Saturday, March 26, 2011

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் நடிக்கத் தெரியாதவர்கள்! - பிரேமலதா

எம்ஜிஆர் போலவே நிஜ வாழ்க்கையில் மக்களிடம் நடிக்கத் தெரியாதவர்கள் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பண்ருட்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்துக்கு வாக்களிக்கும்படி வீரப்பெருமாள்நல்லூர், புதுப்பேட்டை, பண்ருட்டி உள்ளிட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் அவர் பேசுகையில், "விஜயகாந்துக்கு ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. அவர் தொண்டர்களை இதயத்தில் வைத்துள்ளதால்தான் கடலூர் மாவட்டச் செயலரான பி.சிவக்கொழுந்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரியுமே தவிர நாட்டு மக்களிடம் நடிக்கத் தெரியாது.

ஆனால் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் நாட்டு மக்களிடம் நன்கு நடிக்கத் தெரிந்தவர்கள். இதனால்தான் கருணாநிதி இது எனக்கு கடைசி தேர்தல் என கூறி ஒவ்வொரு முறையும் தேர்தலில் நிற்கிறார்.

கருணாநிதியின் குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் ஒரு குடும்பத்துக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா? அல்லது தமிழக மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா? என வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நாட்டு மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி என கூறிய விஜயகாந்த், அதிமுகவோடு கூட்டணி சேர காரணம் உண்டு.

விஜயகாந்த தனித்து நின்று போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால் எளிதாக வெற்றி பெற்று குளிர் காயலாம் என திமுக நினைத்தது. அதனால்தான் திமுகவுக்காக தனது நிலையை மாற்றி அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் விஜயகாந்த்.

நெல்லிக்குப்பத்தில் அமைத்த பஸ் நிலையம் கூட பயன்படவில்லை. பண்ருட்டியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்தால் சொந்த செலவில் பெண்கள் கல்லூரி, கிராமப் பகுதியில் மருத்துவ வசதி, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு அளித்து இலவச தையல் இயந்திரம் அளிப்பார்.

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, முந்திரி, பலா தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்," என்றார் பிரேமலதா.

No comments: