Saturday, March 26, 2011

3 லட்சம் கோடி வரிவசூல் முடக்கம்! -சிஏஜி

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் பல்வேறு வழக்குகளால் ரூ 3.1 லட்சம் கோடி வரி வசூல் முடங்கிக் கிடப்பதாக இந்திய தலைமை கணக்கு அதிகாரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த தொகை, அதற்கு முந்தைய ஆண்டு முடங்கிய தொகையை (ரூ.50 ஆயிரத்து 890 கோடி) விட 5 மடங்குக்கும் அதிகம்.

இவற்றில் ரூ.2.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட வரி பாக்கி தொடர்பான வழக்குகள், தீர்ப்பாயங்களிலும், மீதி பாக்கி தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.

இவற்றில், ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் கோடி வரிபாக்கி தொடர்பான வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலுவையில் உள்ள வழக்குகள். மீதி 8 ஆயிரத்து 417 கோடி வரிபாக்கி தொடர்பான வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, உற்பத்தி வரி வசூல் பாக்கியை வசூலிப்பது தொடர்பாக கோர்ட்டுகளில் 50 ஆயிரத்து 657 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதன் மூலம் வசூலாகாமல் உள்ள தொகை மட்டும் ரூ 3.1 லட்சம் கோடி.

இந்தியாவின் கார்ப்பொரேட் வரி வசூலை விட அதிகம் (கார்ப்பொரேட் வரி வசூலே ரூ 2.4 லட்சம் கோடிதான்!). ஆண்டு வருமான வரி வசூலை விட இரண்டரை மடங்கு அதிகம் (மொத்த வருமான வரி வசூல் ரூ 1.31 லட்சம் கோடிதான்!)

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் நடிக்கத் தெரியாதவர்கள்! - பிரேமலதா

எம்ஜிஆர் போலவே நிஜ வாழ்க்கையில் மக்களிடம் நடிக்கத் தெரியாதவர்கள் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பண்ருட்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்துக்கு வாக்களிக்கும்படி வீரப்பெருமாள்நல்லூர், புதுப்பேட்டை, பண்ருட்டி உள்ளிட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் அவர் பேசுகையில், "விஜயகாந்துக்கு ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. அவர் தொண்டர்களை இதயத்தில் வைத்துள்ளதால்தான் கடலூர் மாவட்டச் செயலரான பி.சிவக்கொழுந்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரியுமே தவிர நாட்டு மக்களிடம் நடிக்கத் தெரியாது.

ஆனால் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் நாட்டு மக்களிடம் நன்கு நடிக்கத் தெரிந்தவர்கள். இதனால்தான் கருணாநிதி இது எனக்கு கடைசி தேர்தல் என கூறி ஒவ்வொரு முறையும் தேர்தலில் நிற்கிறார்.

கருணாநிதியின் குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் ஒரு குடும்பத்துக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா? அல்லது தமிழக மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா? என வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நாட்டு மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி என கூறிய விஜயகாந்த், அதிமுகவோடு கூட்டணி சேர காரணம் உண்டு.

விஜயகாந்த தனித்து நின்று போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால் எளிதாக வெற்றி பெற்று குளிர் காயலாம் என திமுக நினைத்தது. அதனால்தான் திமுகவுக்காக தனது நிலையை மாற்றி அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் விஜயகாந்த்.

நெல்லிக்குப்பத்தில் அமைத்த பஸ் நிலையம் கூட பயன்படவில்லை. பண்ருட்டியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்தால் சொந்த செலவில் பெண்கள் கல்லூரி, கிராமப் பகுதியில் மருத்துவ வசதி, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு அளித்து இலவச தையல் இயந்திரம் அளிப்பார்.

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, முந்திரி, பலா தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்," என்றார் பிரேமலதா.

வைகோ பேட்டி – ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!

வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார்.

ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு. கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்… வெறும் பார்வையாளர்!

நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?

மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.

பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.

ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்கமாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.

‘நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல… எண்ணமே காரணம்!”

ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?

2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார். எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், ‘அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!

அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை. ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, ‘இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9… என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.

சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?

குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?

21 இடங்கள்… அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!

48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், ‘ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை… திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.

ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, ‘வைகோ நல்லவன். என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? ‘உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா? என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!

மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?

தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி… மூன்றாவது இடத்தில்தான் வரும்!

தனியாக நிற்பது..?

ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!

தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?

நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக்கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.

ஒரு பக்கம்… தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா – இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், ‘தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்… சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்! என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!

பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?

எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, ‘நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!

யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?

ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!

இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?

சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், ‘மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!

‘என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்! என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?

ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!

இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை…வருத்தமாக இல்லையா?

தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!

நன்றி: விகடன்

தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகள் விதிமீறல் அல்ல!

அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றை வழங்குவதாக பிரசாரமும் செய்து வருகின்றனர். இது அந்தந்த கட்சிகளின் தேர்தல் திட்டம். எனவே, இது தேர்தல் விதிமீறல் அல்ல. அது அந்த கட்சியின் வாக்குறுதி.எனவே, இதை செய்வோம் என்று கூறி ஓட்டு கேட்கலாம். அரசு சார்பில் ஏதாவது செய்தால்தான் விதிமீறல் ஆகும். அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா? என்பதை மக்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்," என்றார் பிரவீன் குமார்.

மக்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்,லேப்-டாப் போன்றவற்றை இலவசமாக அளிப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வரும் போக்கு கவலைக்குறியது இந்த விஷயத்தில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மக்களை கவிழ்க்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது," என்றார் குரேஷி.

விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ.19.88 கோடி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வேட்புமனு தாக்கலின் போது, தனக்கு ரூ.19.88 கோடி சொத்து உள்ளது என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது அவர் அளித்த சொத்து விவரம்:

அசையும் சொத்து...

* ஆண்டாள் அழகர் திருமண மண்டப பங்குகள் - ரூ.74.99 லட்சம்
* கேப்டன் பார்ம்ஸ் பி.லிமிடெட் பங்குகள் - ரூ.2.93 கோடி
* கேப்டன் மீடியா பங்குகள் - ரூ.1 கோடி
* வி.பி.வி.எஸ். பார்ம்ஸ் பி.லிமிடெட் பங்குகள் - ரூ.36.58 லட்சம்
* விஜய்பாண்டி பி.லிமிடெட் பங்குகள் - ரூ.2.68 லட்சம்
* நில முன்பணம் - ரூ.1.66 கோடி
* மற்றவை - ரூ.65,201

* சொனாடா கார் - ரூ.15.28 லட்சம்
* டெம்போ டிராவலர் - ரூ.12.58 லட்சம்
* போர்ட் எண்டவர் - ரூ.22.49 லட்சம்

* நகைகள் 612 கிராம் - ரூ.9.35 லட்சம்
* இதர சொத்து - ரூ.1.64 கோடி

மொத்த அசையும் சொத்து - ரூ.9.04 கோடி.

அசையா சொத்து...

* மதுராந்தகம், கரடிபுத்தூர், இருகூர் ஆகிய இடங்களில் 61.73 ஏக்கர் தோராய சந்தை மதிப்பு ரூ.12.46 கோடி
* வேளாண் அல்லாத பிற நிலங்கள் மதிப்பு ரூ.1.10 கோடி
* வணிகக் கட்டடங்களின் மதிப்பு ரூ.6.87 கோடி
* குடியிருப்பு கட்டங்கள் ரூ.1.61 கோடி

மொத்த அசையா சொத்து - ரூ.10.83 கோடி

அரசுக்கு சேரவேண்டிய அனைத்து தொகை... .

* கடன் தொகைகள் (தயாரிப்பு நிறுவனங்களிடம் முன்தொகை பெற்றது) - ரூ.2.54 கோடி.
* வருமான வரி நிலுவை (மேல்முறையீடு நிலுவை) ரூ.7.32 கோடி
* செல்வ வரி நிலுவை ரூ.20.27 லட்சம்
ஆக, அரசுக்கு சேரவேண்டிய அனைத்து தொகை - ரூ.7.52 கோடி.

வைப்புத்தொகை...

* இந்தியன் வங்கி - ரூ.17,445
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.60,600
* கையிருப்பு ரொக்கம் - ரூ.6 லட்சம்.

மனைவி பிரேமலதாவுக்கு...

* அசையும் சொத்து - ரூ.1.28 கோடி
* அசையா சொத்து - ரூ.5.28 கோடி
* கையிருப்பு ரொக்கம் - ரூ.6 லட்சம்

மனைவி பிரேமலதாவிடம் மொத்தம் - ரூ.6.57 கோடி.

இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் விஜயகாந்த் விவரம் அளித்துள்ளார்.

1 1/2 கோடி ஆடுகள் எங்கிருந்து கிடைக்கும்? ஜெ.வுக்கு ராமதாஸ் கேள்வி?

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன இலவசங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதோ அத்தனை இல வசங்களையும் நாங்களும் வழங்குவோம் என்று கூறி இருக்கிறார்கள். ஒரு சிலவற்றை கூடுதலாகவும் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

கிராமங்களில் ஒரு வீட்டுக்கு 4 ஆடுகள் வழங்குவார்களாம். தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் 30 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இந்த கணக்குப்படி பார்த்தால் மொத்தம் 1 கோடியே 20 லட்சம் ஆடுகள் வேண்டும்.

டி.வி. என்றால் 10 நிறுவனங்களில் சொல்லி தயாரித்து விடலாம். மிக்சி, கிரைண்டர் என்றாலும் ஒரு மாதத்தில் தயாரித்து விடலாம். ஒரு கோடியே 20 லட்சம் ஆடுகளை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? எங்கிருந்து கொள்முதல் செய்யப்போகிறார்கள்?

இது மக்களை ஏமாற்றுகிற திட்டம். அவர் அள்ளி வீசியிருக்கிற வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடாது’’ என்று பேசினார்

ஆயிரம் கோடி ரூபாயை வாங்கியது யார்? வைகோவுக்கு திருமாவளவன் கேள்வி?

திருச்சியில் திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,

கலைஞர் யாரையும் பழிவாங்க விரும்பமாட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் யார் யாரெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள். அவரை எதிர்த்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டார்கள். பொடா சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டார்கள்.

18 மாதங்கள் உள்ளே வைக்கப்பட்டார் வைகோ. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைஞரால் வளர்க்கப்பட்டவர்தான். தன்னை மாணிக்க கல்லாக உயர்த்திவர் கலைஞர் என்று மேடைகளில் பேசியவர் வைகோ. அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவரின் நிலைமை என்ன. அவரின் அரசியல் நிலைமையே இன்று கேள்விக் குறியாகி விட்டது. புதைக்குழியிலே இன்றைக்கு தள்ளிவிட்டார்.


அதற்கு வைகோ பேசுகிறார். குற்றச்சாட்டு. வெளிப்படையான குற்றச்சாட்டு. அரசியலில் இருந்து ஓரம்கட்டுவதற்காக, ஒழிப்பதற்காக ஸ்டெர்லைட் என்கிற நிறுவனம் என்னை எதிர்க்கிறவர்களுக்கு ஆயிரம் கோடி நிதி தந்திருக்கிறது என்று வைகோ கூறுகிறார். வைகோ அவர்களே இந்த மேடையில் இருந்து கேட்கிறேன். நேர்மை இருந்தால், மனசாட்சி இருந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியது யார் என்று வெளிப்படையாக சொல்லுங்கள். நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள். நாட்டுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆயிரம் கோடி ரூபாயை வாங்கியது யார். அரசியலில் இருந்து உங்களை ஓரங்கட்டுவது யார். அரசியல் வாழ்விலிருந்து உங்களை ஒதுக்குவது யார்.

எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தபோது, 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் உங்களுக்கு 23 இடங்கள் ஒதுக்க முன்வந்தார் கலைஞர். ஒரு ஒரு தொகுதிக்கு முரண்பட்டு அதிமுக அணிக்கு போனீர்கள். இந்த 5, 6 ஆண்டுகள் எவ்வளவு பாதுகாப்பு தந்தீர்கள் அம்மாவுக்காக. முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது, பாதிக்கப்படுகிற ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதைவிட அம்மாவை காப்பற்றுவதே வைகோவுக்கு குறியாக இருந்தது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தடுத்து நிறுத்துவதைவிட, கலைஞரின் வெற்றியையே தடுத்து நிறுத்துவதையே அவர் குறியாக இருந்தார். ஈழத்தமிழர்களை அழித்து ஒழிக்கக் கூடிய சிங்கள அரசை எதிர்ப்பதை விட, சிங்கள அரசுக்கு துணை நிற்கக் கூடிய உலக நாடுகளை எதிர்ப்பதை விட, ராஜபக்சேவை எதிர்ப்பதை விட கலைஞரை எதிர்ப்பதையே முன்வைத்திருந்தார். யாருக்காக அம்மாவுக்காக. விசுவாசம் காட்டினார். ஆனால் அந்த அம்மா இன்று என்ன செய்திருக்கிறார். எந்த அணியிலும் சேர முடியாத நிலையில், புதிய அணியும் உருவாக்க முடியாத நிலையில், தனித்தும் போட்டியிட முடியாத நிலையில் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கி விட்டார். எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். அரசியல் நாகரீகமா இது. இப்படிப்பட்ட அரசியல் அநாகரீகத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது.

மதிமுகவை வெளியே தள்ளிய ஜெயலலிதா: தோழமைகளை அரவணைக்கும் கலைஞர்

கலைஞர் அப்படி செய்திருப்பாரா? நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவோ முரண்பட்டு பேசிய பாமகவை கூட்டணியில் அரவணைத்துக்கொண்டார். தன்னைவிட வயது குறைந்தவர் என்றாலும், மருத்துவர் அய்யா என்று பெருந்தன்மை உடையவர் கலைஞர்.

ஆனால் 6 ஆண்டு காலம் உள்ளே இருந்த மதிமுகவை பிடரியை பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார் ஜெயலலிதா. இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். பழி வாங்கும் எண்ணம் கலைஞருக்கு உண்டா. 18 மாதம் உள்ளே தள்ளிய அந்த அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாமா. ஈழத்தமிழர்களை என்றைக்கும் ஆதரிக்காத அந்த அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாமா. விடுதலைப் புலிகளுக்கு தடை வாங்கித் தந்தது நான் தான் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் அவருடன் கூட்டணி சேரலாமா. பிரபாகரனை கொண்டுவந்து விசாரணை நடத்தி தூக்கு ஏற்ற வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றிய அந்த அம்மாவோடு கூட்டு சேரலாமா. கூடா நட்பின் விளைவு, அண்ணன் வைகோ இன்று அம்போ என்று நடுத்தெருவில் நிற்கிற நிலை ஏற்பட்டுடவிட்டது. நான் உள்ளபடியே அவர் மீது வைத்திருக்கிற அன்பின் விளைவாக வேதனைப்பட்டு சொல்கிறேன். உள்ளம் நொந்து சொல்கிறேன்.

கலைஞரை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்திற்காக இன்றைக்கு எப்படிப்பட்ட நிலை. கலைஞர் யாரையும் கைவிட்டதில்லை. தோழமை கட்சிகளுக்கு தாராளமாக இடம் தந்து அரவணைத்துக்கொண்டிருக்கிறார் கலைஞர்.

தனித்து ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை. 119 தொகுதிகள் போதும் என்று கலைஞர் நினைக்கிறார் என்றால், திருமாவளவனை நம்புகிறார். பாமகவை நம்புகிறார். தோழமை கட்சிகளை நம்புகிறார். எல்லோரும் வலிமைப்பெற்றவர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறார். அதுதான் கலைஞரின் பெருந்தன்மை.

எதிரணியில் அறிக்கை கூட சுயமாக இல்லை. சொந்தமாக இல்லை. மக்கள் நலனில் இருந்தால்தான் இதுவெல்லாம் சுயமாக வரும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.