Monday, July 11, 2011

மும்பை குண்டு வெடிப்பில் காயம் : 3 ஆண்டு கோமாவில் இருந்த வாலிபருக்கு நினைவு திரும்பியது.

மும்பை குண்டு வெடிப்பில் காயம்: 5 ஆண்டு கோமாவில் இருந்த வாலிபருக்கு நினைவு திரும்பியது

மும்பையில் 2008-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பில் 188 பேர் பலியானார்கள். 817 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரெயிலில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பராக் சவாந்த் (32) என்ற தனியார் நிறுவன ஊழியர் பலத்த காயம் அடைந்தார். அவரது நெற்றி, தலை, மார்பு போன்ற பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. தலையில் அடிபட்டதால் மூளையிலும் சேதம் ஏற்பட்டது. அவர் மீரா சாலையில் உள்ள பக்திவேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. சுயநினைவை இழந்து “கோமா” நிலையை அடைந்தார். பின்னர் அவர் இந்துஜா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் இழந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் வந்து பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டனர். மனைவி கூட இவரை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் அவருக்கு திடீரென நினைவு திரும்பியது. அவர் கோமாவில் இருந்து மீண்டிருப்பது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. நேற்று போன் மூலம் தனது பெற்றோருடன் பராக் பேசினார். 5-வது மகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டு நலம் விசாரித்தார். நன்றாக படிக்கிறாளா? என்றும் கேட்டார்.

இது அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து பராக் உடன் உரையாடினர். இன்னும் சிறிது நாட்களில் பராக் முழுமையாக குணமடைந்து விடுவார் என்றும், இது மருத்துவ அதிசயம் என்றும் இந்துஜா ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைப்பு இல்லை : பாகிஸ்தானுக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிறுத்தம் ; அமெரிக்கா நடவடிக்கை.

தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைப்பு இல்லை: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி நிறுத்தம்; அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஒழிக்க அந்நாட்டுக்கு அமெரிக்கா ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதவி வழங்கி வருகிறது. ராணுவ தளவாடங்கள் வாங்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுகின்றன. எனவே, தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த ரூ.4 ஆயிரம் கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அதற்கான அறிவிப்பை ஒபாமா அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதை வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகி பில்தலே டெலிவிஷனில் உறுதி செய்தார்.

அது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த அமெரிக்க பயிற்சியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். மேலும், ராணுவத்துக்கு அளிக்கப்பட்ட உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

1,20,000 டாலர் ஊழல் குற்றச்சாட்டில் கபில் சிபல் : சிஏஜி.

ஊழல் குற்றச்சாட்டில் கபில் சிபல்: சிஏஜி

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஊழல் விவகாரத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றது இந்த சூழ்நிலையில் மீண்டும் மற்றொரு ஊழல் விவகாரத்தில் சிக்கி உள்ளார் மத்திய தொலைத் தொடர்புத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல்.

இந்த முறைகேடு குறித்த தகவலை (சிஏஜி) மத்திய தலைமைக் கணக்கு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கபில் சிபல், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தபோது, அமெரிக்காவில் செட்டிலான 5 லட்சம் இந்திய வம்சவாளி தொழிலாளர்கள் குறித்த டேட்டா பேஸை(தரவுத்தளம்) உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3 கட்டமாக இந்தப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள், விதி மீறல்கள் நடந்துள்ளதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

அதாவது விதிமுறைகளுக்குப் புறம்பாக, பொது நிதி விதிகளுக்கு மாறாக, மேரிலேன்ட்டைச் சேர்ந்த பீனிக்ஸ் ரோஸ் எல்எல்சி என்ற நிறுவனத்தை சிபல் தேர்வு செய்து அந்த நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்துள்ளார் என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பணிக்கான செலவுத் தொகையாக 1,20,000 டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் பணியை ஏற்றுக் கொண்ட அந்த அமெரிக்க நிறுவனம், 3 ஆண்டுகளிலேயே தனது வேலையை அப்படியே நிறுத்தி விட்டது. அதாவது இலக்கு குறிக்கப்பட்ட பணியில் 16 சதவீதத்தை மட்டுமே அது செய்து அத்துடன் நிறுத்தி விட்டது.

ஆனால் முதல் கட்டப் பணிகள் முடிவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்திற்கு திட்ட செலவுத் தொகையில் பெரும்பாலான பணத்தை கபில் சிபல் ஒதுக்கி விட்டார்.

2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25,000 டாலர், ஆகஸ்ட் மாதம் 26,200 டாலர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 38,000 டாலர் என பெரும் தொகையை அந்த நிறுவனத்திற்கு சிபல் ஒதுக்கியுள்ளார்.

மொத்தம் 20,000 பேரின் தகவல்களை முதல் கட்டத்தில் அந்த நிறுவனம் முடித்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 3300 பேர் குறித்த தகவல்களை மட்டுமே அது திரட்டியிருந்தது. அதிலும், எட்டே எட்டு பேரின் தகவல்களை மட்டுமே அது டேட்டா பேஸில் ஏற்றியிருந்தது.

முதல் கட்டப் பணிகளின் இலக்கை அந்த நிறுவனம் சரிவர நிறைவேற்றாத நிலையில், 2வது கட்டப் பணிக்காக அந்த நிறுவனத்திற்கு 30,000 டாலரை அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒதுக்கியது மிகவும் முறைகேடானது என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள சிஏசியின் முதன்மை இயக்குநர்தான் இந்த முறைகேட்டை கண்டுபிடித்து அதுகுறித்த அறிக்கையை சிஏஜிக்கு அனுப்பியுள்ளார்.

இந்த தேவையில்லாத பண விரையத்தால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட ஒருவருக்கு சாதகமாக அறிவியல் தொழில்நுட்பத் துறை செயல்பட்டிருப்பதாகவும் அது கூறியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் கே.சி. திவிவேதிதான் ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆனால் இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலை அளித்தவர் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என்று சிஏஜி தெளிவாக கூறியுள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்த சிஏஜியின் அறிக்கை வருகிற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யபடவுள்ளது. இந்த புதிய முறைகேடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மேலும் ஒரு தலைவலியே ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இந்த குற்றச்சாட்டு குறித்து கபில் சிபல் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை

மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா படப்பிடிப்புக்கான பூஜை நடந்தது.


தமிழ் சினிமாவில் மாடர்ன் தியேட்டர்ஸ் பங்கு மகத்தானது. தமிழில் முதல் பேசும் உருவானது இங்குதான். பெயர் கவி அகல்யா. முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களையும் உருவாக்கியது இதே மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.

எம்ஜிஆர், என்டிஆர், கருணாநிதி, ஜானகி எம்ஜிஆர் என நான்கு முதல்வர்களின் முதல் படங்களை உருவாக்கிய பெருமை இந்த மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு.

1935-ல் நிறுவப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ், 180 தமிழ் படங்கள், 1 இந்திப் படம், 1 ஆங்கிலப் படம், பல தென்னிந்திய மொழிப் படங்களின் தயாரிப்புக் கூடமாக திகழ்ந்தது. காளி கோயில் கபாலி என்ற படத்தோடு தனது தயாரிப்புப் பணியை நிறுத்திக் கொண்டது.

அதன் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் குடியிருப்புப் பகுதியாக மாறிப் போனது. இன்று மிச்சமிருப்பது மாடர்ன் தியேட்டர்ஸின் கம்பீரமான முகப்புப் பகுதி மட்டுமே.

ஒருகாலத்தில் சினிமாவின் தலைமைப் பீடமாகத் திகழ்ந்த அந்தப் பிரதேசத்தின் நினைவுகளை அசைபோட தமிழ் சினிமா ஆர்வலர்கள் இப்போதும் தவறுவதில்லை. சிலர், மாடர் தியேட்டர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றும் தங்கள் படங்களின் துவக்க காட்சியை இங்கே வைப்பதும் உண்டு.

அந்த வகையில், சமீபத்தில் 'அழகு மகன்' என்ற சினிமா படப்பிடிப்புக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் ஏற்காடு சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸில் நடந்தது.

இதில் நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா, ஜெயக்குமாரி, பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி, இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ், நடிகர்கள் இளவரசு, சிங்கம்புலி, இயக்குனர் கவுதமன், ஆசைத்தம்பி, விஜய்ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிஐடி சகுந்தலா கூறுகையில், "சேலம் மாடர்ன் தியேட்டர்ஸை வாழ்நாளெல்லாம் மறக்கமாட்டேன். சாகும்போது கூட மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவுடன் தான் சாவேன். அந்தளவிற்கு என் வாழ்க்கையிலும், என்னை போல் மற்றவர்கள் வாழ்க்கையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் அங்கம் வகித்துள்ளது. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தையும் நாங்கள் மறக்க மாட்டோம். பல கலைஞர்களை உருவாக்கிய மாமனிதர். அவர் கையால் குட்டுப்பட்டவர்கள் தான் இன்று திரையுலகில் இருப்பவர்கள். பல சாதனை கலைஞர்களை இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான் உருவாக்கி இருந்தது. இந்த இடத்தில் நிற்பதையே பெருமையாக கருதுகிறேன்," என்றார்.

விழாவில் கலந்து கொண்ட சங்கர் கணேஷ், "மாடர்ன் தியேட்ர்ஸின் மிச்சமாக இப்போதுள்ள இந்த முதப்புப்பகுதிதான் தமிழ் சினிமாவின் அடையாளம். மாடர்ன் தியேட்டர் தயாரித்த பல படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் பணியாற்றிய இந்த இடத்தில் நிற்பதே பெருமை," என்றார்.

எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம்.அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டு உள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகைஉண்டு.அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்திசெய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.

உடல் எடையை குறைக்கும்

உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.

தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டை நோய் குணமடைகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒரு வித நோயையும் வராமல் தடுக்கிறது.

எலும்புகளை பலப்படுத்தும்

அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்

வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

சீமை அத்திப்பழம்

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண் குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.

சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்.