Saturday, November 12, 2011

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு : தேர்ச்சிக்கான மதிப்பெண் எவ்வளவு ?



எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வை எழுதி இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல காத்திருக்கும் மீதமுள்ள 1,217 மாணவர்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி மதிப்பெண் கணக்கிடப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிடும் பணியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் தேர்வுத் துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மற்ற படிப்புகளைப் போன்று அல்லாமல் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்தால்தான், இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடர முடியும் என்ற வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) "பிரேக் சிஸ்டம்' அமலில் உள்ளது.

புதிய முறை: இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புக்கு ஒட்டுமொத்த குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம் என்ற விதிமுறை இருந்து வந்தது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் விதிமுறையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றி அமைத்தது. அதாவது, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வு முடிவுகள் வெளியிட்டது.

இதில் தேர்வு எழுதிய 3,184 மாணவர்களில் 1,967 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். புதிய மதிப்பெண் முறை காரணமாக 1,217 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

தேர்ச்சிபெறாத மாணவர்களில் பலர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி மாணவர் தேர்ச்சிக்கு பழைய மதிப்பெண் முறையையே பின்பற்றுமாறு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். புதிய மதிப்பெண் முறை ரத்தாகி பிரச்னை முடிவுக்கு வந்தது.

எனினும், புதிய மதிப்பெண் விதிமுறை மட்டுமின்றி எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வின் ஒவ்வொரு மருத்துவப் பாடத்தின் மொத்த மதிப்பெண்ணையும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றி அமைத்தது. இதனால், வெளியாக உள்ள திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் - பெற்றோர்கள் -மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எம்.சி.ஐ. விதிகளின்படி... தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுக்கு உரிய "அனாடமி', "பிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி' ஆகிய மூன்று பாடங்களில் மாணவர் எடுத்துள்ள மதிப்பெண்ணைக் கணக்கிட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

உதாரணமாக, அனாடமி தாள் 1, தாள் 2 மற்றும் வாய்மொழித் தேர்வு (தலா 100 வீதம் இவற்றின் மொத்த மதிப்பெண்கள் 300). இதை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், 300-க்கு 150-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர் தேர்ச்சிபெற்றதாகக் கருதப்படும். இதில் வாய்மொழித் தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் விகிதம் எதுவும் கிடையாது.

அதாவது, தாள்-1 மற்றும் தாள்-2 என ஆகியவற்றில் அதிக மதிப்பெண் எடுத்து, வாய்மொழித் தேர்வில் குறைவாக இருந்து ஒட்டுமொத்த மதிப்பெண் 150 அல்லது அதற்கு மேல் எடுத்தாலே போதுமானது.

மேலும் அனாடமி செய்முறைத் தேர்வில் மொத்த மதிப்பெண் 100-க்கு குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணை ஒரு மாணவர் கட்டாயம் எடுக்க வேண்டும். இது தவிர அனாடமி பாடத்தில் மருத்துவக் கல்லூரியின் உள் மதிப்பீட்டுத் தேர்வின் மொத்த மதிப்பெண் 100 ஆகும். ஆக, செய்முறைத் தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டுத் தேர்வு இரண்டிலும் சேர்த்து 200-க்கு 100 மதிப்பெண் எடுக்க வேண்டும். இதில் உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சிபெற குறைந்தபட்ச மதிப்பெண் எதுவும் கிடையாது.

எனவே, இந்த விதிமுறைகளின்படி அனாடமி பாடத்தில் தேர்ச்சி பெற தாள்-1, தாள்-2, வாய்மொழித் தேர்வு, செய்முறைத் தேர்வு, உள் மதிப்பீட்டுத் தேர்வு ஆகிய அனைத்தையும் சேர்த்து 500-க்கு 250 மதிப்பெண் எடுத்தால் போதும்.

இதே போன்று "பிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி' ஆகிய இதர பாடங்களிலும் தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடப்படும்.

இந்தப் பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல முடியும் என்று பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.