Wednesday, September 21, 2011

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை !!!

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

படம் - www.thehindu.com


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

கடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது.

பின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.

ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.

மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.

அடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.

ஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக் குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.

முக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.

ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.

இதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்.

நன்றி - வினவு

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர் ! உஷார் !!

இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த வேண்டும், அது பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என்ற முழக்கத்தோடு எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை.

மைய அரசின் நேரடிக் கண்காணிப்பால் இயக்கப்படும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில அரசால் நடத்தப்படும் அறிவியல், கலை, பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் ஆராய்ச்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் போன்ற அனைத்தும் உயர்கல்வி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் அடங்கும்.

47க்குப் பிந்தைய இந்தியாவில் சில நூறு உயர்கல்வி நிறுவனங்களே இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் கல்வி தனியார்மயமானதன் முலமாக அவற்றின் எண்ணிக்கை புற்றீசல்களைப் போல முளைத்து ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வளர்ந்துள்ளது. மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களே தரங்கெட்டுப் போயுள்ள நிலையில், மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அனைவருக்கும் இலவசக் கல்வியளித்தல் என்ற தன் அடிப்படைக் கடமையிலிருந்து இவ்வரசு விலகியுள்ளதை அதன் நடைமுறையிலிருந்து நாமறிவோம்.

இதற்கெல்லாம் மேலாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் ஆணையின் பேரில் கடந்த ஆண்டில் (2011) உயர்கல்விக்கான பல சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது மைய அரசு. அவற்றில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழக சட்டமுன்வரைவு – 2010 (Universities for innovations Bill – 2010), கல்வித்தீர்ப்பாயங்களுக்கான சட்டமுன்வரைவு (Educational tribunals Bill – 2010), பன்னாட்டுக் கல்விநிறுவனங்களுக்கான சட்டமுன்வரைவு (Foreign educational institutions bill – 2010) அகிய மூன்று உட்பட மொத்தம் 16 வகையான உயர்கல்விச் சட்டமுன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக மேற்சொன்ன மூன்று சட்டமுன்வரைவுகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வந்து சந்தை போடவும், அதன் மூலம் அமைக்கப் பெறும் கல்வித் தீர்ப்பாயங்களுக்கு நிகரில்லா அதிகாரம் கொடுக்கவும் ஒட்டுமொத்தமாக உயர்கல்வியில் மாணவர்களை முடமாக்கப் பார்க்கவும் வந்துள்ள திட்டங்களாகும்.

உலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் கிளைகளை இங்கு கொண்டு வந்து நமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் புத்துயிரூட்டலாம் மேலும் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு கொண்டுவரலாம், என்ற நோக்கத்திற்காக, 2010 ஆம் ஆண்டின் மத்தியில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வரைவுத்திட்டத்தின் மூலமாக இச்சட்டமுன்வரைவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கொண்டு வந்தது. இவ்வகையான பல்கலைக்கழகங்கள் இந்தியாவை அறிவுத் துறைக்கான மையமாக மாற்ற வழிவகுக்கும் என்றும் மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் தனித் தன்மையான சிறப்புத்துறைகள் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவில் காணப்படும் குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காக ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும் எனவும் இவ்வறிக்கைகள் கூறுகின்றன.

காட் ஒப்பந்தத்தின் மூலம் வரி மற்றும் வணிகத்துறையில் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், வணிகம் தொடர்பான சேவைத்துறைகளின் பொது ஒப்பந்தத்தின் மூலம் (GATS – General agreement of trade on services) சேவைத்துறகளான தொலைபேசி, மின்சாரம், வங்கி, காப்பீட்டு நிறுவனம், மருத்துவம், ஆராய்ச்சி, நீதிமன்றங்கள், ஊடகங்கள், கல்வி போன்ற அனைத்திலும் தனது தனியார்மயமெனும் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி காவு வாங்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு நீட்சியாகவே இந்த சட்ட முன்வரைவுகள் உயர்கல்வி நிறுவனங்களிலும் தனது அமெரிக்க விசுவாசத்தின் மூலம் பல பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்களை கல்லா கட்ட கூவி அழைக்கின்றன. கரும்பு தின்னக் கூலியா என்பது போல வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களும் தனது கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் அனைவரையும் அடிமையாக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

அந்நிய நேரடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் இவை, மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதிலிருந்து இப்பல்கலைக்கழகங்களில் சேர அவர்கள் கட்டவேண்டிய கட்டணம், செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம்,தேவையான துறைகளை ஆரம்பிப்பது, புதிய பாடத்திட்டங்களை அமைப்பது, ஆசிரியர்களை நியமிப்பது, நிர்வாகத்தின் மற்ற வேலைகளுக்கு ஆட்களை நியமிப்பது, அவர்களின் சம்பளம், அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களே கவனித்துக்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் இச்சட்ட முன்வரைவு கொடுக்கிறது. மேலும் இக்கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளுக்காகப் பெறும் காப்புரிமையும் அந்தந்த நாட்டைச் சேர்ந்த பல்கலைகழகங்களே உரிமை கோரும் என்பது உட்சபட்சம்.

ஏற்கனவே எய்ம்ஸ், ஐ.ஐ.டிக்கள் போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாமல் தனது ஆதிக்க சாதி மனபான்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டிய இவ்வரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப்பல்களைக் கழகங்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க அனுமதியளித்ததன் மூலம் அங்கும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அக்கல்விநிறுவனங்களில் நுழையாத அளவிற்குச் சவக்குழிவெட்டி நவீனத்தீண்டாமையைக் கடைபிடித்து வருகிற நிலையில், அது மேலும் புற்றுநோய் போல இப்புதியப் பல்கலைக் கழகங்களிலும் பரவவிருக்கிறது.

தற்போதைய உயர் கல்வி நிறுவனங்களில் இருப்பது போல மாணவர்களுக்கு இடையில் தேர்தலோ, மாணக்க உறுப்பினர்களை முக்கிய முடிவெடுக்கும் சிண்டிகேட் கூட்டங்களில் நுழையவோ இப்பல்கலைக்கழகங்களில் அனுமதி இல்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் புத்தாக்கப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை, இன்னும் சொல்லப் போனால் இப்பல்கலைக் கழகங்களை நடத்துபவர்கள் மீது ஏதேனும் ஊழல் நடந்திருக்கிறது போன்ற நம்பகத்தகுந்த தகவல்கள் வந்தால் கூட அதை சி.பி.ஐ அல்லது மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (CAG) தலையிட்டு அதன் நிதி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் கிஞ்சித்தும் இல்லை.

கல்விக்கானத்தீர்ப்பாயச் சட்டமுன்வரைவு – 2010, இது மாநிலத் தீர்ப்பாயம், மற்றும் தேசியத் தீர்ப்பாயம் என இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது, இவை முறையே மூன்று மற்றும் ஆறு பேர் கொண்ட கமிட்டியை உள்ளடக்கியதாகும். பல்கலைக்கழகத்தின் பங்குதாரர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போன்றவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கவும், இத்தீர்ப்பாயம் குற்றவாளி என்று கருதுபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டிக்கவும் வரைமுறையில்லா அதிகாரத்தைக் கொடுக்கிறது இம்மசோதா. தீர்ப்பாயங்களின் முடிவே இறுதியானது, வேண்டுமானால் சிறப்பு அனுமதியுடன் உச்சநீதிமன்றம் அனுகலாம்.

இவ்வாறு பல்வேறு சட்டங்களின் மூலம் அனைவரது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்துள்ள அரசு, இத்தீர்ப்பாயத்தின் மூலம் குறைந்தபட்சம் எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தையும் பறித்துக்கொண்டு, நம்மை அம்மணமாக்கும் நிலையும் வரப்போகிறது. இச்சட்டமுன்வரைவைக் கொண்டுவரபோவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினரையும் கூட்டி கருத்துக்கணிப்பு கேட்டுள்ள நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

உயர்கல்வி விஷயத்தில் கொண்டுவரப் போகிற இந்த சட்டமுன்வரைவுகள் மூலம் கடைசியாக மீதமிருக்கும் அரசுக் கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு பணம் இருப்பவர்கள் மட்டுமே இனி கல்வி கற்கலாம் என்கிற நிலை இன்னும் கூடிய விரைவில் வரப்போகிறது என்பதுடன் இடஒதுகீட்டை முற்றிலுமாக ஒழிப்பது, கோடிகளில் கொள்ளையடிப்பது, தீர்ப்பாயங்களின் ஏகபோக அதிகாரம், மிச்ச சொச்ச சமூக நீதியை ஒழிப்பது போன்ற அபாயங்களும் நிகழவுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கி வரும் நிலையில், உயர்கல்விகான இச்சட்ட முன்வரைவுகள் சேவைத்துறையில் சோரம் போக வழிவகுப்பதுடன், நமது அறிவு வளத்தையும் திருடிக்கொண்டு போகப்போவது, வெகுதொலைவில் இல்லை. மேலைநாட்டு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் பரப்புவதன் மூலம் இன்று இருக்கும் அந்நிய மோகத்தை மேலும் வெறியாக்கி வளர்க்கவும், மாணவர்களை அதிக விலைபோகக்கூடிய பண்டமாக மாற்றவும் இறுதியில் கிஞ்சித்தும் சமூக அக்கறை இல்லாத, முடமாக்கப்பட்ட சமூகமாக மாற்றும் அபாயமும் உள்ளது.

தீவிர நிதி நெருக்கடியால் பாதிக்கப்படுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கல்விச் சந்தையைத் திறக்கவே இச்சட்டத்தை இங்கு அமுல் படுத்த நெருக்கடியைக் கொடுக்கின்றன என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஏதோ நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பெரிய அக்கறை இருப்பது போலவும் அதற்காகத்தான் இக்கழிசடை மசோதாக்கள் வரவிருப்பதாகவும் ஒரு போலி பிம்பத்தை இவ்வரசு உருவாக்கி வருகிறது. இந்த அபாயச் சங்கைக் குறிப்புணர்ந்து போராடப் போகிறோமா அல்லது மேலும் இருளில் மூழ்கிச் சாகப்போகிறோமா என்பது நமது கையில்தான் உள்ளது.

நன்றி - வினவு