Thursday, April 7, 2011

தமிழகத் தேர்தல் களத்தில் கிரிமினல் பின்னணியுடன் 125 வேட்பாளர்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் கிரிமினல் பினனணியுடன் கூடிய 125 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளிலுமே கிரிமினல் வேட்பாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக சார்பில் 43 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

திமுகவில் 24 பேரும், பாஜகவில் 19 பேரும், பாமகவில் 14 பேரும் நிறுத்தப் பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக சார்பில் தலா 6 கிரிமினல் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் அதிக அளவிலான கேஸ்களுடன் கூடியவராக திகழ்பவர் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜாதான். இவர் மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு என 6 வழக்குகள் உள்ளன. ஆபாசமாக நடந்து கொள்ளுதல், ஆயுதங்களை வைத்து தாக்குதல், மிரட்டுதல் என இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

3 பாஜக, அதிமுக, பாமகவைச் சேர்ந்த தலா 2 வேட்பாளர்கள், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டு களுடன் கூடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நாகப்பட்டனம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முருகானந்தம் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் பூம்புகார் தொகுதி வேட்பாளர் மீதும், ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீதும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

கொடிய ஆட்சி வந்துவிடக் கூடாது: மதுரையில் கலைஞர்.


தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.

மதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர், தி.மு.க.,வை வளர்க்க தானும், முன்னாள் மதுரை மேயர் முத்துவும் அரும்பாடுபட்டதாகவும், தி.மு.க.,வுக்காக பாடுபட்ட பி.டி.ஆர்., தென்னரசு, தமிழ்குடிமகன் உள்ளிட்ட பலர் இந்த மேடையில் இல்லை, ஆனால் அவர்கள் தந்துவிட்டு சென்ற உணர்வு என் உருவத்திலும், அழகிரி, பொன் முத்துராமலிங்கம் உருவில் உள்ளது என்றார்.

மேலும், பேசிய அவர், திமுக ஆட்சியில்தான் மதுரையில் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை பற்றி யார் குறைகூறினாலும் கவலைப்படபோவதில்லை. மக்களுக்கு ஆற்றும் பணியை திமுக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். இனஉணர்வோடு தான் கொடிய ஆட்சி மலராமல் தடுக்க முடியும் என்றார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது.

தி.மு.க., ஆட்சியில் மதுரை மாநகராட்சியாக மாறியது. மதுரை திண்டுக்கல் சாலையில் மேம்பாலம், மேயர் முத்து மேம்பாலம், மாநகராட்சி கட்டிடம், மதுரை சுற்றுச்சாலை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் கக்கன் சிலை அமைக்கப்பட்டது. மதுரையில் ஐகோர்ட் கிளை ஏற்படுத்தப்பட்டதும் தி.மு.க., ஆட்சியில் தான்.

பதிலுக்கு பதில், தாக்குதலுக்கு தாக்குதல் போன்ற பழக்கம் எனக்கு இல்லை. ‌செல்லும் இடமெல்லாம் ஜெயலலிதா என் மீது குற்றம் சாட்டுகிறார். நம்மை தள்ளிவிட்டு ஆட்சியை பிடிக்க முயற்சிசெய்கிறார். சென்னை கூட்டத்தில் நதிநீர் பிரச்னை, தமிழை மத்திய ஆட்சி மெட்ழி, முல்லை பெரியாறு பிரச்னை, சேது சமுத்திர திட்டம் போன்று ‌மக்களுக்கு தேவையான திட்டங்களை சோனியாவிடம் கேட்டேன்.

உங்களுக்காக நான் இருப்பவன். பாடுபடுபவன். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பெரும் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். கொடிய ஆட்சியை தடுத்து நல்லாட்சி தொடர முடியும் என்றார்.

ஒற்றுமையுடன், செயல்பட்டு வெல்ல வேண்டும்-சரத்குமார்.


சிறு சிறு குழப்பங்களை விளைவித்து கூட்டணியை சீர்குலைக்க முயல்கிறார்கள் எதிர்த் தரப்பினர். அதற்கு உடன்படாமல், ஒருமித்து செயல்பட்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

கோவையில் இன்று அதிமுக கூட்டணி சார்பில் வ.உ.சி.மைதானத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசியதாவது...

6 நாட்களில் தேர்தல் வரப் போகிறது. இங்கு புதிய கூட்டணி உருவாகியிருக்கும்போது, புதிய உறவு மலர்ந்திருக்கும்போது, அங்கு சிறு சிறு குழப்பங்களை உருவாக்கி இதை சீர்குலைத்து விடலாமா என்று நினைத்து அது முடியாமல், போன ஏக்கம் எதிர்த் தரப்பிலே இருக்கிறது. எனவே அவர்களுக்கு இடம் கொடுத்து விடாதபடி ஒன்றுபட்டு, ஒருமித்து செயல்பட்டு வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்க வேண்டும்.

இந்த ஐந்து ஆண்டு கால கருணாநிதி குடும்ப ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, விவசாயிகளுக்குப் பாதிப்பு, மாணவர்களுக்குப் பாதிப்பு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு, தொழிற்சாலைகளுக்குப் பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல துயரங்கள். இதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் கடந்த 10 நாட்களாக நான் தென் மாவட்டங்களில், தென்காசி வேட்பாளரான நான் பிரசாரம் செய்யும்போது, எங்கு போனாலும் இரட்டை இலைச் சின்னத்தைக் காட்டி மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். ராசாதான் அந்த ஊழலுக்குச் சொந்தக்காரர். அந்த ஊழல் கட்சிக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. இருவரும் சொந்தக்காரர்கள்.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் இன்று தேர்தலை சந்திக்கிறது திமுக. இது மிகப் பெரிய அவமானம். பக்கத்து வீட்டுக்கு போலீஸ் வந்தாலே அவமானப்படுவோம் நாம். ஆனால் இவ்வளவு பெரிய ஊழலை செய்து விட்டு வெட்கமே இல்லாமல் வாக்கு கேட்க வருகிறார்கள்.

ஊழல் தொடர்பாக முதல்வரின் மனைவியை விசாரிக்கிறார்கள், மகளை விசாரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்கிறார் ப.சிதம்பரம். அதை வழிமொழிகிறார் சோனியா.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதற்காக ஒன்று திரண்டு, ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். மக்களை பணத்தைக் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் ஏமாளிகள் அல்ல, ஏமாறும் நிலையில் மக்கள் இன்று இல்லை.

ஏப்ரல் 13ம் தேதி சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாளாக மலரப் போகிறது. இது நமக்கான தேர்தல் அல்ல, மாறாக வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் சிறப்பாக வாழ வித்திடும் நாளாகும்.

இளம் தலைமுறையினர் சரியான பாதையில் போக வேண்டும் என்றால் தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும், அது புரட்சித் தலைவியின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றார் சரத்குமார்.

கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். விஜயகாந்த் மட்டும் வரவில்லை

திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்-கோவையில் ஜெயலலிதா பேச்சு.


இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்..

கோவை கூட்டத்தில் ஜெயலலிதா மேலும் பேசியதாவது:

இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல்.

நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக்காரக் கும்பலுக்கு, குடும்ப ஆட்சிக்கு தமிழக மக்கள் என்ன தண்டனை தரப் போகிறார்கள் என்பதை நாடே உற்றுப் பார்க்கிறது.

சட்டம் ஒழுங்கு, மின்சார உற்பத்தி ஆகியவை தான் ஒரு மாநிலத்திற்கு மிகவும் முக்கியம். இவை இரண்டையும் சீர்குலைத்தவர் கருணாநிதி. தொழில்கள் நலிவுற்று, விவசாயம் சீர்குலைந்து, விலைவாசி விஷம் போல ஏறி விட்டது. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தவர்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், திமுக அமைச்சர்களும்தான்.

மதுரையில் தா.கிருட்டிணன் கொலை, மதுரை பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு, துணைவேந்தர் மீதான தாக்குதல், அரசு அதிகாரிகளைப் பழிவாங்குதல் எனபல நடவடிக்கைகள்.

நில அபகரிப்பு, ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா மீது என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. பனையூர் இரட்டைக் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்.

வீரபாண்டி ஆறுமுகம், கொலைக் குற்றவாளியை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறினாரே. அப்போது அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா. ஹார்லிக்ஸ் திருட்டு குறித்து நான் புகார் கூறியது குறித்து நடவடிக்கை எடுத்தாரா.

இப்படி எதற்குமே திராணியற்ற முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுகிறார். இதற்கு அவருக்கு என்ன யோக்கியதை உள்ளது. கருணாநிதி ஆட்சியி்ல எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறிகள் பெருகி விட்டன.

மின்தேவைக்கும், உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்பற்றாக்குறை மாநிலமாக தமிழகத்தை ஆக்கியதுதான் கருணாநிதி சாதனை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு அஞ்சும் நிலை. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போது போகும், எப்போது நிம்மதி கிடைக்கும் என்று அனைவரும் ஏங்கும் நிலைக்கு தமிழகத்தை சீரழித்து விட்டார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் பேச்சில் பாதி, அவர் ஊர் ஊராக போய் பிரசாரம் செய்யும்போது எழுதி வைத்து வாசித்ததே என்பது குறிப்பிடத்தகக்து.