Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை : 13வது நாளாக போராட்டம் நீடிப்பு ; கூடலூரில் பிரமாண்ட பேரணி.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை: 13வது நாளாக போராட்டம் நீடிப்பு; கூடலூரில் பிரமாண்ட பேரணி

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க வேண்டும். கேரள அரசு புதிய அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக மறியல், பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடந்து வருகின்றன.

பேரணி - ஆர்ப்பாட்டம் கம்பம், கூடலூர், போடி வழியாக கேரளாவுக்கு பஸ் மற்றும் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கம்பம், கூடலூர் பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

தற்போது அரையாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று கம்பம் நகரம் குலுங்கும் வகையில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.

அதே போல குமுளி செல்லும் வழியில் உள்ள கூடலூரில் இன்று பிரமாண்டமான முறையில் அமைதி பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது. 30 ஆயிரம் பேர் திரண்டனர் கூடலூர் பழைய பஸ் நிலையம் முன்பிருந்து பேரணி புறப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆண்களும், பெண்களும் அணி, அணியாக திரண்டு வந்தனர்.

10 மணி அளவில் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேரம் செல்ல செல்ல பேரணியில் கலந்து கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேரள அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தீர்வு காணும் வரையில் கேரளாவுக்கு செல்லும் 13 எல்லை சாலைகளை மூட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

பேரணி குமுளி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த பேரணியில் கூடலூர் பகுதி அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், பாங்கி ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், அனைத்து தரப்பு மக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்கனவே கூடலூர் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்று பேரணி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். போராட்டக்காரர்களை குமுளி எல்லைக்கு செல்ல விடாமல் தடுக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே போடியில் அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர் நல சங்கத்தினர் திருவள்ளுவர் சிலை அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் `டேம் 999' படத்துக்கு 6 மாதம் தடை நீடிப்பு.

தமிழ்நாட்டில் `டேம் 999' படத்துக்கு 6 மாதம் தடை நீடிப்பு

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் தயாரான `டேம் 999' படத் துக்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது என அனைத்து கட்சிகளும் வற்புறுத்தின. இதையடுத்து தமிழ்நாட்டில் டேம் 999 படத்தை திரையிட அரசு தடை விதித்தது.

இந்த தடைக்கான ஆணை நவம்பர் 24-ல் பிறப்பிக்கப்பட்டது. முதலில் 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி `டேம் 999' படத்தின் இயக்குனர் சோஹன் ராய் கூறும்போது, நாங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு போவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் பிடிவாதம் : கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: இளங்கோவன் ஆவேச பேச்சு.

முல்லை பெரியாறு விவகாரத்தில் பிடிவாதம்: கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: இளங்கோவன் ஆவேச பேச்சு

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா, கூடங்குளம் - முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்த விளக்க கூட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் இளங்கோவன் பேசியதாவது:-

இங்கே பேசிய தலைவர்கள் முல்லைப்பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கண்ணோட்டத்துடன் பேசினார்கள்.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது வரை எந்த பிரச்சினையும் இல்லை.

1967-ம் ஆண்டுக்கு பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்தபோதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினை உருவாகி 146 அடியில் இருந்து 136 அடியாக நீர்மட்டத்தை குறைத்தனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதுதான் இது உருவானது.

எனவே முல்லைப் பெரியாறு விஷயம் பிரச்சினை ஆனதற்கு திராவிட கட்சிகள்தான் காரணமாகும். அது 3 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம், 4,5 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம். அதில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. மொத்தத்தில் இன்று கேரள அரசுக்கு இளிச்சவாயராக நாம் காட்சி அளிக்கிறோம்.

அங்கு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசாங்கம்தான் பிரச்சினையை உருவாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேட்க மறுக்கிறார்கள் எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும். மத்திய அரசுக்கும் கேரளா அரசு பணியாது. எனவே கேரள அரசை “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும். “டிஸ்மிஸ்” செய்வது நமக்கு புதிதல்ல. கேரளாவுக்கும் புதிதல்ல.

மேடையில் இருக்கிற மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசனுக்கு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்க விரும்பவில்லை.

தமிழ்நாட்டுக்கு கேரளா கேடு விளைவிக்கும்போது உம்மன்சாண்டியை அங்கே முதல்- அமைச்சராக உட்கார வைக்க கூடாது.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து அல்ல. இதை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், தேர்வில் மதிப்பெண் பெறும் முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது.

புதிய விதிமுறையின்படி, ஜெனரல் சர்ஜரி, என்ற பாடப்பிரிவை கிளினிக்கல் சர்ஜரி, ஆர்த்தோ கிளினிக்கல் என்று இரு பிரிவாக பிரித்து, கிளினிக்கல் சர்ஜரியில் குறைந்தபட்சம் 100க்கு 50 மதிப்பெண்ணும், ஆர்த்தோ கிளினிக்கல் பாடத்தில் குறைந்தபட்சம் 50க்கு 25 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பெற்றால்தான் அந்த மாணவர் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்றும் மாற்றப்பட்டது.

இந்த புதிய மதிப்பெண் விதிமுறை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி, எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வகுத்துள்ள புதிய விதிமுறை செல்லாது என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களை இண்டென்சிப் எனும் பயிற்சி மருத்துவர் பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கடந்த ஜீன்மாதம் தீர்ப்பு கூறி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதியவிதி முறை செல்லாது என்றும், தனி நீதிபதி பி.ஜோதிமணி, வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், கடந்த நவம்பர் மாதம் 16ந்தேதி தீர்ப்பு கூறி, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதால் அந்த விதிமுறைகள் செல்லாது என்று, நேற்று டிசம்பர் 16ந்தேதி தீர்ப்பு கூறியது.

மேலும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த விதிமுறைகள் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், மாநிலத்துக்கு மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளை மாற்றக் கூடாது என்றும், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

முன்னதாக நீதிபதிகள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ்., பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டிப்பு.



"எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கு, நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை, ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, மத்திய அரசு விடுத்த வேண்டுகோளுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. நுழைவுத் தேர்வு நடத்துவதில் அரசுக்கு அக்கறையில்லை என்றும் விமர்சித்தது.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர, பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, தமிழகம் உட்பட சில மாநிலங்கள், கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவ படிப்பில் சேர விரும்புபவர்களுக்கு, நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்திய மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இந்த சூழலில், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "பொது நுழைவுத் தேர்வு முறைக்கு மாற, சில மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன. இந்திய மருத்துவ கவுன்சிலால் வரையறுக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள, மாணவர்களுக்கு அவகாசம் தேவை என நினைக்கின்றன. எனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைத்து, 2013ம் ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும்' எனக் கோரியது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் டாட்டு மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில், மத்திய அரசுக்கு அக்கறையில்லை. ஒன்று மத்திய அரசின் மனுவை நாங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசே மனுவை வாபஸ் பெற வேண்டும். இதில் எதைச் செய்ய அரசு விரும்புகிறதோ அதைச் செய்யலாம். அரசின் முடிவில் ஒரு அங்கமாக நாங்கள் இருக்க விரும்பவில்லை.

மத்திய அரசின் கருத்துக்களைக் கேட்ட பின்னரே, பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டோம். நாங்கள் கருத்து கேட்ட போது, பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வரைவு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், வரும் 2012-13ம் நிதியாண்டிலேயே அமல்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்தீர்கள். இப்போது வேறு காரணம் சொல்கிறீர்கள். இந்த விவகாரத்தை ஏன், கோர்ட்டிற்கு கொண்டு வருகிறீர்கள். இந்த மனுவை நீங்கள் வாபஸ் பெறுவதே சரியாக இருக்கும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வெண்புள்ளியைப் போக்கும் சித்த மருந்து கண்டுபிடிப்பு.



வெண்புள்ளியைப் போக்கும் "லூகோ ஸ்கின்' எனப்படும் சித்த திரவ மருந்து மற்றும் "ஆயின்ட்மென்ட்'-ஐ மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கண்டுபிடித்துள்ளது.

புது தில்லியைச் சேர்ந்த "ஏமில்' தனியார் மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ அறிவியல் அடிப்படையில் இந்த சித்த திரவ மருந்து மற்றும் "ஆயின்ட்மென்ட்'டை அது உருவாக்கியுள்ளது. சோற்றுக் கற்றாழை, பூனைக்காலி, கார்போகி அரிசி, வல்லாரை, எருக்கு உள்ளிட்ட மருத்துவ மூலிகைகளைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலர் கே.உமாபதி கூறியதாவது: இந்தியாவில் 6 கோடி பேரும், தமிழகத்தில் 36 லட்சம் பேரும் "லூகோடெர்மா' என்று அழைக்கப்படும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர், பல வகையான மருந்துகளைப் பயன்படுத்தியும் நிவாரணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதனால் சுயவெறுப்பு, படபடப்பு, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட "லூக்கோ ஸ்கின்' எனப்படும் திரவ சித்த மருந்து மற்றும் "ஆயின்ட்மென்ட்டை' மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.

இந்த மருந்தை நோயாளிகளுக்கு நியாயமான விலையில் அளிக்கும் முயற்சியில் சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் ஈடுபட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் இலவச மருத்துவ ஆலோசனையின்படி 300 முதல் 400 நாள்கள் இந்த திரவ மருந்து மற்றும் "ஆயின்ட்மென்ட்'டை பயன்படுத்தினால், வெண்புள்ளிகள் மறைந்து தோலில் பழைய இயல்பான நிறம் திரும்புகிறது.

சென்னையில் கருத்தரங்கம்:

இந்த சித்த திரவ மருந்து மற்றும் "ஆயின்ட்மென்ட்டின்' பலனை நோயாளிகளுக்கு விளக்கும் வகையில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.எல்.ஏ. அரங்கில் சனிக்கிழமை (டிசம்பர் 17) கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இது தொடர்பான மருத்துவக் கருத்தரங்குகள் நடத்தப்படும்.

சித்த மருந்தைப் பெற...

வெண்புள்ளிகளைக் குணப்படுத்தும் சித்த மருந்தைப் பெற மேற்கு தாம்பரத்தில் உள்ள வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தை (தொலைபேசி எண்கள் 044-2226 5507 அல்லது 6538 1157) தொடர்பு கொள்ளலாம். leucodermafree@ yahoo.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார் உமாபதி.

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் பேரணி.



முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் நேற்று பேரணி நடத்தினர். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உடும்பன்சோலை, நெடுங்கண்டம், பாரத்தோடு, காரித்தோடு, சேரியர், காந்திபாறை, ராஜாபாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீது நள்ளிரவில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.

வீடுகளுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்களை கதவை உடைத்து வெளியே இழுத்து வந்து, அடித்து உதைத்தனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கேரள போலீஸ் துணையுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். பல இடங்களில் தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். விடிவதற்குள் யாரும் இருக்க கூடாது என்று வன்முறை கும்பல் எச்சரித்ததால், ஏராளமானோர் இரவோடு, இரவாக சாக்குலூத்து மெட்டு, குதிரைபாஞ்சான்மெட்டு மலைப்பகுதிகள் வழியாக சுமார் 10 கி.மீ தூரம் நடந்து தமிழகம் வந்து சேர்ந்தனர். உடும்பன்சோலை பகுதியில் இருந்து மட்டும் 300 குடும்பத்தினர் வெளியேறி தமிழகம் வந்தனர்.

வாலிபர் தீக்குளிப்பு

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மத்திய மற்றும் கேரள அரசுகளின் போக்கை கண்டித்து, தேனி அருகேயுள்ள காமராஜபுரத்தை சேர்ந்த பாலத்துராஜா(40) என்ற வாலிபர் தீக்குளித்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள சங்கராபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

குலுங்கிய பேரணி

கம்பத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஒன்றரை லட்சம் பொதுமக்கள் திரண்டு, கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்வலமாக சென்றனர். கம்பம் நாட்டுக்கல் பகுதியில் துவங்கிய பேரணி கம்பம் மெட்டு காலனி, தாதப்பன்குளம் ரோடு, கம்பம்&குமுளி சாலை சிக்னல் வரை சென்றடைந்தது. பேரணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்திலிருந்து செல்லும் 13 பாதைகளையும் அடைத்து கேரளாவுக்கு பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும். பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் கேரள எல்லைக்குள் நுழைவோம்‘‘ என்று எச்சரித்தனர்.

எல்லை நோக்கி பயணம்

கேரளாவில் தாக்கப்பட்ட தமிழர்கள் நேற்றும் தேனி மாவட்டம் தேவாரம் வந்து சேர்ந்தனர். கம்பம் எல்லையில் போலீசார் அவர்களை மறித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை தாண்டி கூடலூருக்கு சென்றனர். அங்கு போலீசார் தடுத்து நிறுத்தி கேரள எல்லை செல்ல அனுமதி மறுத்தனர். அதனால் போராட்டக்காரர்கள் அங்கு நின்றவாறே 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.