Wednesday, July 27, 2011

3-வது நாளாக விசாரணை : வீரபாண்டி ஆறுமுகம் இரவு தூக்கம் இல்லாமல் தவிப்பு.



சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு, பிரிமியர் மில் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சேலம் முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவரது சார்பில் வக்கீல்கள் ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதி, வீரபாண்டிஆறுமுகத்தை சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்,2 நாட்கள் விசாரணைக்கு பின்னர் அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். பிறகு ஜாமீனில் செல்லலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதன்படி வீரபாண்டி ஆறுமுகம் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் சரண் அடைந்தார். உதவி கமிஷனர் பிச்சையின் அலுவலகத்தில் அவரிடம் தொடர் விசாரணை நடந்தது. உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் 100-க்கும் மேற்பட்டகேள்விகளை கேட்டனர். வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்த பதில்களை போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

நேற்று 2-வது நாளாக விசாரணை அவரிடம் நடந்தது. சேலம் துணை கமிஷனர் ரவீந்திரன், உதவி கமிஷனர்கள் பிச்சை, காமராஜ் ஆகியோர் அவரிடம் கேள்விகளை கேட்டனர். சேலம் பள்ளப்பட்டி முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் பற்றி உயர் போலீசார் வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரித்தனர். இதற்கு வீரபாண்டிஆறுமுகம் பதில் தெரிவித்தார். பின்னர் போலீசார் லட்சுமணன் உங்களை அப்பா .. அப்பா என அழைப்பதாக கூறி உள்ளனர். ஏன் அப்படி அழைத்தார்? என கேட்டுள்ளனர்.

இதற்கு அவர், லட்சுமணனின் தந்தை எனது நண்பர். இதனால் அவர் என்னை அப்படி அழைத்து இருக்கலாம் என்று தெரிவித்தார். நில அபகரிப்பில் போலீசாரிடம் நீங்கள் தலையீடுசெய்ததாக கூறுகிறார்களே ? என போலீசார் கேட்டதற்கு , நான் எப்போதும் தலையிட்டது இல்லை என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் அவரிடம், நிலத்தை பத்திரப்பதிவு செய்து தர சொல்லி மிரட்டியதாக கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, இல்லை என தெரிவித்தார். காலையில் தொடங்கிய விசாரணை பகல் 1-10 மணிக்கு முடிந்தது. பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மீண்டும் பகல் 2.10க்கு விசாரணை தொடங்கியது.

உதவி கமிஷனர் பிச்சை அவரிடம் கேள்விகளை கேட்டார். இந்த விசாரணை 3.10 மணிக்கு முடிந்தது. அப்போது அவர் சோர்வாக இருந்ததால் டாக்டர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தனர். அவரது கால்கள் வீங்கி இருந்தது. இதனால் டாக்டர்கள் அவருக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.

நேற்று இரவு வீரபாண்டி ஆறுமுகம் 2 இட்லி, 2 தோசை மட்டும் சாப்பிட்டார். பிறகு அவர் தூங்க சென்றார். அப்போது போலீசார் கட்டில் தர மறுத்து விட்டனர். பெஞ்சில் தான் தூங்க வேண்டும் என கூறினர். இதை அறிந்த வக்கீல் மூர்த்தி போலீசாரிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள். அவர் முன்னாள் அமைச்சர். மாவட்ட செயலாளர். உடல் நிலை பாதிக்கப்பட்டவர். மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். சிறிய அறையில் 2 நாட்கள் வைத்து விசாரித்ததால் அவரது கால்கள் வீங்கி விட்டது. இப்போது அவர் படுக்க கட்டில் தர மறுக்கிறீர்கள். அவருக்கு கட்டில் தரவேண்டும் என்றார். இதற்கு போலீசார் மறுத்தனர்.

இதனால் போலீசார், வக்கீல்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் தூங்க கட்டில் தரப்பட்டது. இதில் அவர் படுத்து தூங்கினார். கால்கள் வீங்கி இருந்ததால், நேற்று இரவு சரியாக தூங்க வில்லை, இரவு வெகுநேரம் கண்விழித்து இருந்தார். இதை அறிந்த டாக்டர்கள் அவருக்கு மாத்திரைகள் கொடுத்தனர். இதனால் அவர் சிறிது நேரம் தூங்கினார்.

இன்று அதிகாலை அவர் வழக்கம் போல் எழுந்து குளித்தார். அவருக்கு உடைகள் தரப்பட்டது. தி.மு.க. கரைப்போட்ட வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தார். பின்னர் விசாரணைக்கு வந்து சேரில் அமர்ந்தார். அவரிடம் உயர் போலீசார் 3-வது நாள் விசாரணை நடத்தினர். 3 நாட்கள் விசாரணை இன்றுடன் முடிகிறது. இன்று மாலை 5 மணிக்கு வீரபாண்டிஆறுமுகம், சேலம் கோர்ட்டுக்கு அழைத்துசெல்லப்படுகிறார்.

அவர் மீது சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், பேர்லேண்ட்ஸ் போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இரண்டு கோர்ட்டுகளில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவரது வக்கீல்கள் ஜாமீன் கேட்டு மனு செய்ய உள்ளனர்.

இதன் மீது உடனே விசாரணை நடத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு தொடர்பாக இந்த பகுதியில் வசித்து வந்த 23 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இவர்கள் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளிக்க சேலம் மாவட்ட நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி 23 குடும்பத்தை சேர்ந்தவர்களை நேற்று மாலை போலீசார் சேலம் கோர்ட்டுக்கு அழைத்து வந்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். இவர்கள் மாஜிஸ்திரேட் முரளிதரன் முன் தனித்தனியாக வாக்கு மூலம் அளித்தனர். இந்த வாக்குமூலம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

No comments: