Monday, June 6, 2011

ஜனாதிபதியை சந்திக்கிறார்கள் பாஜக தலைவர்கள்.


ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வன்முறையின் மூலம் கலைத்த மத்திய அரசின் செயல் குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று சந்தித்து புகார் கொடுக்கவுள்ளனர் பாஜக தலைவர்கள்.

பாஜக தலைவர் நிதின் கத்காரி தலைமையில் டெல்லி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிட வளாகத்தில் பாஜகவினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலையில் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இரவு முழுவதும் அத்வானி, கத்காரி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும், நூற்றுக்கணக்கான பாஜகவினரும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ராம்தேவ் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று சந்திக்கின்றனர் பாஜக தலைவர்கள். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்து விளக்கி நடவடிக்கை எடுக்கக் கோரவுள்ளோம். பிற்பகலில் பாஜக குழுவினர் சந்திப்பார்கள்.

இந்தியாவின் காட்மதர் என்று கூறப்படும் இந்திரா காந்தியையே எதிர்த்துப் போராடி வென்ற இயக்கம் பாஜக என்பதை காங்கிரஸ் மறந்து விடக் கூடாது.

இதை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்திரா காந்திக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்துக் கொடுத்ததை அவர்கள் மறந்து விடக் கூடாது. இவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒட்டுமொத்த நாடும் கோபத்துடன் உள்ளது. போராட்ட மனோபாவத்தில் மக்கள் உள்ளனர்.

பாபா ராம்தேவ் போன்ற ஊழலை எதிர்த்துப் போராடுவோர் மீது இந்த அரசு பிரயோகித்து வரும் வன்முறை, அராஜகத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்த அரசு பதவியில் நீடிக்கும் அருகதையை இழந்து விட்டது.

அதேசமயம், பிரிவினையைத் தூண்டி வரும், நாட்டுக்கு எதிராக பேசி வரும் சையத் அலி ஷா கிலானி போன்றோரை தொடர்ந்து சுதந்திரமாக பேச விட்டு வருகிறது இந்த அரசு என்றார் பிரசாத்.

No comments: