Monday, June 6, 2011

ராம்தேவை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்: சோனியா அதிரடி முடிவு .


ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்தேவ் மத்திய அரசையும், சோனியாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா வீட்டில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ராம்தேவுக்கு எதிராக எத்த கைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று விவாதித்தனர்.

கூட்ட முடிவில், ராம்தேவ் எப்படிப்பட்டவர்? அளவுக்கு அதிகமாக எவ்வளவு சொத்துக்கள் சேர்த்து வைத்துள்ளார்? அவரது உதவியாளர்கள் செய்துள்ள கிரிமினல் குற்றங்கள் என்னென்ன? ராம்தேவுக்கு பின்னணியில் இருந்து உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பன போன்றவற்றை மக்களிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள் என்று சோனியா உத்தரவிட்டார். தேவைப்பட்டால் ராம்தேவை எதிர்த்து போராட்டம் நடத்தவும் தயங்கக் கூடாது என்று சோனியா அறிவுறுத்தினர்.

இந்த தகவல்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி டெல்லியில் நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

ராம்தேவ் விடுதுள்ள சவாலை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்பதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம். மக்களிடம் செல்வாக்கும், ஆதரவும் பெற இயலாத சில கட்சிகளும், சில மதவாத அமைப்புகளும் ராம்தேவை முன்நிறுத்தி சட்டப்படியான, ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்க முயல்கின்றன.

காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என்று மதவாத சக்திகள் முயல்கின்றன. காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையாக இருந்து இந்த முயற்சிகளை தடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் சாதனைகளையும் கொள்கைகளையும் மக்களிடம் விளக்க வேண்டும். சோனியா எங்களுடன் தனிப்பட்ட யார் பற்றியும் விவாதிக்கவில்லை. ராம்தேவ் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. அவருக்கு சில சக்திகள் உதவுகின்றன. எனவே டெல்லி போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை நூற்றுக்கு நூறு சரியான நடவடிக்கை ஆகும்.

இவ்வாறு ஜனார்த்தன் திவேதி கூறினார்.

No comments: