Wednesday, April 20, 2011

நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும் !! - தங்கபாலு.


நான் மட்டும் ஒரு அறிக்கை விட்டால் போதும், தமிழ்நாடே பற்றிக் கொண்டு எரியும், என்கிறார் தங்கபாலு.

சமீப காலங்களில் செய்திகளிலும் தொண்டர்கள் மத்தியிலும் அதிகமாக 'அடிபட்ட' அரசியல்வாதி அநேகமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேவீ தங்கபாலுவாகத்தான் இருப்பார்.

தமிழகமெங்கும் ராஜபக்சேக்கு இணையாக எரிக்கப்பட்ட கொடும்பாவிகளும் இவருடையதாகத்தான் இருக்கும்.

மனைவியின் நிழலில் மயிலை சட்டமன்ற வேட்பாளரானது, வேட்பாளர் தேர்வில் குளறுபடி, உச்சகட்ட கோஷ்டி மோதல் என ஏக களேபரங்களுக்கிடையே காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தலைச் சந்தித்தது. இப்போது தங்கபாலு எந்த நேரத்திலும் பதவியிலிருந்து நீக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நீங்கள் தலைவராக உள்ள இந்த காலகட்டத்தில்தான் அதிக தொகுதிகளைப் பெற்றுள்ளது காங்கிரஸ். இருந்தும் வேட்பாளர் தேர்வில் இத்தனை குழப்பம் ஏன்?

இதற்கு தங்கபாலு என்ற தனிப்பட்ட ஒருவர் காரணமல்ல. காங்கிரஸில் அப்படி எதுவும் நடக்கவும் நடக்காது. தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு பரிந்துரை செய்து கொடுத்த பட்டியலில், ஒரு பெயரையும் விடாமல், அகில இந்திய தேர்தல் குழுவிடம் சமர்பிக்கப்பட்டது. அதன்பின், சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் , ஜெயகுமார், எம்.பி.,க்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தேர்வுக் குழுவினரை சந்தித்தனர். அந்த குழு விவாதித்து பரிசீலனை செய்து வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் குழுவிடம் சமர்பித்தது. அக்குழுவில் இடம்பெற்ற சோனியா, பிரதமர், பிரணாப் முகர்ஜி , அகமது படேல் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

வாசனுக்கும் 23 வேட்பாளர்களும், சிதம்பரத்துற்கு 10 முதல் 15 வரை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், ஐ.என்.டி.யு.சி., சிறுபான்மை துறையின் பரிந்துரையும் அந்த பட்டியலில் இடம் பெற்றது. வேட்பாளர் பட்டியல் என் விருப்பப்படிதான் முடிவு செய்யப்பட்டது என்றால், 63 வேட்பாளர்களும் எனது ஆதரவாளர்களாகத்தான் இருந்திருப்பர். கட்சிக்காக சிறை சென்றவர்களுக்கும், பல ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக உள்ளோருக்கும் தான் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காததில் எனக்கும் வருத்தம் உள்ளது. பட்டியலை இறுதி செய்யும் அதிகாரம் எனக்கு மட்டும் அல்ல; எந்த மாநில தலைவருக்கும் கிடையாது.

தேர்தல் முடிந்ததும் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 19 பேரை நீக்கினீர்கள். காரணம் என்ன?

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர், அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட சிலரை தான் நீக்கினேன். அவர்களை நான் சமாதானப்படுத்தினேன்; எச்சரிக்கை விடுத்தேன். வேட்பாளர்கள் கொடுத்த கடிதத்தின் படிதான், இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன்.

அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர்களை நீக்க மாநில தலைவர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் செய்தித் துறை தலைவர் ஜனார்தன திரிவேதியும் எனது அதிகாரத்தை உறுதிச் செய்துள்ளார். உட்கட்சி விவகாரத்தை உள்ளரங்கிற்குள்தான் பேச வேண்டும். என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளைக் கூட கடிதம் மூலமோ, நேரிலோ அல்லது அமைப்பு ரீதியான முறையில்தான் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதுகூட கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்தான்.
அதனடிப்படையில் கூட நடவடிக்கை எடுக்கலாம்.

மயிலாப்பூர் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

எனது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. சோனியா, ராகுல், பிரதமர் ஆகியோர் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்தனர். அதில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால், எனது தொகுதிக்கு மூன்று நாட்கள் பிரசாரத்திற்கு போகவில்லை. நான் திடீர் வேட்பாளராகத்தான் அறிவிக்கப்பட்டேன். கட்சியின் கட்டளைப்படி நான் வேட்பாளராகப் போட்டியிட்டேன்.

தேர்தல் முடிவு எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்?

நிச்சயமாக. ஜனநாயக முற்போக்கு கூட்டணி மீண்டும் நல்லாட்சியை வழங்கும்.

சீட்டு... ஓட்டுப் பிரச்சினை... ஆல் இன் தி கேம்!

உங்கள் மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதது குறித்து உங்கள் கருத்து?

வாக்காளர் பட்டியலில் என் மனைவியின் பெயர் இருப்பதாக, வேளச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பின் தான் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால், தேர்தல் அன்று என் பெயர், என் மகள் பெயர் மட்டுமே இருந்தது.

என்மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தும் அவரால், ஓட்டுப்போட முடியவில்லை. இது எனக்கு எதிராக நடந்த சதி. இதில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். என் மனைவிக்கு முதலில் சீட்டு பிரச்னை. பிறகு ஓட்டுப் பிரச்னை. ஆல் இன் தி கேம்!

உங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறதே?

அவர்கள் உண்மையான கட்சிக்காரர்களே அல்ல; சமூக விரோதிகள் நடத்தும் நாடகம். பத்திரிகையில் போட்டோ வரவேண்டும் என்பதற்கா செய்கின்றனர்.

பற்றி எரியும்...

மத்திய அமைச்சர்கள் உங்களை மாற்ற வேண்டுமென சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளார்களே?

அரசியல் என் தொழில் அல்ல. தலைவர் பதவியை நான் தேடி போகவில்லை. சேலத்தில் எம்.பி.,யாக இருந்தபோது, எனக்கு டெல்லியிலிருந்து திடீரென போன் வந்தது. நீங்கள்தான் தலைவர் என்றார்கள். பதவியை ஏற்றுக் கொண்டேன். கொடுத்தப் பணியை சிறப்பாக செய்கிறேன்.

நான் தலைவராக பொறுப்பேற்ற பின் 70 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக எனது ஆதரவாளர்கள் தான் சேர்த்தனர். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் என் நண்பர்களாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.

எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாகப் பயன்படுத்த மாட்டேன்.

இலங்கை அரசுக்கு எதிராக திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு என்ன காரணம்?

தமிழக மீனவர்களை இலங்கை படையினர் சுட்டுக்கொன்று வருகின்றனர். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

1 comment:

ramalingam said...

ஆமாம். சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இவரது ஒவ்வொரு அறிக்கைக்கும் தமிழ்நாடே பற்றித்தான் எறிகிறது (இவரது கொடும்பாவிகளால்!)