Wednesday, July 27, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவே பிரதமர் விரும்பியிருக்கிறார்.



ராசா தொலைத் தொடர்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கும் விஷயத்தில் அந்த அமைச்சகத்துடன் அதிகாரபூர்வமாக தொடர்பு வைத்துக் கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளரான டி.கே.ஏ.நாயர் இது குறித்து எழுதிய குறிப்புகள் மூலம் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

யாருக்கு லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற கொள்கை ஏன் பின்பற்றபட்டது, ஏன் லைசென்ஸ்கள் ஏலம் விடப்படவில்லை என்பது எனக்குத் தெரியாது. இது குறித்து ராசா என்னுடம் ஆலோசிக்கவே இல்லை. இது குறித்து அமைச்சரவையிலும் விவாதிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு எல்லாமே தெரியும் என்பதும், இந்த விஷயத்தில் தலையிடாமல் அல்லது தலையிட விரும்பாமல் அவர் அமைதி காத்ததும் இப்போது தெரியவந்துள்ளது.

பாஜக தலைவர் முரளி் மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையின்போது, பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளரான டி.கே.ஏ.நாயர் சமர்பித்த குறிப்புகளில் இந்த விவரங்கள் அடங்கியுள்ளன.

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதியும், 10ம் தேதியும் 2ஜி லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக இரு கடிதங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார்.

11ம் தேதி டி.கே.ஏ. நாயர், இது தொடர்பான மேல் விவரங்களைக் கேட்டு தொலைத் தொடர்புத்துறைக்கு கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக நாயர் எழுதி வைத்துள்ள அலுவலகக் குறிப்பில், தொலைத் தொடர்பு அமைச்சகத்துடன் பிரதமர் அதிகாரபூர்வமாக எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதிகாரபூர்வமற்ற முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவே பிரதமர் விரும்புகிறார். பிரதமர் அலுவலகத்தையும் இந்த விஷயத்தில் சற்று எட்டவே வைத்திருக்க விரும்புகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பிரதமர் ஏன் தொலைத் தொடர்பு அமைச்சகத்துடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்து வரும் முறைகேடுகளை அறிந்திருந்தும் கூட பிரதமர் கண்ணை மூடிக் கொண்டாரா அல்லது அவரால் எதுவும் செய்ய முடியவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.

No comments: