞர் பெயரை நாங்கள் அழிக்கவில்லை. கலைஞர் பெயரை நீக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை. யாரோ தவறான நோக்கத்தில் கலைஞர் பெயரை அழித்துள்ளனர். அவர்கள் யாரென கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்றே கலைஞர் பெயர் மீண்டும் எழுதப்படும் என்று சொன்னதை தொடர்ந்து திமுகவினர் கலைந்து சென்றனர்.

ராம்தேவை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்: சோனியா அதிரடி முடிவு .


ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்தேவ் மத்திய அரசையும், சோனியாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா வீட்டில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ராம்தேவுக்கு எதிராக எத்த கைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று விவாதித்தனர்.

கூட்ட முடிவில், ராம்தேவ் எப்படிப்பட்டவர்? அளவுக்கு அதிகமாக எவ்வளவு சொத்துக்கள் சேர்த்து வைத்துள்ளார்? அவரது உதவியாளர்கள் செய்துள்ள கிரிமினல் குற்றங்கள் என்னென்ன? ராம்தேவுக்கு பின்னணியில் இருந்து உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பன போன்றவற்றை மக்களிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள் என்று சோனியா உத்தரவிட்டார். தேவைப்பட்டால் ராம்தேவை எதிர்த்து போராட்டம் நடத்தவும் தயங்கக் கூடாது என்று சோனியா அறிவுறுத்தினர்.

இந்த தகவல்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி டெல்லியில் நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

ராம்தேவ் விடுதுள்ள சவாலை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்பதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம். மக்களிடம் செல்வாக்கும், ஆதரவும் பெற இயலாத சில கட்சிகளும், சில மதவாத அமைப்புகளும் ராம்தேவை முன்நிறுத்தி சட்டப்படியான, ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்க முயல்கின்றன.

காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என்று மதவாத சக்திகள் முயல்கின்றன. காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையாக இருந்து இந்த முயற்சிகளை தடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் சாதனைகளையும் கொள்கைகளையும் மக்களிடம் விளக்க வேண்டும். சோனியா எங்களுடன் தனிப்பட்ட யார் பற்றியும் விவாதிக்கவில்லை. ராம்தேவ் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. அவருக்கு சில சக்திகள் உதவுகின்றன. எனவே டெல்லி போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை நூற்றுக்கு நூறு சரியான நடவடிக்கை ஆகும்.

இவ்வாறு ஜனார்த்தன் திவேதி கூறினார்.

ஜனாதிபதியை சந்திக்கிறார்கள் பாஜக தலைவர்கள்.


ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வன்முறையின் மூலம் கலைத்த மத்திய அரசின் செயல் குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று சந்தித்து புகார் கொடுக்கவுள்ளனர் பாஜக தலைவர்கள்.

பாஜக தலைவர் நிதின் கத்காரி தலைமையில் டெல்லி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிட வளாகத்தில் பாஜகவினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலையில் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இரவு முழுவதும் அத்வானி, கத்காரி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும், நூற்றுக்கணக்கான பாஜகவினரும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ராம்தேவ் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று சந்திக்கின்றனர் பாஜக தலைவர்கள். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்து விளக்கி நடவடிக்கை எடுக்கக் கோரவுள்ளோம். பிற்பகலில் பாஜக குழுவினர் சந்திப்பார்கள்.

இந்தியாவின் காட்மதர் என்று கூறப்படும் இந்திரா காந்தியையே எதிர்த்துப் போராடி வென்ற இயக்கம் பாஜக என்பதை காங்கிரஸ் மறந்து விடக் கூடாது.

இதை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்திரா காந்திக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்துக் கொடுத்ததை அவர்கள் மறந்து விடக் கூடாது. இவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒட்டுமொத்த நாடும் கோபத்துடன் உள்ளது. போராட்ட மனோபாவத்தில் மக்கள் உள்ளனர்.

பாபா ராம்தேவ் போன்ற ஊழலை எதிர்த்துப் போராடுவோர் மீது இந்த அரசு பிரயோகித்து வரும் வன்முறை, அராஜகத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்த அரசு பதவியில் நீடிக்கும் அருகதையை இழந்து விட்டது.

அதேசமயம், பிரிவினையைத் தூண்டி வரும், நாட்டுக்கு எதிராக பேசி வரும் சையத் அலி ஷா கிலானி போன்றோரை தொடர்ந்து சுதந்திரமாக பேச விட்டு வருகிறது இந்த அரசு என்றார் பிரசாத்.

ராம்தேவ் வெளியேற்றம்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி நோட்டீஸ்.


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவருடன் உண்ணாவிரதம் இருந்தவர்களை வன்முறை மூலம் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது குறித்து 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை செயலாளர், டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராம்தேவ் வெளியேற்றப்பட்ட விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து இன்று விசாரித்தது. அதன் பின்னர் இந்த நோட்டீஸைப் பிறப்பிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

பாபா ராம்தேவிற்கு ஆதரவாக பா.ஜனதா தலைவர்கள் சத்யாகிரக போராட்டம்.


பாபா ராம்தேவ் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காந்தி சமாதி முன்பு பாரதீய ஜனதா தலைவர்கள் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு ராம் தேவை போலீசார் 04.06.2011 அன்று அதிகாலையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அவருடன் உண்ணாவிரதம் இருந்த கூட்டத்தினரை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி ராம் லீலா மைதானத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் வி.கே.மல்கோத்ரா தலைமையில் பா.ஜனதா கட்சியினர் 04.06.2011 அன்று போராட்டம் நடத்தினார்கள். அதில், டெல்லியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

டெல்லியில் 04.06.2011 அன்று நடைபெற்ற பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், பாபா ராம்தேவுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் 24 மணி நேர சத்யாகிரக போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி முன்பு பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் தலைவர்கள் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். 04.06.2011 அன்று இரவு 7 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கியது.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம் : கலைஞரின் உருக்கம்.


திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் கருணாநிதி பேசியது:

தேர்தலில் முதன் முதலாக திருவாரூரிலேயே போட்டியிட விரும்பினேன். ஆனால், அப்போது இந்தத் தொகுதி தனித்தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டதால், தற்போதுதான் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்து, இதில் திமுகவில் யாரும் பெறாத 50,000-த்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். இதற்குக் காரணமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை முதல்வராக ஆக்க வேண்டும் என்றும் பல்வேறு தொகுதிகளில் வாக்கு அளித்தவர்களும், வாக்கு அளிக்க நினைத்தவர்களுக்கும், வாக்கு அளிக்க இயலாதவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் ஏமாற்றி விட்டார்கள்

தமிழக மக்கள் என்னை ஏமாற்றினாலும், திருவாரூர் தொகுதி மக்கள் எனக்கு தூக்க முடியாத சுமையை ஏற்றி உள்ளனர். அது சுமையாக இருந்தாலும் சுகமான சுமையாக இருக்கிறது.

56, 67-ல் நடந்த தேர்தல்களில் நான் இங்கு போட்டியிட வேண்டும் என்று விரும்பினாலும், அப்போது இருந்த அரசியல் பிரமுகர்கள் வேண்டும் என்றே இந்த தொகுதியை தனித்தொகுதியாக ஆக்கி போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். அதன் காரணமாக இவ்வளவு காலம் காத்திருந்து போட்டியிட்ட என்னை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளீர்கள்.

நான் நீங்கள் விரும்பியபடி முதல்வராக ஆகவில்லை என்றாலும் உங்கள் எம்.எல்.ஏ.வாக ஆகி விட்டேன். ஒரு எம்.எல்.ஏ.வாக செய்ய வேண்டிய பணியை உங்களுக்கு நான் நேரடியாக ஈடுபட்டோ அல்லது தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களை வைத்தோ செய்து தருவேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.

தி.மு.க. இந்த தேர்தலில் தோற்று விட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது தோற்பது திராவிட இயக்கத்தின் உணர்வு, கொள்கைகள் அல்ல. அவைகளை மேலும் கூர்மைப்படுத்தி, வலிமைப்படுத்த இந்த தோல்வி அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆட்சி வந்துள்ளது எனப் பலர் கூறுகிறார்கள். அந்த ஆட்சி வெளியிட்ட ஆளுநர் உரையைப் படித்துப் பார்த்தேன். அதை அச்சுப்பிழையின்றி தயாரிக்கக்கூட இந்த ஆட்சியால் முடியவில்லை. அதில் பேரறிஞர் என்பது பேராறிஞர் என்று அச்சிட்டுள்ளனர். மேலும், தங்களை அறியாமலேயே ஓர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளனர். அது என்னவெனில், இந்தப் புதிய அரசும் ஏழை, எளிய மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் என்பதுதான். அப்படி என்றால், முந்தைய அரசு (திமுக அரசு) அப்படி இருந்துள்ளது என்பதுதானே பொருள். இதைப் பிழை என்று கருதாமல் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்.

அதே உரையில், கடந்த ஆட்சியில் பயமுறுத்தி சேர்க்கப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டு, மீண்டும் உரியவர்களிடம் சேர்க்கப்படும். அதற்கென புதிய சட்டம் இயற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிறுதாவூர் நிலமும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்படுமென நம்புகிறேன்.

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், செம்மொழி மைய அலுவலகம், நூலகம் ஆகியவை தற்போது எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. இதுதான் தமிழை உலகறியச் செய்யும் செயலா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் கட்டிய புனித ஜார்ஜ் கோட்டையிலேயே எவ்வளவு காலத்துக்கு சட்டப்பேரவையை நடத்துவது என்பதற்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதைப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திறந்துவைத்தனர்.

அந்த கட்டிடத்தை பற்றி பாராட்டாத ஏடுகளே கிடையாது. அந்த கட்டிடத்துக்கு கிடைத்த புகழை, நசுக்க, சீரழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அந்த இடத்தையே மாற்றி பழைய முறையிலேயே சட்டமன்றம் நடக்கும் என்று கூறினால் அதற்கு என்ன பெயர். மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னார்கள். இந்த மாற்றம் தானா. இப்படிப்பட்ட மாற்றத்தை தான் தமிழர்கள் விரும்பினார்களா என்பதற்கு பதில் வேண்டாமா. மாற்றம் வேண்டும் என்பது காலாகாலமாக கூறி வருவது. அந்த மாற்றம் ஏற்பட்டே தீரும்.

வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டம் போட்டு முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவித்து அவ்வாறே 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தையும் கைவிடப்படுவதாக அறிவித்தால் நியாயம் தானா? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

குடிசை வீடுகளில் யார் இருக்கிறார்கள். சீமான்களா, பணக்கார அதிபர்களா? மிட்டா மிராசுகளுக்காகவா, மாடமாளிகையில் இருப்பவர்களுக்காக இல்லை. குடிசைகளில் உள்ள பாட்டாளி, பாட்டாளியின் மனைவி, குழந்தைகளுக்காக இந்த திட்டத்தை அறிவித்து ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு உதவித்தொகையை உயர்த்தி அறிவித்து வந்துள்ளேன். முதலில் ரூ.75 ஆயிரம் அதன் பின்னர் 1 லட்சத்து 25 ஆயிரம் என்றெல்லாமல் உயர்த்தினேனே அந்த பெரும் திட்டத்தை கைவிடுகிறேன் என்று இந்த அரசு கூறி உள்ளது.

தேர்தல் என்பதற்காக இலவச திட்டங்களை நாங்கள் அறிவிக்கவில்லை. தொடர்ந்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டம். இது நீண்ட கால திட்டம். தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இலவச மின்சாரம் தி.மு.க. ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. இடையில் சில பிரச்சினை காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கான தடங்கல்களை மக்கள் சிரமப்பட்டு ஏற்றுக்கொண்டார்கள்.



புதிய ஆட்சி ஏற்பட்டும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, ரவுடியிசம் நடைபெற்று வருகிறதே? எந்த ஆட்சியிலும் இது தவிர்க்க முடியாதது. இவற்றைத் தடுத்து பாதுகாக்கத்தான் காவல் துறை இருக்கிறது. திமுக ஆட்சியை விமர்சித்து எழுதிய நாளேடுகள், வார ஏடுகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன?

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி திராவிட இயக்கக் கொள்கைகளை, லட்சியங்களை கூர்தீட்டிக் கொள்ளப் பயன்படும்.

தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியால் திமுகவின் வலிமை மேலும் பெருகும். கொள்கைகளுக்காகவும், லட்சியங்களுக்காவும் பாடுபடும் இயக்கம் திமுக என்றார்

திமுகவை அழிக்க முடியாது

தி.மு.க.வை இது போன்ற செயல்பாடுகளால், இது போன்ற நிகழ்வுகளால் வீழ்த்தி விடலாம் என்று எண்ணிப்பார்ப்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

என்னைப்பற்றி, எனது மகன்களை, மகள்களை பற்றி, பேரன்களை பற்றி பல்வேறு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் கருத்து விஷமாகி திராவிட இயக்கம் என்ற அந்த சொல்லையே வீழ்த்தி விடலாம் என்று. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்து விட, வீழ்த்தி விட எந்த கொம்பனும் பிறக்கவில்லை.

எனது மகள் கனிமொழி டெல்லி திகார் சிறையில் உள்ளார். எனது மூத்த மகள் செல்வி இங்கு வந்துள்ளார். அவர் திருவாரூர் தொகுதியில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். அவரின் உழைப்பை யாரும் மறக்க முடியாது. செல்வியோடு, கனிமொழியும் ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார்.


கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம் :

’’என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார்.

வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை. கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என்மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் செல்வியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப் படமாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப்பெற்றிருக்கின்றோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்கா பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது.

இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இங்கே கூடியிருக்கின்ற உங்களிடம் என் வேதனையை பகிர்ந்துகொண்டேன்.

வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்

வேதனையை பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதால் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தின் லட்சியத்திற்காக, கொள்கைக்காக, எந்த காரியம் செய்ய வேண்டுமோ? அதை செய்துவிட்டுத்தான் மறைவேன் என்று உங்களிடம் கூறி விடைபெற்றுக்கொள்வதற்காகத்தான் வந்தேன். இப்படி சொல்வதால் பொதுவாழ்க்கையில் இருந்து அல்ல. இந்த இயக்கத்தை எல்லோரும் ஒன்று சேர்ந்து காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

கூட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவே கருணாநிதி திருவாரூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார்.

அழுதார்

கருணாநிதி பேசும்போது, குறிப்பாக கனிமொழி குறித்துப் பேசும்போது அவ்வப்போது கண்கலங்கி சில விநாடிகள் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். பின்னர் விம்மிய குரலில் அவர் தொடர்ந்து பேசினார். கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறை குறித்து அவர் பேசும்போது அழுது விட்டார்.