Friday, April 29, 2011

தகவலறியும் உரிமைச் சட்டம்: வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க கனிமொழி - ராசா மறுப்பு.


தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமான வரி கணக்கு விவரங்களைத் தெரிவிக்க முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவும், திமுக எம்பி கனிமொழியும் மறுத்துவிட்டனர்.

சென்னையைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணா என்பவர் திருச்சியில் உள்ள வருமான வரித் துறை துணை கமிஷனர் அலுவலகத்தில் தகவலறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், ஆ.ராசா, அவரது மனைவி எம்.ஏ. பரமேஸ்வரி ஆகியோர் 2001ம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்களைக் கோரியிருந்தார்.

இந்த மனு டெல்லி திகார் சிறையில் உள்ள ராசாவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ராசாவின் சார்பில் முத்துகுமாரசாமி என்பவர் அளித்த பதிலில், தனிப்பட்ட விவரங்களை மனுதாரர் கோரியுள்ளதால், அவற்றை வழங்க முடியாது. தகவலறியும் உரிமைச் சட்டத்திலிருந்து இந்த விவரங்களை வழங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதைக் காரணம் காட்டி கோபாலகிருஷ்ணாவின் தகவல் கோரும் மனுவை வருமான வரித்துறை நிராகரித்துவிட்டது.


அதே போல கனிமொழியின் வருமான வரி விவரங்களைக் கோரி கோபால கிருஷ்ணா சென்னை வருமான வரி அலுவலகத்தில் மனு செய்தார்.

ஆனால், வருமான வரி விவரங்கள் ரகசியமானவை என்பதால் அதை வெளியில் சொல்லக் கூடாது என்று கனிமொழி ஆட்சேபம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து அந்த விவரத்தை அளிக்க முடியாது என்று வருமான வரித்துறை கூறிவிட்டது.

No comments: