Friday, April 29, 2011

இலங்கையில் மேட்ச் பிக்ஸிங் : ஹசான் திலகரத்ன குற்றச்சாட்டு.


இலங்கை கிரிக்கெட்டில் 1992-ம் ஆண்டில் இருந்து மேட்ச் பிக்ஸிங் எனப்படும் சூதாட்டம் நடப்பது சாதாரணமானதுதான் என அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஹசான் திலகரத்ன கூறியுள்ளார்.

சூதாட்டங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

மேட்ச் பிக்ஸிங் இன்று, நேற்று தொடங்கியதல்ல. எனக்குத் தெரிந்தவரை, 1992-ம் ஆண்டில் இருந்து அது நடைபெறுகிறது. பொறுப்புணர்ச்சியுடன் இதைக் கூறுகிறேன் என திலகரத்ன குறிப்பிட்டார்.

ஏப்ரல் 2003 மற்றும் மார்ச் 2004-க்கு இடைப்பட்ட காலத்தில் திலகரத்ன இலங்கை அணியின் கேப்டனாக இருந்தார்.

சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணபலத்தால் இந்த விவகாரத்தை வெற்றிகரமாக மறைத்துவிடுகிறார்கள். அவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என திலகரத்ன குறிப்பிட்டார்.

தற்போது இந்தியாவுடனான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாகக் கூறமுடியாது. ஆனாலும் இலங்கையில் மேட்ச் பிக்ஸிங் சூதாட்டம் புற்றுநோயைப் போல பரவிவிட்டது.

உலகக் கோப்பை போட்டியில் ஏன் 4 வீரர்களை மாற்றினார்கள். அதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். மெந்திஸை ஏன் மாற்றிவிட்டு மற்றொருவரைக் கொண்டுவந்தார்கள். கபுகெடர ஒருபோதும் ரன்களே எடுக்கவில்லை. ஆனால் சமரசில்வாவுக்கு பதிலாக அவரைத் தேர்ந்தெடுத்தனர். அது நியாயமில்லை என திலகரத்ன தெரிவித்தார்.

உலகக் கோப்பை அணி தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டம் குறித்தும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

ஜனவரி 7-ம் தேதி உலகக் கோப்பை அணி தேர்வுசெய்யப்பட்டது. ஐபிஎல் ஏலம் ஜனவரி 8-ம் தேதி நடைபெற்றது. ஐபிஎல் ஏலத்துக்கு ஒருநாள் முன்பாக ஏன் இலங்கை அணி தேர்வுசெய்யப்பட்டது என நான் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி கேட்டிருந்தேன்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜனவரி 11, 12, 13-ம் தேதிகளில் மாகாண கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இருந்தால் அந்த போட்டிகளை பார்த்து சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அணியில் இடம்பெற்ற 2, 3 வீரர்களுக்கு பதிலாக வேறு சில வீரர்கள் கிடைத்திருப்பார்கள் என நம்புகிறேன். உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அணி சிறந்த அணிதானா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏன் ஐபிஎல்லுக்கு முன்பாக அணி வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


சேலம்: லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது.


சேலத்தில் ரூ.8000 லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டார்.

சேலத்தில் நில அளவைகள் துறையில் தனித் துணை ஆட்சியராக இருப்பவர் பொன்னுசாமி. இவருடைய உதவியாளர் பத்மநாபன். இவர்கள் இருவரும், பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடம் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காக லஞ்சம் கேட்டார்களாம்.

இந்நிலையில் ஸ்ரீனிவாசன் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.

அவர்களின் ஆலோசனைப் படி, இன்று காலை தனித் துணை ஆட்சியர் பொன்னுசாமியும் உதவியாளர் பத்மநாபனும் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, சந்திரமௌலி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

ஸ்டெர்லைட் விவகாரம் : மதிமுக அறிக்கை.


ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட நீரி நிறுவனம், தனது அறிக்கையை வைகோவுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று, சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைகோ வழக்குத் தொடுத்து இருந்தார். உயர்நீதிமன்றம், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு, 2010 செப்டம்பர் 28 ஆம் நாள் ஆணை பிறப்பித்து இருந்தது.

அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்குத் தொடுத்தது. ஆலையை நிரந்தரமாக மூடுமாறு வைகோவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார். நாக்பூர் நீரி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்துக்குத் தர வேண்டும் என்று, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீரி நிறுவனம், ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்கவில்லை.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் வைகோ தெரிவித்ததாவது:

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 40 நாள்களுக்குப் பின்னர்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு, நீரி நிறுவனம் ஆய்வுக்கு வந்தது. முதல் சுற்று ஆய்வு, ஏப்ரல் 6, 7, 8, தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆய்வு, ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு இணங்க, எனக்கும் தகவல் தரப்பட்டு, நானும் ஆய்வின்போது உடன் இருந்தேன். ஆய்வு அறிக்கையை, நீரி தந்தபின், அதனுடைய பிரதிகள் எனக்கும் வழங்கப்பட வேண்டும்; அந்த அறிக்கையின் மீதான எனது கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்கு நீதியரசர்கள், ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர், ‘நீரி நிறுவனம் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் உடன் இருந்து ஏற்பாடு செய்ய வேண்டும்; அந்த அறிக்கையின் பிரதி, வைகோவுக்கும் வழங்கப்பட வேண்டும்; அதன்பின்னர் வைகோ தன்னுடைய கருத்துகளை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும், வழக்கு ஜூலை மூன்றாம் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மதிமுக சட்டத்துறைச் செயலர்கள் வழக்கறிஞர் தேவதாஸ், தில்லியில் மதிமுக வழக்கறிஞர் பாலாஜியும் உடன் இருந்தனர்.

இவ்வாறு மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்க கூடாது : ராமதாஸ்.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் விளைவிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயால் பொதுமக்களுக்கும் வேளாண் நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்த கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளே போதுமானது என்று கூறி மரபணு கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசின் வல்லுநர் குழு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

விளைச்சலை அதிகரிப்பதற்காக பொதுமக்களின் உடல்நலனுக்கு தீங்கு ஏற்பட அனுமதிக்க கூடாது.

வேளாண் விளைச்சலை அதிகரிக்க முயற்சி என்ற பெயரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவது என்பது, இந்திய விவசாயிகளின் நலனை புறக்கணித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசும் செயலாகவே இருக்கும்.

இந்தியாவில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டம்: வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க கனிமொழி - ராசா மறுப்பு.


தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமான வரி கணக்கு விவரங்களைத் தெரிவிக்க முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவும், திமுக எம்பி கனிமொழியும் மறுத்துவிட்டனர்.

சென்னையைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணா என்பவர் திருச்சியில் உள்ள வருமான வரித் துறை துணை கமிஷனர் அலுவலகத்தில் தகவலறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், ஆ.ராசா, அவரது மனைவி எம்.ஏ. பரமேஸ்வரி ஆகியோர் 2001ம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்களைக் கோரியிருந்தார்.

இந்த மனு டெல்லி திகார் சிறையில் உள்ள ராசாவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ராசாவின் சார்பில் முத்துகுமாரசாமி என்பவர் அளித்த பதிலில், தனிப்பட்ட விவரங்களை மனுதாரர் கோரியுள்ளதால், அவற்றை வழங்க முடியாது. தகவலறியும் உரிமைச் சட்டத்திலிருந்து இந்த விவரங்களை வழங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதைக் காரணம் காட்டி கோபாலகிருஷ்ணாவின் தகவல் கோரும் மனுவை வருமான வரித்துறை நிராகரித்துவிட்டது.


அதே போல கனிமொழியின் வருமான வரி விவரங்களைக் கோரி கோபால கிருஷ்ணா சென்னை வருமான வரி அலுவலகத்தில் மனு செய்தார்.

ஆனால், வருமான வரி விவரங்கள் ரகசியமானவை என்பதால் அதை வெளியில் சொல்லக் கூடாது என்று கனிமொழி ஆட்சேபம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து அந்த விவரத்தை அளிக்க முடியாது என்று வருமான வரித்துறை கூறிவிட்டது.

கங்கையை சுத்தப்படுத்த ரூ 7000 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!


கங்கையை சுத்தப்படுத்தும் ரூ 7000 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்துக்களின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை நதியில் பல்வேறு மனித சடலம் உள்பட பல கழிவுகள் சேருவதால் மாசடைந்து வருகிறது.

புனித நதியான கங்கையை தூய்மை படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டில், 'தேசிய கங்கை நதி கழிமுக ஆணையம்' அமைக்கப்பட்டது. ஆணையத்தின் தலைவராக பிரதமர் நியமிக்கப்பட்டார்.


கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதற்கான திட்டம், செலவு, கண்காணிப்பு, ஒருங்கிணைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ரூ.7 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் கங்கை நதியை தூய்மைப் படுத்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த 8 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றத்தை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழானது ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு.

தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மே 10ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால், எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்றும், வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த இரு தினங்களில் 6000 வாக்காளர்களைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

அதில், திமுக கூட்டணி 130 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

திமுக மட்டும் தனியாக 90 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே கூறியிருப்பதாவது:

"இந்தத் தேர்தலில் ஜெயித்து முதல்வராவது அம்மாவா, கலைஞரா? இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இன்னும் 15 நாட்கள் உள்ளன. ஆனால், இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுகவின் கையே ஓங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.

தேர்தலுக்கு கடைசி பதினைந்து நாளில், அதிமுகவை விட சிறப்பாக தேர்தல் பணியாற்றியதோடு, மக்களின் வாக்குகளைக் கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது திமுக.

இதன் விளைவு, இந்தத் தேர்தலில் 115 முதல் 130 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அணி 105 முதல் 120 தொகுதிகள் வரை பெறக்கூடும். கடந்த தேர்தலை விட 33 முதல் 48 வரையிலான தொகுதிகளை திமுக இழந்தாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி, 36 முதல் 51 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெற்றாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை.

இந்தத் தேர்தலில் சுவாரஸ்மான விஷயம், தேர்தலுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் திமுகவுக்கே வாக்களித்ததாய் கூறியுள்ளனர்.

கிராமப் புறங்களில் 2ஜி, தமிழ் ஈழப் பிரச்சினைகள் எடுபடவில்லை. அங்கே அந்த மக்களின் தேவைகளை யார் சரியான முறையில் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றுவார்கள் என்பதே பிரதான பிரச்சனையாக இருப்பது இப்போது புரிகிறது. கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அங்கு திமுக 5 சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெறும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தத்தில் திமுக அணி 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 7 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும், கூட்டணி பலமின்மை அவருக்கு பாதகமாக உள்ளது. வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும்.

இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போது மானதாக உள்ளது.

முன்பை விட அதிக தொகுதிகளைப் பெற்றாலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசை யிலேயே உட்கார வேண்டிய நிலைதான் அடுத்த 5 ஆண்டுகளும்.

கேரளாவில்...

கேரள தேர்தலைப் பொறுத்தவரை இந்த முறை காங்கிரஸ் வெல்வது உறுதியாகி விட்டது. ஆனாலும் இடதுசாரி கூட்டணி 45 முகல் 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 92 வரையிலான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அஸ்ஸாமில் தொங்கும் சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இரண்டுமே சமபலத்தில் உள்ளன. இங்கு ஆட்சியை நிர்ணயிக்கப் போவது பாஜகதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தை தாக்கி பிரச்சாரம் செய்ததால் ரஜினி படத்தில் நீக்கப்பட்டீர்களா? வடிவேலு பதில்.


திமுக தலைவர் கலைஞரை, நடிகர் வடிவேலு 29.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு,

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி.

மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன். பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர். குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும். ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர்.

இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன் என்றார்.

கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

பதில்: ராணா படம், கானா படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப் படவில்லை. மே 13 ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.

கேள்வி: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா?

பதில்: பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும் என்றார்.

இத்தாலி மோகத்தால் இந்திய கலாசாரம் தெரியாதவர் சோனியா; ராஜசேகர ரெட்டி மகள் தாக்கு.

இத்தாலி மோகத்தால் இந்திய கலாசாரம்    தெரியாதவர் சோனியா;    ராஜசேகர ரெட்டி மகள் தாக்கு

ஆந்திர மாநிலம் கடப்பா எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அவரது சகோதரி ஷர்மிளா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தந்தை ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது ஏழைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல் படுத்தினார். அவர் ஏழைகளின் வளர்ச்சிக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அப்படிப்பட்டவரின் மகனான ஜெகன்மோகன் ரெட்டியை ஒழிக்கும் பணியில் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களால் ஒரு போதும் எனது சகோதரரை தோற்கடிக்க முடியாது. மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். என் தந்தை இறந்ததை கேட்டு ஆந்திராவில் 600-க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். அவர்களது குடும்பத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் சொல்வதற்கு சோனியா தடை விதித்தார். சோனியாவுக்கு இந்திய கலாசாரம் தெரியாது. அவர் இத்தாலி மோகம் கொண்டவர்.

இந்தியாவை இந்தியர்கள் தான் ஆள வேண்டும். வெளி நாட்டினரிடம் நாட்டை ஒப்படைக்க கூடாது. சோனியாவுக்கு நாட்டு நலன் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஆந்திராவை கலவர பூமியாக மாற்றி இருப்பாரா? தொடக்கத்திலேயே கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் ஆந்திராவில் சட்டம்- ஒழுங்கை நன்றாக வைத்திருக்கலாம். இதையெல்லாம் நாட்டு மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது.

இயக்குனர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பத்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், தங்க தாமரை பதக்கமும் அடங்கிய இந்த விருது 2010 ஆண்டுக்காக இவருக்கு வழங்கப்படுகிறது.

கைலாசம் பாலச்சந்தர் என்பவர்தான் கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப் படுகிறார். இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.

இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின

மேலும் கே. பாலச்சந்தர் எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படத்தின் மூலம் கதைவசனம் எழுத ஆரம்பித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருது அறிவிக்கப்பட்டதும் திரையுலக பிரமுகர்கள் அனைவரும் பாலசந்தருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவர் இயக்கிய இரு கோடுகள்(1969) அபூர்வ ராகங்கள் (1975) தண்ணீர் தண்ணீர் (1981) அச்சமில்லை அச்சமில்லை(1984) உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கியுள்ளது. தமிழ்நாடு, மற்றும் ஆந்திர அரசுகள் பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கியுள்ளது.

அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும்.

கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

"கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார்.

ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள் : இலங்கை அமைச்சர்.


இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ள ஐ.நா. குழு 3 முட்டாள்களின் குழு என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சே தெரிவித்ததாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி ள்ளது.

இது குறித்து வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,

3 முட்டாள்கள் கொண்ட ஐநாவின் நிபுணர் குழு இலங்கையில் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக இருக்கும் அரசை நிறுவுவதற்கான சதித் திட்டங்களுக்கு துணைபோயுள்ளது என்று விமல் குற்றம்சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுவதற்கான குழுவொன்று தாம் தயாரித்த அறிக்கையை செயலாளர் நாயகம் படித்துப்பார்க்க முன்பதாகவே வெளியிட்ட சம்பவம் வரலாற்றில் இதுதான் முதல் தடவை என அவர் குறிப்பிட்டார்.

அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத் அதிரடி அறிவிப்பு.


நடிகர் விஜய் அரசியல் பக்கம் வந்துவிட்டதால் அஜீத்தையும் அரசியல் பக்கம் இழுத்தனர் அவரது ரசிகர்கள். அவர் வேண்டாம் என்று மறுத்து வந்தார்.

இதனால் ரசிகர்கள் அவர்களாகவே கொடி, கட்சி என்று கூட்டம் போட்டு வந்தனர். இதை அஜீத் வன்மையாக கண்டித்தார். தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தால் எனது தலைமையில் இயங்கும் மன்றத்தை கலைத்துவிடுவேன் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மன்றத்தை கலைத்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது.

எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன்.

நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு.

எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை - பார்க்கவும் மாட்‌டேன்.

கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை.

சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை.

அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும் என்று கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் ,லதா ரஜினிகாந்த் பேட்டி.

மருத்துவமனையில் ரஜினியை சந்தித்தார் கலைஞர்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது.

படப்பிடிப்பின் போது அவருக்கு வயிறு கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை முதல்வர் கருணாநிதி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மருத்துவர்களிடம் ரஜினியின் உடல்நிலை குறித்து கலைஞர் விசாரித்தபோது, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுதினம் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் ,லதா ரஜினிகாந்த் பேட்டி.

நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை ஏவி. எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது.

நாயகி தீபிகா படுகோனேவுடன் பாடல் காட்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு வயிறு கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

ரஜினியில் உடல்நிலை குறித்து லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

பின்னர் வெளியே வந்த முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம், சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

மூச்சுத் திணறல் : தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினிகாந்த்.


நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.

ஏவி.எம். ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் ரஜினி - தீபிகா படுகோனேவுடன் டூயட் பாடல் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின் போது ரஜினிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

இதையடுத்து படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலரும் ரஜினியை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையின் தீவிர சிகிசைப்பிரிவில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் ரஜினியில் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தி அறிந்த அவரது தீவிர ரசிகர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ரசிகர்களின் முற்றுகையால் பதட்டம் நிலவியதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான் !!


இந்தத் தேர்தலில் ஜெயலலலிதா தோற்றாலும் சரி வென்றாலும் சரி முதல் பாதிப்பு விஜய்க்குத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அது எப்படி?

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். விஜய் பிறந்த நாளான ஜூன் -22ல் இப்படம் வெளியாகிறது. அதற்கேற்ப படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.

மே- 13ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வெற்றி பெற்ற அணி அடுத்த நான்கு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரணம் மே 17-ம் தேதியோடு இந்த சட்டமன்றத்தின் ஆயுள் முடிகிறது.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இந்த விழாவைப் பற்றி, ஏன் விஜய் என்ற நடிகரைப் பற்றிக் கூட நினைக்க மாட்டார் ஜெயலலிதா. ஒருவேளை அதிமுக வென்றாலும் விஜய்க்கு இதே நிலைதான். புதிய அமைச்சரவை தயாராகிக் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் வேலாயுதத்துக்கு எப்படி நேரம் ஒதுக்க முடியும்!

இப்போது புரிகிறதா... ஜெயலலிதா தோற்றாலும் வென்றாலும் முதல்பாதிப்பு விஜய்க்குத்தான் என்பது!!