Saturday, April 9, 2011

பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம்: பிரதமர்.


தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 13ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. காங்கிரஸ் கட்சி உள்பட அக்கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன்சிங் தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக, சனிக்கிழமை மாலை கோவைக்கு வந்தார்.

கோவை பீளமேட்டில் உள்ள கொடிசியா வளாக பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,

இந்தியாவின் உயர்வுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானது. கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஒருங்கிணைந்து செயலாற்றியதால் தமிழகம் செழிந்தோங்கியுள்ளது. இங்குள்ள மக்கள் பலன் பெற்றுள்ளனர். கலைஞர் தலைமையில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழை செம்மொழியாக அறிவித்தது, சேலம் ஒருங்கிணைந்த எஃகு ஆலை திறப்பு, சேலம் ரயில்வே கோட்டம் அமைத்தது. சேது சமுத்திர திட்டம் தொடக்கம் போன்றவைகளை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.

ஜவுளி, கல்வி, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மருத்துவத் துறையில் தமிழகம் ஆற்றும் சிறந்த பணியால் இந்தியாவுக்கே பெருமை அடைந்துள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. நாடு மேலும் வளம்பெற காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: கொச்சி அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: கொச்சி அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா -பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மெக்குலம் 32 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்களும், வி.வி.எஸ்.லட்சுமண் 29 பந்தில் 2 பவுணரி, 2 சிக்சருடன் 36 ரன்களும் எடுத்தனர். 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 40 பந்தில் ஒரு பவுண்டரி 5 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை. அகர்வால் 33 ரன்கள் எடுத்தார்.


தே.மு.தி.க. அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு.


இந்திய ராணுவத்துக்கு எதிராக பேசிய தே.மு.தி.கவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

யூத் இந்தியா என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,

கடந்த மாதம் 24ஆம் தேதி ரிஷிவந்தியம் தொகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடம், தேர்தல் வியூகம் குறித்து கேட்டபோது, கார்கில் போர் மற்றும் பாகிஸ்தான் உடனான மற்ற போர்களில் இந்திய ராணுவம் எந்த வியூகமும் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்றும், அதனால் தேமுதிக கட்சியின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், முடிவை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

தகவல் தொழில்நுட்பத் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு - டி.சி.எஸ் தகவல்.


தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது, என புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டி.சி.எஸ். நிறுவன அதிகாரி சுமந்த்ராமன் கூறினார்.

இன்றைய நிலையில், எந்தத் துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐ.டி.,) உதவியின்றி இயங்க முடியாது என்ற நிலை உள்ளது. உலகின் மிகப் பெரும் தொழில்களில் ஒன்றாக தகவல் ஐ.டி., துறை விளங்குகிறது. உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இத்துறையில் புழங்குகிறது. இத்துறையில் வேலை வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

2010ல் வளர்ச்சி அதிகரித்தது. அடுத்து வரும் ஆண்டுகளில் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகும். இன்ஜினியரிங் படிப்பில் எந்தப் பிரிவு படித்தாலும் ஐ.டி., துறைக்கு வர முடியும். பி.எஸ்சி., படித்தவர்கள் கூட இத் துறைக்கு வரலாம். அரசின் சேவைகளை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வழங்க உள்ளதால், இத் துறையில் வேலை வாய்ப்புகள் பெருகும்.

பேச்சுத்திறன், வெளிப்படுத்தும் ஆற்றல், பாசிடிவ் எண்ணம் ஆகிய மூன்றும், ஐ.டி., துறையில் சேர்வதற்கு அடிப்படை தேவைகளாகும். இத்துறையில் மாதம் ரூபாய். 20 ஆயிரம் சம்பளத்தில் சேர்பவர்கள், அனுபவத்தின் அடிப்படையில் மாதம் ரூபாய். ஒரு லட்சம் வருமானம் பெறும் வாய்ப்புள்ளது. ஐ.டி., துறையைப் பொறுத்தவரை, காலம், கடின உழைப்பு, முடியும் என்ற மனப்பான்மை ஆகிய மூன்றும் மிக முக்கியம். ஐ.டி., துறையில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றார்.


ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையை அக‌ற்று‌ம் வரை த‌ர்மயு‌த்த‌ம் தொடரு‌ம்: வைகோ ஆவேசம்!

"பொதும‌க்க‌ள் நலனை‌ப் பாதுகா‌க்க, ஸ்டெ‌‌ர்லை‌ட் ந‌ச்சு ஆலையை அக‌ற்று‌ம் போரா‌ட்ட‌த்தை‌த் த‌ர்மயு‌த்தமாகவே தொட‌ர்வோ‌ம்" எ‌ன்று ம.தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தூ‌த்து‌க்குடி நகர‌‌த்தை அடு‌த்து ‌ஸ்டெ‌ர்லை‌ட் நிறுவன‌ம் அமை‌த்து உ‌ள்ள, நாசகார ந‌ச்சு ஆலையான தா‌மிர உரு‌க்கு ஆலை, ‌நில‌ம், ‌நீ‌ர், கா‌ற்று அனை‌த்தையு‌ம் ந‌ச்சு‌த்த‌ன்மை உடையதா‌க்‌கி, ‌ விவசா‌யிக‌ள், ‌‌மீனவ‌ர்க‌ள், பொதும‌க்க‌ள் அனைவ‌ரி‌ன் வா‌ழ்‌வையு‌ம் பாழா‌க்‌கி, உ‌யிரு‌க்கே ஊறு ‌விளை‌வி‌க்கு‌ம் நோ‌ய்களையு‌ம் ஏ‌ற்படு‌த்துவதோடு, வேளா‌ண் ‌விவசாய ‌நில‌‌ங்களையு‌ம் பா‌ழ்படு‌த்‌தி கட‌ல்வா‌ழ் உ‌யி‌ரின‌ங்களு‌க்கு‌ம் பெரு‌ங்கேடு ‌விளை‌வி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல் இ‌ந்த ஆலை அக‌ற்ற‌ப்பட வே‌‌ண்டு‌ம் எ‌ன்று கட‌ந்த 15 ஆ‌ண்டுகளாக ம‌.தி.மு.க போராடி வரு‌கிறது. பொதும‌க்க‌ள் நலனை‌ப் பாதுகா‌க்க, ஸ்டெ‌‌ர்லை‌ட் ந‌ச்சு ஆலையை அக‌ற்று‌ம் போரா‌ட்ட‌த்தை‌த் த‌ர்மயு‌த்தமாகவே தொட‌ர்வோ‌ம் என்று அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையை ‌நிர‌ந்தரமாக அக‌ற்றுவத‌ற்கு ‌ரி‌ட் மனுவை செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்தில் தா‌க்க‌ல் செ‌ய்து நானே வாதாடினே‌ன். கட‌ந்த செ‌ப்‌ட‌‌ம்ப‌ர் 28ஆ‌ம் தே‌திய‌ன்று ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையை ‌நிர‌ந்தரமாக மூட உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்தது. அதை எ‌தி‌ர்‌த்து ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடு‌த்து த‌ற்கா‌லிகமாக தடை ஆணையு‌ம் பெ‌ற்றது. அதை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நானே வழ‌க்கு தொடு‌த்து வாதாடினே‌ன்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையா‌ல் சு‌ற்று‌‌ச்சூழ‌ல் எ‌ந்த அள‌வில் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்பதை ஆ‌ய்வு செ‌ய்து அ‌றி‌க்கை தரு‌ம்படி நா‌க்பூ‌ரி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய அர‌சி‌ன் தே‌சிய சு‌ற்று‌ச்சூழ‌ல், பொ‌றி‌யிய‌ல் ஆரா‌ய்‌ச்‌சி ‌நிறுவன‌த்‌தி‌ற்கு (‌நீ‌ரி) உ‌த்தர‌வி‌ட்டது. வழ‌க்கு தொடு‌த்தவ‌ன் எ‌ன்ற முறை‌யி‌ல் நானு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் மாசுக‌ட்டு‌ப்பா‌ட்டு வா‌ரியமு‌ம், த‌மி‌ழ்நா‌ட்டி‌ன் மாசு க‌ட்டு‌ப்பா‌ட்டு வா‌ரியமு‌ம் ப‌ங்கே‌ற்கு‌ம் ‌வி‌த‌த்‌தி‌ல் ஆ‌ய்வு நட‌த்த‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், 8 வார கால‌த்‌திற‌கு‌ள் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தில் அ‌ந்த ஆ‌ய்வு அ‌றி‌க்கை தர‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌னவு‌ம், கட‌ந்த ‌பி‌ப்ரவ‌ரி 25ஆ‌‌ம் தே‌தி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்தது.

ஆனா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்த 40வது நா‌ளி‌ல்தா‌ன் ‌நீ‌ரி ‌நிறுவன‌ம் ஆ‌‌ய்வு நட‌த்த ஏ‌‌ப்ர‌ல் 6ஆ‌ம் தே‌திய‌ன்று வருகை த‌ந்தது. ‌நீ‌ரி‌யி‌ன் சா‌ர்‌பி‌ல் டி.ந‌ந்‌தி தலைமை‌யி‌ல், டி.‌ஜி.கா‌ஜ்கா‌ட்டே, ஏ.எ‌ன்.வை‌த்யா, ஏ.டி.பனா‌ர்‌க்க‌ர், எ‌ம்.‌பி.பா‌ட்டீ‌ல், கா‌ர்‌த்‌தி‌க், ஆ‌ர்.‌‌சிவகுமா‌ர் ஆ‌கிய ஏழு பே‌ர் கொ‌ண்ட ‌நிபுண‌ர் குழு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌‌ர். ‌நிபுண‌ர் குழு‌வினரு‌ம், ‌ம‌த்‌திய, மா‌நில மாசு க‌ட்டு‌ப்பா‌ட்டு அ‌திகா‌ரிகளு‌ம் 6ஆ‌ம் தே‌தி ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் ஆ‌ய்‌வினை‌த் தொட‌ங்க மு‌னை‌ந்தன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ப‌ங்கே‌ற்க‌ச் செ‌‌ன்ற எ‌ன்னை ம‌ட்டு‌ம் அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், எ‌ன்னுட‌ன் வேறு யாரையு‌‌ம் அனும‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்று‌ம் ஸ்டெ‌ர்லை‌ட் நி‌ர்வாக‌ம் கடுமையாக வாதாடியது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் வாதாடு‌ம்போதே உத‌வி செ‌ய்வத‌ற்கு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உட‌ன் இரு‌ப்பதை‌ப் போல, இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் என‌க்கு உதவுவத‌ற்காக எ‌ன்னுட‌ன் 4 பேரை அனும‌தி‌க்க வே‌ண்‌டு‌ம் எ‌ன்று ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு‌வின‌ரிட‌ம் நா‌ன் வ‌ற்புறு‌த்‌திய‌தி‌ன் பே‌ரி‌ல் சு‌ற்று‌ச்சூழ‌ல் ‌நிபுணரான நி‌த்‌தியான‌ந்த‌ன் ஜெயரா‌‌மு‌ம், ம.‌தி.மு.க. ச‌ட்ட‌த்துறை செயல‌ர் வழ‌க்க‌றிஞ‌ர் தேவதா‌‌ஸ், தராசு மகாராச‌ன், ஜா‌க்ச‌ன் தாம‌ஸ் ஆ‌கியோ‌ர் ஆ‌‌ய்‌வி‌ன்போது உட‌ன் இரு‌க்க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.


எச் 1 பி விசா விண்ணப்பங்கள்... வாங்க ஆர்வமில்லை!


அமெரிக்காவில் பணியாற்ற இந்தியர்களுக்குத் தேவைப்படும் எச் 1 பி விசாக்கள் வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கு 65 ஆயிரம் எச் 1 பி விசாக்கள் வழங்கப்படும். இதுதவிர, உயர்படிப்பு பட்டம் பெற்றவர்களுக்காக 20000 விசாக்கள் வழங்கப்படும்.

இந்த விசா வழங்கல் குறித்த அறிவிப்பு வெளியானதுமே, சில தினங்களுக்குள் மொத்த விசாக்களும் தீர்ந்துவிடுவது வழக்கம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்.

2012-ம் ஆண்டுக்கான விசாக்கள் வழங்க ஏப்ரல் முதல் தேதி விசா கவுன்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் இதுவரை 5900 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. அதேபோல, உயர் படிப்பு பட்டம் பெற்றவர்களுக்காக வழங்கப்படும் விசாக்களுக்காக வெறும் 4500 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.

அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு அந்நாட்டு அரசு அதிக கெடுபிடிகள் காட்டுவதாலும், இந்தியாவிலேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லோக்பால் கூட்டுக்குழு: தலைவர் பிரணாப் முகர்ஜி!


லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவின் (JDC) தலைவராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்மட்டத்தில் இருப்போரின் ஊழலை விசாரிக்க மத்திய அரசு கொண்டுவரும் லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவில் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளும், மீதமுள்ளவர்கள் அரசுத் தரப்பிலிருந்தும் இடம்பெற வேண்டும் என்று கோரி சமூக சேவகர் அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தார்.

மேலும் இந்தக் குழுவுக்கு மத்திய அமைச்சர் யாரும் தலைவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 தினங்களாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் பலனாக, மத்திய அரசு பணிந்தது.

லோக்பால் கூட்டுக் குழுவின் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும், மீதி 50 சதவீத உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இருப்பார் என்றும், இணைத் தலைவராக சமூகப் பிரதிநிதி ஒருவர் இருக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியதை ஹஸாரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரசு வெளியிட்ட கெஜட்டின்படி, லோக்பால் கூட்டுக் குழுவின் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இருப்பார்.

கெஜட் அறிவிப்பின்படி லோக்பால் குழுவில் அரசுத் தரப்பில் இடம் பெற்றுள்ளவர்கள்:

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,
உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்,
சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி,
மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும்
நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

மக்கள் பிரதிநிதிகள்:

சமூக சேவகர் அன்னா ஹஸாரே,
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே,
சட்டநிபுணர் சாந்தி பூஷன்
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும்
அரவிந்த் கேஜ்ரிவால்

லோக்பால் சட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி
இணைத் தலைவர் : சாந்தி பூஷன்
அமைப்பாளர்: வீரப்ப மொய்லி

வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கூட்டுக்குழு தனது வரைவுப் பணிகளை முடித்து, அறிக்கையை சமர்ப்பிக்கும்.

லோக்பால் மசோதா கூட்டுக் குழு அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!96 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டவரைவு திருத்த கூட்டுக்குழு தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியானதைத் தொடர்ந்து தனது 96 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் காந்தியவாதி அன்னா ஹஸாரே.

நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்களின் ஊழலுக்கு எதிராக தற்போது தயாரிக்கப்பட்டு உள்ள லோக்பால் சட்ட வரைவு மசோதாவினால் எந்த பயனும் இல்லை என்றும், அந்த சட்ட மசோதாவை ஆய்வு செய்து சீரமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் 50 சதவீதமும், அரசுத் தரப்பிலிருந்து 50 சதவீத உறுப்பினர்களும் இடம் பெற வேண்டும் என்றும் அன்னா ஹஸாரே கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதன் தலைவராக மத்திய அமைச்சரை நியமிக்கவும் ஹஸாரே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனை மத்திய அரசு ஏற்க மறுத்ததால், அவர் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 4 நாட்கள் அவர் உண்ணாவிரதம் தொடர்ந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும் கேட்டுக் கொண்ட பிறகும் அவர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கவில்லை.

நேற்று அவரது உண்ணாவிரதம் 4 வது நாளை எட்டிய நிலையில், சோனியா காந்தியின் பெரும் முயற்சியால், ஹஸாரேவின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

அரசாணையை எழுத்துப் பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப் போவதாக ஹஸாரே நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழு அரசாணையை இன்று வெளியிட்டது.

இதன் நகல் ஹஸாரேவின் பிரதிநிதிகள் கையில் அளிக்கப்பட்டது.

தனது இந்தப் போராட்டம் மக்களுக்காக நடத்தப்பட்டது என்றும், இதற்குக் கிடைத்துள்ள வெற்றி மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், அன்னா ஹஸாரே தெரிவித்தார்.

பின்னர், அரசு வெளியிட்ட அறிவிக்கையின் பிரதியை கூடியிருந்தவர்களுக்கு எடுத்துக் காட்டினார். மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்

இதைத் தொடர்ந்து, இன்று 10.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதற்கு முன், தன்னோடு உண்ணாவிரதமிருந்த அனைவருக்கும் பழச்சாறு கொடுத்தார் ஹஸாரே. அவர்கள் அருந்தி முடித்த பல நிமிடங்களுக்குப் பிறகு, தனக்கு வந்த அரசின் அறிவிக்கையை படித்துக் காட்டிய பிறகு, பழச்சாறு அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்தார் ஹஸாரே.

இதன் மூலம் அவரது 96 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

காந்தியத்துக்கு கிடைத்த வெற்றி...

இதைத் தொடர்ந்து நாடு முழுக்க வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. இந்திய மக்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றி இது என கொண்டாடி வருகிறார்கள்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி இந்த வெற்றியை கொண்டாடினர்.

இந்த நாட்டுக்கு காந்திய வழிப் போராட்டமே வெற்றியைத் தரும் என்பதற்கு ஹஸாரே ஒரு வாழும் எடுத்துக்காட்டாக உள்ளார். மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான போராட்டத்தின் பின்னால் அணி வகுக்க வேண்டும், என்று ஊழலுக்கு எதிரான அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியானதும், ஹஸாரே உண்ணாவிரதமிருந்த ஜந்தர் மந்தர் பகுதியே கோலாகலமாகியது. மக்கள் வெற்றிக் களிப்பில் உற்சாகக் குரல் எழுப்பினர். வெடிகள் கொளுத்தப்பட்டன.


'முறைகேடுகள் நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது' - தேர்தல் ஆணையம்.


தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலையொட்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எமர்ஜென்ஸி நிலைமையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். முறைகேடுகள் நடைபெறும் போது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எமர்ஜென்ஸி நிலைமையை தோற்றுவித்து இருப்பதாக, தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

அவர் கூறுபகையில், "தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பணி சவாலாக விளங்கி வருகிறது. தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதே எங்களுடைய முதன்மை பணியாகும். தேர்தலை அமைதியாகவும், வெளிப்படையாகவும், அனைவரும் பங்கேற்கும்படி நடத்த வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உண்டு.

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெரிய அளவில் ஈடுபட்டு வருகிறோம். வரலாறு காணாத அளவில், 5 மாநிலங்களிலும் ரூ.53 கோடிக்கு அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.42 கோடியாகும்.

கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது...

தேர்தல் கமிஷனின் அரசியல் சட்டபூர்வ கடமையை நாங்கள் நிறைவேற்றுவதற்காக எங்களை குறை கூறுவதா? கட்டுக்கு அடங்காத வகையில் முறைகேடுகள் நடைபெறும்போது நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி நாங்கள் செயல்படவில்லை. அரசியல் சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு செயல்பட்டுவரும் தேர்தல் கமிஷனுக்கு எதிரான எந்த விமர்சனமும் முற்றிலும் நியாயமற்றது. அவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்.

தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள சவால்கள்...

தேர்தலில் பண ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு சவால் நிறைந்த மாநிலமாக விளங்குகிறது. இருந்த போதிலும், எந்த முறைகேடுகளும் நடைபெறாத வகையில் எங்களால் இயன்ற அளவுக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மறுப்பதால், ஏதாவது ஒரு அரசியல் கட்சி வருத்தம் அடைவது இயல்புதான். ஆனால், எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நியாயமான நடுவராக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக அல்ல

எங்களுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காகத்தான். பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக இருக்கும் போது சிலருக்கு வசதிக்குறைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படிதான் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது தனி நபருக்கோ எதிரான நடவடிக்கை அல்ல, இது.

இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல 5 மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அரசியல் சட்டம் வழங்கியுள்ள புனிதமான பணியை எந்தவித தயக்கமும் குழப்பமும் இன்றி, அதனால் ஏற்படும் விளைவுகளை பொருட்படுத்தாமல் செய்து முடிப்போம்'', என்றார்.

திராவிட இயக்கத்தை வீழ்த்தவேண்டும். என்பதே ஜெயலலிதாவின் நோக்கம் - விழுப்புரத்தில் கருணாநிதி பேச்சு.


விழுப்புரம் பிரசார கூட்டத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேச்சு

விழுப்புரத்தில் நேற்று இரவு ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:-

எனது அருமை நண்பர் திருமாவளவன் இங்கு பேசும்போது, எதிர்க்கட்சி தலைவரை பார்த்து உங்களுக்கு அதுதெரியுமா, இது தெரியுமா என்றெல்லாம் கேட்டார். சரித்திரம் தெரியுமா என்று கேட்டார். திராவிட இயக்கத்தின் மூலம் தெரியுமா, திராவிட இயக்கத்தை யார், யார் வளர்த்தார்கள் என்று தெரியுமா, இதற்கெல்லாம் ஒரே பதில் திராவிட இயக்கம் என்றால் என்ன என்பதை யாரை பார்த்து கேட்டாரோ அவரிடம் இருந்து பதில் வந்திருந்தால் நான் ஆச்சரியப்பட தேவையில்லை.

திராவிட இயக்கத்தை அழிக்க இன்றைக்கு கொடுவாள் எடுத்து புறப்பட்டிருக்கிறார் ஒரு அம்மையார். திராவிட இயக்கத்தை அழித்தே தீருவேன், பெரியார் உருவாக்கிய சுயமரியாதையை, அண்ணா உருவாக்கிய லட்சிய தாகத்தை அந்த கொடுமைகளை எல்லாம் அறவே புரட்டிப்போட்டு இந்த இயக்கத்தை அழிப்பது தான் எனது வேலை என்று புறப்பட்டிருக்கிறார். அந்த அம்மையார் உங்களிடத்தில் ஆதரவு கேட்பது எதற்கு, ஆட்சி செய்வதற்காக அல்ல. இந்த ராஜ்ஜியத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவருடைய மூல நோக்கம் திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பது தான்.

நானும், காதர்மொய்தீனும் மதத்தால் வேறுபட்டவர்கள். நானும், திருமாவளவனும் பகுப்பால் வேறு பட்டவர்கள். நானும், டாக்டர் ராமதாசும் சமுதாயத்தால் வேறுபட்டவர்கள். இப்படி வேறுபாடுகளையெல்லாம் ஒருமைப்பாடாக ஆக்கிய பெருமை யாருக்கு? தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு. அந்த இயக்கத்தின் சார்பிலே இந்த ஊரிலே பகுத்தறிவு பிரசாரம் நடத்தியபோது 100 பேர் 200 பேரை பார்த்த இந்த இடத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான பேரை பார்த்தபோது நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோமா இல்லையா, சுயமரியாதையுடன் இருக்கிறோமா இல்லையா, அந்த வெற்றிக்கு அடையாளம்தான் இங்கே வீற்றிருக்கின்ற உங்கள் கரவொளி, வாழ்த்து முழக்கம். நாங்கள் வரும்போது எங்களை கண்குளிர பார்த்து வாழ்த்திய முழக்கம்.

எனவே இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான நேரத்தில் உங்களை கேட்டுக்கொள்வது இப்போது காரியம் பெரிது, வீரியம் பெரிதல்ல. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டிய காரியம். மணி 10 ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் மிக கெடுபிடியாக இருக்கிறது. நான் முதல்- அமைச்சராக இருந்தாலும் சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவன். தேர்தல் ஆணையம் உண்மையிலேயே சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை நான் பதவியில் இருக்கும்போது கேட்க விரும்பவில்லை. பதவியை நீங்கள் விலக்கி வைத்தால் அவைகளை யெல்லாம் கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டிய நேரத்தில் நான் கேட்பேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

நேரத்தின் அருமை கருதி உங்களிடத்தில் 3 செய்தியை மட்டும் நான் சொல்கிறேன். 1996-ல் இதே இடத்தில் பா.ம.க. ஒரு மிகப்பெரிய மாநாட்டை போட்டு நமது கலைஞரை அழைத்து அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று ஒரு தனி நாற்காலி போட்டோம். 7 கட்சி கூட்டணியோடு இருந்து அப்போது 96-ல் முதல்வராக வந்தார். இது ஒரு செய்தி. அடுத்து நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்போம் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறேன்.

மே 13-ந் தேதி வாக்கு எண்ணும்போது முதல் முறையாக கவர்னரிடம் தி.மு.க. தலைவர் கலைஞரை ஆட்சி அமைக்க அனுப்புகிற முதல் கடிதம் இந்த ராமதாசிடம் இருந்து தான் செல்லும். அமைச்சர் போட்டியிடுகிற இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். எனக்கு மட்டும் ஒரு நாள் நேரம் இருந்தால் நான் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சுற்றி சுற்றி வந்திருப்பேன்.

இந்த தொகுதியில் எதிர்த்து நிற்கிற வேட்பாளர் டெபாசிட் வாங்கக்கூடாது. இன்னொரு செய்தி ரிஷிவந்தியம் தொகுதியில் சிவராஜை எதிர்த்து நிற்கிற அந்த வேட்பாளரும் டெபாசிட் வாங்கக்கூடாது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.


அரசு நலத் திட்டத்தால் பயன்பெற்றது கருணாநிதி குடும்பம்:ஜெயலலிதா

.நாமக்கல் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜெயலலிதா, பரமத்தி -கோட்டை சாலை சந்திப்பில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:

கடந்த முறை ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஏழை மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியதுபோல் எந்தவொரு ஏழைக்கும் நிலம் வழங்கப்படவில்லை. அதற்குப் பதில் திமுக கட்சியினரால் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 1.62 கோடி வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கியதாகக் கூறி கருணாநிதி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், அந்தத் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க செலவிடப்பட்ட பணம் மக்களது வரிப் பணம் என்பதை மறைந்துவிடக் கூடாது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசியின் அளவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்தத் திட்டம் ஏழை மக்களுக்கு பயன்படுவதற்குப் பதில் அரிசி கடத்தல்காரர்கள் பணக்காரர்களாகவே பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதாக திமுக கூறி வருகிறது. ஆனால், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து முறைகேடாக முறையில் ஆளுங்கட்சியினரால் ரூ. 600 கோடிக்கு மேல் கமிஷன் பெறப்பட்டுள்ளது. மேலும், இத் திட்டத்தின் மூலம் மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கான்கிரீட் வீடுகளை கட்டும் திட்டத்தால் மக்கள் கடனாளியானதுதான் மிச்சம். கருணாநிதி குடும்பத்தினர் சிமெண்ட் ஆலை, இரும்பு தொழிற்சாலைகளை நிர்வகித்து வருகின்றனர். கட்டுமானப் பொருள்களுக்கு செயற்கை முறையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றின் விலையை பன்மடங்கு உயர்த்தி அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துவிடுகின்றனர்.

அதேபோல், 108 ஆம்புலன்ஸ் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால், அதை தான்தான் கொண்டு வந்ததாக கருணாநிதி கூறி வருகிறார். இந்த ஆம்புலன்ஸ் திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தங்களது குடும்ப தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து விட்டனர்.

வெளிநாட்டவர்களே கண்டு வியக்கும் வண்ணம் விஞ்ஞான ரீதியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில் தொடர்புடையவரும், மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய கூட்டாளியுமான சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந் நிலையில், ராசாவின் உறவினரான தீபக் என்பவரும் மர்மமான முறையில் இறந்துவிட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறப்பதுக்கு பின்புலம் உள்ள உண்மை விசாரிக்கப்பட வேண்டும். சமீபத்தில் ஆம்னி பஸ்ஸில் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பணம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் ஸ்ரீரங்கம் தொகுதியில் விநியோகிப்பதற்காகக் கடத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.

கருணாநிதி குடும்பத்தினர், சொந்தமாக விமான நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தென்காசி அருகே பண மூட்டைகளை வீசிவிட்டு சென்றதாகத் தகவல் தெரிகிறது. தனது குடும்ப உறுப்பினர்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காகவே பல திட்டங்கள் கொண்டு வருகிறார் கருணாநிதி.

பொருளாதார நிலை சீரழிந்து விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. மின்வெட்டு, நிலமோசடி, ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றவும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் நாமக்கல்லில் கோழிப் பண்ணை, லாரி தொழில் சிறப்பான வளர்ச்சி அடைய தேவையான திட்டங்கள் தீட்டப்படும். ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு என்ற விதியை திருத்தி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

கொல்லிமலைக்கு மாற்றுப் பாதை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்தவும், நாமக்கல்லில் இருந்து ராசிபுரத்துக்கு ரிங் சாலை அமைக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


இதுதான் மிச்சம் :சேலத்தில் ஜெயலலிதா ஆவேசம்.


சேலம் மாவட்டம் சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், அயோத்தியாபட்டணம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

’’நடைபெற இருக்கின்ற தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல; மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். உங்களை, குடும்பகொள்ளையர் களிடம் இருந்து விடுவிப்பதற்கான தேர்தல்.

தன் குடும்ப நன்மைக்காக, 56 லட்சம் ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக, பத்திரம் வழங்கி உள்ளனர். பத்திரத்தை வாங்கியோர், மூன்று ஆண்டுகளாக நிலத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இலவச கலர் "டிவி' திட்டத்தில், ஒரு கோடியே 62 லட்சம், "டிவி' கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அது உங்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் 4,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர்.

ஒரு கிலோ இலவச அரிசி திட்டம், கடத்தல்காரர்களுக்கானது.

தரமான அரிசி, அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு, தரமற்ற அரிசி, தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு கோடி; உங்களுக்கு வியாதி. இது தான் இத்திட்டத்தின் மிச்சம்.

முக்கிய ஆபரேஷனை ஒரு லட்சம் ரூபாயில் செய்ய முடியுமா? காலரா, சிக்-குன் குனியா, மலேரியா போன்றவற்றுக்கு தான் அது பயன்படும். இத்திட்டத்திலிருந்து பல தனியார் மருத்துவமனைகள், வெளிவந்து விட்டன.

ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 3,000 கோடி ரூபாய் செலுத்தி, 600 கோடி ரூபாய் லாபம் பார்த்து உள்ளனர்.

கான்கிரீட்டுக்கான கம்பிகளை விற்க, ஸ்டாலின் மருமகன் குடும்பத்துக்கு, கான்ட்ராக்ட் விட்டுள்ளனர். மணல், கிரானைட் மூலம், 50 ஆயிரம், 80 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளனர்.

கருணாநிதி, தன்னுடைய மகனுக்கு துணை முதல்வர் பதவி, இன்னொரு மகனுக்கு மத்திய அமைச்சர், பேரனுக்கு மத்திய அமைச்சர், மகளுக்கு எம்.பி., பதவி வழங்கியுள்ளார். "ஊழல் செய்வதில் விஞ்ஞான முறையைக் கண்டுபிடித்தவர் கருணாநிதி' என, நீதிபதி சர்க்காரியா கூறியுள்ளார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார். தற்போது ராஜா சிறையில் உள்ளார். அவர் நண்பர் சாதிக், மற்றொரு நண்பர் தீபக் ஆகியோர் மர்மமாக இறந்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் சாகப் போகின்றனரோ? மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கள்ள லாட்டரிச் சீட்டு, ரவுடியிசம் போன்றவை, ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அதிகரித்துள்ளன. ஒரு குடும்பம் லாபம் அடைய, ஏழு கோடி மக்கள் கஷ்டப்படுகின்றனர். கொள்ளையடித்ததில் கருணாநிதி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

கருணாநிதியின் குடும்ப ஆட்சியை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்; தி.மு.க., வேட்பாளர்கள் டிபாசிட் இழக்க வேண்டும். என்னுடைய ஆட்சிக் காலத்தில், இலவச சைக்கிள் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்றவை உருவாக்கப்பட்டன.

மின்வெட்டு சீராக இருந்தது, சட்டம் ஒழுங்கு சரிவர இருந்தது. கருணாநிதியால் விலைவாசியை சரிப்படுத்த முடியாது; மின்வெட்டை சீரமைக்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றுவேன்.

அவர்களது குடும்பத்தினரிடம் உள்ள கேபிள் தொழிலை, அரசுடைமையாக்குவேன். எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்கிற நிபந்தனை உள்ளது. அதை தவிர்த்து, எழுத, படிக்கத் தெரிந்திருந்தாலே, உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கருணாநிதி குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.