முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் நேற்று பேரணி நடத்தினர். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உடும்பன்சோலை, நெடுங்கண்டம், பாரத்தோடு, காரித்தோடு, சேரியர், காந்திபாறை, ராஜாபாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீது நள்ளிரவில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.
வீடுகளுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்களை கதவை உடைத்து வெளியே இழுத்து வந்து, அடித்து உதைத்தனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கேரள போலீஸ் துணையுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். பல இடங்களில் தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். விடிவதற்குள் யாரும் இருக்க கூடாது என்று வன்முறை கும்பல் எச்சரித்ததால், ஏராளமானோர் இரவோடு, இரவாக சாக்குலூத்து மெட்டு, குதிரைபாஞ்சான்மெட்டு மலைப்பகுதிகள் வழியாக சுமார் 10 கி.மீ தூரம் நடந்து தமிழகம் வந்து சேர்ந்தனர். உடும்பன்சோலை பகுதியில் இருந்து மட்டும் 300 குடும்பத்தினர் வெளியேறி தமிழகம் வந்தனர்.
வாலிபர் தீக்குளிப்பு
முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மத்திய மற்றும் கேரள அரசுகளின் போக்கை கண்டித்து, தேனி அருகேயுள்ள காமராஜபுரத்தை சேர்ந்த பாலத்துராஜா(40) என்ற வாலிபர் தீக்குளித்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள சங்கராபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
குலுங்கிய பேரணி
கம்பத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஒன்றரை லட்சம் பொதுமக்கள் திரண்டு, கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்வலமாக சென்றனர். கம்பம் நாட்டுக்கல் பகுதியில் துவங்கிய பேரணி கம்பம் மெட்டு காலனி, தாதப்பன்குளம் ரோடு, கம்பம்&குமுளி சாலை சிக்னல் வரை சென்றடைந்தது. பேரணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்திலிருந்து செல்லும் 13 பாதைகளையும் அடைத்து கேரளாவுக்கு பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும். பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் கேரள எல்லைக்குள் நுழைவோம்‘‘ என்று எச்சரித்தனர்.
எல்லை நோக்கி பயணம்
கேரளாவில் தாக்கப்பட்ட தமிழர்கள் நேற்றும் தேனி மாவட்டம் தேவாரம் வந்து சேர்ந்தனர். கம்பம் எல்லையில் போலீசார் அவர்களை மறித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை தாண்டி கூடலூருக்கு சென்றனர். அங்கு போலீசார் தடுத்து நிறுத்தி கேரள எல்லை செல்ல அனுமதி மறுத்தனர். அதனால் போராட்டக்காரர்கள் அங்கு நின்றவாறே 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
No comments:
Post a Comment