Friday, September 16, 2011

தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் அண்ணா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறியுள்ளது : தணிக்கை குழு குற்றச்சாட்டு.

தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் அண்ணா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறியுள்ளது: தணிக்கை குழு குற்றச்சாட்டு

தமிழக அரசின் 2009- 10-ஆம் நிதியாண்டின் வரவு- செலவு கணக்குகளை ஆய்வு செய்த, மத்திய கணக்கு தணிக்கை துறை சட்ட சபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது.

ஆகியவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பது குறிப்பிட்டுள்ளது. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் 32 இளநிலை படிப்புகளுக்கும், 48 முதுநிலைப்பட்டப்படிப்புகளுக் கும், சுயசார்பு படிப்புகளாக நடத்த அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளுக்கு தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில், குறைந்த பட்சமாக 85 மதிப்பெண்ணும், நிரந்தர அனுமதி வழங்க 90 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல், குறைந்த பட்ச மதிப்பெண்ணை 85-ல் இருந்து 50 ஆக குறைக்க பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக தகுதி யில்லாத 111 கல்லூரிகள் இணைப்பு அனுமதி பெற்றுள்ளன. மேலும் இணைப்பு வழங்குவதற்கு அளவு கோல்களான ஆசிரியர் குழு, சோதனை கூடம், நூல கம், மற்றும் பொது வசதிகள் ஆகிய நான்கிற்கும் தனித்தனியே குறைந்த பட்ச மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை.

இணைப்புகளுக்கான நெறிகளை தளர்த்தியதும், ஒவ்வொரு அளவு கோலுக்கும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ண யிக்காததும், இணைப்பு கல்லூரிகள் வழங்கும் கல்வியின் தரத்தை பாதிக்கக் கூடிய செயலாகும். இணைப்பிற்கான நிபந்தனைகளை பல்கலைக்கழகம் விழிப்புடன் இருந்து தீவிரமாக செயல்படுத்தவில்லை. புதிதாக என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பத்தில் பாடப்பிரிவுகளை தொடங்கும் பொழுதோ, நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது குறைக்கவோ அகில இந்திய தொழில் கல்வி மன்றத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.) ஒப்புதல் மிகவும் அவசியம்.

ஆனால், இதன் விதிகளை மீறி என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளில் கூடுதலாக 42 மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்துள்ளது. கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:38 என்ற அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வலைத்தளம் சார்ந்த தொழில் நுட்ப வள ஆதாரங்களை வழங்குவதற்காக கருத்துரு செய்யப்பட்ட “அறிவுத்தர மையம்” 6 ஆண்டுகளுக்கு மேலாக காலதாமதம் ஆனதுடன் அதற்காக செல வழித்த ரூ.6.16 கோடி வீணானது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடிகை சோனா பாலியல் புகார் : எஸ்.பி.பி. சரண் மீது வழக்கு...

நடிகை சோனா மானபங்கம் புகார்:    எஸ்.பி.பி. சரண் மீது வழக்கு

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், மற்றும் கோ, பத்துக்கு பத்து, குரு என் ஆளு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கனி மொழி என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் மீது நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் பரபரப்பான பாலியல் புகார் அளித்துள்ளார்.

எஸ்.பி.பி. சரண் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் ஆவார். உன்னை சரண் அடைந்தேன் என்ற படத்தில் நடித்துள்ளார். சென்னை-28 ஆரண்ய காண்டம் போன்ற படங்களையும் தயாரித்து உள்ளார். சோனா போலீசில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா, படத்தில் நடித்த வைபவ் அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, எஸ்.பி.பி. சரண் உள்பட 30 பேர் அந்த விருந்தில் பங்கேற்றனர். அங்கு மது பரிமாறப்பட்டது. எல்லோரும் மது அருந்தினர். அப்போது எஸ்.பி.பி. சரண் திடீரென என்னை மானபங்கம் செய்தார். இன்று இரவு என்னோடு இருக்கிறாயா என்று கேட்டு கட்டாயப்படுத்தினார். அவரிடம் இருந்து நான் தப்பி ஓடினேன். இந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது. எஸ்.பி.பி. சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

பின்னர் சோனா கதறி அழுதபடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது எஸ்.பி.பி. சரண் என் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். பலர் முன்னிலையில் அசிங்கமாக நடந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். உன்னைப்பற்றி தெரியாதா நீ நடிகை தானே என்று அசிங்கமாக பேசினார். உன் ரேட் என்ன சொல் என்றார். நான் விலை மாது அல்ல. என்னிடம் அசிங்கமாக நடந்த எஸ்.பி.பி.சரண் சட்டையை வெங்கட் பிரபு பிடித்து இழுத்து சண்டைக்கு போனார்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே நான் தயாரித்த படம் தோல்வி அடைந்து பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். அதை மறைத்து எல்லோரிடமும் சிரித்து பழகினேன். எஸ்.பி.பி. சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்றார்.

சோனா புகார் மீது போலீசார் பெண்கள் வன் கொடுமை சட்டம் (4), ஐ.பி.சி. (354), மானபங்க படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி கூறும் போது மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட நடிகர்களிடம் நேரில் விசாரணை நடத்தப்படும். சோனாவை மானபங்கம் செய்தது உண்மை என தெரியவந்தால் எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படுவார் என்றார்.

நல்லக்கண்ணு வந்த காரை மடக்கிய எச்.டி.எப்.சி. வங்கி ஊழியர்கள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு : போலீசில் ஒப்படைக்க உத்தரவு .

நல்லக்கண்ணு வந்த காரை மடக்கிய வங்கி ஊழியர்கள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு: போலீசில் ஒப்படைக்க உத்தரவு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, சென்னை நுங்கம்பாக்கம் அருகே காரில் சென்ற போது அந்த காரை சிலர் வழி மறித்தனர். நண்பரின் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கார் கடனுக்காக வழிமறித்து காரை பறிமுதல் செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது அந்த கும்பலுக்கும் அவரது நண்பருக்கும் இடையே தகராறு ஏற்படவே நல்லக்கண்ணு ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவம் காட்டுத் தீ போல் பரவியது.

நல்லக்கண்ணு சென்ற காரை மறித்தது யார்? என்று பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

கார் டிரைவர் சுதிர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் எச்.டி.எப்.சி. வங்கியில் வாங்கிய கார் கடனுக்காக வங்கி ஏஜெண்டுகள் 8 பேர் இந்த அடாவடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் (147), தடுத்து நிறுத்தல் (341), கெட்டவார்த்தை பேசுதல் (299 (பி)), கொலை மிரட்டல் 506 (1) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 பேரையும் உடனடியாக போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த தனியார் வங்கியை போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கூடாது - கர்நாடகா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கூடாது- கர்நாடகா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து, தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கு மீது கர்நாடக ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுவது என்பது வழக்கை தாமதப்படுத்தும் செயல். மீண்டும் விசாரிக்க கோருவது என்பது நீதிக்கு எதிரானது. வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.‌ தமிழக அரசு வேறு எந்த உத்தரவையும் பிறப்பித்து வழக்கை தாமதப்படுத்தக்கூடாது என்று கூறினார்.

நரகத்திலும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவனையெல்லாம் காட்டி எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார்கள் : நாஞ்சில் சம்பத்.மதிமுகவின் திறந்தவெளி மாநாடு இன்று 15.9.2011 நடந்தது. 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டிற்கு திரண்டிருந்தனர். இம்மாநாட்டில் கொள்கை பரப்புசெயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அவர், ’’அச்சம் தீர்க்கிற ஆணிவேர். மிச்சம் இருக்கிற தமிழர்களின் கடைசி நம்பிக்கை. என் உடல் இயக்கும் நல்லுயிர் வைகோ நடத்துகின்ற மகாநாட்டில் புலி இல்லாமல் இருப்பதா? என்று நினைத்து இங்கே நிஜ புலியே வந்ததுமாதிரி சிலையை அன்பளிப்பாக வழங்கினார்கள். பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.

இதுதான் சுத்தமான மகாநாடு. சுயமான மகாநாடு. இது வரை நடந்த மகாநாட்டில் எல்லாம் ஏதோ ஒரு தோட்டத்திலிருந்து ஒருவரை அழைத்து வருவீர்கள். அங்கே அடிமை போல் இருப்போம்.

உங்கள் தகுதிக்கு சம்பந்தம் இல்லாமல் நீங்கள் ( வைகோ) அம்மாவுடன் கூட்டணி வைத்தீர்கள். என் தகுதிக்கு சம்பந்தம் இல்லாமல் நான் அம்மா என்று சொன்னேன். என்னைப்பெற்ற அம்மா கூட நான் இப்படி பேசி வந்ததற்கு மனம் வருந்தினார்.

அந்த கட்சிக்கு நாங்கள் எப்படியெல்லாம் உழைத்தோம். சட்டமன்றத்திலே அந்த கட்சி எப்போது வெளிநடப்பு செய்தாலும் அவர்களின் கருத்துக்கு ஒத்துப்போய் வெளிநடப்பு செய்தோம். சட்டமன்ற அவை நேரத்திலே ஓ.பி.எஸ். ஒண்ணுக்குப் போவதற்காக எழுந்து சென்றால் கூட, வெளிநடப்பு செய்கிறார் என்று எழுந்து சென்றோம். அப்படியெல்லாம் உழைத்த எங்களுக்கு மதிப்பு இல்லை.

நரகத்திற்கு போனால் கூட வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவனையெல்லாம் காட்டி, அந்த ஆணழகனைக்காட்டி எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார்கள். அதனால் ஒதுங்கிக்கொண்டோம்.

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்; துளை செல்லும் காற்று இசையாதல் அதிசயம் என்று அண்ணன் வைரமுத்து எழுதினார். எங்கள் கட்சியும் அதிசயம்தான். சட்டமன்ற தேர்தலிலே போட்டியிடாமல் ஒரு கட்சி நடைபோடுகிறது. அந்த அதிசயக்கட்சி எங்கள் கட்சி.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்றார்கள். எங்கள் பிள்ளைகளை இரண்டு மாதங்களாக படிக்கவிடவில்லையே. சமச்சீர் கல்வியில் அப்படி என்ன கோபம்? சரி, திருவள்ளுவர் மீது அப்படி என்ன கோபம். அதை மறைக்கிறீர்கள். அதுவும் பச்சை ஸ்டிக்கரை வைத்து.

முக்கிய தலைவர்களின் படங்களையெல்லாம் கிழித்து எறிந்தீர்கள். இதுதான் படிச்சிக்கிழிப்பதா? கலைஞர் கொண்டுவந்ததையெல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்றால் கலைஞர் நடத்தி வைத்தை கல்யாணங்களையெல்லாம் ரத்து செய்துவிடச்சொல்லுவீர்களா?

திமுகவில் இப்போது யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் கட்சி மகிழ்ச்சி திமுக.

2016 எங்களது இலக்கு ; அப்போது முடிப்போம் பலரது கணக்கு’’ என்று பேசினார்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை செயல்படுத்தக்கோரிய அனைவரும் கைது...சேலத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்படாடமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக மருத்துவர்களை நியமித்தும் செயல்படுத்தக்கோரியும், சேலம் கந்தம்பட்டி பைபாஸில் இருந்து ஊர்வலமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் முத்துக்கண்ணன் தலைமையில் 30 பேர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

அவர்களை பள்ளப்பட்டி போலீசார் ஊர்வலமாக செல்ல விடாமல் தடுத்ததை தொடர்ந்து சாலை மறியலில் இறங்கினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு பகுதியான பள்ளப்பட்டி 3 சாலை பகுதியில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இன்னொரு பிரிவினர் சாலை மறியலில் இறங்கி போக்குவரத்தை தடை செய்தனர்.

அந்த இடத்திற்கு வந்த பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சந்தோஷ்குமார், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.சேலத்தில் 6 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டனர்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த திமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டது. இதனால் மக்களின் முழுபயன்பாட்டிற்கு அந்த மருத்துவமனை வரவில்லை. அந்த மருத்துவமனையை முழு பயன்பட்டிற்கு கொண்டு வரக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் மனு அளித்தனர்.

ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதையடுத்து இன்று காலையில் சேலம் ஜங்ஷன், கந்தம்பட்டி பைபாஸ், மூன்று ரோடு, சன்னியாசி குண்டு உட்பட 6 இடங்களில் நடைபயணம் நடத்தப் போவதாக அறிவித்தனர். ஆனால் மூன்று ரோடு பகுதியில் நடைபயணத்திற்கு பதிலாக திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வெளியூரில் இருந்து சேலம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் வர முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை மறியலைக் கைவிடக் கோரியும் யாரும் கலைந்து போகவில்லை. இதைத் தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் கைது செய்யப் போவதாக பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் கூறியும் யாரும் கலையாமல் நின்றதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

10 பேரை பிடித்து வேனில் ஏற்றினர். தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. கைது செய்யும் போது தொண்டர்கள் கடித்ததில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் கோபி மற்றும் போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் நடந்த நடைபயணத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர். இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜங்ஷன் அருகே 38 பேர் உட்பட 6 இடங்களில் நடந்த ஆர்ப்பட்டத்தில் மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேயர் பதவி - ஜெயலலிதா அதிரடி : விஜய்காந்த் கடும் அதிர்ச்சி !தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதை தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

இந்தப் பதவிகள் மீது கண் வைத்து இத்தனை நாட்களாக அதிமுகவை எந்த வகையிலும் விமர்சிக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

அதே போல அதிமுகவுக்கே குளிர் ஜுரம் வரும் அளவுக்கு ஆட்சியைப் பாராட்டி குவித்து வரும் இடதுசாரிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர்.

தேமுதிகவைப் பொறுத்தவரை மதுரை, சேலம் மாநகராட்சிகள் உள்பட 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை குறி வைத்திருந்தது. அந்த இடங்களையும் முக்கிய நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் பதவிகளையும் கேட்டுப் பெறும் வரை அதிமுக ஆட்சியை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை என்ற 'கொள்கையுடன்' சட்டசபையில் செயல்பட்டது தேமுதிக.

ஆனால், எப்படி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிகவையே கேட்காமல் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி முதலில் ஒரு லிஸ்ட் வெளியிட்டதோ, அதே ஸ்டைலில் இப்போதும் செயல்பட்டுள்ளது அதிமுக.

அதாவது, 10 மேயர் பதவிகளும் எங்களுக்கே. உங்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

அதே போல மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு மேயர் பதவி கூட கிடையாது என்றும் சொல்லப்பட்டுவிட்டது.

இதனால் இந்தக் கட்சிகளும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

குழந்தைகளை பாதிக்கும் மூளை செயல்திறன் குறைபாடு...மனிதர்களின் தலைமைச்செயலகம் என்று அழைக்கப்படும் மூளையானது சரியான வளர்ச்சியுடன் இல்லை என்றால் பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கால்கள் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும். கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.

தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மூளை வளர்ச்சி குறைவதற்கு, முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் மீது பழி போடப்பட்டது. இப்போது மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

ஆயிரத்தில் இருவர்

பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும். தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தைக்கு மஞ்சள் காமாலை உருவாகும் போது அதை கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும்.

ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்படும்.

அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம்.

மத்திய நரம்பு மண்டல பாதிப்பு

மூளை செயல் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மூளை நரம்பியல் நிபுணர்கள் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

இக் குறைபாட்டினால் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல. குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.

மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம்; கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம். குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம்.

விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.

இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்காது; சொல்லின் வடிவம் மாறும்.

மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும். பார்வைத் திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும். மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்து பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்கின்றனர் மூளை நரம்பியல் வல்லுநர்கள்

அறிவில் சிறந்தவர்கள்

மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை என்கின்றனர் மருத்துவர்கள்

உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை பராமரிக்கவும், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்னை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.

மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பும்தான் என்பது மருத்துவர்களின் அறிவுரை.