Tuesday, March 8, 2011

பத்ம வியூகம்.

மனுஷ்ய புத்திரன்


தி.மு.க. தலைவரின் இப்போதைய நிலையை பத்மவியூகத்தில் இருக்கும் அபிமன்யூவின் நிலையுடன்தான் ஒப்பிடமுடியும். அரசியல் சாணக்கியர் தனது மதிநுட்பத்தின் எல்லா ஆயுதங்களையும் பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். மிகவும் நெருக்கடியான அரசியல் சந்தர்ப்பங்களை மிகவும் சாதுர்யமாகக் கடந்து வந்தவர் அவர். அதிகாரத்திற்காகக் காத்திருக் கவும் நீண்ட போராட்டத்தை நடத்தவும் தயங்காதவர். ஆனால் இன்று அவர் கையில் இருக்கும் துருப்புச் சீட்டுகளில் ஒவ்வொன்றாகப் பிடுங்கப் படுகின்றன. அவருடைய ரத்த பந்தங்களாலும் நீண்ட கால அரசியல் தோழர்களாலும் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்த்துத் தாக்குவதற்கான அவரது படையரண்கள் ஒவ்வொன்றாகச் சேதப்படுத்தப் படுகின்றன. வரப்போகும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா இல்லையா என்பதை விட முக்கியமான கேள்வி, ஒரு குடும்பத் தலைவராக, கட்சித் தலைவராக அவரது அதிகாரம் உறுதிப்படுமா என்பதுதான். ஒவ்வொரு நாளும் அவருக்குக் கெட்ட சேதிகளுக்குப் பஞ்சமே இல்லை. அவர் மறக்க விரும்புகிற சம்பவங்களுக்கும் குறைவேதுமில்லை.

தி.மு.க. என்ற இயக்கம் அதிகாரத்தில் இருந்தபோதும் இல்லாதபோதும் தமிழக அரசியலிலும் சில சமயம் இந்திய அரசியலிலும் ஒரு பேரரசைப்போல கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு கணக்கு இருக்கிறது. எந்தப் பேரரசும் ஒரு அரை நூற்றாண்டுக் காலத்தில் அதன் உச்சத்திற்குச் சென்று பிறகு சிதையத் தொடங்கும் என்பதுதான் அது. தமிழக அரசியலின் பேரரசர் தனது வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கிவிட்டாரா? ஒரு முகாலாயப் பேரரசைப்போல அவர் சொந்த நிழலாலேயே சூழப்பட்டிருக்கிறாரா?

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற அடையாளத்தைப் படிப்படியாக சிதைத்ததை அவர் கண்முன் காண நேர்ந்தது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்த அவர் அந்த மொழியின் பெயரால் ஒரு மாநாட்டை முன்னூறு கோடி ரூபாய் செலவில் நடத்தி ஓராண்டு கூட நிறைவடையவில்லை; அதன்மேல் தூசி படிந்து யாருடைய நினைவிலும் அது இல்லாமல் போய்விட்டது. கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் இலவச தொலைக்காட்சி, மருத்துவக் காப்பீடு, நூறு நாள் வேலைத்திட்டம், ஒரு ரூபாய் அரிசி என மிகவும் வசீகரமான மக்கள் நலத் திட்டங்களால் தமது அரசாங்கம் படிப்படியாக அடைந்த புகழின் வெளிச் சத்தை ஊழலின் புழுதிப் புயல் இவ்வளவு சீக்கிரமாக வந்து மூடும் என்று அவர் கற்பனை செய்திருக்க மாட்டார். ஈழத் தமிழர் போராட்டத்தை நசுக்குவதற்கு காங்கிரஸ் மேற்கொண்ட சதிகளோடு, ஆட்சி அதிகாரம் கருதி அவர் செய்து கொண்ட சமரசங்களுக்காக வரலாற்றின் ஊழ்வினை அவரைப் பழிவாங்கு கிறது.

சோனியாகாந்தி நேற்று எப்படி பிரபாகரனை அழிப்பதற்காக ஒரு ரகசிய வளையத்தை உருவாக்கினாரோ, அதேபோல்தான் இன்று தி.மு.க.வை அழிப்பதற்கும் உருவாக்கியிருக்கிறார். மத்தியில் தி.மு.க.வோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்ட சந்தர்ப்பத்திலோ அல்லது தமிழகத்தில் தி.மு.க. அரசு காங்கிரஸ் தயவை நம்பியிருந்த சந்தர்ப்பத்திலோகூட ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காத காங்கிரஸ், இன்று கூட்டாட்சி கேட்டு தி.மு.க. தலைவரின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்குகிறது. தமிழக அரசியலில் எவ்வளவோ காலமாக எந்தப் பிரசன்னமும் இல்லாமல் இருந்த காங்கிரஸ் இன்று தன்னை ஒரு தீர்மானிக்கும் சக்தியாகக் காட்டிக்கொள்கிறது. காற்றுகூட உள்ளே புக முடியாமல் இரண்டு திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வந்த தமிழகத்தின் ஆட்சி பீடத்தை நோக்கி காங்கிரஸ் பின் வாசல் வழியாக முன்னேறுகிறது. கருணாநிதி மிரட்டலுக்கும் அவமதிப்புகளுக்கும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார். இது அவருக்குப் பழக்கமில்லாதது. ஆனால் இப்போது வழியேதும் இருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸை எந்த தயக்கமும் இன்றி ‘கெட்அவுட்’ சொன்ன அவர், இன்று அவரை வலிய அழைத்து அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக முப்பத்தோரு இடங்களைக் கொடுக்க வைப்பது பயத்தைத் தவிர வேறென்ன?

தி.மு.க.வை ஊழல் என்ற பொறியில் எவ்வளவு சிக்கவைக்க முடியுமோ சிக்க வைத்து தன்னை முழுமையாக அண்டியிருக்கச் செய்யும் ஒரு சூழலை காங்கிரஸ் உருவாக்கியிருக்கிறது. அதனுடைய நோக்கம், தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது மட்டுமல்ல. தி.மு.க.வைச் சிதைப்பதன் மூலமே தான் ஒரு வலுவான அரசியல் சக்தியாக இங்கே உருவெடுக்க முடியும் என்பதை அது அறிந்திருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை கருணாநிதியின் வாரிசுகளே எதிர்காலத்தில் காங்கிரஸுக்கு உருவாக்கிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு விதமான தொகுதிப் பங்கீடுகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார். முதலாவதாக காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகளு டனான தொகுதிப் பங்கீடு. இதே வரிசையில் அவர் தமது கட்சிக்குள் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்கிற வரிசையில் உள்ஒதுக்கீட்டையும் செய்தாக வேண்டும். ஒரு விமானத்தை ஒரே நேரத்தில் ஆறுபேர் ஆறுதிசைகளில் ‘ஹைஜாக்’செய்வது போன்ற அபத்த நாடகக் காட்சி இது. குடும்ப அரசியலிலும் அதிகார அரசியலிலும் தொடர்ந்து சமரசத்தை மேற்கொள்ளக்கூடிய ஒருவர், கடைசியில் அடையக்கூடிய இடம் என்ன வென்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

இதை எல்லாவற்றையும் மீறி யாரும் எதிர்பாராத விதத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியதுபோல வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. மறுபடியும் ஆட்சிக்கு வரும் என்று கருணாநிதி நம்பக்கூடும். அந்த நம்பிக்கை வீணானது என்று சொல்லிவிட முடியாது. எவ்வாறு இன்று இந்திய அரசியல் அதிகாரத்தைப் பல்வேறு சிறுசிறு காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாகத் தீர்மானிக்கிறதோ அதேபோல தமிழகத்திலும் நடக்கலாம். விலைவாசி பிரச்சினையோ, ஊழலோ ஒருவருக்கு வாக்களிப்பதை தீர்மானிப்பதிலிருந்து நமது அரசியல் மனோபாவம் வெகுதூரம் கடந்து வந்துவிட்டது. மக்கள் இன்று மிகவும் குறுகலான நோக்கங்களின் அடிப்படையில் தமது தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது, அவற்றைப் பற்றிய பொது கருத்துகளை உருவாக்கிக் கொள்வது வாக்களிக்கச் செல்லாத மத்தியதர வர்க்கத்தின் மனோபாவம் ஆகிவிட்டது. தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்பே தொகுதிகள்தோறும் கட்டுக்கட்டாக கரன்சிகள் வந்து இறங்கத் தொடங்கிவிட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யக்கூடிய தில்லுமுல்லுகள் பற்றி எழுந்த சர்ச்சைகள் அப்படியே கண்டுகொள்ளாமல் மறைக்கப்பட்டுவிட்டன. சாதி, பணம், தில்லுமுல்லுகளால் வெற்றி தோல்விகளில் எந்த நேரத்திலும் வித்தியாசங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு ஜனநாயகத்தில் பொதுப் பிரச்சினை சார்ந்து மக்கள் அலைகள் உருவாகாது என்பதே உண்மை. ஒருவேளை தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தால்கூட அது ஸ்பெக்ட்ரமின் விளைவாக இருக்காது; மாறாக, தேர்தல் உத்திகளில் செய்த தவறாகவே அது இருக்கும்.

வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிற விமர்சகர்கள் அதற்கு மாற்றான ஒரு அரசியல் சக்தியை மனப்பூர்வமாக சுட்டிக்காட்ட முடிகிறதா என்பது முக்கியமான கேள்வி. இன்று தி.மு.கவின் குற்றங்களுக்காக தண்டனையை வேண்டுபவர்கள் மக்களின் நிவாரணத் திற்காக சொல்லகூடிய மாற்றுத் திட்டம்தான் என்ன? தி.மு.கவை விட சிறந்த ஆட்சியை தமிழக மக்களுக்கு தரப்போகிறவர்கள் ஜெயலலிதாவும் விஜயகாந்துமா? அல்லது காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதன் வாயிலாக ஏதேனும் ஒரு கட்சி நல்லாட்சியைத் தந்துவிட முடியுமா? ஊழல், தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் முடிவுகளை எடுத்தல், எதேச்சதிக்காரம் என்பனவற்றில் ஜெயலலிதா இணையில்லாத முன்னுதாரணங்களை ஏற்படுத்தியவர். விஜயகாந்த் தனது தேர்தல் அறிக்கையினை அல்லது கட்சியின் கொள்கையினை எந்தச் சொற்களால் எழுதப்போகிறார் என்பது இதுவரை யாருக்கும் புரியாத ஒரு புதிர். தேர்தலில் வென்றால் தன் மனைவிக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று அவர் இப்போதே கோருவதாக செய்திகள் வருகின்றன.

காங்கிரஸ் இந்திய ஜனநாயகத்தின் ஒரு புரையோடிப்போன புண்.

ராமதாசும் திருமாவளவனும் குறிப்பிட்ட சாதிகளின் பிரதிநிதிகளாகவே என்றென்றும் பார்க்கப்படுவார்கள். பிற தலைவர்கள் இவர்களைவிட அதிக சாதிய சாய்மானம் கொண்டவர்களாக இருந்த போதிலும்கூட. இனி நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் நடிகர் விஜய் அல்லது கார்த்திக் மட்டுமே. இவர்களுக்கு இடையே ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் வேறு வழியில்லாத ஒரு தெளிந்த வாக்காளன் பார்வையில் இப்போதும் தி.மு.கவே முன்னிலை பெறும்.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைந்து ஸ்டாலின் முதல்வரானால் அழகிரி அவருக்கு ஒரு நிரந்தர கொடுங்கனவாக மாறுவார். அதேசமயம் ஸ்பெக்ட்ரம் என்ற சுருக்குக் கயிறு தற்காலிகமாக தி.மு.க.வின் கழுத்திலிருந்து கழற்றப்படும். கபில்சிபல் போன்ற யாராவது ஒரு போலி வழக்கறிஞர் இதை ஒரு கட்டுக்கதை என்று சான்றிதழ் அளிப்பார். இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆக்டோபஸ் கரங்கள் ஆ.ராசாவையும் தாண்டி பலரையும் நோக்கி நீள்வதால் இந்தப் பிரச்சினையைப் படிப்படியாக மூடி மறைப்பதற்கு எல்லோருமே ஒரு பரஸ்பர ரகசிய உடன்படிக்கைக்கு வருவார்கள்.

இவையெல்லாம் இந்த நாளின் உத்தேசங்கள் மட்டுமே. அடுத்த ஒரு மாதத்திற்குள் இன்னும் சில காட்சிகள் அரங்கேறலாம். ஏதாவது ஒன்று திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க. தலைவருக்கு ஒரு ஆசுவாசத்தைக் கொண்டு வரலாம்.

கருணாநிதி உளியின் ஓசை, இளைஞன் போன்ற படங்களுக்கு எழுதும் வசனங்கள் அல்ல அவரது முன் இருக்கும் சவால். வைரமுத்து, பா. விஜய் போன்ற அரசவை கவிஞர்களின் நட்பும் இணக்கமும் அவரது அறிவார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யப் போவதில்லை.

முதுபெரும் தலைவர் தனது இயக்கத்தின் வரலாற்றில் இன்னொரு யுத்தத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய அரசியல் வாழ்க்கையில் அவருக்கு அதிர்ஷ்டம் எப்போதும் கூடவே வந்திருக்கிறது. ஆனால் அவர் விரும்பு வதைவிட கொஞ்சம் தாமதமாக.