Wednesday, April 13, 2011

தமிழக சட்டமன்ற தேர்தலில் 75.21 சதவீத வாக்குகள் பதிவு: பிரவீன்குமார்.


தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. 5 மணிவரை வரிசையில் நின்ற வாக்காளர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, மாநிலம் முழுவதும் மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளில் குவிந்து ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். பல பகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தைக் காணமுடிந்தது.

முதல் முறையாக வாக்களிக்க வருவோர், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது.

காலையிலேயே வெயில் கடுமையாக அடித்து வருகின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பல இடங்களில் மின்னணு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது. அந்த இடங்களில் ஓட்டுப்போட அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

தமிழக சட்மன்ற தேர்தலில் 75.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்ட நிலவரம் அறிந்த பின் இறுதி நிலவரம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.


சேலம் - போலீஸ் தடியடி? அதிமுக பிரமுகர் பலி!

சேலம் அருகே உள்ள சிவதாபுரத்தில் வாக்குச்சாவடி அருகே திமுக அதிமுகவினர் வாக்குச் சேகரித்தனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

ஆனால் அது வாக்குச் சாவடிக்கு 200 மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட இடம் என்பதால் போலீசார் அவர்களைக் கலைந்து போகச் சொல்லியுள்ளனர்.

ஆனால் அவர்கள் மெத்தனமாக இருக்கவே, போலீசார் அவர்களை விரட்டத் தொடங்கியுள்ளனர். இதில் கூட்டத்தில் இருந்த அதிமுக தொண்டர் சின்னசாமி (வயது 52) என்பவர் ஓடும்போது கால் இடறி விழுந்து இறந்ததாகச் சொல்லப் படுகிறது.

ஆனால், போலீசார் அடித்ததால்தான் அவர் இறந்தார் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சின்னசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


'அவாள்' ஆசை பலிக்காது. திமுக 200 தொகுதிகளைப் பெறும்!- மு.க. அழகிரி.


திமுகவுக்கு எதிராக 'அவாள்'களும் தேர்தல் ஆணையமும் செய்த வேலைகள் பலிக்கவில்லை. இந்தத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும், என்றார் மத்திய அமைச்சர் முக அழகிரி.

மதுரை முத்துப்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஓட்டு போட்டார். அவருடன் அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த மு.க.அழகிரி கூறுகையில், "தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. 6வது முறையாக கலைஞர் முதல்வராவார். தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் மட்டும் 40ல் இருந்து 45 தொகுதிக்குள் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

தி.மு.க.வினர் பணப் பட்டுவாடா செய்து வருவதாக எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். அது அவர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.

தி.மு.க. வேட்பாளர்கள், நிர்ணயித்த தொகையை கூட செலவு செய்ய முடிய வில்லை. தி.மு.க. தனது சாதனைகளையும், தேர்தல் அறிக்கைகளையும் கூறி பொதுமக்களிடம் பிரசாரம் செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் பல்வேறு கெடுபிடிகளை விதித்தது. தி.மு.க. வெற்றியை தடுத்து நிறுத்தி அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வருவது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடாக இருந்தது. இதற்காக 'அவாள்'ளாம் ரொம்ப தீவிரமாக வேலை செய்தனர். ஆனால் மக்கள் ஆவல் திமுக மீதுதான் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்," என்றார்.


நல்ல 'மார்க்' போடுங்கள் : கருணாநிதி வேண்டுகோள்.


இன்று தேர்தல் நாள். இன்று தமிழ்நாட்டு மக்கள் நாம் கடந்த ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிக்கு மதிப்பெண் அளிக்கின்ற நாள்.

பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவார்கள், ஆனால் மாணவர்கள் ஆசிரியருக்கு மதிப்பெண் போடுவதில்லை. ஆனால் அரசியலில் தங்களை ஆட்சி செய்தவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் முறையாக, ஒழுங்காக, சீராக தேர்வு எழுதினார்களா என்பதைக் கண்ட பொதுமக்கள் அதற்காக மதிப்பெண் அளிக்கின்ற நாள்தான் இன்று.

ஓராண்டு முழுதும் வயலையே சுற்றிச் சுற்றி வந்து, உரமிட்டு, நாற்று நட்டு, களையெடுத்து பயிரை பராமரித்த விவசாயி அதற்கான அறுவடையைச் செய்து "கண்டு முதல்'' செய்கின்ற நாள்தான் இன்று.

ஆண்களை மிஞ்சிய பெண்களின் வரவேற்பு

கடந்த ஐந்தாண்டுகளில் நாம் எந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் நமக்குப் பெருமையாகத்தான் இருக்கின்றது. ஆட்சியில் இருந்தபோது என்ன செய்து கிழித்தார்கள் என்று நம்மைப் பார்த்து யாரும் கேட்க முடியாது. வாக்குகேட்டுச் சென்று மக்களைப் பார்த்தபோது அவர்கள் யாரும் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. ஆண்களை மிஞ்சும் வகையில் இந்த முறை தாய்மார்கள் நம்மை வரவேற்ற காட்சி நினைத்து நினைத்துப் பெருமிதம் கொள்கின்ற அளவிற்குத்தான் இருந்தது.

கடலூரில் திரண்ட மாபெரும் மக்கள் சமுத்திரத்தைச் சந்தித்துவிட்டு, இரவே சிதம்பரம் வந்து தூக்கம் என்ற பெயரால் ஒரு சில மணி நேரம் படுத்துப் புரண்டுவிட்டு, மறுநாள் காலையில் நான் போட்டியிடும் திருவாரூர் நோக்கி எங்கள் "வேன்'' புறப்பட்டது. கொள்ளிடத்திற்கும் சீர்காழிக்கும் இடையே ஒரு கிராமத்தில் மக்கள் வழிமறித்து வரவேற்றார்கள். ஒரு சிறுமி! பத்து வயதுதான் இருக்கும். கறு நிறம்! கையிலே ஒரு சால்வை. கூட்டத்திற்குள் புகுந்து வேன் அருகே எப்படி வந்தாள் என்றே தெரியவில்லை.

'ஆறாவது முறையும் முதல்வராவீர்கள் தாத்தா'

வேனின் கண்ணாடி வழியாக தன் முகத்தை நீட்டி "தாத்தா! ஆறாவது முறையாக நீங்கள் வெற்றி பெற்று இந்த வழியாக வருவீர்கள்! அப்போதும் நான் உங்களுக்கு இதே இடத்தில் சால்வை அணிவிப்பேன்'' என்று கணீர் குரலில் கூறியபோது அந்த வண்டியிலே இருந்த எங்கள் அனைவருக்கும் மெய் சிலிர்த்தது. அந்த மழலை இன்னமும் என் கண்களை விட்டு நீங்கவில்லை.

மேலும் பத்து கல் அந்தப் பெண்ணைப் பற்றியே பேசிக்கொண்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டே சென்றபோது மயிலாடுதுறை அருகிலே ஒரு கிராமம். சாலையோரத்தில் மீண்டும் வேன் நின்றபோது, அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவர் தன் பேரனுடன் நின்று கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம் போட்டிபோட்டுக் கொண்டு சால்வைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெரியவர் என்னிடம் "அய்யா, கடந்த ஆண்டு 75 ஆயிரம் ரூபாய் நீங்க கொடுத்த அரசு நிதியாலத்தான் இதோ என் பேரன் ஆப்பரேஷன் செய்யப்பட்டு இன்றளவும் உயிரோட இருக்கான். உங்களையும் பாக்கிறான். நீங்க நன்றாக இருக்கணும்'' என்று வாழ்த்திய போது, அதைவிடப் பெரு மகிழ்ச்சிக்குரிய ஒன்று இருக்க முடியுமா?

மக்கள் கடலில் நீந்திச் சென்றேன்

இந்தச் சுற்றுப் பயணத்தின் இதுபோன்ற காட்சிகள் பல! நேற்று தேர்தல் பிரச்சார கடைசி நாள் அல்லவா? தம்பி டி.ஆர்.பாலுவும், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், திருவாரூரில் எனக்காகத் தேர்தல் பணியாற்றிய தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் செயலாளர் தம்பி சண்முகமும், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியும் அமர்ந்து நான் மூன்று நாள் பயணம் செய்ய வேண்டியதை ஒரே நாளில் வகுத்துக்கொண்டு என்னை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மாறாக வழி நெடுக மக்கள் கடலில் நான் நீந்திச் செல்ல வேண்டி நேரிட்டதால் ஒருசில ஊர்களுக்குச் செல்லமுடியாமலே போய்விட்டது.

குறிப்பாக திருவாரூர் தொகுதியிலே உள்ள ஓடாச்சேரி, புத்தூர், ஆமூர், வடகுடி போன்ற கிராமங்களுக்கும், திருவாரூர் நகரிலே உள்ள பல தெருக்களுக்கும் செல்ல முடியாமையால் மாவட்ட செயலாளரை அங்கே சென்று அங்குள்ளவர்களுக்கு சமாதானம் கூறச் சொல்லியிருக்கிறேன்.

இந்த நிலையில் நாம் மதிய உணவுக்காக திருவாரூர் இல்லம் திரும்பி சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக்கொண்டு பொதுக்கூட்ட மேடைக்குச் செல்ல வேண்டுமென்றால் நேரம் இல்லை. எனவே வழியிலே கொரடாச்சேரியில் மாவட்டச் செயலாளரின் சிறிய அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கே ஏதாவது மதிய உணவு அருந்திவிட்டு, பயணத்தைத் தொடரலாம் என்று தயங்கித் தயங்கி பூண்டி கலைவாணன் கேட்டார்.

வலியின் கொடுமையை மறைத்துக் கொண்டு..!

அவர் தயக்கத்திற்குக் காரணம் என்னுடைய உடல் நிலைதான். கடந்த ஆண்டுதான் என்னுடைய முதுகிலே மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பதை நீ அறிவாய். என்னுடைய வயது 87 என்பதும் உனக்குத் தெரியும். அந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட இடத்தில் அவ்வப்போது எனக்கு எப்படிப்பட்ட வலி எடுக்கிறது என்பதை என்னுடன் இருப்பவர்கள்தான் அறிவார்கள். சில நேரங்களில் வாய்விட்டே கத்தி விடுகிறேன்.

இந்த உடம்போடு அந்த தள்ளு வண்டியிலே பயணம். அந்த வண்டியிலே நீ உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும்! உடலை அப்படி இப்படி அசைக்க முடியாது. அதிலே பயணம் செய்யும்போது, எனது வலியின் கொடுமையை மறைத்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு குரல் கொடுக்கின்ற மக்கள் முன்னால் சிரித்துக் கொண்டே கையை காட்டவேண்டும். ஒரு சிறிய கிராமத்தில் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். உடனே என்னோடு பயணம் செய்த முரசொலி செல்வம், என் மகள் செல்வியும் கையைக் காட்டுங்கள் என்று குரல் கொடுப்பார்கள்.

கையோ தூக்க வேண்டுமா என்று பரிதாபமாக என்னைப் பார்த்துக் கேட்கும். இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கையைத் தூக்கி காட்டும்போது அந்த மக்கள் காட்டுகின்ற அன்புப் பொழிவில் அந்த வலி குறையும். அதற்குள் என் பின்னால் அமர்ந்திருக்கும் மனைவி தயாளு "என்னங்க, இந்தப் பக்கம் பாருங்க, எவ்வளவுபேரு கையை காட்டுறாங்க!'' என்று கூற - நான் இரண்டு புறமும் மாறி மாறி கையை ஆட்டும்போது தெரியாத வலி, இப்போதுதான் தெரிகிறது!

இந்த நிலையில் கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட செயலாளரின் சிறிய அலுவலகத்திற்கு நுழைந்து, சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு, கண்கொடுத்த வனிதம், எருக்காட்டூர், கமலாபுரம், குளிக்கரை, அம்மை யப்பன், தண்டலை, விளமல் கிராமங்களில் வாக்குகளைக் கேட்டுவிட்டு, நேராக மேடைக்கு வரவே 4.15 மணி ஆகிவிட்டது.

ஓய்வெடுக்கப் பிறந்தவன் அல்ல

இந்த அளவிற்கு சிரமத்தைத் தாங்கிக் கொள்ளும் எனக்கு ஹெலிகாப்டரிலோ, விமானத்திலோ பறந்துவந்து, ஆங்காங்கு எழுதிக் கொடுத்த பேச்சினை ஒருசில நிமிடங்கள் பார்த்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ள சென்னை சென்றுவிடலாம் என்ற நிலையில்லையே என் செய்வது?

எப்போதுமே மக்களுக்காக உழைக்கின்ற நேரத்தில் நான் என்னுடைய துன்பங்களைப் பெரிதாக கருதியதில்லை. ஏனென்றால் நான் ஓய்வெடுப்பதற்காக பிறந்தவன் அல்லவே! வாக்குகளைக் கேட்பதற்காக மட்டுமே மக்களைச் சந்திப்பவனும் இல்லையே! கடனுக்காக - பதவிக்கு வந்தே ஆக வேண்டுமென்ற வெறியில் மக்களைச் சந்திப்பவர்கள் வேண்டுமானால் - சகலவிதமான ஆடம்பரங்களோடு ஹெலிகாப்டரிலும், விமானத்திலும் வந்து கூட்டத்திலே மட்டுமே மக்களைச் சந்திக்கலாம்.

ஆனால் சாலையோரத்தில் உள்ள மக்களைச் சந்திப்பதையே கடமையாகக்கொண்ட எனக்கு எப்போதும் ஓய்வெடுக்கத் தெரிந்ததில்லையே! என்னுடைய மனைவியரும், பிள்ளைகளும், பெண்களும் ஒருநாள் பயணத்தைக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு பயணம் புறப்படுங்களேன் என்று கேட்பார்கள்.

ஆனால் எனது நிகழ்ச்சி நிரலை வகுத்தவர்களிடம், நான் என்ன, ஒருசில மணி நேரங்களை வீணடித்து விட்டீர்களே, அந்த நேரத்திலும் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே என்றுதான் கேட்டிருப்பேனே தவிர - நான் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்ததில்லை. அதனால்தான் அனைவரும் ஆறாவது முறையாக நான் முதல்வராக வரவேண்டுமென்று கூறுகின்றபோது, அது எனக்குப் பதவி அளிப்பதற்காக அல்ல, மக்களுக்கு பணிவிடை செய்ய தகுந்த வேலைக்காரன் நான்தான் என்ற அளவிலே தான் எடுத்துக்கொள்கிறேன் என்று கோவை கூட்டத்திலே தெரிவித்தேன்.

சீர்தூக்கிப் பார்த்து வாக்களியுங்கள்

எதற்கோ ஆரம்பித்து, கடிதம் எப்படி யெப்படியோ நீண்டு கொண்டிருக்கின்றது. இந்த நாள் இரு தரப்பினரும் கடந்த காலத்தில் எப்படியெப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அனுபவபூர்வமாக எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு நன்மைகளை, சாதனைகளை, சலுகைகளை செய்த ஆட்சி எது? அதே நேரத்தில் கொடுமைகளை, சித்திரவதைகளை, துன்பங்களைத் தந்த ஆட்சி எது? இரண்டையும் சீர்தூக்கிப் பாருங்கள்! வாக்களிக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

மக்களுக்கு செய்யப்பட்ட சாதனைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட்ட ஆட்சி எது? அவ்வாறு நிறுத்தப்பட்ட சாதனைகளை மக்களுக்கு மீண்டும் அளித்த ஆட்சி எது? 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே சொன்ன எந்த உறுதி மொழியையும் நிறைவேற்றாத ஆட்சி எது? தேர்தல் அறிக்கையிலே சொன்ன அத்தனை சாதனைகளையும் செய்ததோடு, மேலும் மக்களுக்காக புதிய புதிய சாதனைகளைக் குவித்த ஆட்சி எது? தேர்தல் அறிக்கையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவோம் என்று அறிவித்தோம். அதனை நடத்த முடியாத காரியம் என்று அப்போது ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவோம் என்று கூறி அதனை இன்றளவும் தந்துவரும் ஆட்சி தி.மு.க. ஆட்சி அல்லவா? கொரடாச்சேரியில் நான் பத்து நிமிடம் தங்கியிருந்தபோது, அந்த நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.எம்.வி. நடராசன் என்பவர் என்னைச் சந்தித்து நன்றி கூறினார். எதற்கு நன்றி என்றபோது சட்டையைத் திறந்து காட்டினார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மார்பிலே போடப்பட்ட கட்டுக்களுடன் வந்திருந்தார். நீங்கள் இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கா விட்டால் இன்றைக்கு நான் இல்லை அய்யா என்று கூறினார். இப்படி ஒவ்வொரு ஊரிலும் உங்களால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்று ஒவ்வொருவரும் கூறியபோது எனக்கு நானே மதிப்பெண் போட்டுக்கொண்டேன். ஆனால் நீங்கள் மதிப்பெண் வழங்க வேண்டிய நாள் இன்று அல்லவா? எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? மதிப்பெண் வழங்கவா? நன்றி, நன்றி என்று கூறியுள்ளார் முதல்வர்.


தேர்தலில் அதிமுகவிற்கு போலீசாரை சார்பாக்க ஜெயலலிதா முயற்சி.மக்களைப் பற்றிய கவலையின்றி, போலீசாரின் சம்பளம் குறித்து ஜெயலலிதா தமது கவலையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நேரத்தில் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டி, போலீசாரின் நலனில் தாம் மிகுந்த அக்கரை கொண்டவர் என்பதை காட்டும் விதமாக இருந்தது.

இதுவே தேர்தலில் அதிமுகவிற்கு போலீசாரை சார்பாக்க ஜெயலலிதா முயற்சி செய்யும் விதமாக உள்ளது. என்று எண்ணத் தோன்றுகிறது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் முன்னால் இராணுவத்தினருக்கு ஊதியமாக ரூ.360 வீதம் வழங்கப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு உண்டான தினப்படியும் முறையாக வழங்கப்படுகிறது.

நிலமை இவ்வாறு இருக்க ஜெயலலிதா பிரச்சனையை திசைதிருப்பி ஆதாயம் அடைய திட்டமிடுகிறார். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இன்றுகாலை 9 மணியளவில் ஜெயலலிதா தான் வாக்களிக்க வேண்டிய ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்தார். பின்னர் அங்கு ஓட்டளித்தார்.

பிறகு வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அதிமுக வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூ.300 வழங்கப் பட வேண்டும். ஆனால் மாநில அரசு முழு தொகையையும் கொடுக்க மறுப்பதால் அவர்கள் கோபத்துடன் உள்ளனர்.

எனக்கு கிடைத்த தகவல்படி முதல்- அமைச்சரின் ஆணையின் பேரில் தலைமை செயலாளர் பாதுகாப்பு படையினருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க மறுப்பதாக தெரிய வந்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநில போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார், துணை ராணுவ படையினர் போன்ற பலர் இங்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் சும்மாதான் நிற்கிறார்கள். இவர்களுக்கு ரூ.300 பணம் வழங்குவது தேவை இல்லாதது என்று தலைமை செயலாளர் முடிவு எடுத்துள்ளார்.

இந்த செயல் பாதுகாப்பு படையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வேலைநிறுத்தம் செய்யக் கூடிய அளவில் மனவேதனையில் உள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.300 தருவது இவர்களுக்கு சாத்தியம் இல்லை என்று கூறி இருப்பதை யாரும் ஏற்க முடியாது.

எனவே நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளது. இதை தேர்தல் கமிஷன் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் இந்த நேரத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் ரவுடிகளை அனுப்பி வாக்காளர்களை வாக்குச்சாவடியில் இருந்து பயமுறுத்தி அனுப்பும் நிலை ஏற்பட்டு விடும்.

இதனால் கள்ள ஓட்டு போடும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதுசம்பந்தமாக தனியாக அறிக்கை விட இப்போது நேரம் இல்லாத காரணத்தால் இந்த செய்தி மூலம் தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை செயலாளர் போலீசாருக்கு தினப்படி பணம் கொடுக்க முடியாது என சட்டப்படி கூற முடியாது என்றார்.

அப்போது செய்தியாளர்கள், இந்த தேர்தலில் ஏகப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக செய்தி வருகிறதே, பணப்பட்டுவாடா மூலம் தேர்தல் முடிவு வேறு மாதிரி இருக்கும் என நினைக்கிறீர்களா? என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் இதுவரை ரூ.50 கோடி வரை பணம் பிடிபட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் ஒட்டு மொத்த தொகையில் ஒருதுளி மட்டுமே. ஆனாலும் வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

ஆளுங்கட்சியினர் இப்படி வாரி இறைத்தாலும் மக்கள் இந்த முறை இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என உறுதியாக உள்ளனர்.

கருணாநிதி அரசு வெளியே போக வேண்டும், கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலின் தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற கேள்விக்கு,

கண்டிப்பாக எதிரொலிக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டும் அல்ல, அது வெறும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடிதான். அதற்கும் மேலும் தமிழ்நாட்டில் மணல்குவாரி மூலம் ரூ.50 ஆயிரம் கோடி, கிராணைட் குவாரி மூலம் ரூ.80 ஆயிரம் கோடி என இப்படி பல ஊழல்கள் இருக்கிறது.

இதை எல்லாம் பார்த்து மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு வந்துள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். ஊழல் எல்லா காலத்திலும், எல்லா நாட்டிலும் இருந்துள்ளது. ஆனால் இப்போது நாம் தி.மு.க. ஆட்சியில் பார்த்த ஊழல் இதுவரை கண்டறியாதது என்றார்.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது,

எங்களுக்கு ஒரு தெளிவான மெஜாரிட்டி, தனி மெஜாரிட்டி வரும் அளவுக்கு தீர்ப்பு கிடைக்கும். எங்களது கூட்டணி கட்சிகளுக்கும் அமோக வெற்றி கிடைக்கும் என்றார்.

2006 தேர்தலில் உங்களுக்கு அதிக சதவீத ஓட்டு கிடைத்தது. ஆனால் குறைந்த தொகுதிகளில் தானே வெற்றி பெற முடிந்தது? என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

இந்த தேர்தலில் அப்படி இருக்காது. மக்கள் எங்களுக்கு அமோக வெற்றியை தரப் போகிறார்கள். அதிலும் தெளிவான அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மக்கள் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ஜெயலலிதா.

எத்தனை இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, அதற்கு மே 13 வரை காத்திருங்கள் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு வாக்கு சென்னையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஜெயலலிதா போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளுமே சென்னைக்கு வெளியிலேயே இருப்பதால் அவர் இதுவரை ஒரு முறை தான் போட்டியிட்ட தொகுதியில் வாக்களித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வாக்குச்சாவடிக்குள் அலைக்கழிக்கப்பட்ட ரஜினி.நடிகர் ரஜினிகாந்த் இன்று பகல் 10.45 மணிக்கு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்கு சாவடிக்கு காரில் வந்தார். அந்த கல்லூரி வளாகத்தில் வேறு, வேறு இடங்களில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 167, 168, 169 ஆகிய எண் கொண்ட அந்த மூன்று வாக்குச்சாவடிகளும் பொது வாக்குச்சாவடிகளாகும்.

நடிகர் ரஜினி வாக்களிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி 169-வது எண் ஓட்டுச் சாவடியாகும். இது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி போர்டிகோ பகுதியில் இருந்தது.

ரஜினியின் காரும் மிகச்சரியாக அந்த வாக்குச்சாவடி அருகில் வந்து நின்றது. கருப்பு பேண்ட், ப்ளு கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்த ரஜினி அந்த ஓட்டுச்சாவடிக்குள் செல்ல முயன்றபோது திடீரென அவரை, அவருடன் வந்தவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

கல்லூரிக்குள் நுழைந்து விட்ட ரஜினி அங்கு ஓட்டுச் சாவடி இல்லாததால் திரும்பினார். இதையடுத்து அவரை 167-வது ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், உங்கள் பெயர் 169-வது வாக்குச்சாவடியில் உள்ளது. அது எதிர்புறம் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்றனர்.

இதையடுத்து ரஜினி அங்கிருந்து நடந்தே 169-வது வாக்குச்சாவடிக்கு வந்தார். அலைக்கழிக்கப்பட்ட அவர் விறுவிறுவென உள்ளே சென்றார். ரஜினி ஓட்டுப்போடுவதை படம் பிடிக்க தொலைக் காட்சி, பத்திரிகை போட்டோ கிராபர்கள் நூற்றுக்கும் மேல் திரண்டிருந்தனர். இதனால் ரஜினி சற்று சிரமத்துக்குள்ளானார். மின்னல் வேகத்தில் வாக்களித்த அவர் அதே வேகத்தில் புறப்பட்டார்.


கூடலூர் மசினகுடியில் வாக்காளர்கள் அதிருப்தி-'49 ஓ'வுக்கு வாக்களித்தனர்.


யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், அதை தெரிவிக்கும் 49 ஓ படிவத்தை வாக்குச் சாவடியில் சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை பெருமளவிலானோர் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இன்று நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிக அளவில் மசினகுடியில்தான் இதை வாக்காளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பகுதி கூடலூர் தொகுதிக்குட்பட்டதாகும். இங்குள்ள மக்கள் யானைப் பாதை மற்றும் புலிகள் சரணாலயத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியுடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மசினகுடி பகுதி மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி 49 ஓ படிவத்தை வாங்கி அதை நிரப்பித் தந்தனர்.

பெருமளவில் வாக்காளர்கள் 49 ஓ படிவத்தைக் கொடுத்து வருவதால் மசினகுடியில் பரபரப்பு நிலவுகிறது.

மக்களை மதிக்காத தேர்தல் ஆணைய எஜமானர்கள்.


தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி... கோபத்தில் வாக்களிக்க மறுத்த மக்கள்!

இது மக்களுக்கான தேர்தல்... மக்கள்தான் இந்த தேர்தலில் எஜமானர்கள் என்பதை அடியோடு மறந்து தேர்தல் ஆணையத்துக்காக தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர்...

தேர்தல் பார்வையாளர்கள் செய்த அனாவசிய கெடுபிடி காரணமாக பல வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க மனமின்றி கோபத்துடன் சென்றனர் வாக்களர்கள்.

இந்தியாவில் வேறு எந்தத் தேர்தலின்போதும், எந்த மாநிலத்திலும் காட்டாத கெடுபிடிகளை தமிழகத்தில் மட்டும் காட்டி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள். இவர்களின் தொல்லையால் ரொக்கமாக ரூ 10 ஆயிரம் கூட வெளியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இன்னொரு பக்கம், இன்று வாக்குப் பதிவு ஆரம்பித்த பிறகு வாக்குச் சாவடிகளின் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறை அந்தப் பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் போலீசாரும் தேர்தல் பார்வையாளர்களும் காட்டும் கெடுபிடியால் வாக்குவாதம் முற்றி சண்டையாகும் அளவுக்குப் போகிறது.

சென்னை மற்றும் புறநகர் வாக்குச்சாவடிகள் பலவற்றில் வாக்களிக்க வந்த மக்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கெடுபிடிகளால் கடுப்பாகி வாக்களிக்காமலே சென்ற கொடுமையும் இன்று காலையில் நடந்தது.

வாக்களிக்க வரும் பெண்கள் மற்றும் ஆண்களை நான்கைந்து இடங்களில் சோதனை செய்கின்றனர்.

"கிட்டத்தட்ட குற்றவாளிகளைப் போலவே நடத்துகின்றனர். இது மக்களுக்கான தேர்தல்... மக்கள்தான் இந்த தேர்தலில் எஜமானர்கள் என்பதை அடியோடு மறந்து தேர்தல் ஆணையத்துக்காக தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர்...", என்றார்கள் இந்தக் கெடுபிடியால் மகா கோபத்திலிருந்த வாக்காளர்கள்.

பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளதால், பயணிகளும், மார்க்கெட்டுக்கு வருவோரும் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். வாகனத்தில் சற்று தூரமாக வரும்போதே, போலீசார் விசிலை ஊதி போ போ என விரட்டும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது.. அந்த வாகன ஓட்டிகள் வேறு எங்குதான் செல்வார்கள்?!


தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு விறு விறு-மக்கள் பெரும் ஆர்வம்.


தமிழகத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளில் குவிந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பல பகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தைக் காண முடிந்தது.

முதல் முறையாக வாக்களிக்க வருவோர், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது.

காலையிலேயே வெயில் கடுமையாக அடித்து வருகின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


தொடங்கியது வாக்குப்பதிவு-பயப்படாமல் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்.


தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்றுகாலை 8 மணிக்குத் தொடங்கியது.

மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. வாக்காளர்கள் பயமில்லாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக பிரவீன்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 141 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். மொத்தம் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2,37,04,802. பெண் வாக்காளர்கள் 2,34,10,716, திருநங்கைகள் 1169.

மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக 62461 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 66799 வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் உடனே மாற்று எந்திரத்தை பொருத்தி இயக்குவதற்காக குறிப்பிட்ட அளவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். உள்ளூர் போலீசார் தவிர வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள 24 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான 9 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு தேர்தல் கமிஷனால் நேரடியாக கண்காணிக்கப்படும்.

மனசாட்சிப்படி ஓட்டுப் போடுங்கள்.

வாக்காளர்கள் அனைவரும் மனசாட்சிப்படி கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப்போடும் போது நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. வாக்குச்சாவடிக்குள் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவும், ஓட்டுப்பதிவை படம்பிடிக்காது.

எனவே, வாக்காளர்கள் பயமில்லாமல் ஓட்டுப்போடலாம். எனவே, நாம் ஓட்டுப்போடுவதை கேமரா மூலம் பார்த்து கட்சிக்காரர்கள் மிரட்டுவார்கள் என்றோ, தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர், அவருக்கு ஓட்டுப்போடவில்லை என்பதை தெரிந்து கொண்டு தங்களை புறக்கணிப்பார் என்றோ வாக்காளர்கள் அச்சப்படத் தேவையில்லை.

ஓட்டுப்போடும்போதும், பதிவான வாக்குகளை எண்ணும்போதும் யார்-யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. இதற்கு முன்பு வாக்குச்சீட்டுகளை மொத்தமாக போட்டு கலக்கிவிட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அதனால் வேட்பாளருக்கு எந்த பகுதியில் வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்கிறது.

எந்த பகுதியில் கிடைக்கவில்லை என்பது கண்டுபிடிக்க முடியாது. அதுபோல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எந்த பகுதியில் பதிவானது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. அதன்படிதான், இந்த முறை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

முறைகேடு நடந்தால் தேர்தல் ஒத்திவைப்பு.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற முறைகேடுகள் நடப்பதை தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதுபோல முறைகேடுகள் நடக்கும் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தல் முடிந்தாலும், அளவுக்கு அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்தால் குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும். ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகள் நடந்தாலும் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 1123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவின்போது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து யாரும் வாக்களிக்கவில்லை என்று தெரியவந்தால் அதுபற்றி வாக்குச்சாவடி அதிகாரி மண்டல தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பார். உடனே அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஏன் அந்த பகுதி மக்கள் வாக்களிக்க வரவில்லை என்ற காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

அவர்களை யாராவது மிரட்டியிருந்தால், போதிய பாதுகாப்பு இருப்பதால் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று சொல்லி ஓட்டுப்போட வைப்பார்கள். தேர்தலை புறக்கணித்தால் அதற்கான காரணம் கண்டறியப்படும்.

கோட்டையில் கன்ட்ரோல் ரூம்.

ஓட்டுப்பதிவின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதுபற்றி உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதற்கு வசதியாக சென்னை கோட்டையில் முதல் தளத்தில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 16 அதிகாரிகள் இங்கு பணியில் இருப்பார்கள்.

ஒரு அதிகாரி மூன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை அவ்வப்போது தெரிவிப்பார். தேர்தல் பணி தொடர்பாக உடனுக்குடன் தகவல் கிடைக்க வசதியாக வாக்குச்சாவடி அதிகாரி முதல் தலைமை தேர்தல் அதிகாரி வரை சி.யு.ஜி. முறையில் இயங்கக்கூடிய 61 ஆயிரம் செல்போன் `சிம்' கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் கடந்த மார்ச் 4-ந் தேதி நடந்தது. இதில் வக்கீல்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். அப்போது அவர்களது விரலில் மை இடப்பட்டது. அந்த மை 40 நாட்கள் வரை அழியாமல் இருக்கும். அதனால் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்காமல் போகலாம். எனவே, பார் கவுன்சில் தேர்தலில் ஓட்டுப்போட்டவர்களை சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இப்போது இந்த வழக்கு முடிந்துவிட்டது. எனவே, பார் கவுன்சிலில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது பூத் சிலிப்புடன் வரும் வக்கீல்களை ஓட்டுப்போட அனுமதிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் மீனவர்களுக்கு அளித்த நிதியுதவி.

ராமேசுவரம் மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர்ர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் முறையாக அனுமதி பெற்று அறிவித்திருக்கலாம். பொதுவாக பேரிடர் நிவாரண உதவிக்கு தேர்தல் கமிஷனும் அனுமதி அளித்துவிடும் என்றார் அவர்.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று வைக்கப்பட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்படும். மே 13ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். சில மணி நேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும். பிற்பகல் வாக்கில் யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது தெரிய வரும்.

வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு.

தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் வன்முறையில் ஈடுபட்டு மின்னணு இயந்திரங்களை கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள வாக்கு இயந்திரத்தை யாராவது அபகரிக்க முயன்றாலோ, வன்முறையில் ஈடுபட முயன்றாலோ உடனடியாக சுட்டுத் தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

13 அடையாள ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்.

வாக்காளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டி வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்களிக்க வரும்போது தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் ஸ்லிப்புகளையும் உடன் கொண்டு வர வேண்டும். அது இல்லாதவர்கள் வாக்குச் சாவடிகளில் வந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 13 ஆவணங்கள்:

பாஸ்போர்ட்

ஓட்டுநர் உரிமம்

வருமான வரி அடையாள அட்டையான பான்கார்டு

மாநில மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.

28.2.2011 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவசாய அடையாள அட்டை.

28.2.2011 வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முன்னாள் படைவீரர்கள் ஓய்வு ஊதிய குறிப்பேடு, ஓய்வு ஊதிய ஆணை போன்ற ஓய்வு ஊதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் மனைவி மற்றும் சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வு ஊதிய ஆணை, விதவை ஓய்வு ஊதிய ஆணை.

புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை.

புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள்

28.2.2011 அன்று அல்லாத அதற்கு முன்பு உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றுகள்.

புகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம்

புகைப்படத்துடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான சான்றுகள்

புகைப்படத்துடன் கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை

மத்திய தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.


2011 தேர்தல் அடையாளம் காட்டிய ஆளுமை ; வடிவேலு.


உயிருனும் மேலான உடன்பிறப்புக்களே.. ரத்ததின் ரத்தங்களே.. நாமம் வாழ்க என பேச்சை ஆரம்பிக்கும் அரசியல்வாதிகளை பிரதியெடுக்காமல், என்ணன்னே நல்லாருக்கீங்களா..அப்பத்தா நல்லாருக்கீங்களா.. அக்கா தங்கச்சீங்கள்ளாம் நல்லாருக்கீங்களா என அடித்தட்டு மக்கள் அறிந்த மொழியில் பேச்சை ஆரம்பித்த நாள் முதல், வழிநெடுக வடிவேலுவை பார்க்க காத்திருக்கும் கூட்டம் நாளுக்கு நாள் ஏறுமுகம் தான்.

அஞ்சா செஞ்சனின் கணிப்பு எப்போதும் அடித்தட்டு மக்களின் எண்ணவோட்டங்களை நாடிபிடித்து சரியாக விக்கெட்டை வீத்தும் பாணி.. அதை அப்படியே ஊர் ஊராய் பரப்பி கட்சிக்கு ஓட்டுக்களை அறுவடை செய்யும் போர்வாளாய் வடிவேலு சுழன்றதில் கலைஞர், அம்மா, விஜயகாந்த் முதல்.. சாணக்கியம் சதிவேலை என திரியும் சோ வரை ஆடிப்போய் உள்ளார்கள். திமுக’வின் எதிரணியில் ஒரு மாதத்திற்கு முன்பு வீசிய நம்பிக்கை காற்று இப்போது காற்று போன டியூபாக அமுங்கி கிடக்கிறது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால்: வட போச்சே...

எம்ஜியாருக்கு பிறகு மிகவும் எதார்த்தமாக, மக்களின் நெஞ்சை தொடுவதாக தனக்கேயுரிய நகைச்சுவை மிளிர வடிவேலு தனக்கென ஒரு ராஜபாட்டையில் போய்கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 15 மணிநேரம் ஆதித்யா மற்றும் சிரிப்பொலியில் அவரை ஒலிபரப்பிய அலைவரிசைகள் இன்று அதன் பலனை அறுவடை செய்கிறார்கள், ஆச்சரியத்துடன்.

தேர்தலில் தென்மாவட்டங்களில் அழகிரி இழக்க இருந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளித் தரும் வேலையை வடிவேலு கச்சிதமாக செய்தாலும்.. முதல் நாள் காட்டிய அதே பணிவோடுதான் அய்யா அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி தளபதி தலைவர் கலைஞர் என ஒரு நம்ம்பிக்கைகுறிய தளபதியாக வடிவேலு இந்த ஒரு மாதத்திற்குள் பரிணமித்துள்ளார்.

ஒரு காமெடியன், ஒரு காமெடியனா.. கேவலம் ஒரு காமெடி நடிகன் காமெடி பீஸ் போன்ற ஏளன பார்வையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விஜயகாந்தை அவர் நாக் அவுட் செய்ததில் விசயகாந்தின் வாக்குகள் அவுட். 108 அப்போ இருந்திருந்தா எங்கப்பாவ காப்பாத்தி இருப்பேன்னு அவர் கண்ணீர் சிந்துனப்போ.. கூட்டத்துல பல பேராலா அந்த வலிய உணர முடிஞ்சது. 108 உயிர் காக்கும்ன்னு மேடைக்கு மேடை எல்லோரும் சொன்னாலும், அதுக்கு தன் சொந்தவாழ்க்கை இழப்பை கண்ணீருடன் மக்களிடம் எடுத்துச்சென்ற லாவகம் கலைஞரே வியந்து பாராட்டிய ஒன்று.

Leaders raise up to the situations. Circumstance brings best out of the great leader. விசயகாந்த என்னும் இலக்கை நோக்கி எறிந்த அம்பு இத்துனை வீரியம் வாய்ந்ததென அழகிரியே நினைத்திருக்க வாய்ப்பில்லை. இவன் காமெடியன்.. பிரச்சாரத்தேடு இவன் வேலை முடிந்தது எனும் கருத்தோட்டம் கொண்ட பொதுமக்களின் சிந்தனையை தவிடுபொடியாக்குகிறது அவரின் அடுத்த அஸ்திரம் “தொகுதிக்கு என்ன வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க.. நான் தலைவர் கலைஞரிடம் சொல்லி அதை நிறைவேத்தறேன்.. ஆனா விஜயகாந்த் அந்தம்மாக பக்கம் ஒக்காந்து பேசமுடியுமான்னு நீங்களே சொல்லுங்கன்னு அவர் மக்கள கேக்க அவங்க முடியாது என பதில் குரல் எழுப்ப.. இது இவன்கண் விடல் எனபதில் அழகிரி, ஸ்டாலினைவிட திறமைசாலி.

அழகிரிக்கு நார்த அலர்ஜி, ஸ்டாலின் தெற்குல கால் வைக்க முடியாது. கலைஞர் தமிழ்நாடு முழுவதும் தனிஆளாய் போராட வேண்டிய நிலையில் வடிவேலுவின் entry kept the momentum going for DMK. நாடறிந்த முகம், மக்களின் நாடித்துடிப்பறிந்து பேசியது, கூட்டத்தை பேசவைப்பது மிகப்பெரும் தலைவர்களுக்கே கைவந்த கலை.. ஆனால் வடிவேலுவோ.. வரும்... வராது என மக்களை கோரஸ் பாட வைத்து திமுக ஒரு மக்கள் கட்சி என்ற redefined, refined ideology’ஐ மக்கள் மனதில் ஆழமாக பதித்திவிட்டார்.

திமுக தலைமையும் அவரை அரவணைத்து, கலைஞரும் வடிவேலும் சந்திப்பு, ஆலோசனை என தினமும் அவரை தலைமையின் நம்பிக்கைகுறீய போர்வாள் என்ற செய்தியை ஊடகத்தில் வெளியிட்டபடியே இருக்க.. மக்கள் மனதில் நம்பிக்கை பிறக்கிறது.. ஓ வடிவேலு எந்த நேரத்திலும் தலைவரை சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.. இவர் தேர்தல் நேர பிரச்சார கூத்தடி அல்ல என்ற எண்ணம் subconscious ஆக மனதில் உள்ளிறங்குகிறது.

ஒரு கைபுள்ளயாக, புலிக்கேசியாக, வண்டு முருகனாக, நாய் சேகராக நம்மை சிரித்துவைத்துக் கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் வளர்ச்சி இந்த தேர்தலின் ஒரு இனிய அதிர்ச்சி. Leaders are made, unless your father is a MLA, MP, CM or PM. :) Finally, விஜயகாந்த் என்ற ஆளுமையின் புனிதபிம்பத்தை சுக்கு நூறாக உடைத்ததில் ஆரம்பிக்கிறது ரீலுக்கு ரீல் அடிவாங்கும் இந்த கைப்புள்ளயின் அரசியல் வெற்றிப்பயணம். Comedy is a serious business. You bet. Hats off வடிவேலு அவர்களே. ம்ம்ம் கிளப்புங்கள்.

ன்றி - eyilnadu.blogspot.comநாடு திரும்ப இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தரவு.


இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 4-வது ஐ.பி.எல்.,போட்டியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு விளையாட்டுதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை அணி வரும் மேமாதம் முதல் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஸ்காந்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்றது. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் 4-வது ஐ.பி.எல் . கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் இரண்டு முன்னாள் கேப்டன்களான குமார் சங்ககாரா டெக்கான் சார்ஜஸ் அணியிலும், மகேளா ஜயவர்த்தனே கொச்சி டஸ்கர்ஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாது இலங்கையின் மற்ற வீரர்களும் ஐ.பி.எல்.,போட்டியில் விளையாடி வருகின்றனர். வரும் மே 8-ம் தேதி வரை ஐ.பி.எல்., போட்ட நடைபெற உள்ளது. மேலும் மே மாதம் 11-ம் இலங்கை அணி இங்கிலாந்திற்கு புறப்பட இருப்பதால் இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியிலிருந்து விலகி விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மகிநாதாநந்தா அல்துகாமகே உத்தரவிட்டுள்ளார்.

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை நாட்டு பிரதிநிகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிட்டத்தக்கது.