Saturday, March 26, 2011

ஆயிரம் கோடி ரூபாயை வாங்கியது யார்? வைகோவுக்கு திருமாவளவன் கேள்வி?

திருச்சியில் திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,

கலைஞர் யாரையும் பழிவாங்க விரும்பமாட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் யார் யாரெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள். அவரை எதிர்த்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டார்கள். பொடா சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டார்கள்.

18 மாதங்கள் உள்ளே வைக்கப்பட்டார் வைகோ. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைஞரால் வளர்க்கப்பட்டவர்தான். தன்னை மாணிக்க கல்லாக உயர்த்திவர் கலைஞர் என்று மேடைகளில் பேசியவர் வைகோ. அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவரின் நிலைமை என்ன. அவரின் அரசியல் நிலைமையே இன்று கேள்விக் குறியாகி விட்டது. புதைக்குழியிலே இன்றைக்கு தள்ளிவிட்டார்.


அதற்கு வைகோ பேசுகிறார். குற்றச்சாட்டு. வெளிப்படையான குற்றச்சாட்டு. அரசியலில் இருந்து ஓரம்கட்டுவதற்காக, ஒழிப்பதற்காக ஸ்டெர்லைட் என்கிற நிறுவனம் என்னை எதிர்க்கிறவர்களுக்கு ஆயிரம் கோடி நிதி தந்திருக்கிறது என்று வைகோ கூறுகிறார். வைகோ அவர்களே இந்த மேடையில் இருந்து கேட்கிறேன். நேர்மை இருந்தால், மனசாட்சி இருந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியது யார் என்று வெளிப்படையாக சொல்லுங்கள். நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள். நாட்டுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆயிரம் கோடி ரூபாயை வாங்கியது யார். அரசியலில் இருந்து உங்களை ஓரங்கட்டுவது யார். அரசியல் வாழ்விலிருந்து உங்களை ஒதுக்குவது யார்.

எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தபோது, 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் உங்களுக்கு 23 இடங்கள் ஒதுக்க முன்வந்தார் கலைஞர். ஒரு ஒரு தொகுதிக்கு முரண்பட்டு அதிமுக அணிக்கு போனீர்கள். இந்த 5, 6 ஆண்டுகள் எவ்வளவு பாதுகாப்பு தந்தீர்கள் அம்மாவுக்காக. முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது, பாதிக்கப்படுகிற ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதைவிட அம்மாவை காப்பற்றுவதே வைகோவுக்கு குறியாக இருந்தது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தடுத்து நிறுத்துவதைவிட, கலைஞரின் வெற்றியையே தடுத்து நிறுத்துவதையே அவர் குறியாக இருந்தார். ஈழத்தமிழர்களை அழித்து ஒழிக்கக் கூடிய சிங்கள அரசை எதிர்ப்பதை விட, சிங்கள அரசுக்கு துணை நிற்கக் கூடிய உலக நாடுகளை எதிர்ப்பதை விட, ராஜபக்சேவை எதிர்ப்பதை விட கலைஞரை எதிர்ப்பதையே முன்வைத்திருந்தார். யாருக்காக அம்மாவுக்காக. விசுவாசம் காட்டினார். ஆனால் அந்த அம்மா இன்று என்ன செய்திருக்கிறார். எந்த அணியிலும் சேர முடியாத நிலையில், புதிய அணியும் உருவாக்க முடியாத நிலையில், தனித்தும் போட்டியிட முடியாத நிலையில் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கி விட்டார். எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். அரசியல் நாகரீகமா இது. இப்படிப்பட்ட அரசியல் அநாகரீகத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது.

மதிமுகவை வெளியே தள்ளிய ஜெயலலிதா: தோழமைகளை அரவணைக்கும் கலைஞர்

கலைஞர் அப்படி செய்திருப்பாரா? நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவோ முரண்பட்டு பேசிய பாமகவை கூட்டணியில் அரவணைத்துக்கொண்டார். தன்னைவிட வயது குறைந்தவர் என்றாலும், மருத்துவர் அய்யா என்று பெருந்தன்மை உடையவர் கலைஞர்.

ஆனால் 6 ஆண்டு காலம் உள்ளே இருந்த மதிமுகவை பிடரியை பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார் ஜெயலலிதா. இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். பழி வாங்கும் எண்ணம் கலைஞருக்கு உண்டா. 18 மாதம் உள்ளே தள்ளிய அந்த அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாமா. ஈழத்தமிழர்களை என்றைக்கும் ஆதரிக்காத அந்த அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாமா. விடுதலைப் புலிகளுக்கு தடை வாங்கித் தந்தது நான் தான் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் அவருடன் கூட்டணி சேரலாமா. பிரபாகரனை கொண்டுவந்து விசாரணை நடத்தி தூக்கு ஏற்ற வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றிய அந்த அம்மாவோடு கூட்டு சேரலாமா. கூடா நட்பின் விளைவு, அண்ணன் வைகோ இன்று அம்போ என்று நடுத்தெருவில் நிற்கிற நிலை ஏற்பட்டுடவிட்டது. நான் உள்ளபடியே அவர் மீது வைத்திருக்கிற அன்பின் விளைவாக வேதனைப்பட்டு சொல்கிறேன். உள்ளம் நொந்து சொல்கிறேன்.

கலைஞரை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்திற்காக இன்றைக்கு எப்படிப்பட்ட நிலை. கலைஞர் யாரையும் கைவிட்டதில்லை. தோழமை கட்சிகளுக்கு தாராளமாக இடம் தந்து அரவணைத்துக்கொண்டிருக்கிறார் கலைஞர்.

தனித்து ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை. 119 தொகுதிகள் போதும் என்று கலைஞர் நினைக்கிறார் என்றால், திருமாவளவனை நம்புகிறார். பாமகவை நம்புகிறார். தோழமை கட்சிகளை நம்புகிறார். எல்லோரும் வலிமைப்பெற்றவர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறார். அதுதான் கலைஞரின் பெருந்தன்மை.

எதிரணியில் அறிக்கை கூட சுயமாக இல்லை. சொந்தமாக இல்லை. மக்கள் நலனில் இருந்தால்தான் இதுவெல்லாம் சுயமாக வரும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

No comments: