Friday, December 16, 2011

“ஆன் லைன்” மூலம் வேலைவாய்ப்பிற்க்கு பதிவு செய்த 1 லட்சம் பெயர்கள் மாயம்.

வெப்சைட் மூலம் வேலைக்கு பதிவு செய்த 1 லட்சம் பெயர்கள் மாயம்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தகவல்

கடந்த 5 ஆண்டு காலத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் டி.என்.பி.சி. உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பின்னர் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் உள்பட 42 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம், லாக்கரில் இருந்த நகைகள், சிபாரிசு கடிதங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

வேலை வழங்குவதில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது “ஆன் லைன்” மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 1 லட்சம் பெயர்கள் மாயம் ஆன தகவல் தெரியவந்துள்ளது. 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இணையதளம் மூலம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள் பதிவு செய்தனர். ஆனால் இந்த பெயர்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மாயமாகி உள்ளன.

சமீபத்தில் கால்நடை மருத்துவர்கள் 853 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. இதில் 4 ஆயிரம் பேருக்கு பணியிட தேர்வுக்கான அழைப்பு கடிதம் தேர்வாணையம் மூலம் அனுப்பப்பட்டது. இதில் 1600 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பலருக்கு அழைப்பு கடிதம் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

“ஆன்லைன்” மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பலர் தங்கள் பெயர் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர். 2011 மே முதல் டிசம்பர் வரை சென்னையில் 74 ஆயிரத்து 462 பட்டதாரிகள் புதிதாக பதிவு செய்துள்ளனர். 43 ஆயிரத்து 142 பேர் பெயரை புதுப்பித்து இருக்கிறார்கள். முன்னுரிமை அடிப்படையில் 932 பேர் வேலைக்காக பதிவு செய்து உள்ளனர். இந்த பெயர்கள் ஏதுவும் வேலை வாய்ப்பு அலுவலக ஆவணங்களில் பதிவாகவில்லை.

1 லட்சத்துக்கும் அதிகமான இந்த பெயர்கள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, “இணையதளத்தில் பெயர் பதிவு செய்வது இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இந்த குறைபாடு சரிசெய்யப்படும்” என்று கூறினார்.

No comments: