Tuesday, August 9, 2011

நயன்தாராவை மதம் மாற்றியது குற்றம் : கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்.

கட்டாயப்படுத்தி நயன்தாராவை மதம் மாற்றியது குற்றம்: பிரபுதேவாவுக்கு  கிறிஸ்தவ  அமைப்பு  கண்டனம்

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.

இந்துவான பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.

பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.

ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.

உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.

பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

போலி என்கௌண்டர் செய்யும் போலீசாரை தூக்கிலிட வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு.போலி என்கௌண்டர் செய்யும் போலீசாரை தூக்கிலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தை கையில் வைத்திருக்கும் போலீசார் மக்களை காக்க வேண்டியவர்களே தவிர, அவர்களை கொல்லும் கூலிப்படையல்ல என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கத்ஜு மற்றும் சி.கே. பிரசாத் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.

இது குறித்து நீதிபதி கத்ஜு கூறுகையில்,

போலி என்கௌண்டர் மூலம் மக்களைக் கொல்வது ஒரு திட்டமிட்ட கொலையாகும். பெருங்குற்றமாகக் கருதி அதை செய்த போலீசாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.

கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி ராஜஸ்தான் போலீசின் தனிப்படை தாதா சிங்கை போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றது. இதில் தொடர்புடைய 2 மூத்த அதிகாரிகளான கூடுதல் டிஜிபி அர்விந்த ஜெயின் மற்றும் எஸ்பி அர்ஷத் ஆகியோரை சரணடையுமாறு உத்தரவிட்டபோது தான் நீதிமன்றம் இவ்வாறு கூறியது.

இந்த 2 அதிகாரிகளும் சரண் அடையாவிட்டால் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அவர்களை கைது செய்யலாம் என்று அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் ரத்தோர் தலைமறைவாகிவிட்டார் என்று தாரா சிங்கின் மனைவி தெரிவித்தார். அதற்கு ரத்தோர் சரணடையாவிட்டால் அவரைக் கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சாதாரண மக்கள் குற்றம் செய்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை அளிக்கலாம். ஆனால் போலீசார் குற்றம் செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றனர்.

ராஜஸ்தான் போலீஸ் தனது கணவரை கடத்தி, அநியாயமாக போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றுவிட்டதாக தாரா சிங்கின் மனைவி சுஷீலா தேவி புகார் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்குமாறு ராஜஸ்தான் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்டது.

தாரா சிங் பல குற்றங்கள் செய்தவன். அவன் தலைக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்று ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் மகாராஷ்டிரா போலீசார் ஒரு தொழில் அதிபரை போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து போலி என்கௌண்டர் செய்யும் போலீசாருக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

உயர் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கூறினார்கள் என்பதற்காக என்கௌண்டர் என்ற பெயரில் கொலை செய்யும் போலீசாரை எச்சரிக்கின்றோம். போலி என்கௌண்டர் செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி சமச்சீர் கல்வி நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படும் - ஜெயலலிதா.உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும். இன்னும் 10 நாட்களில் இத்திட்டத்தை அமல்படுத்தி புத்தகங்களையும் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் நிலை குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில் இன்று சட்டசபையில் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வாசித்தார் முதல்வர் ஜெயலலிதா.

அப்போது அவர் கூறுகையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே தமிழகத்தில் அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தமிழக அரசு ஏற்கிறது. அதன்படி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியுள்ளது உச்ச நீதிமன்றம் - கருணாநிதி.சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது என்று
தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.5 கோடி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களும், உச்ச நீதிமன்ற நீதியரசர்களும் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தி.மு.க. ஆட்சி அறிமுகப்படுத்தியது என்ற காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று நீதிமன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த தமிழக அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.

இதே தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப்போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மக்களுக்கு இனிப்பு வழங்கிய ஸ்டாலின்:

இந்நிலையில் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்.

இப்படி ஒரு தீர்ப்பு திமுக ஆட்சியில் வந்திருந்தால், கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நாங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வோம் என்றார்.

சட்டமன்றத்திற்கு செல்வீர்களா என்றபோது, எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்வரை நாங்கள் போகப்போவதில்லை என்றார்.

பின்னர் பாளையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாளை பேருந்து நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு இறங்கி சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு சென்றார்.

70 பள்ளி நாட்கள் வீண் - ராமதாஸ்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சமச்சீர்கல்வி தொடர்பான விசயத்தில் தமிழக அரசின் பிடிவாதப்போக்கால் காயமடைந்திருந்த மனங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மாறி மாறி மேல் முறையீடு செய்தது. இதன்மூலம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாடம் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஒருபுறம் வழக்குக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழித்த தமிழக அரசு, இன்னொருபுறம் பழைய பாடத்திட்டத்தின் படியான புத்தகங்களை அவசர அவசரமாக அச்சடிப்பதற்காக 500 கோடி ரூபாய்க்கு மேல் வீணாக செலவழித்துள்ளது.

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் நலனின் அக்கறையின்றி செயல்பட்டு, 70 பள்ளி வேலை நாட்களும் ரூ.500 கோடிக்கும் அதிகமான மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதற்கு காரணமான அனைவரும் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. பொதுப்பாடத்திட்டத்தை அனைத்துப்பள்ளிகளிலும் இவ்வாண்டே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

சமச்சீர் கல்வி என்பது பொதுப்பாடத்திட்டம் மட்டு மல்ல. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்கிற வகையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, அனைத்து பள்ளி வாரியங்களையும் இணைத்து ஒரே பள்ளி வாரியத்தை உருவாக்குவது உள்ளிட்ட முத்துக் குமரன் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி பொதுப்பள்ளியை நோக்கி தமிழக பள்ளி கல்வி முன்னேற ஆவன செய்ய வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வித் தீர்ப்பு - மக்களுக்கு கிடைத்த வெற்றி ! ; அ.தி.மு.க. அரசிற்கு கிடைத்த பின்னடைவு.பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் முதல் கட்டமாக 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் திமுக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறிய தமிழக அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் அறிமுகப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தது. இதுதொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்தது. மேலும் நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறும் அது உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளில் அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கிதலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி்மன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பு, பெற்றோர்கள் தரப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தரப்பு என முத்தரப்பில் வாதங்கள் நடந்தன. கடந்த வியாழக்கிழமையன்று வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா மற்றும் செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி:

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை கோர்ட் ஏற்கிறது. மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்த கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம்.

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

சமச்சீர்கல்வித் திட்டத்தை இன்னும் 10 நாட்களில் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வி அமலாகிறது

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது. நடப்பாண்டிலேயே 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றே சட்டசபையில் தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

3 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு

3 பேர் அடங்கிய பெஞ்ச் என்பதால் இருவிதமான தீர்ப்பு வெளியாகலாமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும் மூன்று நீதிபதிகளும் ஒரே மனதாக, ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் இழுபறி தவிர்க்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

சமச்சீர் கல்வியே தொடரும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் வரவேற்றுள்ளனர். பல இடங்களில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெட்ரிகுலேஷனுக்கு மூடு விழா

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற நான்கு வகை கல்வி முறைகள் தமிழகத்தில் ரத்தாகிறது.

மாறாக அனைத்து பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்தையே சொல்லித் தரும்.

அச்சம் தவிருங்கள்... இந்தியா எதையும் சமாளிக்கும்! - பிரணாப்.அமெரிக்க பொருளாதார பிரச்னைகள் காரணமாக எழுந்துள்ள அச்சத்தை தவிர்க்குமாறும், எதையும் சமாளிக்கும் அளவு இந்தியப் பொருளாதாரம் உறுதியாக உள்ளதாகவும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்வதேச கடன் தர வரிசையில் அமெரிக்கா வீழ்ச்சியடைந்துள்ளதால், அதன் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்றும் இந்த வீழ்ச்சி தொடர்ந்தது.

இன்னொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந்த மோசமான மாறுதல்கள் இந்தியாவை எந்த அளவு பாதிக்கப் போகிறதோ என்ற கவலை எழுந்துள்ளது. இந்தக் கவலையைப் போக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று சில விளக்கங்களையும்உறுதியையும் அளித்தது.

இந்தியாவின் அடித்தளம் உறுதியாக உள்ளதாகவும், பாதிப்புகளை எதிர்கொள்வதில் இதர நாடுகளைவிட இந்தியா வலுவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிகழ்ந்துவரும் சமீபகால நிகழ்வுகள் உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பது உண்மைதான். குறிப்பாக மூலதன இடப்பெயர்வு போன்றவை சற்றே பாதிக்கக் கூடும். 2008-ம் ஆண்டு இதை விட மோசமான கட்டத்தை வெற்றிகரமாக கடந்து வந்தது இந்தியா. முன்னிலும் அதிவேக வளர்ச்சியை கடந்த ஆண்டு சந்தித்தது நினைவிருக்கலாம்.

அந்த வகையில் இந்தியா இன்றுள்ள நெருக்கடியையும் தாங்கும். நாட்டின் வளர்ச்சி அப்படியே உள்ளது. அதன் அடித்தளம் மிகவும் உறுதியானது. சிக்கலான தருணங்களில் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்வதில் மற்ற நாடுகளைவிட நாம் சிறந்த இடத்தில் இருக்கிறோம்.

விருச்சாசனம், கருடாசனம், குதபாதாசனம்.

விருச்சாசனம்.
விருச்சாசனம்

செய்முறை:

நேராக நின்ற நிலையில் வலதுகாலை மடக்கி, இடது தொடையில் வையுங்கள். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, உடலை சமன் செய்தபிறகு, தலைக்கு மேல் கும்பிட்டநிலையில் நிலை நிறுத்தவும். கண்பார்வையை ஒரு புள்ளியில் குவியுங்கள். இதேபோன்று இடதுகாலை மடக்கியும் செய்யவும்.

பயன்கள்:

நினைவாற்றல் பெருகும். பதட்டம் குறையும். கால், மூட்டு நோய்கள் அகலும். `வாக்கிங்' போவதைவிட, பல மடங்கு பயன்தருவது, விருச்சாசனம் மட்டுமே!


கருடாசனம்.
கருடாசனம்

செய்முறை:

நேராக நிமிர்ந்து நில்லுங்கள். உங்களின் வலது கால், இடதுகாலோடும், வலதுகை, இடது கையோடும் பின்னி நிற்கட்டும். கைகளிரண்டையும் புருவ மத்திக்கு கொண்டு வந்து, மூக்கோடு பொருத்துங்கள்.

இது உங்களின் கண்கள், அந்தந்த பக்கத்தை தனியாக பார்ப்பதாக இருக்க வேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து, பிறகு ஆசனத்தை கலைத்து விடுங்கள். அடுத்தபடியாக கால்களை மாற்றி, மீண்டும் அதேபோல செய்யவும்.

பயன்கள்:

உடம்பு தசைப்பிடிப்போடு திகழும். கண் பார்வை பிரகாசமாகும். முகம் அழகுபெறும். கை-கால் நரம்புகள் வலுவடையும். ஹிரண்யா, விரைவீக்கம் வராது. தொடை, பிருஷ்டபாகம் எடை குறையும்.

மாலைக்கண், நிறக்குருடு, கிட்டப்பார்வை, தூரப்பார்வை இருப்போர், தொடர்ச்சியாக கருடாசனம் செய்துவந்தால், மிகுந்த பலன்கள் கிட்டும்.


குதபாதாசனம்.

குதபாதாசனம்

செய்முறை:

இரண்டு உள்ளங்கால்கள் மீது அமரவும். உங்களின் நெற்றி தரையை தொடும்வகையில், அப்படியே குனியுங்கள். இயல்பான சுவாசம் இருக்கட்டும்.

பயன்கள்:

கர்ப்பவதிகளுக்கு சுகப்பிரசவம் கிட்டும். மாதவிடாய் கோளாறு நீங்கும். விரை வீக்கம், ஹிரண்யா, மூலநோய் நீங்கும். தாம்பத்ய உறவில் போக இச்சை கூடும். காய கற்பம் தேவையிராது. குதபாதாசனத்தை சரியாகச் செய்தால், நல்ல பலன் கிட்டும்.

எச்.ஐ.வி. பாதிப்பை 15 நிமிடத்தில் கண்டறிய புதிய கருவி.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிவதற்காக பிளாஸ்டிக்கால் ஆன கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக செயல்படுவதுடன் 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. இதற்காகும் செலவும் மிக குறைவாகும்.

எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளதா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதற்காக பல நாட்கள் காத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் பயமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தற்போது அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை.

ஏனெனில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை அறிய முடியும். “எம் சிப்” மூலம் இதை கண்டறிய முடியும். இது “கிரீடிட்” கார்டு போன்று இருக்கும். அதில் ரத்தம் செலுத்துப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதன்மூலம் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி பால்வினை நோய் பாதித்துள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம்.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கிசாலி, சுவாண்டா நகரங்களில் இந்த “எம் சிப்” மூலம் எய்ட்ஸ் பரிசோதனை நடத்தினார்கள். அதில் 100 சதவீதம் பேரிடம் “எய்ட்ஸ்” நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒரு “சிப்”பின் விலை ரூ.45தான். இதை எங்கும் எளிதாக எடுத்து செல்ல முடியும். இந்த பரிசோதனையை கர்ப்பிணி பெண்களிடம் நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.