"எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கு, நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை, ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, மத்திய அரசு விடுத்த வேண்டுகோளுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. நுழைவுத் தேர்வு நடத்துவதில் அரசுக்கு அக்கறையில்லை என்றும் விமர்சித்தது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர, பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, தமிழகம் உட்பட சில மாநிலங்கள், கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவ படிப்பில் சேர விரும்புபவர்களுக்கு, நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்திய மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.
இந்த சூழலில், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "பொது நுழைவுத் தேர்வு முறைக்கு மாற, சில மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன. இந்திய மருத்துவ கவுன்சிலால் வரையறுக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள, மாணவர்களுக்கு அவகாசம் தேவை என நினைக்கின்றன. எனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைத்து, 2013ம் ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும்' எனக் கோரியது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் டாட்டு மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில், மத்திய அரசுக்கு அக்கறையில்லை. ஒன்று மத்திய அரசின் மனுவை நாங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசே மனுவை வாபஸ் பெற வேண்டும். இதில் எதைச் செய்ய அரசு விரும்புகிறதோ அதைச் செய்யலாம். அரசின் முடிவில் ஒரு அங்கமாக நாங்கள் இருக்க விரும்பவில்லை.
மத்திய அரசின் கருத்துக்களைக் கேட்ட பின்னரே, பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டோம். நாங்கள் கருத்து கேட்ட போது, பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வரைவு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், வரும் 2012-13ம் நிதியாண்டிலேயே அமல்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்தீர்கள். இப்போது வேறு காரணம் சொல்கிறீர்கள். இந்த விவகாரத்தை ஏன், கோர்ட்டிற்கு கொண்டு வருகிறீர்கள். இந்த மனுவை நீங்கள் வாபஸ் பெறுவதே சரியாக இருக்கும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment