Friday, May 6, 2011

கனிமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம் - விசாரணை நாளை ஒத்திவைப்பு.


கனிமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.

முன்னதாக கனிமொழியும், சரத்குமாரும் இன்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவரும் சிபிஐ தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

கனிமொழி சார்பாக ராம் ஜேத்மலானி நீதிமன்றத்தில் ஆஜரானார். சரத்குமார் சார்பாக வழக்கறிஞர் அல்தாப் அகமது வாதாடினார்.

இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.

தனது முன்ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ அதன் வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என கனிமொழி சார்பாக நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் மதிய உணவு சாப்பிட்ட கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்பி கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரும் தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள 113-வது சேம்பரில் மதிய உணவு அருந்தினர்.

கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தொடர்பான விசாரணை பிற்பகலுக்குப் பின்னரும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கனிமொழி முன்ஜாமீன் மனு : நாளையும் விசாரணை தொடரும்.

கனிமொழி சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியும், சரத்குமார் சார்பாக அல்தாப் அகமதுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பான விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாளை 10 மணிக்கு மீண்டும் இந்த மனுக்களின் மீது விசாரணை நடைபெறும்.

விசாரணை ஒத்திவைப்பு:

வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டதால் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார் கனிமொழி

விசாரணையின்போது கனிமொழி பதற்றம் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டார். அவரது கணவர் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் பேசியவாறு புன்னகைத்தபடி இருந்தார்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு காரணமாக திமுக எம்பி ஆதிசங்கர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். மற்ற அனைவரும் பதற்றமின்றியே காணப்பட்டனர்.

அரசு அதிகாரி மீது வழக்கு : அண்ணா ஹஸாரே முடிவு.


ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பிய புணே நகர அறக்கொடைத்துறை உதவி ஆணையர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அண்ணா ஹஸாரே முடிவு செய்திருக்கிறார். ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு அவர்தான் தலைவர்.

"தணிக்கை செய்யப்பட்ட முழுமையான கணக்குகளைத் தாக்கல் செய்யாத உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என்று கேட்டு அறக்கொடை ஆணையர் அலுவலகத்தின் உதவி ஆணையர் ஹிந்த் ஸ்வராஜ், அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இந்த நோட்டீûஸப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் தணிக்கை அறிக்கையை அவர்கள் உரிய காலத்தில் அனுப்பிவிட்டனர்.

நோட்டீஸ் வந்ததை அறிந்த அண்ணா ஹஸாரே அறக்கட்டளையின் பிற நிர்வாகிகளை அழைத்து "கணக்கைத் தாக்கல் செய்தீர்களா இல்லையா?' என்று கேட்டார்.உடனே அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை நகலையும் ஒப்புகைச் சான்றிதழையும் காட்டினர்.

ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை 2008-09 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாகவும் அதே சமயம் நிரந்தர வைப்பு நிதியில் ரூ.50 லட்சத்தை வைத்திருந்ததாகவும், ரூ.23.49 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருந்ததகாவும் அவற்றை ஆணையருக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டு விட்டதாகவும் மற்றொரு அறக்கட்டளை அளித்த புகாரை ஆராயாமல் உதவி ஆணையர் இந்த நோட்டீûஸ அனுப்பிவிட்டார். இது ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளையே இப்படியா என்று பலரை வியப்புற வைத்தது. அதன் பிறகு உண்மை அறிந்து அந்த அதிகாரி மன்னிப்பு கோரினார்.

ஆனாலும் உண்மை மற்றவர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி நகரில் நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார் ஹஸாரே.

நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்பேன் : கனிமொழி பேட்டி.


தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களிடம் பேசுகிறார் கனிமொழி.

புது தில்லி, தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு கனிமொழி அளித்த பேட்டி :

கேள்வி: சி.பி.ஐ. நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

கனி: நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதித்து நடப்பேன். நிரபராதி என்பதை நிருபித்து வெளியே வருவேன். நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் யூகித்துக் கூற முடியாது. நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நான் இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு வருவேன் என நம்புகிறேன்.

கேள்வி: நீங்கள் பெண் என்பதால் உங்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

கனி: நான் எப்போதும் ஆணும், பெண்ணும் சமம் என கருதுபவள். எனவே பெண் என்பதற்காக எந்தச் சலுகையையும் காட்டக்கூடாது எனக் கருதுகிறேன்.கேள்வி: நீதிமன்ற விசாரணையின்போது கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?கனி: இதுவரை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை.

கேள்வி: இந்த விவகாரத்தில் உங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லை எனக் கருதுகிறீர்களா?

கனி: அப்படி இல்லை. நாங்கள் எந்த அரசியல் கட்சியின் ஆதரவையும் கோரவில்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வாழ்க்கை நாங்கள் சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்.

கேள்வி: தில்லியில் உங்களுக்கு ஆதரவாக யார் யார் இருக்கிறார்கள்? இந்த விவகாரம் காரணமாக உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா?

கனி: எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. என்னுடன் எனது தாயார், சகோதரர் மற்றும் நண்பர்கள் உள்ளனர்.

கேள்வி: இந்த விவகாரத்தை கட்சிக்குப் பின்னடைவாகக் கருதுகிறீர்களா?

கனி: இதுபோன்ற ஏராளமான சோதனைகளை திமுக சந்தித்துள்ளது. சோதனைகளைச் சந்தித்து மீண்டு வந்திருக்கிறோம்.

கேள்வி: நீதிமன்ற முடிவு என்னவாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

கனி: யூகத்தின் அடிப்படையில் கருத்து கூற நான் ஊடகம் கிடையாது.

கேள்வி: குற்றப்பத்திரிகை விவகாரத்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா?

கனி: இந்த விவகாரம் தொடர்பாக கட்சி மட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரை இதில் எந்தப் பிரிவினையையும் நான் பார்க்கவில்லை.

கேள்வி: நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்கு ஆஜராகப் போகிறீர்கள்?

கனி: காலை 10 மணிக்கு ஆஜராக உள்ளேன்.

கேள்வி: இந்த விவகாரத்தில் திமுக மட்டும் குறி வைத்து தாக்கப்படு வதாகக் கருதுகிறீர்களா?

கனி: மூத்த பத்திரிக்கையாளர்களான உங்களுக்கே தெரியும்.

இந்த வழக்கில் கனிமொழியின் சார்பாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர்களான ராம் ஜேட்மலானி, அல்டாஃப் அகமது ஆகியோர் ஆஜராக இருப்பதாக கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும் சமயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி வருவார் எனக் கூறப்பட்டது. செம்மொழி விருது வழங்கும் விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதை ஒட்டி அவர் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராவதால் தில்லிக்கு வருவதை முதல்வர் கருணாநிதி தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அழகிரி யோசனை கூறியதாகத் தெரியவருகிறது.

ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு : தமிழக அரசு விளக்கம்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் இணையதளம் மூலம் மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

15.09.10 முதல் வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலக உயிர்ப்பதிவேட்டின் விபரங்கள் இணையதளத்தில் ஏற்றம் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள சுமார் 70 இலட்சம் மனுதாரர்களின் பதிவு விவரங்கள் இணைய தளத்தில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல், மனுதாரர்கள் வசிக்கும் இடத்திலேயே இணையதளம் மூலமாக மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் நீண்டதூரம் பயணம் செய்து சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை தவிர்க்கப் பட்டுள்ளது. மேலும் தற்போது மதுரையில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் துவக்கப்பட்டுள்ளதால் 15 தென் மாவட்ட முதுகலைப் பட்டதாரி மனுதாரர்கள் சென்னைக்கு வராமல் மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்திலேயே தங்களது பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் இதரப்பணிகளை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்துறையில் வேலைவாய்ப்பு அலுவலக, பதிவுப்பணிகள் இணையதளம் மூலமாக கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஆரம்ப காலத்தில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் அவை உடனுக்குடன் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமாக சரிசெய்யப்பட்டு வருகிறது. எனினும் இத்திட்டம் முழுமையாகவும், சிறப்பாகவும், மனுதாரர்கள் பயனடையும் வகையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

பொதுவாக வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தேவைக்கேற்ப இதர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டு, அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லேடன் கொலையில் இறுதி நேரம் - அவிழும் மர்மங்கள்.


உலகையே பயங்கரவாத செயல்களால் கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருந்த உலகமகா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் ஏகப்பட்ட மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன. சர்ச்சைகள் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது ஒவ்வொன்றாய் முடிச்சு அவிழ ஆரம்பித்துள்ளன. கடந்த 2001ல் அமெரிக்காவில், அதன் பெருமைக்கு காரணமாக நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர உலக வர்த்தக மைய கட்டடம் மற்றும் வெர்ஜினியாவில் பென்டகன் ராணுவ மையம், பென்சில்வேனியா மற்றும் வாஷிங்டன் போன்ற இடங்களில் நான்கு விமானங்களை மோதி 3 ஆயிரம் பேர் இறந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை உலகமே மறந்திருக்கவில்லை.

இந்த கொடூர தாக்குதல்களுக்கு காரணமான அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பத்தாண்டுக்கு பின் சமீபத்தில், பாகிஸ்தான் மண்ணிலேயே சுட்டுக்கொன்றுள்ளது. இதுவரை வெளிவராத தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன. ராய்ட்டர், சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் விசாரணை செய்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

வெளியிட முடியாது

பின்லேடனை எப்படி அமெரிக்க படை கொன்றது என்பதில் பல மர்மங்கள் நீடிக்கின்றன. சுட்டுக்கொன்ற கையோடு, அவர் உடலை கொண்டு போய் கடலில் வீசி விட்டதும், அவர் உடல் மற்றும் சம்பவ இடங்களில் எடுத்த போட்டோக்களை வெளியிடாததும் புதிராகவே உள்ளது. ‘அவரை தியாகியாக்க கூடாது; சமாதி கட்டி விடுவர் சிலர் என்று தான் உடலை கடலில் வீசினோம்’ என்று சொன்ன அமெரிக்கா, ‘போட்டோவை வைத்து அல்கய்தா பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடும் என்பதால் போட்டோக்களை வெளியிடத் தயாரில்லை’ என்றும் கூறி விட்டது.

ரத்தத்தில் 3 உடல்கள்

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அபோதாபாத் பங்களாவில் நடந்தது என்ன என்பது பற்றி இப்போது தான் பல தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஞாயிறன்று நள்ளிரவில் 40 நிமிடத்தில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர், தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து, பின்லேடன் உடலுடன் ஹெலிகாப்டரில் பறந்தபின், அந்த இடத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் வந்தது.

பின்லேடனின் பங்களாவை சுற்றிவளைத்து, ஒவ்வொரு அறையாக ஆராய்ந்தது. எங்கும் சுவர்களில் குண்டுகள் பாய்ந்திருந்தன. ரத்தக்களரியாக பல இடங்கள் காணப்பட்டன. ஒரு அறையில் மூன்று பேர் உடல்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தினர். இருவர், பைஜாமா குர்தாவில் இருந்தனர்; ஒருவர் பேன்ட் டீ ஷர்ட் அணிந்திருந்தார். ராய்ட்டர் செய்தி நிறுவனம் இந்த படங்களை வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு அருகே எந்த ஆயுதமும் காணப்படவில்லை. ஆனால், ஒருவனின் இடதுதோள் பக்கம் ஒரு பொம்மை துப்பாக்கி மட்டும் இருந்தது. குழந்தைகள் விளையாடும் பச்சை நிற பிளாஸ்டிக் துப்பாக்கி அது.

இறந்தது மனைவி அல்ல

பின்லேடனை சுட்டுக்கொன்ற போது, ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார் என்று முன்பு செய்தி வந்தது. அந்த பெண் பின்லேடனின் மனைவி என்றும் கூறப்பட்டது. ஆனால், அது உண்மையல்ல என்று இப்போது அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறியுள்ளார். பின்லேடன் வீட்டில் 3 பெண்கள், 9 குழந்தைகள் இருந்துள்ளனர். தபால் கொண்டு வரும் ஒரு நம்பிக்கைக்கு உரிய தொழிலாளியும் இருந்துள்ளார். அவர் மனைவியும் அவ்வப்போது அங்கு வருவது உண்டு. இந்த பெண் தான், துப்பாக்கி குண்டுக்கு இரையாகி உள்ளார். கூரியர் தொழிலாளியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காலில் டுமீல்; ஒசாமா என கத்தல்

ஆனால், மனைவி அமல் அல் சபா தப்பி விட்டார். அமெரிக்க வீரர்கள் திடீரென நுழைந்ததை பார்த்த முதல் ஆள் அவர் தான். வீரர்கள் மீது பாய்ந்தபடி, பின்லேடன் பெயரை உச்சரித்தபடி கத்தினார். பின்லேடன் தப்ப வேண்டும் என்பதற்காக அப்படி கத்தியுள்ளார். இதை உணர்ந்த அடுத்தநொடியே அந்த பெண் காலில் சுட்டனர் வீரர்கள். அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். அவரை மற்ற வீரர்கள் தூக்கிச் சென்றனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நொடி கூட தாமதிக்கவில்லை

அமெரிக்க வீரர்கள் நுழைந்து விட்டனர்; தன்னை கொன்று விடுவர் என்று எண்ணக்கூட பின்லேடனுக்கு நேரம் வாய்க்கவில்லை. பங்களாவில் அவர் படுக்கை அறை மூன்றாவது மாடியில் தான் உள்ளது. மனைவியின் கதறலை தொடர்ந்து உஷாராகி இருக்க வேண்டும். ஆனால், கண்ணிமைக்கும் நொடிகளில் படுக்கை அறையில் அதிரடிப்படை வீரர்கள் பாய்ந்து விட்டனர்.

பின்லேடனை பார்த்த கணமே, யார் முதலில் சுடுவது என்று நினைக்காமல், அங்கு நுழைந்த மூன்று வீரர்களில் ஒருவர் டுமீல் என்று சுட, அடுத்த நொடிகளில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன. நெற்றி, மார்பு பகுதியை குண்டுகள் துளைத்தபடி, பின்லேடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து பிணமானார்.

தப்ப நினைத்தாரா

தொளதொள பைஜாமா, குர்தா அணிந்திருந்தார் பின்லேடன். அவர் பாக்கெட்டில், ஒரு துண்டுச்சீட்டில் 2 டெலிபோன் எண்கள் இருந்தன. 500 யூரோ கரன்சிகள் காணப்பட்டன. அவர் தப்ப நினைத்திருக்கலாம்; அதனால் தான் பாக்கெட்டில் அவசர அவசரமாக பணத்தை அள்ளித் திணித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்க எம்பிக்களுக்கு சிஐஏ உளவு அமைப்பின் இயக்குனர் லியான் பனட்டா கூறுகையில், ‘பின்லேனை உயிருடன் பிடிக்க முடியும் என்ற சூழ்நிலை காணப்படவில்லை. அவர் நிராயுத பாணியாக இருந்தார் என்றாலும், அவரை பார்த்த மூன்று வீரர்களில் யார் சுடுவது என்று தான் அவர்கள் மனநிலை இருந்தது. அதனால் அவரை சுட்டுக்கொன்றனர் ’என்று தெரிவித்தார்.

கைக்கெட்டும் தூரத்தில் துப்பாக்கி

உலகமகா தீவிரவாத அமைப்பின் தலைவனுக்கு பாதுகாவலர்கள் இல்லாமலா இருப்பர் என்ற சந்தேகத்துக்கு சரியான விளக்கம் இதுவரை அமெரிக்க, பாகிஸ்தான் தரப்பில் தரப்படவில்லை. பின்லேடன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவர் படுக்கையில் துப்பாக்கி வைத்திருப்பது இல்லையாம். ஆனால், அந்த அறையில் ஒரு மூலையில் துப்பாக்கி இருந்துள்ளது. பின்லேடனை வீரர்கள் பார்த்த மாத்திரத்தில் அந்த துப்பாக்கியை அவர் எடுத்திருக்க முடியும். இதனால் தான் அவரை சுட்டுக்கொல்ல வீரர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவர் மார்பில் முதல் குண்டு பாய்ந்தது: இரண்டாவது அவர் இடது கண்ணுக்கு மேலே பாய்ந்தது.

5 கம்ப்யூட்டர், டிவிடிக்கள்

பின்லேடன் பங்களாவில் கம்ப்யூட்டர் இணைப்பு மட்டுமில்லை. ஆனால், 5 கம்ப்யூட்டர்கள், 100 ஸ்டோரேஜ் டிவைஸ், டிவிடிக்கள், 5 மொபைல் போன்கள், ஏகே 47 ரகம் உட்பட 5 துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவற்றை பறிமுதல் செய்த அமெரிக்க படையினர் கொண்டு சென்று விட்டனர். இவற்றின் மூலம் பல தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த 80வது நபர் யார்?

பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த சீல் 6 என்ற பிரிவை சேர்ந்தது. ஐந்து ஹெலிகாப்டர்களில் 79 பேர் அபோதாபாத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டனர். 80வது நபர் ஒருவர் உண்டு. அவர் இரண்டு கால் மனிதர் அல்ல; நான்கு கால் சூப்பர்மேன். ஆம், மோப்ப நாய். மனிதனை விட இரண்டு மடங்கு பாய்ச்சல்; எந்த குகையிலும் நுழைந்து மோப்பம் பிடித்து மனிதனை கவ்வி, கடித்து, இழுத்து வந்து விடும்.

ஆப்கன், ஈராக் போர்களில் மட்டும் 400 மோப்ப நாய்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது. பின்லேடனை கொல்ல சென்ற படையில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு நாய் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் வேலை சுலபமாக முடிந்து விட்டது. மூன்றாவது மாடியில் படுக்கை அறையில் இருந்த பின்லேடனை சுலபமாக கண்டுபிடித்து விட்டது.

இளம் மனைவி துணிச்சல்

பின்லேடன் இளம் மனைவி பெயர் அமல் அல் சபா; வயது 27. ஏமன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர். 17 வயதில் அவர் பின்லேடனை மணந்தார். ஆரம்பத்தில் பல இடங்களில் பதுங்கியதால், அவரை ஏமனுக்கு போய் தங்கிவிடும்படி அனுப்பிவிட்டார் பின்லேடன். ஆனாலும், பின்லேடன் தீவிரவாத இயக்கத்தில் அல் சபா ஒன்றி விட்டார். இதனால் அவர் மீது பின்லேடனுக்கு தனி அன்பு உண்டு. கடந்த 2005ல் அபோதாபாத் பங்களாவில் தங்கியதில் இருந்து பின்லேடனுடன் அல் சபா தொடர்ந்து தங்கி இருந்தார். பாதுகாப்பு கருதி அவரை அனுப்பிவிட பின்லேடன் திட்டமிட்டாலும் அவரை விட்டு செல்ல மறுத்து விட்டார்.

பாகிஸ்தான் ராணுவம் நடுக்கம்

பாகிஸ்தானுக்குள் அதுவும் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே புகுந்து சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை 40 நிமிடங்களில் சுட்டுக் கொன்றுவிட்டு அமெரிக்க ராணுவம் திரும்பி சென்றுவிட்டது. இந்த அதிரடி தாக்குதல் சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகுலையச் செய்துள்ளது. அதற்கே தெரியாமல், ராணுவ அகடமி அருகே இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அதனுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

பலம்வாய்ந்த ராணுவம் என்று மார்தட்டிக் கொண்டு இருந்த பாகிஸ்தானுக்கு இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போய்விட்டது. அதனுடைய உளவுத் துறை எப்படி இதை முன்கூட்டியே அறிந்து கொள்ள இயலவில்லை என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் அதிரடி தாக்குதல் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், உள்நாட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நம்பிக்கை குறைவும் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவமும் உளவுத் துறையும் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எதைச் சொன்னாலும் அது பெரும் சர்ச்சை ஏற்படும் என்பதால் இறுகிய மனதுடன் மவுனம் சாதித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம், ராணுவத்தின் பலவீனத்தையும் அரசு நிர்வாகத்தின் பலவீனத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

அபோதாபாத் தாக்குதல் சம்பவத்தை முன்கூட்டியே தெரியாமல் செயலிழந்து போய்விட்ட ராணுவம், உளவுத் துறையின் செயல்பாட்டை பாகிஸ்தான் எம்.பி.க்கள் கடுமையாக குறை கூறியுள்ளனர். இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளனர்.


பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பேசுகையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராணுவ அகாடமி இருக்கும் பகுதியில் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். அதுகூட அந்த நாட்டின் ராணுவத்துக்கு தெரியவில்லை என்று சொல்வது நம்பும்படி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராணுவம் ஊடுருவி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் மக்களிடையே அச்சத்தையும் அதே நேரத்தில் அந்த நாட்டின் ராணுவம், உளவுத் துறை, ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கனிமொழி ஒரு பெண்; ஆகவே அவருக்கு முன் ஜாமீன் வேண்டும் : ராம்ஜெத்மலானி.


2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். அவர் கனிமொழிக்கு முன் ஜாமீன் கேட்டு வாதம் செய்து வருகிறார்.

அவர், ’’கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவிகிதம்தான் பங்கு இருக்கிறது.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை இவர் கவனிப்பதில்லை. நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத்குமாரே கவனித்து வருகிறார்.

கலைஞர் டிவியின் நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொருப்பில் இருந்து விலகிவிட்டார். அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாதான் பொறுப்பு.

எனவே, கனிமொழியை இந்த வழக்கில் கைது செய்யக்கூடாது’’என்று வாதிட்டு வருகிறார்.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முன் ஜாமீன் கேட்க மாட்டேன் என்று கனிமொழி கூறியது குறிப்பிடத்தக்கது.

குளிர்சாதன பெட்டியில் காதலி பிணம் : குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தியதால் கொன்றேன் ; யோகா மாஸ்டர் வாக்குமூலம்.

குளிர்சாதன பெட்டியில் காதலி பிணம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தியதால் கொன்றேன்;  யோகா மாஸ்டர் வாக்குமூலம்

பெங்களூர் அருகே கனகபுரா ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ் சந்திரதாஸ் (31). யோகா மாஸ்டர். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு கைக் குழந்தை ஒன்று உள்ளது. லோகேஷ் சந்திரதாஸ் பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்தார், அப்போது அவர் கூறியதாவது :-

“நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகேசில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தமர் பெரா ஆப்ரகாம் என்ற பெண்ணுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அங்கு உல்லாசமாக வாழ்க்கை நடத்தினோம்.

பின்னர் நான் அங்கிருந்து பெங்களூர் வந்துவிட்டேன். இங்கு ஜோதி என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் எனக்கு திருமணம் நடை பெற்றது. எங்களுக்கு ஒரு மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தமர் பெரா திடீரென்று பெங்களூர் வந்தார். எனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த அவர் என்னிடம் தகராறு செய்தார்.

என்னை கைவிட்டுவிட்டு எப்படி வரலாம் என்று என்னிடம் சண்டையிட்டார். இது என் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. என் மனைவியும் தகராறு செய்தார். அமைதியாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த தொடர்பை பயன்படுத்தி தமர் பெரா தேடி கண்டுபிடித்து வந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாரே என்று எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

உடனே பெராவை ஒரு அறையில் தள்ளி அடைத்தேன். அங்கு கையில் கிடைத்த இரும்பு கம்பியை பயன்படுத்தி பெராவை தாக்கினேன். இதில் அவர் சரிந்து விழுந்தார்.உடனே கதவை பூட்டி விட்டு என் மனைவியையும் குழந்தையும் நாகரபாவியில் உள்ள அவளது உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டேன். பிறகு மீண்டும் எனது குடியிருப்புக்கு திரும்பி வந்து பார்த்தேன்.

பெரா இறந்துபோய் இருந்தார். பெரா இறந்தது என் மனைவிக்கு தெரியாது. உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டேன். அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தேன். ஆனால் முடியவில்லை. எனவே உடலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு ரூ.30 ஆயிரம் செலவில் பெரிய குளிர்சாதன பெட்டியை வாங்கினேன்.பின்னர் அதனுள் பெராவின் உடலை வைத்தேன்.

உடல் அழுகி துர்நாற்றம் வீசினால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்தேன். இந்த நிலையில் பெராவின் உடலை அப்புறப்படுத்துவற்கு பல முறை முயற்சித்தேன். ஆனால் என்னால் மட்டும் அதை தனியாக செய்ய முடியவில்லை.

இதற்கிடையே ஒரு பெண்ணை கொன்று விட்டோமே குற்ற உணர்வு என்னை துன்புறுத்தியது.உடனே கொலை செய்தது பற்றி என் மனைவியிடம் தெரிவித்தேன். பின்னர் என் மனைவியும் அவரது குடும்பத்தாரும் என்னை போலீசில் சரண் அடையும் படி அறிவுறுத்தினர். அதன்படி நான் போலீசில் சரண் அடைந்தேன், இவ்வாறு கூறி உள்ளார்.

அதிகாலையில் 2 ரொட்டி துண்டுகள், டிபனுக்கு 2 சப்பாத்திகள் : ஆ.ராசா, கல்மாடியின் ஜெயில் வாழ்க்கை.

அதிகாலையில் 2 ரொட்டி துண்டுகள், டிபனுக்கு 2 சப்பாத்திகள்: ஆ.ராசா, கல்மாடியின் ஜெயில் வாழ்க்கை

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, சுரேஷ்கல்மாடி ஆகியோர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அரண்மனை போன்ற வீடுகள், ஆடம்பர விருந்துகள், எடுபிடிக்கு பலபேர், சொகுசு மெத்தையில் ஹாயான தூக்கம் என அத்தனை வசதிகளையும் அனுபவித்து பழக்கப்பட்ட இவர்களின் வாழ்க்கை முறை திகார் ஜெயிலில் அடியோடு மாறிவிட்டது.

இரவில் ஒரு போர்வையின் மீது மட்டுமே படுத்து உறங்குகிறார்கள். சிறைக்குள் இந்த வி.வி.ஐ.பி.க்களின் ஒவ்வொரு பொழுதும் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சி கூடம், நூலகத்துக்கு அனுப்புவதில்லை.

காலை 6.30 மணிக்கு ஒரு கப் டீயும், 2 ரொட்டி துண்டுகளும் கிடைக்கும். பொத்தானை அமுக்கினால் வந்து நிற்கும் ஏவலாளை அனுப்பி வேண்டியதை வாங்கி சாப்பிட்டு பழக்கப்பட்ட இவர்கள் 2 ரொட்டி துண்டுக்கும், ஒரு கப் டீக்கும் வரிசையில் நிற்க வேண்டும்.

காலை 9 மணிக்கெல்லாம் குளித்து தயாராகிவிட வேண்டும். இரண்டே இரண்டு சப்பாத்திகள் டிபனுக்கு கிடைக்கும். கொஞ்சம் சாதம், பருப்பு, காய்கறி பொரியல் கிடைக்கும். அதை மதிய உணவாக காலை 9 மணிக்கே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

நண்பகலில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் மாலை 3 மணி வரை சிறை அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்கள் படிக்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம். மாலை 3 மணிக்கு 2 பிஸ்கட்டும் ஒரு கப் டீயும் வழங்கப்படும்.

மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவார்கள். இந்த ஜெயில் அனுபவம் வி.வி. ஐ.பி.க்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழிக்கு சம்பந்தம் இல்லை : ராம் ஜெத்மலானி வாதம்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜரானார். கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

கனிமொழி சார்பில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம். ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.

அவர், ‘’ஸ்பெக்ட்ரம் விவகாரம் முழுக்க முழுக்க ஆ. ராசா சம்பந்தப்பட்டது தான். இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

அதே போல் கலைஞர் டிவியில் கன்மொழி மட்டும்தான் பங்குதாரர். வேறு யாரும் பங்குதாரர் இல்லை’’ என்று கனிமொழி கூறினார்.

கனிமொழி கோர்ட்டில் ஆஜர்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜரானார். கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்று கனிமொழியை குற்றம்சாட்டி இரண்டாம் முறையாக குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இதையடுத்து மே 6 ல் ஆஜர் ஆகும்படி கனிமொழிக்கு, நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதை ஏற்று, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று முன்தினம் டில்லிக்கு சென்றார் கனிமொழி.

இன்று காலை பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக கனிமொழி ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகியுள்ளார்.

இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் : அமெரிக்கா போல தாக்குதல் நடத்த நினைத்தால்......


அமெரிக்காவின் அடிவருடியாக வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான், அமெரிக்க ஆயுதங்களை குப்பைபோல குவித்து வைத்திருக்கிற தைரியத்தில் பிற நாடுகளை மிரட்டிப் பார்க்கிறது.

பின்லேடன் பாகிஸ்தானில் இல்லையென்றும், அவன் இறந்து போய்விட்டான் எனவும் இருவேறு மாற்றுக் கருத்துகளை பாகிஸ்தான் கூறிவந்த நிலையில், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கு தெரியாமலேயே அந்த நாட்டுக்குள் புகுந்த அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மற்றும் அவனது கூட்டாளிகளை சுட்டுக் கொன்று கடலில் வீசியெறிந்து ஒரு சகாப்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தனர். இதனால், உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

திகைத்துப் போனது பாகிஸ்தான். அமெரிக்காவிற்கு எதிராக, அதன் அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுக்க துணியாத அல்லது முடியாத தைரியசாலிதான் பாகிஸ்தான் இது அமெரிக்க துணையோடு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை மிரட்டிப் பார்க்கிறது.

பின்லேடனை சுட்டுக்கொல்ல அமெரிக்கா நடத்தியது போலவே தன்னிச்சையாக தாக்குதல் நடத்த இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகள் முயற்சித்தால் பயங்கரமான பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கிறது.

இதற்கிடையே, இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், `பின்லேடனை கொல்ல அமெரிக்க சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலை போலவே தாக்குதல் நடத்தும் சக்தி இந்திய ராணுவத்துக்கும் உள்ளது' என தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷிர் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர், எங்களுடைய நாட்டில் வீரம் மிகுந்தவர்கள் அதிகமாக உள்ளனர். ( அமெரிக்காவிற்கு எதிராக இவர்களின் வீரம் மிகுமா? மிகாதா? )

இப்போது நடந்தது போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறும் என்ற ரீதியில் எல்லைக்கு அப்பால் இருந்து கொண்டு ராணுவம், விமானப்படை போன்றவற்றின் மூத்த அதிகாரிகள் கூறி வருகின்றனர். அது போன்ற சம்பவம் அல்லது தவறான கணக்கீடால் தாக்குதல் நடைபெற்றால் மிகப்பயங்கரமான பேரழிவு ஏற்படும்.

எந்த வகையிலாவது தன்னிச்சையான தாக்குதலை நடத்த எந்தவொரு நாடும் நினைத்தால் அது தவறானதாக அமையும்.

பாகிஸ்தானை பாதுகாக்கும் வகையில் ராணுவம் வலிமையாக இருக்கிறது. பாகிஸ்தானில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத தலைவர்களை கொல்ல தாக்குதல் நடத்தப்போவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுவது கவலையான விஷயம். இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் கொள்கையை திசை திருப்பும் வகையில் சில சக்திகளும், அதிகாரிகளும் அறிக்கை வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது.

உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நல்ல முறையாக பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

தீவிரவாத ஒழிப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்றவற்றில் இரு நாடுகளும் கூட்டாக செயல்பட பேச்சு நடந்தது. எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம். மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலானது இந்திய தரப்பின் உளவுத்துறை தவறு அல்லது பாதுகாப்பு தவறு என்றே கருத வேண்டும்.

அபோதாபாத்தில் நடந்த தாக்குதலின்போது, அதிர்ஷ்டவசமாக பெரிய துயரம் நடைபெறவில்லை. ஏனெனில், அந்த பகுதியில் சில ஹெலிகாப்டர்கள் பறப்பதாக தகவல் அறிந்து பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானங்கள் இரண்டு புறப்பட்டு சென்றன.

அல்கொய்தா அமைப்புடன் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது எளிது. ஆனால், அந்த கருத்துகள் பொய்யானவை. அல்கொய்தா மற்றும் தலீபான் தீவிரவாத தலைவர்களை அமெரிக்கா கைது செய்வதற்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்துள்ளது என்று தெரிவித்தார்.

தீவிரவாதத்தின் பிறப்பிடமாக, சில அமைப்புகளுக்கு இருப்பிடமாக பாகிஸ்தான் இருக்கும் வரையில், அமெரிக்காவின் காலைகழுவிக் கொண்டு, அதன் உள்ஆதரவோடு பிறநாடுகளிடம் தனது சீற்றத்தை இப்படித்தான் காட்டிக் கொண்டிருக்கும்.