Wednesday, April 20, 2011

வெடித்து சிதறிய ஜப்பான் அணு உலையில் கதிர்வீச்சு வீரியம் அதிகரிப்பு ; “ரோபோ” கண்டுபிடித்தது.

வெடித்து சிதறிய ஜப்பான் அணு உலையில் கதிர்வீச்சு வீரியம் அதிகரிப்பு; “ரோபோ” கண்டுபிடித்தது

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 28 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது.

எனவே, அவற்றை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெடித்து சிதறிய 4 அணு உலைகளில் 2 மற்றும் 4-வது உலைகளில் குறைந்த அளவே சேதம் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கவச உடை அணிந்து கதிர்வீச்சை தடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 1 மற்றும் 3-வது அணுஉலைகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. அந்த அணுஉலைகளின் கட்டிட மேற்கூரை முழுவதும் தகர்ந்தது. எனவே, அதில் இருந்து தான் அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறி வருகிறது.

எனவே, கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஊழியர்கள் பயன் படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அணுஉலை வெடித்த ஒரு மாதத்துக்கு பிறகு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவை கண்டறிய அமெரிக்கா அதி நவீன “ரோபோ”வை அனுப்பியது.

அது 1 மற்றும் 4-வது அணு உலைக்குள் சென்று அங்குள்ளதட்பவெட்பநிலை, அழுத்தம் மற்றும் கதிர்வீச்சு அளவை கணக்கிட்டு ஆய்வு செய்தது. அதன்படி இந்த அணு உலைகளில் கதிர்வீச்சு அளவு மிகவும் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அங்கு அதிநவீன முறையில் கதிர்வீச்சு பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கதிர்வீச்சு பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் நேட்டோகான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயக கட்சியின் எம்.பி. மசாஷிவாகி பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பினார். அப்போது இந்த விவகாரத்தில் பிரதமர் நேட் டோகான் மற்றும் டோக்கியோ மின்வாரியம் (டெப்கோ) நடவடிக்கை திருப்தி இல்லை என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் நேட்டோகான், நடந்த தவறுக்கு நாட்டு மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். மேலும் அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


No comments: