Monday, June 6, 2011

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணை தாக்குதல் ; 14 தீவிரவாதிகள் பலி.

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணை    தாக்குதல்; 14 தீவிரவாதிகள் பலி

அமெரிக்கா வெளியுறவுதுறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கடந்த மாதம் பாகிஸ்தான் வந்தார். அப்போது தேடப்படும் 5 முக்கிய குற்றவாளிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டது. அதில் இலியாஸ் காஷ்மீரி, அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி மற்றும் ஆப்கானிஸ்தான், தலிபான் தலைவர் முல்லா ஓமர் ஆகியோர் பெயர் இருந்தது.

மேலும் தீவிரவாதிகள் பெருமளவில் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் பாகிஸ்தானுடன் சேர்ந்து அமெரிக்கா இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தெற்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதிகளாக இலியாஸ் காஷ்மீரி, அமீர் அம்சா ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தெற்கு வசிரிஸ்தானில் உள்ள மலைப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இன்று மீண்டும் ஏவுகணைகளை வீசின. வானா நகரம் அருகேயுள்ள ஷலாம் தானா என்ற இடத்தில் மதரசா மற்றும் வீடுகளில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டதில் அங்கு பதுங்கியிருந்த 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் வெளி நாடுகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளும் அடங்குவர். இப்பகுதி தலிபான் தீவிரவாதி முல்லா நசீர் பிரிவின் கமாண்டர் மலாங்கட்டுப்பாட்டில் உள்ளது.

இது இங்கு கடந்த 4 நாட்கள் நடந்த அமெரிக்காவின் 2-வது ஏவுகணை தாக்குதலாகும். இந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் இதுவரை 34 தடவை ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு மற்றும் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அதில் 250 தீவிரவாதிகள் மற்றும் பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.

No comments: