Friday, April 29, 2011

அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத் அதிரடி அறிவிப்பு.


நடிகர் விஜய் அரசியல் பக்கம் வந்துவிட்டதால் அஜீத்தையும் அரசியல் பக்கம் இழுத்தனர் அவரது ரசிகர்கள். அவர் வேண்டாம் என்று மறுத்து வந்தார்.

இதனால் ரசிகர்கள் அவர்களாகவே கொடி, கட்சி என்று கூட்டம் போட்டு வந்தனர். இதை அஜீத் வன்மையாக கண்டித்தார். தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தால் எனது தலைமையில் இயங்கும் மன்றத்தை கலைத்துவிடுவேன் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மன்றத்தை கலைத்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது.

எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன்.

நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு.

எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை - பார்க்கவும் மாட்‌டேன்.

கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை.

சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை.

அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும் என்று கூறியிருக்கிறார்.

No comments: