Saturday, April 9, 2011

அரசு நலத் திட்டத்தால் பயன்பெற்றது கருணாநிதி குடும்பம்:ஜெயலலிதா

.



நாமக்கல் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜெயலலிதா, பரமத்தி -கோட்டை சாலை சந்திப்பில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:

கடந்த முறை ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஏழை மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியதுபோல் எந்தவொரு ஏழைக்கும் நிலம் வழங்கப்படவில்லை. அதற்குப் பதில் திமுக கட்சியினரால் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 1.62 கோடி வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கியதாகக் கூறி கருணாநிதி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், அந்தத் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க செலவிடப்பட்ட பணம் மக்களது வரிப் பணம் என்பதை மறைந்துவிடக் கூடாது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசியின் அளவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்தத் திட்டம் ஏழை மக்களுக்கு பயன்படுவதற்குப் பதில் அரிசி கடத்தல்காரர்கள் பணக்காரர்களாகவே பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதாக திமுக கூறி வருகிறது. ஆனால், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து முறைகேடாக முறையில் ஆளுங்கட்சியினரால் ரூ. 600 கோடிக்கு மேல் கமிஷன் பெறப்பட்டுள்ளது. மேலும், இத் திட்டத்தின் மூலம் மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கான்கிரீட் வீடுகளை கட்டும் திட்டத்தால் மக்கள் கடனாளியானதுதான் மிச்சம். கருணாநிதி குடும்பத்தினர் சிமெண்ட் ஆலை, இரும்பு தொழிற்சாலைகளை நிர்வகித்து வருகின்றனர். கட்டுமானப் பொருள்களுக்கு செயற்கை முறையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றின் விலையை பன்மடங்கு உயர்த்தி அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துவிடுகின்றனர்.

அதேபோல், 108 ஆம்புலன்ஸ் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால், அதை தான்தான் கொண்டு வந்ததாக கருணாநிதி கூறி வருகிறார். இந்த ஆம்புலன்ஸ் திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தங்களது குடும்ப தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து விட்டனர்.

வெளிநாட்டவர்களே கண்டு வியக்கும் வண்ணம் விஞ்ஞான ரீதியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில் தொடர்புடையவரும், மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய கூட்டாளியுமான சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந் நிலையில், ராசாவின் உறவினரான தீபக் என்பவரும் மர்மமான முறையில் இறந்துவிட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறப்பதுக்கு பின்புலம் உள்ள உண்மை விசாரிக்கப்பட வேண்டும். சமீபத்தில் ஆம்னி பஸ்ஸில் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பணம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் ஸ்ரீரங்கம் தொகுதியில் விநியோகிப்பதற்காகக் கடத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.

கருணாநிதி குடும்பத்தினர், சொந்தமாக விமான நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தென்காசி அருகே பண மூட்டைகளை வீசிவிட்டு சென்றதாகத் தகவல் தெரிகிறது. தனது குடும்ப உறுப்பினர்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காகவே பல திட்டங்கள் கொண்டு வருகிறார் கருணாநிதி.

பொருளாதார நிலை சீரழிந்து விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. மின்வெட்டு, நிலமோசடி, ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றவும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் நாமக்கல்லில் கோழிப் பண்ணை, லாரி தொழில் சிறப்பான வளர்ச்சி அடைய தேவையான திட்டங்கள் தீட்டப்படும். ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு என்ற விதியை திருத்தி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

கொல்லிமலைக்கு மாற்றுப் பாதை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்தவும், நாமக்கல்லில் இருந்து ராசிபுரத்துக்கு ரிங் சாலை அமைக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


1 comment:

Anonymous said...

இப்பவே ஹெலிகாப்டரில வரும், நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?