Saturday, February 5, 2011

ஓ.ஹென்றியின் சிறுகதை.

கடைசி இலை. The Last Leaf.


வாஷிங்டனில் ஓவியக் கலைஞர்கள் குடியிருக்கும் பகுதி அது.

அந்த மூன்று மாடி செங்கல் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில்தான் இணைபிரியாத தோழிகளான 'சூ'வும் 'ஜான்சி'யும் ஓவியக்கூடம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் இடமும் அதுதான்.

திடீரென அந்தப் பகுதியிலுள்ளவர்களைத் தாக்கிய நிமோனியா காய்ச்சலினால் படுத்த படுக்கையானாள் ஜான்சி. படுக்கையில் படுத்தபடியே ஜன்னல் வழியே தெரியும் அடுத்த வீட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

டாக்டர் வந்து ஜான்சியைப் பரிசோதித்தார்.

பிழைக்கமாட்டோம் என்று அவளாகவே எண்ணிக் கொண்டிருக்கிறாள்.அவள் மனதில் ஏதாவது ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாளா? என்று சூ விடம் விசாரித்தார் டாக்டர்.

நேபிள்ஸ் கடலை ஓவியமாகத் தீட்டவேண்டும் என்பது தான் அவளுடைய இலட்சியம், என்றாள் சூ.

வேறு ஏதாவது அவள் மனதில் இருக்கிதா? யாரேனும் ண் பிள்ளையை நினைத்துக் கொண்டு.........

அப்படி எதுவும் இல்லையே டாக்டர்!

அப்படியானால் பலவீனம் காரணமாக அவள் தன்னம்பிக்கையை இழந்திருக்கலாம். என்னால் முடிந்தவரை சிகிச்சை செய்கிறேன். ஆனால் ஒன்று. நோயாளி எப்போது தனது முடிவை-சவ ஊர்வலத்தைப் பற்றியெல்லாம் எண்ணத் தொடங்கிவிட்டாளோ அப்போதே மருந்தின் சக்தி பாதியாகக் குறைந்துவிட்டது. அவளுக்கு மனநிம்மதி ஏற்படுமேயானால் அவள் பிழைக்க கூடும் என்ற உறுதி மொழியை என்னால் தர முடியும்.

இப்படிக் கூறி விட்டு டாக்டர் போய்விட்டார். படம் வரைவதற்கான கருவிகளுடன் ஜான்சியின் அறைக்குள் நுழைந்தாள் சூ.

ஜன்னல் பக்கம் பார்த்தபடி ஜான்சி படுத்திருந்தாள். சூ படம் வரைந்து கொண்டிருந்த போது ஜான்சியிடமிருந்து மெல்லிய சப்தம் வந்தது. உடனே ஜான்சி அருகே அவள் ஓடினாள்.

ஜான்சி, ஜன்னலை பார்த்தபடி இறங்கு வரிசையில் எண்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். பன்னிரண்டு என்றாள்; பின்னர் பதினொன்று என்றாள்; அப்புறம் பத்து, ஒன்பது, எட்டு, ஏழு என்று வரிசையாகச் சொன்னாள்.

ஜன்னல் வழியாக ஜான்சி எதை எண்ணுகிறாள் என்பதைப் பார்ப்பதற்காக சூவும் ஜன்னல் அருகே சென்று பார்த்தாள்

கொஞ்ச தூரத்தில் ஒரு செங்கல் வீடுதான் இருந்தது. அதன் சுவரில் ஒரு திராட்சைக்கொடி படர்ந்திருந்தது. இலையுதிர்காலமாக இருந்ததினால் பெரும்பாலான இலைகள் உதிர்ந்து 'எலும்புக்கூடு' போல் காட்சியளித்தது.

'என்ன அது?' என்றாள் சூ ஜான்சியைப் பார்த்து.

'ஆறு' என்றாள் ஜான்சி. அவை வெகு வேகமாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன்னால் சுமார் நூறு இருந்தது; அவற்றை எண்ணினாலே தலைவலி வரும் போலிருந்தது. இப்போது எண்ணுவதில் கடினம் இல்லை. அதோ, இன்னொன்றும் உதிர்கிறது. இப்போது ஐந்துதான் மீதம் இருக்கிறது.

'ஐந்துதான் மீதியா? நீ எதைச் சொல்கிறாய் ஜான்சி?'

இலைகள். அந்த திராட்சைக் கொடியிலிருக்கும் இலைகள். அதிலிருந்து கடைசி இலை உதிர்ந்து விட்டால், நானும் போய்விடுவேன். மூன்று நாளாக இதை நான் அறிவேன். டாக்டர் உன்னிடம் சொல்லவில்லையா?.

ச்சீ அப்படியெல்லாம் உளறாதே. திராட்சைக் கொடியிலிருந்து இலைகள் உதிர்வதற்கும், நீ சுகம் அடைவதற்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் நீ பிழைத்துக் கொள்வாய் என்று டாக்டர் கூறியிருக்கிறார். அமைதியாக இரு. நான் போய், நீ சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டு வருகிறேன்.

எனக்காக நீ எதுவும் கொண்டுவரவேண்டிய தேவை இருக்காது. அதோ இன்னொன்றும் உதிர்கிறது. இனி நாலே நாலுதான் இருக்கிறது. அந்தி சாய்வதற்கு முன்னால் கடைசி இலை உதிர்வதை நான் பார்க்கவேண்டும். அப்புறம் நானும் போய்விடுவேன்.

ஜான்சி, பேசாமல் கண்ணை மூடித்தூங்கு. ஜன்னலைப் பார்க்காதே, நாளைக்குள் இந்தப் படத்தை நான் வரைந்து முடிக்கவேண்டும்.

சரி,சரி நீ வரைந்து முடித்தவுடன் சொல் ஏனென்றால் அந்தக் கடைசி இலை உதிர்வதை நான் பார்க்கவேண்டும்.

நீ அமைதியாகத் தூங்கு, என் படத்திற்கு 'போஸ்' தர பெர்மனை நான் அழைத்து வருகிறேன். ஒரு நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று கூறிவிட்டுக் கீழே இறங்கினாள் சூ.

சூ வின் கலைக்கூடம் இருந்த கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் வசித்து வந்த பெர்மனுக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். 'மோசஸ்' மாதிரி தாடி வைத்திருந்தார். அவரும் ஒரு ஓவியர். ஆனால் ஓவியக் கலையில் அவரால் முன்னேற முடியவில்லை. 'ஒரு மகத்தான ஓவியத்தை தீட்டப்போகிறேன்' என்றுதான் வேலையைத் தொடங்குமுன் கூறுவார். ஆனால் அவர் தீட்டிய ஓவியத்தை எவரும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள்.

அந்தப் பகுதியிலுள்ள ஓவியர்கள் தாங்கள் தீட்டும் சில படங்களுக்கு மாடலாக அவரைப் பயன்படுத்தி வந்தார்கள். இதில் கிடைக்கும் குறைந்த வருவாயில்தான் அவர் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். 'இறப்பதற்குள் இலட்சிய ஓவியம் ஒன்றை வரைந்து விட்டுத்தான் சாவேன்' என்று எல்லோரிடமும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்.

பெர்மனிடம் ஜான்சியின் பயத்தையும், பீதியையும் பற்றிக் கூறினாள் சூ.

இந்தப் பெண்களே இப்படித்தான்! எதையும் கண்டு நடுங்குவார்கள் என்றார் பெர்மன்.

சூவும், பெர்மனும் மாடிக்குச் சென்ற போது, ஜான்சி தூங்கிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கதவை மூடிவிட்டு படம் வரையத் தொடங்கினாள் சூ.

மறுநாள் காலை.

படுக்கையை விட்டு சூ எழுந்தவுடன், ஜான்சி அவளை அழைத்தாள்.

முதலில் ஜன்னல் கதவைத் திற நான் பார்க்கவேண்டும் என்று ஆணையிட்டாள் ஜான்சி.

சூ ஜன்னல் கதவைத் திறந்தாள்.

என்ன ஆச்சரியம்!

இரவு பெய்த மழை, வீசிய சூறாவளிக்குப் பிறகும், அந்த திராட்சைக் கொடியில் ஒரே ஒரு இலை மட்டும் இன்னும் மீதமிருந்தது. அது செங்கல் சுவருடன் ஒட்டியிருந்தது

அது தான் கடைசி இலை. நிச்சயம் நேற்றிரவே உதிர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். இன்று உதிர்ந்துவிடும். அதே சமயத்தில் நானும் இறந்து விடுவேன். என்று கூறினாள்.

சூ அவளுக்கு தைரியம் கூறினாள்.

பகல் கழிந்தது. இருள் கவிழ்ந்தது. காற்று அடித்தது. மழையும் நிற்கவில்லை.

பொழுது புலர்ந்தது. ஜன்னல் கதவைத் திறக்கச்சொன்னாள் ஜான்சி.

அவ்வாறே செய்தாள் சூ.

அந்த திராட்சை இலை இன்னும் அதே இடத்தில் அசையாமல் இருந்தது.

அந்த இலையையே நீண்ட நேரம் உற்றுப் பார்த்தாள் ஜான்சி. பிறகு சூவை அழைத்தாள்.

'நான் ரொம்ப மோசம் சூ!. இதை எனக்கு உணர்த்துவதற்காகத் தான் ஏதோ ஒன்று அந்த இலையை மட்டும் கொடியில் தங்க வைத்திருக்கிறது. சாக வேண்டும் என்று விரும்புவது பாவம்... எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா... முகம் பார்க்கும் கண்ணாடியை கொண்டு வா... நான் வசதியாக உட்கார்ந்து கொண்டு, நீ சமைப்பதைப் பார்க்கிறேன்', என்று உற்சாகத்துடன் கூறினாள் ஜான்சி.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவள் சொன்னாள்; 'சூ எப்படியும் நேபிள்ஸ் கடலை ஓவியமாகத் தீட்டுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மாலையில் டாக்டர் வந்தார். 'உனது பராமரிப்பில் நிச்சயம் உன்தோழி பிழைத்துக் கொள்வாள்' என்று சூவிடம் கூறிவிட்டுப் புறப்படத் தயாரானார்.

இதே கட்டிடத்தின் கீழ்தளத்தில் ஒரு நோயாளி இருக்கிறார். பெர்மன் என்று பெயர்.அவருக்கு நிமோனியா, பிழைப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. இன்று அவர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்படுகிறார். என்றார் டாக்டர்.

மாலையில் ஜான்சியிடம் வந்தாள் சூ

.'பெர்மன் நிமோனியாவினால் இறந்து விட்டார். அவர் இரண்டே இரண்டு நாள் தான் படுத்திருந்தார். முந்தாநாள் காலையில் தனது அறைக்கு அருகில் அவர் கீழே கிடந்தார். ஆடைகளெல்லாம் நனைந்திருந்தன. இரவு எங்கே போய்வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.பின்னர் தான் ஜன்னல் வழியே தெரிகிறதே ஒரு சுவர். அதன் அருகில் ஒரு கைவிளக்கு, ஏணி, வண்ணங்கள், சில பிரஷ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீயும் ஜன்னல் வழியே பார். காற்றடிக்கும் போது அந்த கடைசி இலை மட்டும் விழவில்லையே என்று ஆச்சரியப்பட்டாய் அல்லவா! உண்மையில் அது இலை அல்ல. பெர்மன் தீட்டிய விலைமதிப்பற்ற சித்திரம்!

கடைசி இலை விழுந்ததே, மழை பெய்தஅந்த இரவில் தான். அந்த செங்கல் சுவரில் இந்த இலையைத்தான் பெர்மன் தீட்டிக்கொண்டிருந்திருக்கிறார்'.