Wednesday, July 27, 2011

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவருமான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் திங்கள்கிழமை முழுவதும், நேற்றும் விசாரணை நடந்தது. இன்று 3வது நாளாக விசாரணை நடந்தது.

வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸ் காவலில் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கடந்த மூன்று நாட்களாக காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் அவருக்கு இன்று இரு நபர் ஜாமீன் வழங்கி நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டார்.

ரூ. 25,000க்கு இருநபர் ஜாமீன் வழங்கியதை அடுத்து, வீரபாண்டி ஆறுமுகம் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

ஆதரவாளர்கள் கலாட்டா:

முன்னதாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்ட அவர்கள், கற்களைக் கொண்டு நீதிமன்றத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.

'எல்லாத்துக்கும் காரணம் அட்டர்னி ஜெனரல் வாகனாவதி தான்' : ராசா.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் இப்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலான வாகனாவதி தான் காரணம் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா குற்றம் சாட்டினார்.

நேற்று நீதிமன்றத்தில் தனக்காக வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் சுஷில்குமாரை ஒரு நிமிடம் உட்காரச் சொல்லிவிட்டு எழுந்த ராசா, வாகனாவதி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

ராசா வாதாடுகையி்ல், வாகனாவதி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தபோது தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விதிகள் முடிவு செய்யப்பட்டன. அவர் சொன்ன அறிவுரையின்படி தான் நான் எல்லாவற்றையும் செய்தேன்.

இதற்காக தொலைத் தொடர்புத்துறையிடம் ஏராளமாக கட்டணத்தையும் வாங்கினார். இப்போது அவர் அட்டர்ஜி ஜெனரலாக பதவி உயர்வும்பெற்றுவிட்டார்.

ஆனால், அவர் சொன்னதைக் கேட்டு செயல்பட்ட நான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். இது என்ன நியாயம்?. இதனால் வாகானவதியையும் இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்றார் ராசா.

இந்தக் குற்றச்சாட்டை வாகனாவதி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபரின் பேச்சுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.

முன்னதாக இந்த விவகாரத்தில் வாகனாவதியிடமும் சிபிஐ விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவே பிரதமர் விரும்பியிருக்கிறார்.ராசா தொலைத் தொடர்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கும் விஷயத்தில் அந்த அமைச்சகத்துடன் அதிகாரபூர்வமாக தொடர்பு வைத்துக் கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளரான டி.கே.ஏ.நாயர் இது குறித்து எழுதிய குறிப்புகள் மூலம் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

யாருக்கு லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற கொள்கை ஏன் பின்பற்றபட்டது, ஏன் லைசென்ஸ்கள் ஏலம் விடப்படவில்லை என்பது எனக்குத் தெரியாது. இது குறித்து ராசா என்னுடம் ஆலோசிக்கவே இல்லை. இது குறித்து அமைச்சரவையிலும் விவாதிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு எல்லாமே தெரியும் என்பதும், இந்த விஷயத்தில் தலையிடாமல் அல்லது தலையிட விரும்பாமல் அவர் அமைதி காத்ததும் இப்போது தெரியவந்துள்ளது.

பாஜக தலைவர் முரளி் மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையின்போது, பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளரான டி.கே.ஏ.நாயர் சமர்பித்த குறிப்புகளில் இந்த விவரங்கள் அடங்கியுள்ளன.

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதியும், 10ம் தேதியும் 2ஜி லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக இரு கடிதங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார்.

11ம் தேதி டி.கே.ஏ. நாயர், இது தொடர்பான மேல் விவரங்களைக் கேட்டு தொலைத் தொடர்புத்துறைக்கு கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக நாயர் எழுதி வைத்துள்ள அலுவலகக் குறிப்பில், தொலைத் தொடர்பு அமைச்சகத்துடன் பிரதமர் அதிகாரபூர்வமாக எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதிகாரபூர்வமற்ற முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவே பிரதமர் விரும்புகிறார். பிரதமர் அலுவலகத்தையும் இந்த விஷயத்தில் சற்று எட்டவே வைத்திருக்க விரும்புகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பிரதமர் ஏன் தொலைத் தொடர்பு அமைச்சகத்துடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்து வரும் முறைகேடுகளை அறிந்திருந்தும் கூட பிரதமர் கண்ணை மூடிக் கொண்டாரா அல்லது அவரால் எதுவும் செய்ய முடியவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.

விழுப்புரம் கல்லூரியில் பயங்கரம் ஆசிரியர் அடித்ததில் மாணவர் சாவு.

விழுப்புரம் கல்லூரியில் பயங்கரம் ஆசிரியர் அடித்ததில்    மாணவர் சாவு;    சாலை மறியல்-போலீஸ் தடியடி

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் புதுவை கோவிந்தசாலை பாரதிபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் பிரபாகரன் (வயது 19). ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பிரபாகரன் வழக்கம் போல் இன்று காலை கல்லூரிக்கு சென்றார். ஆசிரியர் குணசேகரன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பாடம் சம்மந்தமாக பிரபாகரனிடம் அவர் கேள்வி கேட்டார். ஆனால் பிரபாகரன் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து குணசேகரன் மாணவன் பிரபாகரனை கன்னத்தில் அறைந்து வகுப்பறையை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். ஆனால் பிரபாகரன் வகுப்பறையை விட்டு செல்ல மறுத்து குணசேகரனை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகர் மீண்டும் பிரபாகரனை கன்னத்தில் மாறி மாறி தாக்கினார். இதில் பிரபாகரன் மயங்கி விழுந்தார்.

உடனடியாக கல்லூரி ஊழியர்கள் பிரபாகரனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அறிந்த கல்லூரி மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறி மாணவரை அடித்து கொன்ற ஆசிரியரை கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், ஆர்.டி.ஓ. பிரியா, தாசில்தார் ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கல்லூரி ஆசிரியர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுத்து அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து குணசேகரனை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் சமாதானம் அடையாத மாணவர்கள் விழுப்புரம்-திருச்சி ரோட்டில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வற்புறுத்தி கேட்ட போதும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் 2 1/2 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். மாணவர்கள் அங்கிருந்து கலைந்து ஓடினார்கள். இதன் பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமச்சீர் கல்வி வழக்கு : 2-வது நாளாக தமிழக அரசு வக்கீல் வாதம்.

சமச்சீர் கல்வி வழக்கு:    தமிழக அரசு வக்கீல்    2-வது நாளாக வாதம்;    சட்ட திருத்தம் செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி

தமிழக அரசுக்கு கல்வி மற்றும் சட்டம் குறித்து உரிய ஆலோசனை வழங்க சரியான ஆள் இல்லாமல் போய் விட்டது. இதனால்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டது. இப்போது தேவையில்லாத சிக்கலில் மாட்டியுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் தான் இவ்வாறு கூறியது தமிழக அரசின் கருத்து அல்ல என்றும், இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் மாலையில் அவசரம் அவசரமாக விளக்கம் அளித்தார் ராவ். ராவின் இந்த வாதத்தால் தமிழக அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. அந்த மனு மீதான 2வது நாள் விசாரணை நேற்று நடந்தது. நேற்று அரசுத் தரப்பு வாதத்தை வழக்கறிஞர் பி.பி.ராவ் தொடர்ந்தார்.

அப்போது அவர் வாதிடுகையில் குறுக்கிட்ட நீதிபதிகள், சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக கடந்த தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத்தை 2011 அல்லது அதற்குப் பின்னர் அமல்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தெளிவான உத்தரவிட்டிருந்தும், சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது ஏன் என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளிதத ராவ்,

தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் தேவையற்றது என்பதை தைரியத்துடனும், உரத்த குரலிலும் ஏற்றுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறுதலான சட்ட திருத்தம் தேவையில்லை என்று, சரியான ஆலோசனை தமிழக அரசுக்கு வழங்கப்படவில்லை. இது போன்ற தேவையற்ற ஒரு செயலால், தேவையற்ற சிக்கலில் நாங்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறோம் என்றார் ராவ்.

தமிழக அரசின் வழக்கறிஞரே அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. தனது வாதத்தை தொடர்ந்த ராவ் மாலையில் முடிவு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தான் நீதிபதிகளிடம் தமிழக அரசின் புதிய சட்டத் திருத்தம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தமிழக அரசின் கருத்து அல்ல, அவை தனது சொந்தக் கருத்துக்கள் என்று கூறினார்.

பி.பி.ராவின் பேச்சால் தமிழக அரசுக்குப் பெரும் தர்மசங்கடமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. வழக்கின் நிலையை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது ராவின் பேச்சு என்ற கருத்தும் எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பாக ராவ் ஆஜராவதற்கு, தமிழக அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன்தான் பெயரைப் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

முன்னதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான இன்னொரு மூத்த வக்கீலான குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில்,

கடந்த திமுக ஆட்சியில் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில சட்டப் பேரவையில் சமச்சீர் கல்வி தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசியபோது தரமான சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும், அப்போதைய அரசால் கொண்டு வரப்பட உள்ள கல்வி திட்டங்கள் தமிழக மாணவர்களுக்கு எந்த நன்மையையும் அளிக்காது என்று தெரிவித்துள்ளது என்றார்.

வீரபாண்டி ஆறுமுகம் முன்பு உட்கார பயந்த விசாரணை அதிகாரி.உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் நகர காவல் நிலையவளாக்கத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு சென்றிருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு என்ற பெயரில் நகர காவல் நிலையத்தை இழுத்து பூட்டு போட்டுவிட்டனர், புகார் கொடுக்க வருவபவர்கள் காவல் நிலையம் இருக்கும் பெரிய கடைவீதியை நெருங்க முடியாத அளவுக்கு வீதியின் இரண்டு பக்கமும் தடுப்புகள் ஏற்படுத்தி தடை செய்துள்ளார்கள்.


இதனால், பழைய பேருந்து நிலையத்திலிருந்து, கடைவீதிக்கும், முதல் மற்றும் இரண்டாவது அக்கரகாரத்திற்கும் சின்னக்கடை வீதிக்கும் செல்ல வழிவிடாமலும்,

அதேபோல சேலத்தின் கிழக்கு பகுதியிலிருந்த பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் பெரிய கடை விதிவழியாக செல்ல காவல்துறையினர் தடை செய்துள்ளார்கள்.

நகர காவல் நிலையம் உள்ள, பெரிய கடைவீதியில் உள்ள எல்லகடைகளும் பூட்டச்சொல்லி ள்ளதால் வணிகர்களும், ஆடி பண்டிகைக்கு கடைவீதியில் ஆடைகள் எடுக்க வரும் மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

இதற்கிடையில் அங்கம்மாள் நகர் நிலா மோசடி தொடர்பாக முன் ஜாமீன் பெற்றுள்ள வீரபண்டி ஆறுமுகம், நிலத்தை இழந்தவர்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் சொல்லப்பட்டிருக்கும் சில நபர்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உயர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார்

அதை உடைக்கும் விதமாகக வீரபாண்டி ஆறுமுகத்துக்கும், புகாரில் சொல்லப் பட்டிருக்கும் நபர்களுக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் விதமான போட்டோ ஆதாரங்களுடன், அங்கம்மாள் நகரில் குடியிருந்து வீட்டை இழந்த 29 நபர்களிடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 164 பிரிவின் கீழ், சேலம் மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

00எதிர் காலத்தில் சாட்சிகள் மாறாமல் இருப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஓன்று என்று காவல் துறைவட்டரங்களில் தெரிவித்தனர்.

மூன்று நாட்கள் விசாரணை முடிந்து வீரபாண்டி ஆறுமுகத்தை வீட்டுக்கு அனுப்பக்கூடாது, எப்படியாவது ஒரு வழக்கில் சிறைக்கு அனுப்பவேண்டும் என்று ஒரு பிரிவு காவல் துறை அலுவலர்களும், அந்த திட்டத்திலிருந்து வீரபாண்டி ஆறுமுகத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஒரு பிரிவினரும் துடிக்கிறார்கள்.

விசாரணை அதிகாரியான உதவி ஆணையாளர் பிச்சை, வீரபாண்டி ஆறுமுகத்தின் முன்னால் உட்கார கூட தைரியமில்லாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்துவிட்டு ‘உக்காரையா”என்று வீரபாண்டிஆறுமுகம் சொன்ன பின்னர்தான் தனதுஇருக்கையில் உட்காந்தார்.

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக அப்ரூவராக மாறும் காவல் ஆய்வாளர் லட்சுமணன்.வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது, சேலம் மாநகரத்தில், உள்ள பள்ளபட்டியிலும் பின்னர் கொண்டலாம்பட்டியிலும் காவல் ஆய்வாளரராக இருந்த லட்சுமணன் மீது அங்கம்மாள் நகர் நிலா மோசடி, பிரிமியர் மில் நிலா மோசடி மட்டுமில்லாமல் இன்னும் பல மோசடி வழக்குகள் உள்ளது.

வீரபாண்டி ஆறுமுகத்திடம் நெருக்கமாக இருந்த பல திமுக வினரே எரிச்சல் படும் அளவுக்கு அவரை அப்பா.. அப்பா... என்று கூப்பிட்டுக்கொண்டு முடிந்த அளவுக்கு கட்டைப்பஞ்சாயத்து பண்ணியவர் லட்சுமணன்.

செல்வாக்கில் இருந்தபோது பல உயர் காவல்துறை அதிகாரிகளை கூட பந்தாடிய லட்சுமணன் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கன்னியாகுமரிக்கு மற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், பணியில் சேராமல் விடுப்பு எடுத்துக்கொண்டு சேலத்துக்கு வந்துவிட்டார் லட்சுமணன்.

அங்கம்மாள் நகர், பிரிமியர் மில் நிலா மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதும், பதவியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட லட்சுமணன், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று பெங்களூரில் லட்சுமணனை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

லட்சுமணன் கைது செய்ததை ரகசியமாக வைத்திருக்கும் சேலம் காவல்துறை அதிகாரிகள், தன்னுடைய லாபத்துக்காக யாரையும் காட்டிக்கொடுக்கும் இயல்புடைய லட்சுமணனை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அப்ருவராக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

லட்சுமணன் அப்ரூவராகும் பட்சத்தில் இன்னும் பல பிரபலங்கள் உள்ளே செல்வார்கள் என்கிறார்கள் சேலம் கவல்துறையினர்.

3-வது நாளாக விசாரணை : வீரபாண்டி ஆறுமுகம் இரவு தூக்கம் இல்லாமல் தவிப்பு.சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு, பிரிமியர் மில் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சேலம் முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவரது சார்பில் வக்கீல்கள் ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதி, வீரபாண்டிஆறுமுகத்தை சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்,2 நாட்கள் விசாரணைக்கு பின்னர் அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். பிறகு ஜாமீனில் செல்லலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதன்படி வீரபாண்டி ஆறுமுகம் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் சரண் அடைந்தார். உதவி கமிஷனர் பிச்சையின் அலுவலகத்தில் அவரிடம் தொடர் விசாரணை நடந்தது. உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் 100-க்கும் மேற்பட்டகேள்விகளை கேட்டனர். வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்த பதில்களை போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

நேற்று 2-வது நாளாக விசாரணை அவரிடம் நடந்தது. சேலம் துணை கமிஷனர் ரவீந்திரன், உதவி கமிஷனர்கள் பிச்சை, காமராஜ் ஆகியோர் அவரிடம் கேள்விகளை கேட்டனர். சேலம் பள்ளப்பட்டி முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் பற்றி உயர் போலீசார் வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரித்தனர். இதற்கு வீரபாண்டிஆறுமுகம் பதில் தெரிவித்தார். பின்னர் போலீசார் லட்சுமணன் உங்களை அப்பா .. அப்பா என அழைப்பதாக கூறி உள்ளனர். ஏன் அப்படி அழைத்தார்? என கேட்டுள்ளனர்.

இதற்கு அவர், லட்சுமணனின் தந்தை எனது நண்பர். இதனால் அவர் என்னை அப்படி அழைத்து இருக்கலாம் என்று தெரிவித்தார். நில அபகரிப்பில் போலீசாரிடம் நீங்கள் தலையீடுசெய்ததாக கூறுகிறார்களே ? என போலீசார் கேட்டதற்கு , நான் எப்போதும் தலையிட்டது இல்லை என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் அவரிடம், நிலத்தை பத்திரப்பதிவு செய்து தர சொல்லி மிரட்டியதாக கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, இல்லை என தெரிவித்தார். காலையில் தொடங்கிய விசாரணை பகல் 1-10 மணிக்கு முடிந்தது. பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மீண்டும் பகல் 2.10க்கு விசாரணை தொடங்கியது.

உதவி கமிஷனர் பிச்சை அவரிடம் கேள்விகளை கேட்டார். இந்த விசாரணை 3.10 மணிக்கு முடிந்தது. அப்போது அவர் சோர்வாக இருந்ததால் டாக்டர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தனர். அவரது கால்கள் வீங்கி இருந்தது. இதனால் டாக்டர்கள் அவருக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.

நேற்று இரவு வீரபாண்டி ஆறுமுகம் 2 இட்லி, 2 தோசை மட்டும் சாப்பிட்டார். பிறகு அவர் தூங்க சென்றார். அப்போது போலீசார் கட்டில் தர மறுத்து விட்டனர். பெஞ்சில் தான் தூங்க வேண்டும் என கூறினர். இதை அறிந்த வக்கீல் மூர்த்தி போலீசாரிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள். அவர் முன்னாள் அமைச்சர். மாவட்ட செயலாளர். உடல் நிலை பாதிக்கப்பட்டவர். மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். சிறிய அறையில் 2 நாட்கள் வைத்து விசாரித்ததால் அவரது கால்கள் வீங்கி விட்டது. இப்போது அவர் படுக்க கட்டில் தர மறுக்கிறீர்கள். அவருக்கு கட்டில் தரவேண்டும் என்றார். இதற்கு போலீசார் மறுத்தனர்.

இதனால் போலீசார், வக்கீல்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் தூங்க கட்டில் தரப்பட்டது. இதில் அவர் படுத்து தூங்கினார். கால்கள் வீங்கி இருந்ததால், நேற்று இரவு சரியாக தூங்க வில்லை, இரவு வெகுநேரம் கண்விழித்து இருந்தார். இதை அறிந்த டாக்டர்கள் அவருக்கு மாத்திரைகள் கொடுத்தனர். இதனால் அவர் சிறிது நேரம் தூங்கினார்.

இன்று அதிகாலை அவர் வழக்கம் போல் எழுந்து குளித்தார். அவருக்கு உடைகள் தரப்பட்டது. தி.மு.க. கரைப்போட்ட வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தார். பின்னர் விசாரணைக்கு வந்து சேரில் அமர்ந்தார். அவரிடம் உயர் போலீசார் 3-வது நாள் விசாரணை நடத்தினர். 3 நாட்கள் விசாரணை இன்றுடன் முடிகிறது. இன்று மாலை 5 மணிக்கு வீரபாண்டிஆறுமுகம், சேலம் கோர்ட்டுக்கு அழைத்துசெல்லப்படுகிறார்.

அவர் மீது சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், பேர்லேண்ட்ஸ் போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இரண்டு கோர்ட்டுகளில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவரது வக்கீல்கள் ஜாமீன் கேட்டு மனு செய்ய உள்ளனர்.

இதன் மீது உடனே விசாரணை நடத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு தொடர்பாக இந்த பகுதியில் வசித்து வந்த 23 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இவர்கள் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளிக்க சேலம் மாவட்ட நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி 23 குடும்பத்தை சேர்ந்தவர்களை நேற்று மாலை போலீசார் சேலம் கோர்ட்டுக்கு அழைத்து வந்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். இவர்கள் மாஜிஸ்திரேட் முரளிதரன் முன் தனித்தனியாக வாக்கு மூலம் அளித்தனர். இந்த வாக்குமூலம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

நில மோசடி வழக்கில் ஓமலூர் பாமக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு கைது.நில மோசடி வழக்கில் முன்னாள் பாமக எம்.எல்.ஏ. தமிழரசு கேரளாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் பொட்டியபுரத்தைச் சேர்ந்த மாதையன் என்பவர் சேலம் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் தனக்குச் சொந்தமான நிலத்தை தமிழரசு அபகரித்து விட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்து சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தமிழரசுவைத் தேடி வந்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவருக்கு வலை வீசப்பட்டது. இதில் அவர் கேரளாவில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் தமிழரசுவைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழரசு பாமகவில் மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நில மோசடி வழக்குகளில் இதுவரை திமுகவினரே பெருமளவில் கைதாகி வந்தனர். இந்த நிலையில் பாமகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

மாணவ - மாணவிகளை வேனில் கடத்திச் சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் .70 பள்ளி மாணவ - மாணவிகளை போலீசார் மீட்பு.70 பள்ளி மாணவ - மாணவிகளை போலீசார் மீட்பு.

திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்த அமைப்பின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் கிளர்ச்சியாளன் நிர்வாகிகள் நந்தகுமார், வசந்த் உள்பட 7 பேர் நேற்று காலை பாலக்கரை பீமநகர் பகுதிக்கு ஒரு வேனில் வந்தனர்.

அப்போது அவர்கள் அங்கு பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளிடம் நாங்கள் உங்களை வேனில் அழைத்து கொண்டு பள்ளி விடுகிறோம் என்று கூறினார். இதை நம்பிய சுமார் 35 மாணவ - மாணவிகள் வேனில் ஏறினர்.

பின்னர் இந்த அமைப்பினர் சி.இ.அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று அந்த பகுதியில் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் சிலரையும் உங்களை வழக்கமாக ஏற்றி செல்லும் வேன் இன்று வராது என்று கூறி அவர்களையும் பள்ளியில் விடுவதாக சொல்லி ஏற்றினர்.

பின்னர் 70 மாணவ - மாணவிகளுடன் அந்த வேன் புறப்பட்டு சென்றது. வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு வழியாக சென்றதால், பள்ளி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேனில் இருந்த மாணவிகள் கதறி அழுதனர்.

இந்த தகவல் இரு பள்ளி நிர்வாகிகளுக்கும், பெற்றோருக்கும் தெரியவந்தது. பெற்றோர் தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு ஓடி வந்தனர். திருச்சியில் வேனில் பள்ளி மாணவ - மாணவிகள் கடத்தப்பட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு பள்ளிகளிலும் பெற்றோர் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பள்ளி மாணவ - மாணவிகளுடன் சென்ற வேன் மரக்கடை அருகே உள்ள திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அடைந்தது. அங்கு பள்ளி மாணவ-மாணவிகளை கூட்டமாக வைத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மாவட்ட செயலாளர் கிளர்ச்சியாளன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. "சமச்சீர் கல்வியை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்'' என்பதை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மாணவ - மாணவிகளை தேடி அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, முன்அனுமதியின்றி பள்ளி மாணவ - மாணவிகளை வேனில் கடத்தி வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஏன் எங்கள் பிள்ளைகளை வைத்து போராட்டம் நடத்துகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் 70 பள்ளி மாணவ - மாணவிகள் போலீசார் மீட்டு, அந்தந்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனில் மாணவ - மாணவிகளை கடத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

சென்னையின் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி?ராஜ்பவன், ஆளுநர் மாளிகை என்றெல்லாம் இப்போது அழைக்கப்படும் இடம் கில்பர்ட் ரோட்டரிக்ஸ் என்ற ஆங்கிலேயரின் சொத்தாக இருந்தபோது அதன் பெயர் "கிண்டி லாட்ஜ்'. பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடிக் களிக்க, மரம் செடி கொடிகள், அடர்ந்த வனப்பகுதியாகக் காட்சியளித்த இந்த "கிண்டி லாட்ஜ்' தோட்டத்துக்கு நடுவில் ஒரு பங்களாவைக் கட்டிக் கொண்டு வாழ்ந்த கில்பர்ட் ரோட்டரிக்ஸ், 1817-ல் இறந்த அடுத்த சில ஆண்டுகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது, இந்த "கிண்டி லாட்ஜ்'.


1821-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்த 500 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த "கிண்டி லாட்ஜ்' என்கிற தோட்ட வீட்டை விலைக்கு வாங்கியது. அப்போது கவர்னர் மாளிகை அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்தது. "கிண்டி லாட்ஜ்', அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர்களுக்கு வாரக் கடைசிகளில் ஓய்வெடுக்கும் மாளிகையாகவும், நண்பர்களுடன் பறவைகளை வேட்டையாடிக் களிக்கும் இடமாகவும் இருந்தது. 1910-ல்தான் இந்த கிண்டி லாட்ஜைச் சுற்றியுள்ள பகுதிகள், சென்னை வனச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.


1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கிண்டி லாட்ஜும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும்தான் ஆளுநர் மாளிகைக்காக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டது. சென்னை நகரின் ஒரு பகுதியாக, அதேநேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இணையான கட்டடக்கலை வனப்பும், வசதிகளும் நிரம்பிய "கிண்டி லாட்ஜ்', தமிழக ஆளுநரின் மாளிகையாக மாற்றப்பட்டது ஒருவகையில் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்த இடம் அடையாறு பகுதியைப்போல, "மால்'களும், வணிக வளாகங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பகுதியாக மாறியிருக்கக் கூடும்.

500 ஹெக்டேர், அதாவது 1,250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இந்த ஆளுநர் மாளிகைத் தோட்டம் (வனம்!), காலப்போக்கில் சுருங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறது. முதலில், 1954-ல் மகாத்மா காந்தி நினைவகத்துக்காக 9.25 ஏக்கரும், புற்றுநோய் மருத்துவமனைக்காக 9 ஏக்கரும் இதிலிருந்து வழங்கப்பட்டது. 1958-ல் இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரிக்காக (ஐ.ஐ.டி.) 388 ஏக்கரும், தேசியப் பூங்கா அமைப்பதற்காக வனத்துறைக்கு 625 ஏக்கரும் வழங்கப்பட்டது.

1970-ல் குருநானக் கல்லூரி தொடங்குவதற்காக இதிலிருந்து நிலம் வழங்கப்பட்டது. 1974-ல் 2.5 ஏக்கர் பரப்பில் ராஜாஜி நினைவகமும், 1975-ல் 6 ஏக்கர் நிலப்பரப்பில் காமராஜ் நினைவகமும் இதிலிருந்து வழங்கப்பட்ட இடங்கள்தான்.

1977-ல் தான், 1958-ல் வனத்துறைக்கு வழங்கப்பட்ட இடம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மேலும், 88 ஏக்கர் நிலப்பரப்பு வனத்துறைக்கு வழங்கப்பட்டு, அதில் 22 ஏக்கரில் பாம்புப் பண்ணையும், குழந்தைகள் பூங்காவும் அமைக்கப்பட்டன.ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி, கான்கிரீட் கட்டடங்களால் நிறைந்து விட்டிருக்கும் தென்சென்னைக்கு பிராணவாயு வழங்கும் நுரையீரல் பகுதியாகத் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இதன் பெருமை. இந்த வனப்பகுதி சுமார் 130 வகை பறவை இனங்களுக்கும், 350 தாவர இனங்களுக்கும், 60 விதமான வண்ணத்துப் பூச்சிகளுக்கும், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் ஒன்றான "பிளாக் பக்' என்றவகை மான்களுக்கும், புள்ளிமான்களுக்கும், நரிகள், பல்வேறு விதமான பாம்புகள், ஆமைகள், நத்தை வகைகள் போன்றவற்றுக்கும் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.


இத்தனை பெருமைகளும், முக்கியத்துவமும் வாய்ந்த ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி ஏற்கெனவே கணிசமாகச் சுருங்கி விட்டிருக்கிறது. இப்போது, இந்த வனப்பகுதிக்கு மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய முயற்சிகள் அரங்கேற்றப்படுகிறது என்னும்போது மௌனமாக வேடிக்கை பார்ப்பது விபரீதத்தில் முடிந்துவிடக் கூடும்.

டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்திருக்கும் ஒரு தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இடியெனத் தாக்கி இருக்கிறது. ஆளுநர் மாளிகை வனப்பகுதியில் 500 படுக்கைகளுடன்கூடிய ஒரு மருத்துவமனையை நிறுவுவதற்காக நான்கு ஏக்கர் நிலப்பரப்பை வழங்க ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதுதான் துணைவேந்தரின் அந்தத் தகவல்.ஏற்கெனவே வனப்பகுதிகள் சுருங்கிக் கொண்டு வருகின்றன. கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்த உஷ்ணப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படக்கூடிய தனித்தன்மை வாய்ந்த இதுபோன்ற வனப்பகுதி மிகவும் குறைவு. அதே மேலும் அழித்து, அதிலிருக்கும் மரம், செடி, கொடிகளையும், அதை வாழ்வாதாரமாகக் கொண்ட பறவைகள், விலங்குகள், பிராணி வகைகளை இம்சிப்பதில் மனிதன் என்ன சுகம் காண்கிறானோ தெரியவில்லை.

குறிப்பாக, மருத்துவமனை கட்டப்பட்டால், அதனால் உருவாகும் ஆள் நடமாட்டம், அதிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் போன்றவை அந்த உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்பது உறுதி. கடந்த 15 ஆண்டுகளில் பல பறவை இனங்கள் இந்தக் காடுகளில் இருந்து சென்று விடவோ, அழிந்துவிடவோ, செய்துவிட்டன என்கிறார்கள். இந்த நிலையில், மிச்சம் மீதி இருக்கும் வனப்பகுதியையும் அழித்து மருத்துவமனை அமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன? வேறு இடமா கிடைக்கவில்லை?


ஆளுநர் மாளிகையும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும் எந்தக் காரணத்துக்காகவும் கட்டடம் கட்ட பயன்படுத்தப்படக் கூடாது. ஏற்கெனவே சென்னை சுற்றுச்சூழல் பாதிப்பால் மாசுபட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் அதன் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி?

ஆபாசம் - வன்முறை படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது : தமிழக அரசு அதிரடி,தமிழிலேயே பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்த முந்தைய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆபாசப் படங்கள், வன்முறைப் படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரைப்படத்தில் வன்முறை, ஆபாசம் இருந்தால் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு கிடையாது உள்ளிட்ட 4 புதிய நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்தது.

கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்காணும் கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அந்தக் கூடுதல் தகுதிகள்:

1. அவ்வாறான திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து "யூ" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.

3. திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

மேற்கண்ட வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

மேலும் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்கின்ற திரைப்படங்களை பார்வையிட்டு வரிவிலக்கிற்கு பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும். அவ்வாறான புதிய குழு அமைப்பதற்கான ஆணை தனியே வெளியிடப்படும்.