Wednesday, November 9, 2011

எம்.பி.பி.எஸ். புதிய மதிப்பெண் முறை இரத்தாகிறது. - இன்று வரை நடந்தது என்ன?



14-01-2011 அன்று எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்ய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. இம்முடிவால் புதிய மதிப்பெண் விதி காரணமாக தேர்வில் தோல்விக்குள்ளான நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்அடைவர்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அனாடமி, ஃபிஸியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி என்ற மூன்று பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடமும் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முன்பிருந்த தேர்வு மதிப்பெண் விதிமுறையின்படி, ஒரு பாடத்தின் இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 100 மதிப்பெண்கள் பெற்றாலே, அந்தப் பாடத்தில் தேர்ச்சி அளிக்கப்பட்டு வந்தது. இது நீண்டகால நடைமுறை ஆகும்.

ஆனால்,எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற சர்ச்சைக்குரிய புதிய விதிமுறையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் 14-01-2011 அன்று அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய 3,184 மாணவர்களில், 1,967 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்; 1,217 மாணவர்கள், 40 சதவீதம்பேர் தோல்விக்கு உள்ளாக்கப்பட்டனர்.

புதிய மதிப்பெண் விதிமுறை காரணமாக சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

தோல்விக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்கள் விவரம்;

சென்னை மருத்துவக் கல்லூரி - 40/165
ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி - 48/150
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - 47/100
மதுரை மருத்துவக் கல்லூரி - 46/155
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி - 11/58
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி - 59/153
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி - 21/150
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - 58/153
சேலம் மருத்துவக் கல்லூரி - 44/77
திருச்சி மருத்துவக் கல்லூரி - 35/100
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி- 48/101
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி- 45 /100
வேலூர் மருத்துவக் கல்லூரி - 21/99
தேனி மருத்துவக் கல்லூரி - 43/100
தர்ம்புரி மருத்துவக் கல்லூரி - 57/100
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி - 42/100
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி - 54/100
பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி, கோவை - 68 /150
மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி - 48 /100
ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி - 62 /150
கற்பகவிநாயகர் மருத்துவக் கல்லூரி - 54/100
முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி - 63 /150
தாகூர் மருத்துவக் கல்லூரி - 105/150
சென்னை மருத்துவக் கல்லூரி, திருச்சி - 79/150

இப்படி அதிர்ச்சி தோல்விப் பட்டியல் தொடர்கிறது. இவர்களெல்லாம் +2வில் 200% முதல் 190% வரை பெற்றவர்கள். 6லட்சம்பேர் தேர்வெழுதிய +2விலிருந்து 3000 பேரை தகுதி அடிப்படையில் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அரசு கல்லூரிகள் 17லிலும், தனியார் கல்லூரிகள் 7லிலும் இவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சேர்க்கை அளிக்கப்பட்டது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி இரண்டாம் ஆண்டு படிப்புக்குச் செல்ல முடியாத வகையில் "பிரேக் சிஸ்டம்' நடைமுறையில் உள்ளது.

இதனால் தேர்வில் தோல்வி அடைந்த 40 சதவீத மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு ஃபிஸியாலஜி பாட முதல் பிரிவில் 100-க்கு 59 மதிப்பெண்ணும், இரண்டாம் பிரிவில் 100-க்கு 42 மதிப்பெண்ணும் பெற்று, மொத்தம் 101 மதிப்பெண் பெற்றும்கூட தேர்ச்சி அடையாத மாணவி பூர்ணசௌந்தரி உள்பட 23 மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அக்டோபர் 10ந்தேதி மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மாணவர்களை இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்க உத்தரவிட்டார். பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மருத்துவக் கல்வி இயக்குநர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இருந்தபோதும் இந்த உத்தரவை, மதுரை மருத்துவக் கல்லூரியைத் தவிர மற்ற கல்லூரிகள் இன்றுவரை மதித்தாகத் தெரியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இணையானதுதானா? மதுரை உயர்நீதிமன்றம்! எனும் வினா தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை.

இருந்தபோதும் மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் டி.ராஜா அவர்களின் தீர்ப்பு அதிரடியானதுதான். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளியாய் திகழ்ந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

4-10-2011 அன்று சென்னை உயர்நீதிமன்ற கோர்ட் -2ல் இவ்வழக்கு, நீதிபதி ஹரிபரந்தாமனிடம் விசாரணைக்கு வந்தது. அவரால் வழக்கு 14-10-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

14-10-2011 அன்று நீதிபதி பால்வசந்தகுமாரிடம் விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கினை ஏற்க மறுத்ததால், 19-10-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

19-10-2011 அன்று நீதிபதி சித்ராவெங்கட்ராமனிடம் விசாரணைக்கு வந்தது. அவரால் வழக்கு , 1-11-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

1-11-2011 அன்று நீதிபதி சித்ராவெங்கட்ராமன், டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றிவிட்டார்.

2-11-2011 அன்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு வந்த வழக்கு, 9-11-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படியாக மாணவர்களின் வாழ்க்கை பந்தாடப்பட்டது.

ஒவ்வொறு முறையும் நீதிமன்றத்தில் குவியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பெற்றோர்கள், 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என இவர்கள் யாவரும் நீதியரசர்களின் கண்களில் படவில்லை போலும்..

மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வெடித்தது. இது சுகாதாரத்துறை அமைச்சர் வழியாக முதல்வரின் கவனத்திற்கு சென்றது.

இறுதியாக சென்னை-மதுரை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கை சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை புதன்கிழமை நவம்பர். 9. இன்று நடைபெற உள்ளது; அப்போது புதிய மதிப்பெண் விதிமுறை ரத்து செய்த தகவலைத் தெரிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்யை அண்மையில் சந்தித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் விதிமுறையை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று, அவரது உத்தரவின்படி புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்யும் முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.