Tuesday, December 27, 2011

நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள்- அன்னா கடும் சாடல்.



எனது உண்ணாவிரதத்தை நான் வாபஸ் பெற மாட்டேன். இறுதி வரை போராடுவேன். நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை பேருமே குற்றவாளிகள். எங்களை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. உ.பி. உள்பட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் நான் பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹசாரே.

மும்பையில் இன்று காலை தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஹசாரே. அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார்.

இன்று பிற்பகல் அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாகவே நான் உணவு எதையும் உட்கொள்ளவில்லை. எனக்கு காய்ச்சல் இருப்பதாக இன்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் எனது நாட்டுக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய நான் முடிவு செய்து விட்டேன். கடந்த 25 வருடமாக ஊழலுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். நான் மரணத்திற்குப் பயப்படவில்லை.

தேர்தல்கள் வருகின்றன. அந்த ஐந்து மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க அரசுக்கு உரிமை இல்லை. கிராம சபையின் அனுமதியை அவர்கள் முதலில் பெற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் அத்தனை பேருமே குற்றவாளிகள். குண்டர்கள், ரவுடிகள்தான் இன்று அரசியலுக்கு வருகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் நாடாளுமன்றம். மக்கள்தான் உயர்ந்தவர்கள். நாம்தான் இந்த நாட்டின் உரிமையாளர்கள். நாம்தான் இந்த நாட்டுக்காக எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்கிறோம். அப்படி இருக்கும்போது அவர்களை வேண்டாம் என்று சொல்லவும் நமக்கு உரிமை தரப்பட வேண்டும்.

பண போதை, அதிகார போதையால் மத்திய அரசு பலமுறை நமக்குத் துரோகம் இழைத்துள்ளது. இதை பாபா ராம்தேவுக்கும் முன்பு அவர்கள் செய்தார்கள். எனது போராட்டத்தில் வந்து இணையுமாறு நான் ராம்தேவை அழைத்துள்ளேன். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். நாளை அல்லது நாளை மறு நாள் அவர் நம்முடன் இணைய வருவார் என்றார் அன்னா.

கிரண் பேடி, கேஜ்ரிவால் கவலை

முன்னதாக தனது காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள அன்னா ஹசாரேவின் உடல் நலம் மோசமடைந்து வருவதால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

இதுகுறித்து கிரண் பேடிகூறுகையில், அன்னாவின் உடல் நிலை சரியில்லை. அவருக்கு காய்ச்சல் அடிக்கிறது. அவர்தனது உண்ணாவிரதத்தை மட்டும் நிறுத்திக் கொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

இன்னொரு உறுப்பினரான மனீஷ் சிசோடியா கூறுகையில், அன்னாவின் மோசமடைந்து வரும் உடல் நிலை எங்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்றார்.

அதேபோல அரவிந்த் கேஜ்ரிவாலும், அன்னா தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அன்னா தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளோம். தற்போது அன்னாவுடன் நாங்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் என்றார்.

முல்லை பெரியாறு அணை : தேசிய பேரிடர் ஆணையம் நியமித்த குழு நிறுத்திவைப்பு.

முல்லை பெரியாறு அணை: தேசிய பேரிடர் ஆணையம் நியமித்த குழு நிறுத்திவைப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில நடுக்கங் களால் முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என கேரளா வற்புறுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட ஒரு அவசர கால குழுவை கடந்த 12-ம் தேதி அமைத்தது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதற்கு தமிழக எதிர் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகம் வந்த பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த குழுவை நிறுத்தி வைக்க கோரியிருந்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழுவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, தமது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்திடம் வழங்கும் வரை, இக்குழுவை நிறுத்திவைப்பதாக தமிழக பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

கொலை வெறிப் பாடலால் பிரபலம் : பிரதமர் விருந்தில் தனுஷ்.

கொலை வெறிப் பாடலால் பிரபலம்: பிரதமர் விருந்தில் தனுஷ்

நடிகர் தனுஷ் “கொலை வெறி” பாடலால் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வருகின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா என சுற்றி வருகிறார். பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தனுசை அழைத்து அறிமுகம் செய்கின்றன.

கொலை வெறி பாடல் பிரதமர் மன்மோகன் சிங்கையும் எட்டியுள்ளது. இதையடுத்து பிரதமர் விருந்தில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது. ஜப்பானிய பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது.

பாடல் பிரபலமானது குறித்து தனுஷ் கூறும்போது, கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் வெற்றி பெறுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவருக்கும் தொடர்பு உள்ளவை, நகைச் சுவை மற்றும் பாடலில் உள்ள கருத்துக்களும் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்துள்ளது.