Saturday, April 9, 2011

இதுதான் மிச்சம் :சேலத்தில் ஜெயலலிதா ஆவேசம்.


சேலம் மாவட்டம் சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், அயோத்தியாபட்டணம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

’’நடைபெற இருக்கின்ற தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல; மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். உங்களை, குடும்பகொள்ளையர் களிடம் இருந்து விடுவிப்பதற்கான தேர்தல்.

தன் குடும்ப நன்மைக்காக, 56 லட்சம் ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக, பத்திரம் வழங்கி உள்ளனர். பத்திரத்தை வாங்கியோர், மூன்று ஆண்டுகளாக நிலத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இலவச கலர் "டிவி' திட்டத்தில், ஒரு கோடியே 62 லட்சம், "டிவி' கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அது உங்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் 4,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர்.

ஒரு கிலோ இலவச அரிசி திட்டம், கடத்தல்காரர்களுக்கானது.

தரமான அரிசி, அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு, தரமற்ற அரிசி, தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு கோடி; உங்களுக்கு வியாதி. இது தான் இத்திட்டத்தின் மிச்சம்.

முக்கிய ஆபரேஷனை ஒரு லட்சம் ரூபாயில் செய்ய முடியுமா? காலரா, சிக்-குன் குனியா, மலேரியா போன்றவற்றுக்கு தான் அது பயன்படும். இத்திட்டத்திலிருந்து பல தனியார் மருத்துவமனைகள், வெளிவந்து விட்டன.

ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 3,000 கோடி ரூபாய் செலுத்தி, 600 கோடி ரூபாய் லாபம் பார்த்து உள்ளனர்.

கான்கிரீட்டுக்கான கம்பிகளை விற்க, ஸ்டாலின் மருமகன் குடும்பத்துக்கு, கான்ட்ராக்ட் விட்டுள்ளனர். மணல், கிரானைட் மூலம், 50 ஆயிரம், 80 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளனர்.

கருணாநிதி, தன்னுடைய மகனுக்கு துணை முதல்வர் பதவி, இன்னொரு மகனுக்கு மத்திய அமைச்சர், பேரனுக்கு மத்திய அமைச்சர், மகளுக்கு எம்.பி., பதவி வழங்கியுள்ளார். "ஊழல் செய்வதில் விஞ்ஞான முறையைக் கண்டுபிடித்தவர் கருணாநிதி' என, நீதிபதி சர்க்காரியா கூறியுள்ளார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார். தற்போது ராஜா சிறையில் உள்ளார். அவர் நண்பர் சாதிக், மற்றொரு நண்பர் தீபக் ஆகியோர் மர்மமாக இறந்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் சாகப் போகின்றனரோ? மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கள்ள லாட்டரிச் சீட்டு, ரவுடியிசம் போன்றவை, ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அதிகரித்துள்ளன. ஒரு குடும்பம் லாபம் அடைய, ஏழு கோடி மக்கள் கஷ்டப்படுகின்றனர். கொள்ளையடித்ததில் கருணாநிதி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

கருணாநிதியின் குடும்ப ஆட்சியை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்; தி.மு.க., வேட்பாளர்கள் டிபாசிட் இழக்க வேண்டும். என்னுடைய ஆட்சிக் காலத்தில், இலவச சைக்கிள் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்றவை உருவாக்கப்பட்டன.

மின்வெட்டு சீராக இருந்தது, சட்டம் ஒழுங்கு சரிவர இருந்தது. கருணாநிதியால் விலைவாசியை சரிப்படுத்த முடியாது; மின்வெட்டை சீரமைக்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றுவேன்.

அவர்களது குடும்பத்தினரிடம் உள்ள கேபிள் தொழிலை, அரசுடைமையாக்குவேன். எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்கிற நிபந்தனை உள்ளது. அதை தவிர்த்து, எழுத, படிக்கத் தெரிந்திருந்தாலே, உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கருணாநிதி குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.


No comments: