
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி நகரத்தை அடுத்து ஸ்டெர்லைட் நிறுவனம் அமைத்து உள்ள, நாசகார நச்சு ஆலையான தாமிர உருக்கு ஆலை, நிலம், நீர், காற்று அனைத்தையும் நச்சுத்தன்மை உடையதாக்கி, விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் அனைவரின் வாழ்வையும் பாழாக்கி, உயிருக்கே ஊறு விளைவிக்கும் நோய்களையும் ஏற்படுத்துவதோடு, வேளாண் விவசாய நிலங்களையும் பாழ்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் என்பதால் இந்த ஆலை அகற்றப்பட வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக ம.தி.மு.க போராடி வருகிறது. பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றும் போராட்டத்தைத் தர்மயுத்தமாகவே தொடர்வோம் என்று அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நானே வாதாடினேன். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தற்காலிகமாக தடை ஆணையும் பெற்றது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நானே வழக்கு தொடுத்து வாதாடினேன்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் எந்த அளவில் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி நாக்பூரில் உள்ள மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல், பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (நீரி) உத்தரவிட்டது. வழக்கு தொடுத்தவன் என்ற முறையில் நானும் மத்திய அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பங்கேற்கும் விதத்தில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், 8 வார காலத்திறகுள் உச்ச நீதிமன்றத்தில் அந்த ஆய்வு அறிக்கை தரப்பட வேண்டும் எனவும், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 40வது நாளில்தான் நீரி நிறுவனம் ஆய்வு நடத்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று வருகை தந்தது. நீரியின் சார்பில் டி.நந்தி தலைமையில், டி.ஜி.காஜ்காட்டே, ஏ.என்.வைத்யா, ஏ.டி.பனார்க்கர், எம்.பி.பாட்டீல், கார்த்திக், ஆர்.சிவகுமார் ஆகிய ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வினை மேற்கொண்டனர். நிபுணர் குழுவினரும், மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் 6ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையின் ஆய்வினைத் தொடங்க முனைந்தனர்.
இந்த ஆய்வில் பங்கேற்கச் சென்ற என்னை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், என்னுடன் வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடுமையாக வாதாடியது. உச்ச நீதிமன்றத்தில் வாதாடும்போதே உதவி செய்வதற்கு வழக்கறிஞர்கள் உடன் இருப்பதைப் போல, இந்த ஆய்வில் எனக்கு உதவுவதற்காக என்னுடன் 4 பேரை அனுமதிக்க வேண்டும் என்று நீரி நிபுணர் குழுவினரிடம் நான் வற்புறுத்தியதின் பேரில் சுற்றுச்சூழல் நிபுணரான நித்தியானந்தன் ஜெயராமும், ம.தி.மு.க. சட்டத்துறை செயலர் வழக்கறிஞர் தேவதாஸ், தராசு மகாராசன், ஜாக்சன் தாமஸ் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment