Tuesday, August 9, 2011

ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியுள்ளது உச்ச நீதிமன்றம் - கருணாநிதி.



சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது என்று
தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.5 கோடி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களும், உச்ச நீதிமன்ற நீதியரசர்களும் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தி.மு.க. ஆட்சி அறிமுகப்படுத்தியது என்ற காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று நீதிமன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த தமிழக அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.

இதே தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப்போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மக்களுக்கு இனிப்பு வழங்கிய ஸ்டாலின்:

இந்நிலையில் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்.

இப்படி ஒரு தீர்ப்பு திமுக ஆட்சியில் வந்திருந்தால், கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நாங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வோம் என்றார்.

சட்டமன்றத்திற்கு செல்வீர்களா என்றபோது, எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்வரை நாங்கள் போகப்போவதில்லை என்றார்.

பின்னர் பாளையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாளை பேருந்து நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு இறங்கி சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு சென்றார்.

70 பள்ளி நாட்கள் வீண் - ராமதாஸ்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சமச்சீர்கல்வி தொடர்பான விசயத்தில் தமிழக அரசின் பிடிவாதப்போக்கால் காயமடைந்திருந்த மனங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மாறி மாறி மேல் முறையீடு செய்தது. இதன்மூலம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாடம் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஒருபுறம் வழக்குக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழித்த தமிழக அரசு, இன்னொருபுறம் பழைய பாடத்திட்டத்தின் படியான புத்தகங்களை அவசர அவசரமாக அச்சடிப்பதற்காக 500 கோடி ரூபாய்க்கு மேல் வீணாக செலவழித்துள்ளது.

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் நலனின் அக்கறையின்றி செயல்பட்டு, 70 பள்ளி வேலை நாட்களும் ரூ.500 கோடிக்கும் அதிகமான மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதற்கு காரணமான அனைவரும் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. பொதுப்பாடத்திட்டத்தை அனைத்துப்பள்ளிகளிலும் இவ்வாண்டே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

சமச்சீர் கல்வி என்பது பொதுப்பாடத்திட்டம் மட்டு மல்ல. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்கிற வகையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, அனைத்து பள்ளி வாரியங்களையும் இணைத்து ஒரே பள்ளி வாரியத்தை உருவாக்குவது உள்ளிட்ட முத்துக் குமரன் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி பொதுப்பள்ளியை நோக்கி தமிழக பள்ளி கல்வி முன்னேற ஆவன செய்ய வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

No comments: