Wednesday, April 20, 2011

ஜெயலலிதா மீது கருணாநிதி 2 அவதூறு வழக்குகள்.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது முதல்வர் கருணாநிதி 2 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுக்களி்ல்,

ஏப்ரல் மாதம் 13ம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பலமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து மத்திய அமைச்சர் ஒருவர் அரசு அதிகாரிகள் துணையுடன், திமுக ரவுடிகளை கொண்டு மிகப்பெரிய வன்முறையை தேர்தலின் போது கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளார் என்றும்,

மறுநாள் வெளியான அறிக்கையில் துணை ராணுவத்தினருக்கு ரூ.300 தினப்படியை முதல்வர் கருணாநிதியின் உத்தரவின்பேரில் தலைமை செயலாளர் கொடுக்க மறுப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும், இதனால் துணை ராணுவத்தினர் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும், எனவே சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகள் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்களம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எனவே ஜெயலலிதாவை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும் !! - தங்கபாலு.


நான் மட்டும் ஒரு அறிக்கை விட்டால் போதும், தமிழ்நாடே பற்றிக் கொண்டு எரியும், என்கிறார் தங்கபாலு.

சமீப காலங்களில் செய்திகளிலும் தொண்டர்கள் மத்தியிலும் அதிகமாக 'அடிபட்ட' அரசியல்வாதி அநேகமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேவீ தங்கபாலுவாகத்தான் இருப்பார்.

தமிழகமெங்கும் ராஜபக்சேக்கு இணையாக எரிக்கப்பட்ட கொடும்பாவிகளும் இவருடையதாகத்தான் இருக்கும்.

மனைவியின் நிழலில் மயிலை சட்டமன்ற வேட்பாளரானது, வேட்பாளர் தேர்வில் குளறுபடி, உச்சகட்ட கோஷ்டி மோதல் என ஏக களேபரங்களுக்கிடையே காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தலைச் சந்தித்தது. இப்போது தங்கபாலு எந்த நேரத்திலும் பதவியிலிருந்து நீக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நீங்கள் தலைவராக உள்ள இந்த காலகட்டத்தில்தான் அதிக தொகுதிகளைப் பெற்றுள்ளது காங்கிரஸ். இருந்தும் வேட்பாளர் தேர்வில் இத்தனை குழப்பம் ஏன்?

இதற்கு தங்கபாலு என்ற தனிப்பட்ட ஒருவர் காரணமல்ல. காங்கிரஸில் அப்படி எதுவும் நடக்கவும் நடக்காது. தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு பரிந்துரை செய்து கொடுத்த பட்டியலில், ஒரு பெயரையும் விடாமல், அகில இந்திய தேர்தல் குழுவிடம் சமர்பிக்கப்பட்டது. அதன்பின், சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் , ஜெயகுமார், எம்.பி.,க்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தேர்வுக் குழுவினரை சந்தித்தனர். அந்த குழு விவாதித்து பரிசீலனை செய்து வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் குழுவிடம் சமர்பித்தது. அக்குழுவில் இடம்பெற்ற சோனியா, பிரதமர், பிரணாப் முகர்ஜி , அகமது படேல் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

வாசனுக்கும் 23 வேட்பாளர்களும், சிதம்பரத்துற்கு 10 முதல் 15 வரை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், ஐ.என்.டி.யு.சி., சிறுபான்மை துறையின் பரிந்துரையும் அந்த பட்டியலில் இடம் பெற்றது. வேட்பாளர் பட்டியல் என் விருப்பப்படிதான் முடிவு செய்யப்பட்டது என்றால், 63 வேட்பாளர்களும் எனது ஆதரவாளர்களாகத்தான் இருந்திருப்பர். கட்சிக்காக சிறை சென்றவர்களுக்கும், பல ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக உள்ளோருக்கும் தான் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காததில் எனக்கும் வருத்தம் உள்ளது. பட்டியலை இறுதி செய்யும் அதிகாரம் எனக்கு மட்டும் அல்ல; எந்த மாநில தலைவருக்கும் கிடையாது.

தேர்தல் முடிந்ததும் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 19 பேரை நீக்கினீர்கள். காரணம் என்ன?

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர், அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட சிலரை தான் நீக்கினேன். அவர்களை நான் சமாதானப்படுத்தினேன்; எச்சரிக்கை விடுத்தேன். வேட்பாளர்கள் கொடுத்த கடிதத்தின் படிதான், இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன்.

அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர்களை நீக்க மாநில தலைவர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் செய்தித் துறை தலைவர் ஜனார்தன திரிவேதியும் எனது அதிகாரத்தை உறுதிச் செய்துள்ளார். உட்கட்சி விவகாரத்தை உள்ளரங்கிற்குள்தான் பேச வேண்டும். என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளைக் கூட கடிதம் மூலமோ, நேரிலோ அல்லது அமைப்பு ரீதியான முறையில்தான் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதுகூட கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்தான்.
அதனடிப்படையில் கூட நடவடிக்கை எடுக்கலாம்.

மயிலாப்பூர் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

எனது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. சோனியா, ராகுல், பிரதமர் ஆகியோர் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்தனர். அதில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால், எனது தொகுதிக்கு மூன்று நாட்கள் பிரசாரத்திற்கு போகவில்லை. நான் திடீர் வேட்பாளராகத்தான் அறிவிக்கப்பட்டேன். கட்சியின் கட்டளைப்படி நான் வேட்பாளராகப் போட்டியிட்டேன்.

தேர்தல் முடிவு எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்?

நிச்சயமாக. ஜனநாயக முற்போக்கு கூட்டணி மீண்டும் நல்லாட்சியை வழங்கும்.

சீட்டு... ஓட்டுப் பிரச்சினை... ஆல் இன் தி கேம்!

உங்கள் மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதது குறித்து உங்கள் கருத்து?

வாக்காளர் பட்டியலில் என் மனைவியின் பெயர் இருப்பதாக, வேளச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பின் தான் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால், தேர்தல் அன்று என் பெயர், என் மகள் பெயர் மட்டுமே இருந்தது.

என்மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தும் அவரால், ஓட்டுப்போட முடியவில்லை. இது எனக்கு எதிராக நடந்த சதி. இதில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். என் மனைவிக்கு முதலில் சீட்டு பிரச்னை. பிறகு ஓட்டுப் பிரச்னை. ஆல் இன் தி கேம்!

உங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறதே?

அவர்கள் உண்மையான கட்சிக்காரர்களே அல்ல; சமூக விரோதிகள் நடத்தும் நாடகம். பத்திரிகையில் போட்டோ வரவேண்டும் என்பதற்கா செய்கின்றனர்.

பற்றி எரியும்...

மத்திய அமைச்சர்கள் உங்களை மாற்ற வேண்டுமென சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளார்களே?

அரசியல் என் தொழில் அல்ல. தலைவர் பதவியை நான் தேடி போகவில்லை. சேலத்தில் எம்.பி.,யாக இருந்தபோது, எனக்கு டெல்லியிலிருந்து திடீரென போன் வந்தது. நீங்கள்தான் தலைவர் என்றார்கள். பதவியை ஏற்றுக் கொண்டேன். கொடுத்தப் பணியை சிறப்பாக செய்கிறேன்.

நான் தலைவராக பொறுப்பேற்ற பின் 70 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக எனது ஆதரவாளர்கள் தான் சேர்த்தனர். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் என் நண்பர்களாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.

எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாகப் பயன்படுத்த மாட்டேன்.

இலங்கை அரசுக்கு எதிராக திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு என்ன காரணம்?

தமிழக மீனவர்களை இலங்கை படையினர் சுட்டுக்கொன்று வருகின்றனர். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

ஆந்திராவில் குடியை விட மறுத்த கணவனின் வாயில் ஆசிட் ஊற்றிய மனைவி.

ஆந்திராவில் குடிப்பழக்கத்தை விட மறுத்த கணவனின் வாயில் ஆசிட் ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் செகந்திரபாத்தில் உள்ள சாம்பமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் தானய்யா. கூலி தொழிலாளி. அவரது மனைவி சரளா. அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தானய்யாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனையிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். குடியை நிறுத்துமாறு சரளா எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவர் மறுத்துவிட்டார்.

நேற்று வழக்கத்தை விட அதிகமாக குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார் தானய்யா. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத கணவனின் வாயில் வீட்டில் பாத்ரூம் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை ஊற்றினார் சரளா. வாய் வெந்துபோன தானய்யா வலிதாங்கமுடியாமல் அலறினார்.

இதையடுத்து சரளா சாம்பமூர்த்தி நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை சொல்லி சரண் அடைந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தானய்யாவை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தன

நாவரசு கொலை வழக்கு : ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் த‌ண்டனை உறுதி - உச்ச நீதிமன்றம்.


தமிழகத்தையே உலுக்கிய நாவரசு கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை செ‌ன்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்ற மாணவன் நாவரசு. இவர், செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌ன்.

‌விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர்.

விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான்டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு படுகொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார்.

ஜான்டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர்.

இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான்டேவிட் தரப்பு மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான்டேவிட்டை விடுதலை செய்தனர்.

ஜா‌ன்டே‌வி‌ட்டின் இந்த ‌விடுதலையை எ‌‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 2002ஆம் ஆண்டு மே‌ல்முறை‌யீடு தாக்கல் செ‌‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த மனுவை ‌விசா‌‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ ‌நீ‌திப‌திக‌ள் முகு‌ந்த‌ம் ஷ‌ர்மா, அ‌னி‌ல் தபே ஆ‌கியோ‌ர் இ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

மாணவ‌ர் நாவரசு கொலை வழ‌க்‌கு விசாரணையில் செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்றத்தின் செய‌ல்பாடு குறித்து அ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ ‌‌நீ‌திப‌திக‌ள், ஜா‌ன் டே‌வி‌ட்‌டு‌க்கு கடலூர் நீதிமன்றம் விதித்த இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை செ‌ல்லு‌ம் எ‌ன்று தீர்ப்பளித்தனர்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. அத்துடன் ஜான்டேவிட்டின் ஜாமீனை ரத்து செய்து, மேலும் ஜா‌ன்டே‌வி‌‌ட் உடனடியாக கடலூர் சிறைச்சாலை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று்ம் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

இந்த வழக்கில் சூழ்நிலை ஆதாரங்கள் ஜான்டேவிட் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வழ‌க்கை ச‌ரியாக ‌விசா‌ரி‌க்காம‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் ஜா‌ன்டே‌வி‌ட்டு‌க்கு இ‌‌ட்டை ஆயுளை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்ததை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌ம் ‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி - 16 ராக்கெட்.


பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் இன்று காலை 10.12 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட், எக்ஸ்-சாட் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தும்.

ரிசோர்ஸ்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது. 1,206 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக் கோள் தொலை உணர்வு திறனில் (remote sensing) அதி நவீன வசதிகளைக் கொண்டது. இதன் மூலம் நாட்டின் இயற்கை வளங்களை கண்காணிக்க முடியும்.

யூத்சாட் செயற்கைக்கோள் இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பு ஆகும். இதன் எடை 92 கிலோ. விண்மீன்கள் மற்றும் காற்றுமண்டல ஆய்வுக்கு இது பயன்படும்.

எக்ஸ்-சாட் செயற்கைக்கோள் 106 கிலோ எடை உள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இதைத் தயாரித்துள்ளது.

கடைசியாக இஸ்ரோ செலுத்திய 3 ராக்கெட்களில் 2 தோல்வியடைந்துவிட்ட நிலையில் இன்றைய ராக்கெட் ஏவுதல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது ! சுப்பிரமணிய சாமி.


தமிழக தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ள அதிக வாக்குகளை, குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் சாதகமாக கருத முடியாது. இந்த முறை அதிமுகவால் பெரிய வெற்றியைப் பெற முடியாது, என்று சுப்பிரமணியசாமி கூறினார்.

ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சாமி, "தமிழக சட்டசபை தேர்தல் முடிவைப் பொருத்த வரையில், அ.தி.மு.க. கூட்டணி வெற்றிவாய்ப்பு பெரிதாக இல்லை என்றே எனக்குத் தெரிய வந்துள்ளது.

அதிகபட்சம் இரு கட்சிகளுக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் 10 தொகுதிகள் என்ற அளவிலேதான் இருக்கும்.

இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதால் அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதிவிட முடியாது. அதேபோல் தான் புதிய வாக்காளர்களின் ஓட்டுகளும். வாக்காளர்கள் ஓட்டுபோடுவதற்கு ஆர்வமாக வந்திருக்கலாம். ஆனால் இவர்கள் அதிமுகவுக்கு சாதகமாக ஓட்டளித்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

இந்த முறை தேர்தல் ஆணையத்தின் பணிகளும் பரவாயில்லை. அதற்குமேல் பாராட்ட பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அதிமுகவினரும் தேர்தலில் பணத்தை தாராளமாக செலவழித்துள்ளனர். அதை ஆணையம் பெரிதுபடுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

2ஜி குற்றவாளிகளுக்கு தண்டனை

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. அடுத்த கட்ட விசாரணை மே மாதம் நடைபெறும். ஸ்பெக்ட்ரம் வழக்கை தனிப்பட்ட முறையில் நானும் எடுத்து நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் எனக்கு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே சி.பி.ஐ. இந்த வழக்கை கையாண்டு வரும் நிலையில் வெளியில் இருந்தும் ஒருவர் வழக்கை நடத்துவது சி.பி.ஐ.க்கு புதிது ஆகும். இது தொடர்பாக சி.பி.ஐ. 2 வாரம் காலஅவகாசம் கேட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றவாளிகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தண்டனை வழங்கப்பட்டுவிடும்.

சோனியா மீது வழக்கு

போபர்ஸ் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி மீது வழக்கு தொடர பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அனுமதி கேட்டு 204 பக்க மனு ஒன்றை கடந்த 15-ந்தேதி கொடுத்துள்ளேன். இதுகுறித்து பிரதமர் ஜுலை 15-ந் தேதிக்குள் எனக்கு பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் 2ஜி விஷயத்தில் செய்தது போல உச்சநீதிமன்ற உதவியை நாடுவேன்.

எடியூரப்பா விவகாரம்

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். பிரச்சினைக்கு காரணமான ரெட்டி சகோதர்களின் அரசியல் தந்தைகள் டெல்லி காங்கிரசில் இருக்கிறார்கள். எனவே, எடியூரப்பா மீது காங்கிரசார் எப்படி குற்றம்சொல்ல முடியும். எடியூரப்பாவை ராஜினாமா செய்யக்கோரி அவர்கள் கேட்பது தவறானது.

தமிழக தேர்தல் முடிவு

லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக சேவகர் அன்னா ஹசாரே தேசப்பற்றுமிக்கவர். அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர். ஹசாரே, நமது நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அவரைச்சுற்றி அரசியல்வாதிகளும் போலி தொண்டுநிறுவனங்களின் நிர்வாகிகளும் உள்ளனர். தனது பணியின் மூலம் இப்படிப்பட்டவர்கள் அனுகூலம் அடைந்துவிட ஹசாரே அனுமதித்துவிடக்கூடாது", என்றார்.


இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு இந்தியப் படம் கூட இடம்பெறவில்லை.


சர்வதேச அளவில் மிகுந்த கவுரவமாகப் பார்க்கப்படும் 64 வது கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 11 முதல் 22-ம் தேதி வரை பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடக்கிறது.

இந்த விழாவில் மொத்தம் 33 நாடுகளிலிருந்து 49 திரைப்படங்கள் பங்கேற்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்றுகூட இந்தியப் படம் கிடையாது.

கடந்த ஆண்டுகளில் நிறைய இந்தி மற்றும் தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. தமிழ்ப் படம் வெயில் போன்றவற்றுக்கு விருதுகள் கிடைத்தன. பில்லா போன்ற படங்கள் கேன்ஸுக்கு வெளியே திரையிடப்பட்டன.

இந்த ஆண்டு விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள் குறித்து விழாவின் இயக்குநர் ஜெனரல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ராபர்ட் டி நீரோ நடுவர் குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

thatstamil.oneindia.in

"மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது'' - இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை.


டெல்லி, 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு கூறியுள்ளது. மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையை எச்சரித்துள்ளது.

கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் நிருபர்களிடம் கூறுகையில், "4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கி உள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த மரணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. மேற்கொண்டு தகவல் கிடைக்குமா என்பதை அறிய, தமிழக அரசின் தலைமை செயலாளருடன் டெலிபோனில் பேசினேன். தமிழக அரசிடம் இருந்து விரிவான தகவலுக்காக காத்திருக்கிறோம்.

கடந்த சில மாதங்களாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஒருவேனை, தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக தெரிய வந்தால், அதுபற்றி இந்தியாவிடம்தான் தெரிவிக்க வேண்டும்.

அந்த மீனவர்களைப் பிடித்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தக்கூடாது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்திய-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்கும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை", என்றார்.

thatstamil.oneindia.in

3 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி 16 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.


இந்திய வானவெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு ராக்கெட்டுகளை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டு முதல் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை 44 செயற்கை கோள்களுடன் 17 முறை விண்ணில் அனுப்பியது. அவற்றில் 16 முறை வெற்றியடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குழுவினர் மிகவும் கவனமாக செயல்பட்டு பி.எஸ்.எல்.வி சி16 ராக்கெட்டை உருவாக்கி உள்ளனர்.

இந்த ராக்கெட் இன்று (புதன் கிழமை) காலை 10 மணி 12 நிமிடங்களுக்கு விண்ணில் சீறிப்பாய்கிறது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவு தளத்தில் இந்த ராக்கெட் அனைத்து ஏற்பாடுகளுடனும் தயார் நிலையில் உள்ளது. அது சீறிப்பாய்வதற்கான கவுண்ட் டவுன்' நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) அதிகாலை 3 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் நமது நாட்டிலேயே, இஸ்ரோ' விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட 1206 கிலோ எடையுள்ள ரிசோர்ஸ் சாட் 2', இந்தியா ரஷியா கூட்டு தயாரிப்பில் உருவான 92 கிலோ எடையுள்ள ழூத்சாட்,' சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட 106 கிலோ எடையுள்ள எக்ஸ்சாட்' ஆகிய 3 செயற்கை கோள்களை ஏந்திச் செல்கிறது. சிங்கப்பூர் செயற்கை கோள் அனுப்புவது இதுதான் முதல் முறை ஆகும்.

இந்தியா ஏற்கனவே ரிசோர்ஸ்சாட் 1 என்ற செயற்கை கோளை கடந்த 2003 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அதன் ஆயுள் காலம் முடிவடைவதால் ரிசோர்ஸ்சாட் 2 என்ற அதிநவீன 2 வது செயற்கை கோள் இப்போது அனுப்பப்படுகிறது. இது இயற்கை வளங்களை கண்டறியவும், அவற்றின் மேலாண்மை பற்றி ஆராயவும் பயன்படுத்தப்படும்.

இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் 3 அதிநவீன கேமராவும், கனடா நாட்டின் காம்தேவ்' என்ற அதிநவீன கருவியும் கூடுதலாக அனுப்பப்படுகிறது. இவை ஒரு நாளைக்கு 14 முறை வானவெளியில் சுற்றி வந்து கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை அனுப்பும்.

பி.எஸ்.எல்.வி சி16 ராக்கெட் பறக்கத் தயார் நிலையில் இருப்பது பற்றி வானவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.சதீஷ் கூறியதாவது:

கவுண்ட் டவுன் நல்ல முறையில் போய்க்கொண்டு இருக்கிறது. ராக்கெட் பறப்பது தொடர்பான அனைத்தும் முன்னேற்றமான முறையில் உள்ளன. பருவ நிலையும் மிக நன்றாக உள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சரியாக, தயார் நிலையில் இருக்கும் நிலையில், திட்டமிட்டபடி நாளை (அதாவது இன்று) காலை 10 மணி 12 நிமிடங்களுக்கு ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இலங்கை இறுதிப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிப்பு ; ஐ.நா.சபை அறிக்கையில் தகவல்.

இலங்கை இறுதிப் போரில்    40 ஆயிரம் தமிழர்கள்     கொன்று குவிப்பு;    ஐ.நா.சபை அறிக்கையில் தகவல்

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணு வத்துக்கும் இடையே தமிழ்ஈழ இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது இலங்கை ராணுவத்தினரால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த போர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. சபை ஒரு குழுவை அமைத்தது. அக்குழு ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூனிடம் அதன் அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில், இறுதி கட்ட போரில் இனப்படு கொலை நடந்துள்ளது. இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈவுஇறக்கமின்றி கொன்று குவித்துள்ளனர். என கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு இலங்கை அரசு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது. அது போன்று நடைபெறவில்லை என மறுப்பு கூறியது. இதற்கிடையே இறுதி கட்ட போரின் போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே, வெளியான சாவு எண்ணிக்கையை விட மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. 75 ஆயிரம் முதல் 77 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.


வெடித்து சிதறிய ஜப்பான் அணு உலையில் கதிர்வீச்சு வீரியம் அதிகரிப்பு ; “ரோபோ” கண்டுபிடித்தது.

வெடித்து சிதறிய ஜப்பான் அணு உலையில் கதிர்வீச்சு வீரியம் அதிகரிப்பு; “ரோபோ” கண்டுபிடித்தது

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 28 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது.

எனவே, அவற்றை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெடித்து சிதறிய 4 அணு உலைகளில் 2 மற்றும் 4-வது உலைகளில் குறைந்த அளவே சேதம் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கவச உடை அணிந்து கதிர்வீச்சை தடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 1 மற்றும் 3-வது அணுஉலைகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. அந்த அணுஉலைகளின் கட்டிட மேற்கூரை முழுவதும் தகர்ந்தது. எனவே, அதில் இருந்து தான் அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறி வருகிறது.

எனவே, கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஊழியர்கள் பயன் படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அணுஉலை வெடித்த ஒரு மாதத்துக்கு பிறகு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவை கண்டறிய அமெரிக்கா அதி நவீன “ரோபோ”வை அனுப்பியது.

அது 1 மற்றும் 4-வது அணு உலைக்குள் சென்று அங்குள்ளதட்பவெட்பநிலை, அழுத்தம் மற்றும் கதிர்வீச்சு அளவை கணக்கிட்டு ஆய்வு செய்தது. அதன்படி இந்த அணு உலைகளில் கதிர்வீச்சு அளவு மிகவும் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அங்கு அதிநவீன முறையில் கதிர்வீச்சு பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கதிர்வீச்சு பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் நேட்டோகான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயக கட்சியின் எம்.பி. மசாஷிவாகி பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பினார். அப்போது இந்த விவகாரத்தில் பிரதமர் நேட் டோகான் மற்றும் டோக்கியோ மின்வாரியம் (டெப்கோ) நடவடிக்கை திருப்தி இல்லை என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் நேட்டோகான், நடந்த தவறுக்கு நாட்டு மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். மேலும் அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


மே 18 துக்க நாள் : நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு


முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள். ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் ரத்த சாட்சியமாக இருக்கிறது.

தமிழ் ஈழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழ் ஈழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.

உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்பக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் அட்டைக்கு நீடிக்கிறது தடை.



தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பிறகும் புதிய ரேஷன் அட்டை தரப்பட வில்லை.அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக இருந்தாலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அவை கொடுக்கப்படாததால் விண்ணப்பதாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. "நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது புதிய சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடக் கூடாது' என்பது விதியாகும். இந்த விதியுடன் புதிய ரேஷன் அட்டையும் சேர்ந்து கொண்டுள்ளது.

அதாவது, நடத்தை நெறிமுறைகள் அமலான காலத்தில் இருந்து அது முடியும் வரை புதிய ரேஷன் அட்டைகள் எதுவும் கொடுக்கக் கூடாது.

இதன்படி, தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் மனுக்கள் நடத்தை விதிகளால் முடங்கியுள்ளன. இதுகுறித்து உணவுத் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கூறுகையில், ""மார்ச் 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வீடுகளை மாற்றிக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்றவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் என பலரும் புதிய ரேஷன் அட்டையைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். நடத்தை நெறிமுûறையைக் காரணம் காட்டி புதிய அட்டையைக் கொடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள மனுக்கள் தேங்கி உள்ளன.

மனுக்கள் சரியாக இருந்து, தளத்தணிக்கை முடிவுற்ற குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆணையம் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்தினால் மட்டுமே அந்த அட்டைகள் கொடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

தத்கால் அட்டையும் இல்லை

வீட்டு முகவரிக்கென பிரத்யேகமான தத்கால் ரேஷன் அட்டைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரேஷன் அட்டைக்கு பொருட்களை வாங்க முடியாது.

வேறு ஊர்களுக்கு இருந்து சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வரும் குடும்பங்கள் தங்களது வீட்டின் முகவரிச் சான்றாக இந்த அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உணவுத் துறை அறிவித்து அது செயல்பாட்டில் உள்ளது.

இந்த புதிய திட்டத்துக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வகையான அட்டைக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

உணவுத் துறை கடிதம் எழுதுமா?

புதிய ரேஷன் அட்டைகளைப் பெற இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொது மக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது உணவுத் துறை கடிதம் எழுதியதன் பேரில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருந்தபோதே புதிய அட்டைகள் கிடைப்பதற்கு வழிவகுக்கப்பட்டது.

ஆனால், புதிய அட்டைகளைப் பெற இரண்டு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழலில் கூட்டுறவு, உணவுத் துறை உயரதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உரிய அனுமதி பெற்று புதிய ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

பிரவீண் குமார் பதில்

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் கேட்ட போது, ""தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் புதிய ரேஷன் அட்டை வழங்கக் கூடாது. அட்டைகளை வழங்குவதற்கு உரிய அனுமதி கேட்டு உணவுத் துறை கடிதம் எழுதும் பட்சத்தில் அது தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆணையத்தின் உத்தரவைப் பெற்று புதிய அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


ஜெயலலிதாவின் கோரிக்கைகளை நிறேவேற்றிய பிரவீண்குமாருக்கு அதிமுக நேரில் நன்றி.




தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 94 மையங்களில் எண்ணப்பட உள்ளன. வாக்குப் பதிவு நடந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர், வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல சிறிது தாமதம் ஏற்பட்டது.

எனினும், வாக்குப் பதிவு நடந்த இரண்டு நாட்களுக்குள் அங்கு துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டனர்.

இந் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், மைத்ரேயன் ஆகியோர் புனித ஜார்ஜ் கோட்டையில் பிரவீண் குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

அப்போது, வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கு பிரவீண் குமாருக்கு அவர்கள் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.


ரஸ்னாவை ' உறிஞ்ச ' வரும் கோக கோலா புது பிராண்ட் !!


பவுடர் வடிவில் உள்ள குளிர்பானங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கோககோலா நிறுவனம் புதிய குளிர்பானத்தை ரூ 5-க்கு அறிமுகப்படுத்துகிறது.

பவுடர் வடிவிலான குளிர்பானங்களுக்கு இந்தியாவில் ரூ 300 கோடி அளவுக்கு மார்க்கெட் உள்ளது.

இதில் இன்றைய தேதிக்கு நம்பர் ஒன்னாகத் திகழ்வது ரஸ்னாதான். இந்த நிறுவனத்துக்குப் போட்டியாக, 2001-ம் ஆண்டு சன்பில் என்ற புதிய பானத்தை அறிமுகப்படுத்தியது கோககோலா. ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதை நிறுத்திவிட்டது. காரணம் இந்த பிராண்ட் போதிய வரவேற்பை மக்களிடம் பெறவில்லை.

இந்த நிலையில் சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு புதிய பிராண்டை களத்தில் இறக்குகிறது கோககோலா. பான்டா ருசியில் வரவிருக்கும் இந்த பவுடர் பானத்துக்கு 'பான்டா பன் டைம்' என பெயரிட்டுள்ளனர்.

ரூ 5 விலை கொண்ட இந்த பவுடர் பானம், நடுத்தர மற்றும் ஏழை மக்களைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்படுகிறது. முன்பு சன்பில் அறிமுகப் படுத்தப் பட்டபோது ஏற்பட்ட தவறுகள் நேராமல் இந்த புதிய பிராண்டை மார்க்கெட் செய்வதற்கான தீவிர வேலைகளில் இறங்கியுள்ளது கோக கோலா நிறுவனம்.